இன்று வரை எம்மைத் திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி “கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விதான். கோழியிலிருந்துதான் முட்டை வருகிறது ஆகவே கோழியில்லாமால் கோழி முட்டை வரச்சாத்தியமில்லை ஆனால் அந்தக் கோழியே முட்டையிலிருந்துதானே வருகிறது. ஆப்படிப்பார்த்தால் முட்டையில்லாமல் கோழி வந்திருக்கச் சாத்தியமில்லை. இப்படி குழப்பத்திலேயெ இவை இருக்க கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி மனிதர்களிடம் எப்போதுமே இருந்தவண்ணம் தான் இருந்தது.
இதை மனிதர்கள் இரண்டு வகையில் அணுகினார்கள் முதலாவது மெஞ்ஙான ரீதியில் அணுகியவர்கள் கடவுள் என்ற “எடுகோட் பொருளை” மையப்படுத்தி கடவுளின் படைப்பாகவே உலகம் உருவானது, எல்லா உயிர்களையும் கடவுளே படைத்தார் என்று கூறினார்கள். இதைப் பகுத்தறிவு வாதிகள் மறுத்தார்கள். யதார்த்தத்தில் காணமுடியாத அல்லது நிரூபிக்கமுடியாத கடவுள் என்பதை ஏற்றுக்கொளவதை அவர்கள் விரும்பவில்லை மாறாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க கூடிய காரணங்களை அவர்கள் தேடினார்கள். காலங்காலமாக மெஞ்ஞான, விஞ்ஞான வாதிகளிடையே இந்த முரண்பாடு இருந்த வண்ணம் தான் இருந்தது. ஆனால் பலகாலம் யாராலும் உறுதியாக விளக்கமொன்றைத் தரமுடியாதிருந்தது. இப்படியான காலகட்டத்தில் தனது கூர்ப்புக் கொள்கை பற்றி சார்ள்ஸ் டார்வின் கருத்துக்களை வெளியிட்டார். உலகிலுள்ள உயிர்கள் அத்தனையும் கூர்ப்படைந்து உருவாகியது, அதாவது உயிரினம் ஒன்று தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து வருகையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைந்து வந்தது என்பதே அவரது கருத்தின் சுரக்கமாகும். இதற்கு அவர் பல காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
உலகின் முதலாவது உயிரினமாக ஒரு பக்டீரியாவை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அது கோடான கோடி ஆண்டுகளாக கூர்ப்படைந்து இன்றைய உயிரினங்கள் உருவானதாகக் கொள்கிறார்கள். இதை விளங்குவதற்குக் கொஞசம் சிக்கலான விஞ்ஙான முறைகள் மூலம் விளக்குகிறார்கள். எல்லாம் சரி ஆனால் இங்கும் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அந்த முதலாவது உயிரிலிருந்து ஏனையவை தோன்றியது என்கிறீர்கள் அப்படியானால் அந்த முதலாவது உயிர் எங்கேயிருந்து தேன்றியது? அது அதுவாகவே தோன்றியதா? இங்கு தான் மீண்டும் மெஞ்ஞானவாதிகளின் கடவுட்கோட்பாடு முக்கியம் பெறுகிறது. அதைக் கடவுள் தானே படைத்திருக்க வேண்டும்?!
உண்மையிலேயே எம்மால் விளங்கப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அல்லது தெரியாத பொருளுக்கு கணிதத்தில் “தீட்டா” போடுவது போல அல்லது “X” “Y” எனப்போடுவது போலத்தான் கடவுள் என்பதும் தோன்றியது. எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. நாம் இன்னும் விளக்கமுடியாத மர்மங்கள் இருக்கிறது அவற்றை “கடவுள்” என்று அடையாளப்படுத்தத் தொடங்கியது தான் இன்று கூர்ப்படைந்து மதம் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. “கடவுள்” தொடர்பில் வளர்ந்த நம்பிக்கைகள் சமூகக் கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபட்டு அவற்றிலிருந்து வேர்விட்ட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுந்த விருட்சமே மதங்கள். இன்று அவை வாழ்க்கை நெறியாக இன்று மாறிவிட்டது. இதுவும் ஒரு விதத்தில் பெரிய கூர்ப்புத்தான்.
இதை நான் சொல்ல வந்ததற்குக் காரணம் உண்டு. கடவுள் இருக்கிறாரா... இல்லையா... போன்ற கேள்விகள் எம்மிடையே எழுவதுண்டு. விஞஞான ரீதியாக நிறுவி்காட்ட முடியாத விடயங்களை நாம் நம்பினாலும் ஏதோ ஒரு சந்தேகம் நம்மிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கும். விஞ்ஞானமோ மெஞ்ஞானமோ எல்லாமே வாழ்க்கையைப் பூரணப் படுத்தும் முயற்சிதான் ஆக பூரணமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நாம் முயற்சிக்கையில் அதில் மதவெறி தலையிட்டு அதைச் சீரழித்து விடக் கூடாது. மதம் என்பது காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு அது வாழ்வை வளப்படுத்த மட்டுமேயன்றி அதனைச் சீரழிக்க அல்ல. சத்தியமாகச் சொல்கிறேன் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும், கவலையும் தான் வருகிறது. மதம் ஒரு நம்பிக்கை மட்டுந்தான் அதுவே வாழ்க்கையல்ல.