Aug 10, 2009

சுயமிழந்து போகும் இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்

தலைப்பைப் படித்ததுமே சிலர் வாதாடத் தயார் ஆகலாம் - ஆனால் உண்மையைப் புரிந்து கொண்டால் எந்த விவாதத்திற்குமான தேவை இருக்காது. முதலில் இலங்கைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எத்தனை வீதம் சொந்தத்தயாரிப்பிலானது என்று பாருங்கள் - என் கணிப்புச் சரியென்றால் 40 விழுக்காடுக்கும் குறைவு. அதில் எத்தனை சுய அடையாம் தாங்கியவை - அதாவது சுயமான ஆக்கமாகவும், இலங்கையின் அடையாளத்தையுடையதும் எனப்பார்த்தால் அது மிகச்சொற்பமே, ஏற்கனவே அவ்வாறு சுய அடையாளத்துடன் இருந்த நிகழ்ச்சிகள் கூட ஓரங்கட்டப்பட்டு இந்திய பாதிப்பிலான நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள். இதற்கு கூறப்படும் நியாயம் “மக்கள் இரசனை”. மக்கள் இந்தியத் தன்மையான நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நேரடியாக இந்தியத் தமிழ் அலைவரிசைகளிலிருந்து நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்வதும் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக பிரதி பண்ணுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது - விளைவு இலங்கை நிகழ்ச்சிகளினது தனி அடையாளம் அழிக்கப்பட்டு, இந்தியத் தன்மை அதிகரித்துவிட்டது.

சில பேர் நினைக்கலாம் இது இலங்கைத் தமிழ் - இந்தியத் தமிழ் என நான் பிரிவினை பேசுவதாக - நிச்சயமாக இல்லை. ஒரு மொழியின் அழகு அதுதனிலிருக்கும் வெவ்வேறு பாணிகளிலும் தங்கியுள்ளது. ஒரே மொழியைப் பேசினாலும் ஒவ்வொரு பிரதேசமும் தங்களுக்கேயுரிய பாணியையும் நடையையும் கையாள்வதுதான் அந்த மொழியின் அழகை மட்டுமல்ல தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கர்களும், இங்கிலாந்தவர்களும் பேசுவது ஆங்கிலம் தான் ஆனால் அவரவர்க்கென பாணியிலும், நடையிலும், சொற்பிரயோகத்திலும் உரிய வேறுபாடுண்டு அது அந்த மொழிக்கு மேலும் அழகைச் சேர்க்கிறது. தமிழ்நாட்டை எடுத்துப்பாருங்கள் மதுரைத்தமிழ் வித்தியாசம், சென்னைத்தமிழ் வித்தியாசம், கொங்குநாட்டுத் தமிழ் வேறு - அவை தனித் தன்மையும் அழகும் உடையவை. மதுரைக்காரர்கள் யாருமே சென்னைத் தமிழ் பேச எத்தனிப்தில்லை, கொங்குதமிழ் பேசுபவர்கள் சென்னைத் தமிழ் பேச எத்தனிப்பதில்லை - தத்தமது தனித்துவத்தை நிலைநாட்டும் வல்லமையுடையவர்களாக அவர்கள் இருப்பதனால் இன்னும் அந்தத் தமிழ் நடைகள் வாழ்கின்றன. ஆனால் எங்கே போயிட்டு எங்கள் யாழ்ப்பாணத் தமிழ்? எங்கு மறைந்நது எங்கள் மட்டக்களப்புத் தமிழ்? இலங்கை வானொலிக்கே உரிய செந்தமிழ் உச்சரிப்பு எங்கு போய்விட்டது?

இன்று இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தங்கள் சுய அடையாளத்தை மறந்து, மறைத்து கஷ்டப்பட்டு இந்தியத் தொலைக்காட்சிப் பாணியிலான தமிழ் பேசுவதைக் காணக் கவலையாக இருக்கிறது. காலப்போக்கிலே இவர்களைப் பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு இலங்கைத் தமிழர்களின் தமிழே அழிந்துவிடும், இது இலங்கைத் தமிழர்களுக்கான பாதிப்பு மட்டுமல்ல தமிழ் மொழிக்கான பாதிப்பும் கூட. இவர்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தங்கள் மொழிநடையை மாற்றி, வேறு மொழி நடையைப் பயன்படுத்துகிறார்கள் என எனக்கும் புரியவேயில்லை, இதன் மூலம் தங்கள் மொழிநடையை மறப்பதுடன் அவர்கள் திக்குமுக்காடிப் பேசும் அந்த புதிய மொழிநடையையும் சரியாகப் பேசமால் அதையும் இம்சிக்கின்றார்கள்.

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் - நீங்கள் என்னதான் இந்தியப்பாணியிலான தமிழ் பேசி, அந்த நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணினாலும் அது ஒரு போதும் பெருமையைத் தரப்போவதில்லை மாறாக அது நகைப்புக்குரிய ஒன்றாகவே அமையும். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதற்காக நான் பிரித்தானியப் பாணியில் திக்குமுக்காடிப் பேசுவதால் என்ன பயன்? எனக்குத் தெரிந்த பாணியில் ஆங்கிலத்தைப் பேசுவது தான் சிறப்பு.

இது போல போலியாக, சுயத்தை மறைத்து இன்னொன்றைப் பிரதி பண்ணி வாழ்பவர்களைக் கண்டால் எனக்கு இந்தப் பாடல் தான் ஞாபகம் வந்தது -

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி -
தானும் அதுவாகப் பாவித்துத் - தன்
பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போலுமே
கல்லாதான் கற்ற கவி”

இவர்களோடெல்லாம் ஒப்பிடுகையில் இந்தியத்தொலைக்காட்சியிலும் செந்தமிழ் பேசும் “அப்துல் ஹமீத்” எவ்வளவு சிறப்பான, மேன்மையான தொகுப்பாளர்.