Aug 21, 2009

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்...


இன்றுதான் கந்தசாமி உலகம் முழுவதும் வெளியானாலும், நேற்று நள்ளிரவு காட்டப்பட்ட விசேட காட்சியைப் பார்க்கச்சென்றிருந்தேன். ரிக்கட் விலை ரூ.500 மற்றும் ரூ.1000 ஆக இருந்த போதும் சன நெரிசலுக்குக் குறைவில்லை. தமது ஜனநாயகக் கடமையான வாக்களித்தலுக்கே சமுகம் தர பஞ்சிப்படும் தமிழ் இளையோர் மற்றும் குடும்பஸ்தரெல்லாம் கந்தசாமித் தரிசனத்திற்கு அடித்துப்பிடித்து வந்திருந்தார்கள். இரவு 11 மணியளவில் காட்சி ஆரம்பமானது....

கந்தசாமி பார்க்கப்போன எனக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன, பொதுவாக நான் தியட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிகக் குறைவு கடைசியாகத் தியட்டரில் பார்த்த படம் தசாவதாரம் அதற்கு முன்பு சிவாஜி - அவை போன்ற எதிர்பார்ப்பு இதற்குமிருந்ததால் கந்தசாமியைப் பார்க்கச்சென்றிருந்தேன். என் மனமெல்லாம் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்திருந்ததது...

முதல் காட்சிக்கு முன்பு ஒரு வாசகம் போட்டார்கள் “மற்றவன் கண்ணீரைத் துடைப்பவன் தான் கடவுள்” என்று அதற்குப்பிறகு திருப்போரூர் முருகன் கோவில் மரத்தில் தேவையை எழுதி வைத்தால் அது நடைபெறும் என்ற காட்சி அதன்படி ஒரு ஏழைப்பெண் தனது கணவரின் சத்திரசிகிச்சைக்காக பணம் தேவையென எழுத அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்பு கறுப்புப் பையில் பணம் இருக்கிறது இதைக்கண்டு பயந்த அந்த நேர்மையான பெண் அதை பொலீஸில் ஒப்படைக்க ஊழல் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான் அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று அலுமாரியில் மூடி வைத்து விட்டு “தண்ணியடித்துவிட்டுப்” படுக்கிறார் (மன்சூர் அலிகான் தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில்) திடீரென அவரது கட்டிலுக்கு மேல் கூரையிலிருந்து கொக்கரக்கோ-Man (அதாவது முருகனின் கொடியிலிருக்கும் சேவல் போல வேடமிட்ட மனிதன்) பறந்து வந்து மன்சூரை ஒருபிடிபிடிப்பதும் காலையில் பணத்தை மன்சூர் அப்பெண்ணிடம் ஒப்படைக்கச்செய்வதும் அடுத்தகாட்சி. அதற்குப் பிறகு அறிமுகமாகிறார் சி.பி.ஐ. அதிகாரி கந்தசாமி (விக்ரம் தான்) - இவர் பொருளாதார குற்றங்களுக்குப் பொறுப்பான சி.பி.ஐப் பிரிவு அதிகாரி இப்போதே கதை என்க்கு விளங்கிவிட்டது - உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்....

ஷங்கர் 3முறைதானும் எடுத்த இதே கதைப்பாணியையுடைய படத்தை மீள அரைத்த மாவை அரைத்திருக்கிறார் சுசி கணேசன். சுருக்கமாகச் சொன்னால் அந்நியன், சிவாஜி, ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒரு கலவைதான் இந்தக் கந்தசாமி. கானமயிலாகிய ஷங்கர் ஆடக்கண்ட சுசிகணேசன் தானும் அதுவாகப் பாவித்து எடுத்த முயற்சியின் விளைவு இது என நன்றாகத் தெரிகிறது.படத்தின் முடிவு கூட அந்நியனை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாச் சொன்னால் ஜென்டில்மேனின் அடிப்படையில் சிவாஜியின் கருவை வைத்து அந்நியனின் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒப்பித்து அமைக்கப்பட்டதே கந்தசாமி.


படம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது - ஏனென்றால் முதலிலேயே கதை விளங்கிவிட்டது ஆகவே “சஸ்பென்ஸ்” என்று ஒன்றுமில்லை... ஷ்ரேயாவின் கவர்ச்சியின் தாராளத்தன்மை படம் முழுவதும் ஊடாடுகிறது... தனக்கு வில்லிக் கதாப்பாத்திரங்களும் பொருந்தும் என நிரூபித்திருக்கின்றார். படத்தின் சில காட்சிகள் இழுவையோ இழுவை அத்தோடு விசாரணைக்காடசி யொன்றில் விக்ரம் பேசும் வசனம் கூட அவர் அந்நியனில் பேசிய அதே வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. இது போக அடிக்கடி சம்பந்த சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் பெரிய அலுப்பு. ஒரு படத்தில் ஒரு குத்து வகையறாப் பாட்டு இருந்தால் இரசிக்கலாம் படம் முழுக்க அதே வகையறா என்றால் சகிக்ககுமா? இவ்வளவு செலவழித்துப் படம் எடுத்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஹரிஸ் ஜெயராஜையோ, யுவன் ஷங்கர் ராஜாவையோ இசைக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம். பின்னணி இசைகூடப் பெரிதாக நல்லதாக இல்லை. மேலும் பார்ப்பவர்களை அசௌகரியப்படுத்துகிறது ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். வேகமாக நகரும் கமரா அடிக்கடி கண்ணைக்கூசவைக்கும் “எஃபெக்ட்ஸ்” என பார்பவர்களை கஷ்டப்படுத்துகிறது ஆனால் மெக்ஸிகோ காட்சிகள் பரவாயில்லை.

படத்தின் மிகப்பெரிய நிறை விக்ரம். அவரது நடிப்பில் அவரது உழைப்புத்தெரிகிறது ஆனால் படம் அந்தத் தரத்திறகில்லையே. பிரபுவின் நடிப்பும், ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும், வை.ஜி.மகேந்திரனின் நடிப்பும் நன்று. நகைச்சுவையைப் பொருத்தவரை முதற்பாதியில் கலக்கும் வடிவேல் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

3 வருடமாக “பில்டப்” கொடுக்கும் போதே எனக்குள் ஒரு ஐயம் இருந்ததது இப்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் படம் தோற்கும் என்று சொல்வதற்கும் இல்லை.

ஒருவரியில்..

கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....