Aug 11, 2009

உண்மையான தேசப்பற்றே இன்றைய தேவை!


தேசப்பற்று, தேசியவாதம் எனஅண்மைக்காலங்களாக ஒலிக்கும் கோஷங்களைக்கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. உண்மையில் தேசப்பற்று என்றால் என்ன என்று அறியாக்கூட்டமெல்லாம் அதைப்பற்றி மேடையேறி வெறித்தனமாக முழங்குவதே மிகக்கொடுமையானது. தேசப்பற்று என்றால் என்ன? அது வெறும் மண்ணின் மீதுள்ள பற்றா? அப்படியானால் அற்பத்தனமாக இந்த மண்ணின் மீது வைக்கும் பற்றைப்பற்றித்தானா இவ்வளவு பேசுகிறீர்கள்? தேசம் என்பதே வெறும் மணதானா? எனக் கேள்விகளெல்லாம் என்னுள் எழுகிறது. தேசம் என்பது வெறும் மண் அல்ல அது அம்மண்ணில் வாழும் மக்களையே குறிக்கிறது. அந்த மண்ணில் வாழும் மக்கள் அனைவர் மீதும் வைக்கும் பற்று - அந்த அன்பு - விருப்பு அதுதான் தேசப்பற்றேயன்றி அற்பத்தனமாக மண்ணுக்காக வெறித்தனம் காட்டுவது தேசப்பற்றேயல்ல. மக்கள் இல்லாத மண் ஒரு தேசமாக முடியுமா?

இன்று இலங்கையில் தேசப்பற்று என்ற போர்வைக்குள் சில அடிப்படைவாதிகள் இனவாதமும் மதவாதமும் பேசி தேசப்பற்றின் தார்ப்பரியத்தையே மாற்றிவிட்டார்கள். அடிப்படையில் தேசப்பற்று என்பது இனவெறியும் மதவெறியும் தான் என்பது போன்ற ஒரு மாயையை இலங்கை மக்களிடையே இந்த வெறியர்கள் தோற்றுவித்துவிட்டார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல முரண்பாடுகளிருந்தாலும் ஓரளவு சுமுகமாகச் சென்று கொண்டிருந்த பல்லின உறவுகளிடையே விரிசலைக் கொண்டு வந்தது இந்த இன, மத அடிப்படைவாதம் தான். இலங்கை வரலாறு இதற்கு மாபெரும் சான்று. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றைப் பார்த்தீர்களேயானால் இலங்கையின் நிலைமை ஒப்பீட்டளவில் சுமுகமாகவேயிருந்தது. ஏற்கனவே சிங்கள் - முஸ்லிம், சிங்கள-கிறிஸ்தவ கலவரங்கள் இடம்பெற்றிருந்தாலும் 1950கள் வரை சிங்கள - தமிழ் உறவுகளும் ஏனைய சிறுபான்மையினருக்கிடையேயான உறவுகளும் ஒப்பீட்டளவில் அமைதியான சூழலிலேயே இயங்கின. ஆனால் இந்த சும்மா இருந்த சங்கான இன, மத வாதத்தை விதையிட்ட பெருமை பண்டாரநாயக்கவைச் சாரும். இலங்கை அரசியல் வரலாறு தொடர்பிலான எனது தேடல்களின் அடிப்படையில் இதனை நான் உறுதியோடு சொல்வேன். இலங்கையில் தான் ஆட்சியைக் கைப்பற்ற “பஞ்சமா பலவேகய” என்ற செயற்பாட்டின் மூலம் அமைதியாக இருந்த பௌத்த பிக்குகளைப் பெருவாரியாக அரசியலில் ஈர்த்ததே பண்டாரநாயக்கவின் வேலைதான். தான் ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளிடம் மட்டும் பெருகியிருந்த இன, மத அடிப்படைவாதத்தை மக்களிடையேயும் பரப்பி தேர்தலில் வென்று 1956ம் ஆண்டு தான் கொடுத்த இனவாத வாக்குறுதியைக் காப்பாற்ற தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது எல்லாம் பண்டாரநாயக்கவின் அரசியல் சித்துவிளையாட்டுக்களே. இப்படியாக மக்களிடையே அடங்கியிருந்த இன,மத அடிப்படைவாதத்தை தமது சுயநல அரசியலுக்காக தூண்டிவிட்ட இத்தகைய அரசியல்வாதிகளால் தான் நாடு இன்று இந்த நிலையில் இருக்கிறது. உண்மையிலேயே தனிச் சிங்களச் சட்டத்திற்கான எத்தகைய அத்தியாவசியத் தேவையும் இருக்கவிலலை - இன்று இது தொடர்பில் எனது சிங்கள நண்பர்களுடன் கலந்துரையாடும் போது கூட அவர்களும் இதேயொத்த கருத்தையே கூறுகிறார்கள்.

இப்படியாக அரசியல்வாதிகளினால் விதைக்கப்பட்டு, நீருற்றி வளர்க்கப்பட்டு இன்று நாட்டின் அடிவயிற்றை ஆட்டிக்கொண்டிருக்கும் இனவாதமும் மதவெறியும் தேசப்பற்றின் இலக்கணங்களா? இல்லை இல்லவேயில்லை. இவற்றுக்கெல்லாம் முந்திய காலம் முதல் இன்று வரை இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றாக இருக்கவில்லையா? அனைத்துப் பண்டிகை, கொண்டாட்டங்களை ஒன்றாகக் கொண்டாடவில்லையா? தமிழர்கள் வெசாக்கூடு கட்டவில்லையா? சிங்களவர்கள் பொங்கல் சாப்பிடவில்லையா? சிங்களவர்களும், தமிழர்களும் வட்டலப்பமும், பிரியாணியும் சாப்பிடத்தான் இல்லையா? இல்லை, அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் மரங்களை வீட்டில் சோடித்து நத்தார் தாத்தாவாக வேடமிட்டு நத்தார்தினம் கொண்டாடத்தான் இல்லையா? மதவாதமும், இனவெறியும் அடிப்படையில் மக்களிடம் இருக்கவில்லை, கயமைபொருந்திய சுயநல அரசியல்வாதிகளின் அற்பத்தமான நடவடிக்கைகளே இத்தனைக்கும் காரணம்.

இலங்கையின் இந்த எல்லாப்பிரச்சினைகளுக்கும் மற்றுமொரு முக்கிய காரணம் “ஸ்ரீ லங்கன்” எனும் உணர்வின்மை. இந்த விடயத்தில் இந்தியா ஒரு பெரிய முன்னுதாரணம். நூற்றுக்கணக்கான இனங்களும், மொழிகளுமுள்ள தேசம் இந்தியா ஆனாலும் அந்த இன, மத உணர்வுகளை விஞ்சி இந்தியன் என்கின்ற தேசப்பற்று அவர்களிடம் இருக்கிறது, அது தான் இன்று வரை அந்தத் தேசத்தின் நிலைப்புக்கும், வெற்றிகரமான அபிவிருத்திக்கும் காரணமாகிறது. ஆனால் இலங்கையரிட்த்தே “ஸ்ரீ லங்கன்” என்ற உயர்வை விஞ்சி சிங்களவன், தமிழன், முஸ்லிம் என்ற இன உணர்வு காணப்படுவதுதான் வேதனையான விஷயம். இதற்கும் காரணம் அரசியல் தலைமைகள் தான். இந்தியாவில் மிக உன்னதமான அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்... இருந்தார்கள். அவர்கள் தேசியத்துவத்தையும், தேசப்பற்றையும் அந்த மக்களிடம் விதைத்தார்கள் இன்று அது பெரும் விருட்சமாகி இந்தியாவுக்கு நிழலைக்கொடுக்கிறது ஆனால் ஈழத்துத் தலைவர்களோ இனவாதத்தையும், மதவெறியையும் விதைத்தார்கள் இன்று அதுவே நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது.

கடந்தவாரம் இலங்கை அமைச்சர் மஹிந்த பிரியதர்ஷன யாப்பா “இலங்கையில் இனத்தை, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை தடை செய்யும் மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது” எனக் கூறினார். யார் எத்தகைய வாதத்தை வைத்தாலும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த மண் இன்னாருக்குத் தான் உரியது என வரையறுக்க யாருக்கும் உரிமையில்லை. இது குறித்த இனத்துக்கே உரியது எனப் பறைசாற்றுவதிலும் அர்த்தமில்லை. அத்தகைய செயற்பாடுகள் வீண் குரோதங்களுக்கும், விரோதங்களுக்குமே வழிவகுக்கும். உண்மையிலேயே மண் யாருக்கும் சொந்தமில்லை.... நாம் தான் இந்த மண்ணுக்கு என்றோ சொந்தமாகப்போகின்றோம். இவ்விடத்தில் மகாபாரதத்தின் முடிவை நினைவு கூறலாம் - “மண்ணுக்கான போரிலே கடைசியில் மண்தான் எஞ்சியது” - ஆக கீழ்த்தனமான கயமைகளிலிருந்து விடுபட்டு மனிதனை மனிதன் மதிக்கும் உயர்ந்த நாகரீகத்தை கடைப்பிடுத்து அருமையான சமுதாயமாக நாங்கள் வாழ முயற்சிக்க வேண்டும். இந்த மதவாதமும், இனவெறியும் இலங்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டு “ஸ்ரீ லங்கன்” எனும் தேசப்பற்றுணர்வு விதைக்கப்பட்டு, சகோதரத்துவமும், புரிந்துணர்வும், மனிதாபிமானமும், மனிதநேயமும் உரமாக இடப்பட்டால் நாளைய இலங்கை உண்மையில் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையாக இருக்கும்.