Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Dec 29, 2010

2010ன் எனது தெரிவுகள்!


எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -

********************************************************

வருடத்தின் சோகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?

********************************************************

வருடத்தின் மகிழ்ச்சி



தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.

********************************************************

வருடத்தின் அதிர்ச்சி



சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது! 


********************************************************

வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.


********************************************************

வருடத்தின் சிறந்த திரைப்படம்




என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை. 


********************************************************

வருடத்தின் இனிய பாடல்





நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!


********************************************************

வருடத்தின் சிறந்த பத்திரிகை

சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.


********************************************************

வருடத்தின் கேவலம்



ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!


********************************************************

வருடத்தின் சிறந்த நாடகம்




விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த மனிதன்



சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!

********************************************************

Jul 5, 2010

ஒரு அருமையான இசை அனுபவம்!

இசை காதுகளினூடு பயணித்து இந்த உடலையும், மனத்தையும் தன்வசப்படுத்திய ஒரு இனிய அனுபவம் இது. 

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்! என்னை மயக்கும் இசை அவருடையது. அண்மையில் அவர் இசையில் வந்த ஒரு பாடலை, வித்தியாசமான முறையில் அனுபவிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது, அந்த அனுபவம் அமைதியையும், மனத்திற்குப் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது. இசை மூலம் ஒரு தவம் என்றும் இதைச் சொல்லலாம், அந்த சில நிமிடங்கள், அந்த மயக்கும் இசையில் மூழ்கி எழுகையில் மனம் தெளிவுபெறும் விந்தையை நான் உணர்ந்தேன்.

ஒரு மாலைப்பொழுது - இல்லை - அந்தி சாய்ந்து இருள் கவ்வத்தொடங்கும் வேளை.... அமைதியான தனி அறை... குறைவான வெளிச்சத்தில், குளிர்மையான தென்றல் யன்னலூடு பயணித்து உடலை வருடிச்செல்லும் பொழுது... எனது “சோனி - வோக்மன் எம்பி3 ப்ளெயரில்” முழுமையான சப்தத்தில் ஒலிக்கிறது அந்தப் பாடல்.... கண்ணை மூடி, ஒரு தவம் போல என்னை மறக்கிறேன்.... காற்றில் பறப்பது போல ஒரு அனுபவம்.... இதுதான் முதல்முறை!

அந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜோதா-அக்பர் திரைப்படத்தில் இடம்பெற்ற “க்வாஜா எந்தன் க்வாஜா” என்ற பாடல். அந்த அனுபவத்திற்குப் பிறகு அந்தப் பாடலின் இசை பற்றித் தேடியறிந்தேன். அந்தப் பாடல் சூஃபி இசை வடிவத்தினடிப்படையில் உருவானது, படத்தில் பாடல் இடம்பெறும் சந்தர்ப்பமும் அதையொத்ததுதான். நான் கேட்ட முதலாவது சூஃபி இசைப் பாடலும் இதுதான் என்று நினைக்கிறேன்... இந்தப் பாடலை இதற்கு முதல் பலமுறை கேட்டிருக்கின்றேன், என்னைக் கவர்ந்தும் இருக்கிறது, ஆனால் தனியாக, அமைதியான நிலையில், கண்ணைமூடி இரசிக்கும் போது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை இது தந்தது! 


இதை நீங்களும் அமைதியான சூழலில் நீங்களும் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். வரிகள் உங்கள் கவனத்தைச் சிதைக்கிறது என உணர்ந்தால், இதே பாடலின் ஹிந்திப் பதிப்பைக் கேளுங்கள்! வரிகளை விட, இங்கு இசையின் அனுபவம் தான் இனிமையானது!



Jun 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (03) எதிரிகளும், வைரிகளும்...

இது ஒரு தொடர்ப்பதிவு
இதன் முன்னை அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...


சமர் என்று வந்துவிட்டால் எதிரிகள் இல்லாமல் முடியுமா? சொற்சமரான விவாதத்தைப் பொருத்த வரையில் எதிரணிகள் தான் எங்கள் எதிரிகள். ஆம் விவாதம் தொடங்கி முடியும் வரை அந்த உணர்வோடுதான் வாதிடுவோம், வெற்றிக்கனி பறிக்கும் வரை அந்தச்சூடு உடலில் தணியாது. விவாதத்திற்கு முன்னும், பின்னும் நண்பர்களாக இருப்போம், விவாதச் சமரின் போது எங்கள் எதிரிகளாகவே பாவிப்போம், காரணம் அப்போதுதான் அந்த உணர்வு விவாதத்திற்கு இன்னும் உயிரூட்டுவதாக இருக்கும். 

எதிரிகள் என்றால் அதில் நிறைய வகையுண்டு. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். றோயல்-தோமிய பாரம்பரியம் இங்கும் தொடர்கிறது. கடந்த 16வருடங்களாக தொடர்ந்த றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது, எந்தவொரு வேத்தியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம், நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியான பரி தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. பரி தோமாவின் கல்லூரி அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். றோயல்-தோமிய பாரம்பரிய தமிழ் விவாதச் சமர் பற்றி மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

றோயல்-தோமிய விவாதத்திற்கு அடுத்தபடியாக நாங்கள் சவாலான போட்டியாகக் கருதுவது றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டிகளைத்தான். றோயல்-தோமிய பாரம்பரியம் போல ஏதுமில்லாவிட்டாலும், தமிழ் விவாதத்தைப் பொருத்தவரை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எங்களுக்குச் சவாலான ஒரு அணிதான். அண்மைக்கால (கடந்த 5 வருடங்கள்) தமிழ் விவாதப் போட்டிகளின் முடிவுகளை பார்த்தீர்களேயானால் பெரும்பான்மையான விவாதச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் றோயல்-பம்பலப்பிட்டி இந்து போட்டிகளாகவே அமைந்திருக்கிறது. சில வருடங்களில் நாமும், சில வருடங்களில் அவர்களும் வென்றிருக்கிறார்கள். பருவகாலத்திற்கும், அணிகளின் நிலைக்கும் ஏற்ப இது மாறுபடும். நாங்கள் முக்கியமாக மோதும் போட்டிகளில் முதன்மையானது கல்வி அமைச்சு நடத்தும் தமிழ்த்தினப்போட்டிகள் 2006ம் ஆண்டு றோயல் கல்லூரி அணி முதலாம் சுற்றுடன் வெளியேறிவிட, வலைய மட்டத்தில் பம்பலப்பிட்டி இந்து வெற்றிபெற்றது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறையும் றோயல் கல்லூரியே வலையமட்டத்தில் வெற்றிபெற்று பின்னர் அகில இலங்கை மட்டம் வரை சென்றது, இதில் 2008ல் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது, அந்த இரண்டு ஆண்டுகளும் அணியைத் தலைமைதாங்கியவன் என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அவை. (இதற்கு முன்னர் 2004ல் நிஷாந்தன் அண்ணாவின் தலைமையில் றோயல் கல்லூரி அணி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது)! இதோ 2009ம் ஆண்டுப் போட்டியில் சில பம்பலப்பிட்டி இந்து வென்றிருக்கிறது. பம்பலப்பிட்டி இந்து அணி சவாலான அணி, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப்பொருத்துத்தான் விவாதத்தில் வெற்றி தோல்வி நிர்ணயமாகிறது. என்து கணிப்பின்படி அவர்களது பலம் பெரும்பாலும் மொழியாற்றலும், உறுதியான கருத்துரைப்பும் எமது பலம் பயிற்சி அனுபவமும், சமயோசிதமும், இது இரண்டிற்குமிடையேயான யுத்தத்தை நீங்கள் காண விரும்பினால் கட்டாயம் ஒரு றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டியைப் பாருங்கள்! 

இதைவிட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர் அணிகள் இன்னும் ஒன்றிரண்டுண்டு. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி (சைவ மங்கையர் கழகம்) அணி, பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அணி என்பன குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன், கொழும்பு மகளிர் கல்லூரியினால் நடத்தப்பட்ட தமிழ் விவாதப் போட்டிகளின் அரை இறுதிச்சுற்றில் பலமான இந்து மகளிர் கல்லூரி அணியைச் சந்திக்க நேர்ந்தது. தலைப்பு - சகோதர பாசத்தில் சிறந்தவர்கள் இராம இலக்குமணரே என்று நாங்களும் பஞ்ச பாண்டவரே என்று அவர்களும். விவாதம் நடந்தது - மிக்க சூடாகவும் கொதிப்புடனும். அவர்கள் அணியில் எல்லோரும் எம்மை விட வயதில் மூத்தவர்கள் ஆக எம்மிடம் தோற்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் சூடாகவே வாதிட்டனர். எனது விவாதப் பயணத்தில் நான் கண்ட மிகச் சூடான வாதங்களுள் இதுவும் ஒன்று. விவாதத்தின் சூட்டில் விவாதம் மிகப்பெரும் எல்லைகளையெல்லாம் தொட்டது, கடைசியில் நாம் வெற்றி பெற்றோம், அந்த விவாதம் பற்றி எழுதவேண்டுமானால் தனிப்பதிவு ஒன்றே எழுதலாம். விவாதத்தில் நாம் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்று இந்துவை வீழ்த்தி வெற்றிகண்டோம், அந்தப் போட்டித் தொடரை அடுத்த வருடமும் வெற்றிகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த 2007 மற்றும் 2008 இரு பருவகாலங்களிலும் நாம் இந்துவிடம் தோற்றது 4 முறைதான், 2 முறை பெனடிக்ட் கல்லூரி அணி நடத்திய போட்டிகளில்  மற்ற ஒன்று இரத்மலானை இந்துக் கல்லூரி நடத்திய போட்டியிலும், அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி அணி நடத்திய போட்டியிலுமாகும். இரத்மலானை இந்து போட்டியில் நாம் இந்துவிடம் தோற்றது கற்பு பற்றிய சர்ச்சையிலாகும், கற்பிற் சிறந்தவள் கண்ணகி என்று நாங்களும், சீதை என்று அவர்களும் வாதிட்டார்கள் - கற்பு என்ற சர்சையில் தோல்வி. அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி போட்டியில் தோற்றமைக்கு அலட்சிம் தான் முக்கிய காரணம், நான் அதை மமதை, அதீத நம்பிக்கை என்று கூடச்சொல்வேன். வாழ்க்கை எமக்கு சில நல்ல படிப்பினைகளை சில கசப்பான அனுபவங்கள் ஊடாகத் தருவதுண்டு, அது போன்றவொரு நிகழ்வுதான் இது. அது வரை பெற்ற வெற்றிகள் கொடுத்த போதை அலட்சியமான வாதத்திற்கு வழிகாட்டியது, ஆனால் அந்தத் தோல்வி எம்மைத் தட்டியெழுப்பி, மீண்டும் கால்களை நிலத்திற் படச்செய்தது என்று சொன்னால் மிகையில்லை. அதன் பின்தான் சந்தித்த இடத்திலெல்லாம் வெற்றிகளை தக்கவைக்கத் தொடங்கினோம் தொடங்கினோம். இந்து ஒன்றும் சளைத்த அணி என்று எண்ணிவிட வேண்டாம், அருமையான விவாதிகளைக் கொண்ட பலமான அணியாகவே இருந்தது. இதன் பின்பே கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடம் நடாத்திய பாராளுமன்ற முறையிலான தமிழ் விவாதப் போட்டிகளில் 2008. 2009ல் நாம் வெற்றி பெற்றோம். 

என்னதான் விவாதம் சார்ந்த விடயங்களில் நாம் வைரிகளாக இருந்தாலும், அதற்கு வெளியில் நட்புணர்வுடன் தான் பழகினோம். என்னுடைய காலத்தில் விவாதித்த வைரி அணி விவாதிகளுள் என்னைக் கவர்ந்த விவாதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்துக் கல்லூரி அணியின் தலைவராக இருந்த விதூஷன் ஒரு மிகத்தரமான விவாதி, கருத்துக்களை உணர்ச்சியுடன் கூறுவதில் சிறந்தவர், அனல் பறக்க விவாதிப்பது அவர் பாணி. இந்துக் கல்லூரியின் 4ம் விவாதியாக இருந்த சஞ்சீவனையும் குறிப்பிட வேண்டும், நக்கல் விவாதத்திற்கும், நகைச்சுவைக் கருத்துகளுக்கும் ஆள் பெயர்போனவர். இதைவிட இந்துக் கல்லூரிக்கு பின்னர் தலைமைதாங்கிய சிவாம்சன், தற்போது தலைமைதாங்கும் கஜானன் ஆகியோர் சிறப்பான தமிழ் பேசும் நல்ல விவாதிகள். அந்த 2007 மகளிர் கல்லூரி அணியில் பங்குபற்றிய இந்து மகளிர் கல்லூரி அணி நான் பார்த்த மிகச் சிறந்த அணிகளில் ஒன்று, அண்மையில் கொழும்பச் சட்ட பீட பாராளுமன்ற விவாதப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன், அதன் போது வந்த இந்து மகளிர் அணியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன், அவ்வளவு தமிழ்க்கொலை, எப்படியிருந்த அணி இப்படி ஆயிட்டே என்று வருத்தம் தான். விவாதத்தில் எந்த முரண்பட்ட கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் தமிழ்க்கொலையை ஏற்றுக்கொள்ளவே முடியாது, தமிழைச் சரியாகப் பேச முடியாதவர்கள், அதைப் பயின்றபின் மேடையேறவேண்டும் என்பது எனது அபிப்ராயம். அண்மையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, சிறப்படைந்து வரும் தோமிய விவாத அணியின் விஜய் அபிநந்தன் சிறப்பாக வாதிக்கிறார், கடந்த றோயல்-தோமிய விவாதத்தில் சிறப்புமிக்க சிறந்தவிவாதிக்கான விருதையும் வென்றவர் இவர்.

ஒவ்வொரு விவாத அணிக்கும் ஒரு பலம் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது. நான் அறிந்த பல அணிகள் எமது வேத்திய அணியுடன் இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதை விரும்புவதில்லை, அது போலவே ஒவ்வொரு அணிக்கும் பலம், பலவீனம் இருக்கிறது, இவற்றைச் சரியாகக் கணித்தால் வெற்றியை அதன் பாதையில் செப்பனிட முடியும். இந்த வருடத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்து பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் அவை வேத்திய அணியில் காணப்பட்ட சில தொய்வு நிலைகளை அடையாளங் கண்டுகொண்டதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.


இது தொடர்பிலான சில வெற்றியின் இரகசியங்கள், சாதித்தவர்கள், அனுபவஸ்தர் கூற்றுக்களாக -

உன் எதிரி உன்னை அச்சம் கொள்ளச் செய்யும் முயற்சிகளை அவதானிப்பதன் மூலம் அவன் எதற்கெல்லாம் அச்சப்படுகிறான் என்று அறிந்திட முடியும் - எரிக் ஹொஃபர்.

உன் எதிரி பிழைவிட்டுக்கொண்டிருக்கும் போது இடையூறு செய்யாதே - நெப்போலியன் போனபார்ட்

எங்கள் எதிரிகளிடமிருந்தும் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம் - ஓவிட்

பாம்பைப் பிடிப்பதற்கு உன்எதிரியின் கரத்தைப் பயன்படுத்து - பாரசீகப் பழமொழி

இவையெல்லாம் விவாதத்தில் பயன்படுத்தக்கூடிய உத்திகள்! பலமான எதிரணிகள் இருந்தால் தான் விவாதம் சூடுபிடிக்கும், அந்த வகையில் நான் எங்களைச் சவாலுக்குட்படுத்திய இந்த அணிகளை பெருமிதத்துடன்தான் பார்க்கிறேன்! எனது விவாதப் பயணத்தில் மறக்கமுடியாத தருணங்களைத்தந்ததற்கு அவர்களுக்கு நன்றி.... மறக்கமுடியாத மட்டுமல்ல மறக்க நினைக்கும் சில தருணங்களும் உண்டு... அவை பற்றி அடுத்த பதிவில்....


(தொடரும்)

Apr 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (01) ஒரு பயணம் தொடங்குகிறது...

றோயல் கல்லூரி - என் வாழ்வின் முக்கியமான அத்தியாயாம், அது எனக்குத் தந்த இனிமையான விடயங்களில் முதன்மையான அனுபவம் - விவாதம்! நான் றோயல் கல்லூரி விவாதக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது தரம் 9ல். அது வரை பேச்சுப்போட்டிகளில் மட்டுமே நான் பங்குபற்றி வந்தேன். தரம் 9ல் நான் விவாதக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தரம் 10ன் இறுதிக்காலத்தில் தான் விவாத அணியில் உதிரியாக இடம் கிடைத்தது. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி 55 வருட பாரம்பரியமும், தனித்துவமும் கொண்டது, அத்தகைய பெருமையான அணியில் இலகுவில் இடம்பெற்றுவிட முடியாது என்பது வேத்தியர்கள் அனைவரும் அறிந்த உண்மை. சில வேளை கழகத்தில் இணைந்து 2-3 ஆண்டுகள் கழிந்துங்கூட அணியில் இடம்கிடைப்பது நிச்சயமானது அல்ல. தனிப்பட்ட திறமைகளுக்கப்பால், குழுரீதியான ஒருமித்த செயற்பாடுகளே அணித்தெரிவில் முக்கியமாகக் கருதப்படுகிறது - பேச்சுப் போட்டிக்கும், விவாதப் போட்டிக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசமே அதுதான்.

என்னுடன் ஆரம்பத்தில் என்னுடைய தரத்திலிருந்து (batch) 6 பேர் விவாதக் கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள். முதலில் சிவசங்கரனும், நானும், ராகவனும் தெரிவுசெய்யப்பட்டோம். அடுத்த பிரிவில் விசாகனும், முகுந்தராஜீம், ராகுலனும் தெரிவு செய்யப்பட்டார்கள். எங்களுக்கு அடுத்த தரத்திலிருந்து (next batch) கபிலனும், உமாசங்கரனும், அர்ஜீனரும் தெரிவுசெய்யப்பட்டார்கள். ஒவ்வொரு புதன்கிழமையும் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சி விவாதங்கள் இடம்பெறும் - ஆனால் அப்போதெல்லாம் அதில் பங்கு கொள்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வமிருக்கவில்லை, காரணம் மிக எளிமையானது, அங்கு எமக்கு விவாதிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிது. எமக்கு முன்னைய தரத்திலிருந்து விவாதக் கழகத்திற்கு யாரும் தெரிவு செய்யப்படாவிட்டாலும், அதற்கு முன்னைய தரத்திலிருந்து விவாதக் கழகத்திலும், அணியிலுமாக மொத்தம் 6 பேரும், அவர்களுக்கு முன்னைய தரத்திலிருந்து ஒருவரும், அதற்கும் முன்னைய தரத்திலிருந்து மூவரும் அணியிலிருந்தனர். ஆகவே அவர்களது பயிற்சி விவாதங்களைப் பார்ப்பதே எங்களின் ஆரம்பகட்டப் பயிற்சி. அன்றைக்கு என்னவோ அதன் அருமையும் அவசியப்பாடும் எனக்குத் தெரியவில்லை - ஒவ்வொரு பயிற்சி நாள் வரும் போதும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு பாடசாலைவிட்டது வீட்டுக்குப்போய்விடுவேன். இது தரம் 9ன் இறுதிக்காலம் முதல் தரம் 10ன் இடைக்காலம் வரை நடந்தது. 

இப்படியே அடிக்கடி பயிற்சிக்கு கட் அடித்துக்கொண்டே இருந்தேன் அதற்காக அன்று எனக்குள் நான் உருவாக்கிக்கொண்ட நியாயம் - சும்மா விவாதங்களில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதால் பயனில்லை - எங்களைப் பேச விட்டால்கூடப் பரவாயில்லை. ஆனால் பின்பு மற்றவர்களின் விவாதங்களைப் பார்க்கக்கிடைக்காதா என்று நான் எண்ணி வருந்திய காலங்கள் நிறைய வந்தது (அவை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்). இவ்வாறே அடிக்கடி கட் அடித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு முறை ஒரு பயிற்சி விவாதத்திற்குப் போனபோது தான் புதிய ஒரு செய்தி கிடைத்தது, அதாவது எங்களுடைய தரத்திலிருந்து சிறப்பாகச் செயற்படும் விவாதிகள் விரைவில் விவாத அணியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதே அது. எனக்கோ எப்படியாவது நான் அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம், ஆனால் என்னுடைய தரத்திலிருந்தே போட்டிக்கு 5 பேர் இருந்தார்கள். இந்த ஐவரில் நான் மிகக்கடினமான போட்டியாகக் கருதியது சிவசங்கரனையும், விசாகனையும் தான். சிவசங்கரன் கடுமையான விவாதியல்ல ஆனால் குளிர்மைகவே தான் சொல்லவந்ததைச் சொல்லிவிடக்கூடிய திறமைசாலி. விசாகன் இன்னும் வித்தியாசமானவன், நகைச்சுவை, நக்கல் மற்றும் கவித்துவமான வரிகள் என விவாதத்தை ஜனரஞ்சகப்படுத்துவதில் வல்லவன், இன்று வரை நான் கண்டு வியக்கும் விவாதிகளில் ஒருவனும் கூட, அவன் என்னுடைய இனிய நண்பன் என்பதில் மகிழ்ச்சி ஆனால் அந்த நெருங்கிய நட்புக்கு அத்திவாரமிட்டது இந்த விவாத அணிதான். இவர்கள் இருவரும் கடுமையான போட்டியாக இருக்க, உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் கொஞ்சம் பயந்துதான் போனேன், இவ்விருவரை விட எனக்கு இருந்த ஒரே advantage நான் அதிகளவில் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுதான். ஆனால் ஒன்று அந்த அறிவிப்பு வந்த நாள் முதல் எனது புதன்கிழமைகள் விவாதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன.

நான் பல விவாத அணிகளைப் பின்னைய நாட்களில் அதிகமாகக் கண்டிருக்கின்றேன். அவற்றிற்கும் றோயல்கல்லூரி விவாத அணிக்குமான வித்தியாசத்தைத் தேடிப்பார்க்கையிலே தான் சில அடிப்படை வேறுபாடுகள் எனக்குத் தெட்டத்தெளிவாகத் தென்பட்டன. அநேகமான பாடசாலைகள் சனிக்கிழமை விவாதப் போட்டியென்றால், வெள்ளிக்கிழமைதான் தமது அணிகளைத் தெரிவுசெய்கின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரை அந்தக் கட்டகம் வித்தியாசமானது, தெரிவுச்சுற்றுகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்டு, சிறப்பானவர்கள் கழகத்திற்குத் தெரியப்பட்டு, அதிலிருந்து பயிற்சிக்காலத்தில் சிறப்பாகச் செயற்படுபவர்கள் அணிக்குத் தெரிவுசெய்யப்படுகிறார்கள், இதனால் எங்கள் அணியில் ஒரு consistency இருப்பதைக் காணமுடியும். சில பாடசாலைகள், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பான, மிகச் சிறப்பான அணிகளைக் கொண்டிருந்தன ஆனால் அந்த அணியிலே இருந்தவர்கள் பாடசாலைக்காலம் முடிந்து போய்விட்டதும் அந்த அணியும் மறைந்துவிடும். கடந்த 5 ஆண்டுகளும் அப்படி மறைந்து போன அணி என்றால் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணியைக் குறிப்பிடலாம், 2004-06 காலப்பகுதியில் விவாதப் போட்டிகளில் இருக்கும் மிகச்சவாலான அணியாக அது காணப்பட்டது, ஆனால் பின்பு அவ்வணி போட்டிகளில் பங்கேற்பதே அரிது. இதுபோலவே புனித சூசையப்பர் கல்லூரி அணியும். அன்று விவாதப் போட்டிகள் மீது இருந்த craze இப்போது குறைந்துவிட்டதோ என்றே தோன்றுகிறது....

றோயல் கல்லூரி விவாதக் கழகத்தில் இணைவது இன்னொரு extra பாடம் ஒன்று படிப்பது போன்றது. பயிற்சியின் ஆழம் அதற்காகப் படிக்கவேண்டிய விடயங்கள் என பிழிந்து எடுத்துவிடுவார்கள் seniors. மிகக்குறுகிய காலத்துள் தமிழ் இலக்கியம், அரசியல் என நிறைப் புத்தகங்களைப் படிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம் (அதன் நன்மை பின்புதான் எமக்குப் புரிந்தது). நான் கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கியதும் இப்படித்தான், சங்க இலக்கியங்களை நயக்கத் தொடங்கியதும் இப்படித்தான். எங்கள் காலகட்டத்தில் இலக்கிய விவாதங்களில் சிறந்த அணியாக நாங்கள் விளங்கினோம் என்பதை நான் பெருமையோடு சொல்வேன், அதற்கான அடித்தளம் எங்கள் பயிற்சிக் காலத்தில் தான் இடப்பட்டது.

சரி, அணித்தெரிவுப் போட்டிக்குப் போவோம் - உண்மையில் அது போட்டியேயல்ல, எங்களிடையே போட்டியை ஏற்படுத்துவது எங்கள் seniors ன் நோக்கமுமல்ல, அவர்கள் சும்மா கொடுத்த அந்த hint ஐ நான் தான் போட்டியாகக் கருதிவிட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. எது எப்படியோ, அதன் பின் ஒவ்வொரு புதனும் விவாதப்பயிற்சிகளுக்குச் சென்றேன், இடையில் ஒரு முறை எமக்கும் விவாதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஆனால் அந்தத் திடுக்கிடும் அதிர்ச்சியை நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை என்னுடைய அதிர்ஷ்ட நேரம் தலைப்போ அரசியல் சம்பந்தமானது, அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்பந்தமானது, பிய்த்த உதறிவிட்டேன் என்று நம்புகிறேன். தொடர்ந்தும் அடிக்கடி எமக்குப் பயிற்சி விவாதங்களில் ஈடுபட வாய்ப்புக்கள் மலரத் தொடங்கியது கூடவே எனக்கு விவாதத்தின் மீதான அதீத பற்றும் மலரத்தொடங்கியது.

தரம் 10ன் இறுதிக்காலம் என்று நினைக்கின்றேன், புனித பேதுருக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் எனது அணியில் 6வது விவாதியாக (உதிரி விவாதி) அறிமுகம் பெற்றேன். அந்தத் தொடரில் வாதிடும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கவில்லை. அந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு எமது அணி தகுதி பெற்றது ஆனால் இறுதிப் போட்டியை வேறொருநாள் நடத்துவதாகக் கூறியவர்கள் இன்று வரை நடத்தவேயில்லை. ஆக முடியாத ஒரு விவாதச் சுற்றுப்போட்டியுடன் எனது விவாத அணிப்பயணம் தொடங்கியது......

பலருக்குக் காதலைப் பற்றி எழுதும் போது மகிழ்ச்சி பிறக்கிறது, எனக்கு நான் காதலித்த விவாதத்தைப் பற்றி, அந்த இனிய ஞாபகங்களை மீட்டுவதில் ஒரு மகிழ்ச்சி!

Nov 1, 2009

“யாழ்தேவி” திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவர்!


“யாழ்தேவி” திரட்டியினர் இவ்வாரத்திற்கான (02-11-2009 முதல் 08-11-2009) நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள். நீண்டகாலத்திற்குப் பின் அண்மையில் தான் ஒரு பதிவினை இடுவதற்கு நேரம் கிடைத்திருந்தது இந்த வேளையில் இந்த கௌரவம் எனக்களிக்கப்பட்டிருப்பதனால் எப்படியாவது இவ்வாரம் முழுவதும் ஆகக் குறைந்தது நாளுக்கொரு பதிவாவது எழுத வேண்டிய தார்மீகக் கடமைப்பாடும் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது - களைப்பிலும் களிப்பு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த நாள் முதல் நான் நானாக இல்லை என்பதை உணர்கின்றேன். சூழல் மாற்றம் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வாரம் இரண்டரை நாட்கள் கொழும்பில் இருக்கும் நாட்களே என்னை கொஞ்சம் குதூகலமாக வைத்திருக்கிறது - மற்றப்படி பேராதனை வாழ்க்கை எனக்கு வெறுப்பையும் கசப்பையுமே ஊட்டிக்கொண்டிருக்கிறது. காரணங்கள் பல. முதலாவது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நான் போகத் தொடங்கிய நாள் முதலே வகுப்புப் பகீஷ்கரிப்புப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது - நான் பகிடிவதைக்கு எதிரான குழாமில் இருந்தாலும் பகிடிவதைக் குழாமிலுள்ளோர் வகுப்புக்கைளப் பகிஷ்கரிக்கும் போது நாம் ஒருவர் இருவர் வகுப்புக்குச் செல்வதில் பயனில்லை ஆக வாரமொருமுறையாவது இந்த வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் இடம்பெறுவதால் மனம் அந்தச் சூழலில் சுமுகமடைய மறுக்கிறது.

மேலும் பகிடிவதைக் குழாம் - பகிடிவதைக்கெதிரானோர் குழாம் என பிரிவினைகள் உள்ளதால் எனது பிரிவில் உள்ள மற்ற மாணவர்களோடு கூட சகஜமாகப் பழக முடியாத நிலையும் இருக்கிறது. இவற்றோடு காலைவேளையிலே பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும் போது வாசலில் வரவேற்கும் கறுப்புக் கொடிகளும் தோரணங்களும் - எதிர்ப்புப் பதாகைகளும் படிக்கும் மனநிலையைக் குலைத்துவிடுகிறது. அடிப்படையிலே கம்யுனிச-இடதுசாரித்துவ மறுப்பாளனான எனக்கு இந்தச் சூழல் இயல்பான நிலையைத் தரவில்லை.

இவ்வாறாக எனது பல்கலைக்கழக நிலைமை இருக்க, திடீர் வாழ்க்கை முறை மாற்றம் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்போட்டுவிட்டது. கண்டியில் பொதுவாக பின்னேரம் 6-7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடி வீதிகளெல்லாம் வெறுமையாகிவிடும். பொதுவாக 7-8 மணிக்கெல்லாம் எல்லாரும் இராப்போசனம் உண்டு உறங்கிவிடுவார்கள். இரவு 10-11 மணிக்கு இராப்போசனத்தை உண்டு 12-1 மணிக்கு படுத்துப் பழகிய எனக்கு இந்த மாற்றம் கொஞ்சம் அவதியாகத்தான் இருக்கிறது. இவற்றைவிடப் பெரிய மனக்குறை “தனிமை” - தனிமையில் புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் நண்பர் சுற்றத்துடன் வாழ்ந்து பழகிய பின் இம்முறைக்கு பரிச்சயமாக மனம் இழுத்தப்பறித்துக் கொண்டு நிற்கிறது.அடுத்த முக்கிய பிரச்சினை உணவு... இங்கிருக்கும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையை விட எமது பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை ஆயிரம் மடங்கு மேல். சரி பக்கத்திலாவது நல்ல சாப்பாட்டுக் கடைகள் இருக்குமென்றால் இங்கே சாப்பாட்டுக் கடையைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இப்படியாக மனநிலையில் அமைதி குன்றிய காலப்பகுதியில் போராடிக்கொண்டிருக்கின்றேன் - ஆனால் இந்தச் சவால்களும் ஒருவகையில் சுவையாகத் தான் இருக்கிறது.


இக்காலகட்டத்தில் பதிவுகள் எழுத நேரமும் மனமும் என்னைச் சவாலுக்குட்படுத்தினாலும் இந்தக் கௌரவத்தை எனக்குத்தந்த “யாழ்தேவி” திரட்டியினருக்கு நன்றிகளைப் பகிர்ந்து இவ்வாரம் முழுவதும் பதிவெழுதத் துணிகின்றேன்.

இவ்வேளையில் தமிழ்ப் பதிவுலகத்தில் எனக்கு அங்கீகாரம் அளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து வாசகர்களுக்கும், அபிமானிகளுக்கும், நண்பர்களுக்கும் அன்பு நன்றிகள்!