இதைப் பற்றி நீண்டகாலகமாகவே எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் இன்று தான் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது. இன்று பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்குப் போயிருந்தேன் - திருவிழாக்காலம் ஆதலால் கோயிலே சோடிக்கப்பட்டு தோரணங்களும் மின்னொளி அலங்காரமும் நிறைந்து மங்கலகரமாக இருந்தது. என்னுடைய கண்கள் அந்த அலங்காரமான தோரணங்களைப் படம் பிடிக்கையிலே என்றைக்கோ பாடசாலையில் சமய பாடத்தில் படித்த ஒன்று மனதில் தோன்றி ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது.
தென்னங்குருத்திலைத் தோரணமானது மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகள் இரண்டிலும் வெவ்வேறு விதமாகக் கட்டப்படும். அதாவது மங்கல விழாக்களில் தோரணங்களில் காணப்படும் கூர்கள் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வுகளில் அந்தக் கூர்கள் மேல் நோக்கியும் தான் கட்டப்பட வேண்டும் - இதற்கு எங்கள் சமயப் பாடப்புத்தகத்தில் தரப்பட்ட விளக்கமானது மங்கல விழாக்களுக்கு தேவர்கள் மேலுலகத்தினின்று இப்பாருக்கு வருவதனைச் சுட்டும் விதமாக கூர் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வான மரண நிகழ்வுகளில் ஆத்மா மேலுலகத்திற்குச் செல்லுவதைக் குறிக்கும் விதமாக கூர் மேல்நோக்கி அமையுமாறு தோரணம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை நான் தெளிவாகப்படித்திருந்தேன் அந்த ஞாபகம் இந்த மங்கலகரமான திருவிழாவில் தோரணம் அமங்கல முறையில் கட்டப்பட்டதைக் கண்டதும் மனதில் தோன்றியது. சரி நான் ஏதோ குழம்பிவிட்டேனோ என தற்போது இன்னும் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் எனது தம்பி, தங்கையிருவரிடமும் விசாரித்ததில் நான் நினைத்தது சரியே - பாடப்புத்தகத்திலும் அப்படித்தான் இருக்கிறது - அதுவும் 10, 11 ஆம் வகுப்புப் புத்தகங்களிலல்ல ஆண்டு 5 புத்தகத்தில் இது பற்றித் தெளிவாக இருக்கிறது.
இந்தக் கோயிலில் மட்டுமல்ல இன்று பல மங்கல விழாக்களில் நான் இந்த அமங்கல முறைத் தோரணத்தையே காண்கிறேன் - பார்க்கும் போதெல்லாம் இந்தச் சந்தேகம் என்னை பற்றிக்கொள்ளும். இப்படித்தான் பலவிடயங்கள் இந்து சமயத்தில் தடம்மாறி நடந்துகொண்டிருக்கிறது - நிறைய மரபுகள் உடைக்கப்பட்டுவிட்டன - இது மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உரியது. இது பற்றி இப்பதிவை எழுத முன் நண்பன் ஒருவனிடம் பேசினேன், அவன் சொன்ன பதிலும் என்னை மிகவும் வருத்தியது. “மச்சாங், இந்தக் காலத்தில தோரணம் கட்டுறதே பெரிய விசயம் இதுல மங்கலம், அமங்கலம் எண்டுகொண்டு.... மற்றது தோரணத்தை முற்திமாதிரி ஐயர்மாரோ விசயம் தெரிஞ்சஆக்களோ முன்னுக்கு நிண்டு கட்டுவிக்கிறாங்களா??? இல்லை... மாலை கட்டுறவன் ஓடர எடுத்திட்டு தனக்கு தெரிஞ்ச முறையில கட்டுறான்... இதப்பற்றி ஐயர்மாரும் பெரியவங்களுமே கவனிக்கேல... நீ ஏன்டா சும்மா...” - அவன் சொன்னது இந்தக்காலத்தின் பிம்பம் - தவறுகளை நாங்கள் திருத்த முனையாமல் தட்டிக்கழிக்கின்றோம் அல்லது அலட்சியம் செய்கின்றோம் நாளைக்கு அந்தத் தவறுகளே சரி என்ற நிலமைக்கு வந்துவிடும், நாங்களும் “பெரிய மனசுக்காரராக” அதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.....
கொஞ்சம் யோசியுங்கள் இந்தச் சின்னச் சின்ன அலட்சியங்களேல்லாம் எங்கள் இந்து சமய நெறிமுறைகளையெல்லாம் தகர்த்து எறிந்துவிடாதா???