Aug 14, 2009

இங்லிஷ் கால்பந்தாட்டப் பருவகாலம் 2009/10 - ஒரு முன்னோட்டம்


2009-2010 பருவகாலத்திற்கான இங்லிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது. மே மாதம் முடிவடைந்த கடந்த ஆண்டுக்கான பருவகாலத்தில் மஞ்செஸ்டர் யுனைடட் கழகம் வெற்றி பெற்றது, அதே பருவகாலத்தில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் பாசலோனா கழகத்திடம் 2-0 என்ற அடிப்படையில் மஞ்செஸ்டர் யுனைட்டட் கழகம் தோற்றதும், இங்கிலாந்தின் எஃப்.ஏ கிண்ணத்தை செல்ஸி கழகம் கைப்பற்றியதும் பழையகதை. இந்த புதிய பருவத்தின் லீக் போட்டிகள் நாளை, 15ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை ஆரம்பமாகிறது. ப்ரீமியர் லீக்கில்20 அணிகள் விளையாடுகின்றன. கடந்த ஆண்டு ப்ரீமியர் லீக்கில் கடைசி 3 இடம் பெற்ற அணிகள் வெளியேறி 1ம் டிவிசனில் இம்முறை விளையாடுகின்றன. இதில் 16 வருட காலம் தொடுர்ந்து ப்ரீமியர் லீக்கில் விளையாடிய நியுகாசல் யுனைட்டட் கழகம் ப்ரீமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்பட்டு இப்போது 1ம் டிவிசனில் விளையாடுவதும் அனைத்து இரசிகர்களும் அறிந்ததே. இந்தப் பருவகாலத்தில் ப்ரீமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்பட்ட 3 அணிகளுக்குப்பதிலாக கடந்த பருவகாலத்தில் 1ம் டிவிஷனில் முதல் 3 ஸ்தானங்களைப் பெற்ற பேண்லி, வுல்வஹம்டன் வொண்டரர்ஸ் மற்றும் பேமிங்ஹம் சிட்டி ஆகிய கழகங்கள் இம்முறை ப்ரீமியர் லீக்கில் காலடியெடுத்து வைத்திருக்கின்றன. இப்பருவகாலத்தில் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் அணிகளாவன - ஆர்செனள், அஸ்ரன் வில்லா, பேமிங்ஹம், ப்ளக்பேர்ன் ரோவர்ஸ், பொள்டன் வொண்டரர்ஸ், பேண்லி, செல்சி, இவேடன், ஃபுல்ஹம், ஹல் சிட்டி, லிவர்புல், மஞ்செஸ்டர் சிட்டி, மஞ்செஸ்டர் யுனைட்டட், போட்ஸ்மௌத், சண்டர்லண்ட், ஸ்ரோக் சிட்டி, டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர், வெஸ்ட் ஹம், விகன் அத்லடிக் மற்றும் வுல்வஹம்டன் வொண்டரர்ஸ்.


இத்தளை அணிகள் இருந்தாலும் வெற்றி அல்லது ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் அடுத்த பருவகாலத்தில் விளையாடத் தகுதிபெறத் தேவையான லீக்கின் முதல் 4 இடங்கள் என்பவற்றைத் தொடர்ந்து பல வருடங்களாக மஞ்சேஸ்டர் யுனைட்டட், செல்ஸி, லிவர்புல் மற்றும் ஆர்செனல் ஆகிய 4 கழகங்களே கைப்பற்றியிருக்கின்றன. இம்முறையும் அதில் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே பலரது கருத்தாக இருந்தாலும் புதிதாக பொருளாதார ரீதியில்உறுதிபெற்றதன் மூலம் பல் திறமையான வீரர்களை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த டுபாய் ஷெய்க்கிற்குச் சொந்தமான மஞ்செஸ்டர் சிட்டி கழகத்தின் மீதும் பெருங்கவனம் திரும்பியுள்ளது. இதுவரை இப்பருவகாலத்தில் மட்டும் ப்ளக்பேர்ண் கழகத்திலிருந்து ஸ்ரைக்கரான ரொகே சண்டகுரூஸ், அஸ்ரன் விலா கழகத்தின் மிட்ஃபீல்டர் கரத் பரி மற்றும் ஆர்செனல் கழகத்திலிருந்து ஸ்ரைக்கரான எமனுவல் அடபயோர் மற்றும் டிஃபென்டரான கோலோ டுவரே ஆகியோரையும் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்ததுடன், மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கு விளையாடிய ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் ஸ்ரைக்கர் கார்லஸ் டெவேஸ் - ஐயும் 25 மில்லியன் பௌண்ஸ்களை யுனைட்டட் கழகத்துடன் ஒப்பந்தகாலம் முடிந்திருந்த அவ்வீரருக்கு அள்ளி வழங்கி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவருடன் சேர்த்து மொத்தமாக மஞசெஸ்டர் சிட்டி அணியில் இப்போது 10 ஸ்ரைக்கர்கள் இருக்கிறார்கள் - ஒரு போட்டியில் அதிக பட்சம் 3 விளையாடும் ஸ்ரைக்கர்களும் 2 பேர் உதிரிகளாக பென்ஞ்சில் இருப்பதே வழமை ஆனால் 10 ஸ்ரைக்கர்களை எவ்வாறு சிட்டி கழக முகாமையாளர் மார்க் ஹ்யுஸ் பய்னபடுத்தப்போகிறார் எனக் காண நாங்கள் ஆவலாக இருக்கின்றோம் என மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முகாமையாளர் சேர்.அலெக்ஸ் ஃபேகுஸன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரைக்கர்கள் அதிகமாக இருந்தாலும் டிஃபென்டர்களைப் பொறுத்தவரையில் சிட்டி கழகத்திடம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இருக்கவேயில்லை அதனால் டிஃபென்டர்களை ஒப்பந்தம் செய்ய அயராத முயற்சி எடுத்தும் இறுதியில் ஆர்செனல் கழகத்தில் கோலோ டுவரேயை மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடிந்தது. செல்ஸி கழகத்தின் தலைவரும் இங்கிலாந்து அணியின் தலைவரும் நட்சத்திர டிஃபென்டருமான ஜோன் டெரியை 45 மில்லியன் பௌண்ஸ்ஸிற்கும் உலகிலேயே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கான அதிக சம்பளத்தொகையான வாரமொன்றுக்கு 3 இலட்சம் பௌண்ஸிற்கும் ஒப்பந்தம் செய்ய முயன்றும் செல்ஸி கழகமும், ஜோன் டெரியும் இதனை மறுத்துவிட்டனர், மேலும் எவேடன் கழகத்தின் ஜோலியன் லெஸ்கொட்டை ஒப்பந்தம் செய்யுமு் மயற்சியும் இதுவரை தோல்வியையே சந்தித்திருக்கிறது. இது வரை பெரிதாகப் பேசப்படாத கழகமான மஞ்செஸ்டர் சிட்டி கழகம் கடந்த வருடம் டுபாய் ஷெய்க் மன்சூர் வாங்கியதன் முதல் அதிக பணத்தை கொட்டிக்கொட்டிச் செலவழிப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது - அவர்களது கனவு முதல் 4ற்குள் நுழைவது தான் - இது நடக்குமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


இவர்களது முதல் 4 கனவு அப்படியிருக்க ஆர்செனலின் இருப்பு கவலைக்கிடமாகவே இருக்கிறது. கடந்த பருவகாலத்தில் ஒருவாறு பெரும்போராட்டத்திற்குப்பிறது 4ம் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டது ஆர்செனல் கழகம் - கொஞ்சம் அசந்திருந்தாலும் அஸ்ரன்விலா 4ம் இடத்தைத் தடடிச்சென்றிருக்கும். இம்முறையும் ஆர்செனல் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. அவர்கள் புதிதாக ஒரு வீரரை மட்டுமே இதுவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் - பெல்ஜிய டிஃபென்டரான வேர்மலன் மட்டுமே புதிய இணைப்பு ஆனால் பழைய அணியிலிருந்த நட்சத்திர ஸ்ரைக்கரான எமனுவெல் அடபயோர் மற்றும் டிஃபென்டர் கோலோ டுவரே ஆகியோர் சிட்டிக் கழகத்திற்கு மாறிய பின்னரும் கையில் காசிருந்தும் புதிய வீரர்கள் யாரும் சிக்காமல் தவித்து வருகிறார் ஆர்செனல் முகாமையாளர் ஆர்சன் வெங்கர். இதோடு அவரை வாட்டும் பெரிய தலையிடி பருவகாலம் தொடங்கும் முன்பே தோமஸ் ரொஸிஸ்கி, தியோ வொல்கொட், ஃபபியன்ஸ்கி உட்பட 6 முதல்நிலை வீரர்கள் காயமுற்றிருப்பதுதான். தற்போதைய நிலைமைகளை வைத்துப்பார்க்கும் போது இம்முறையும் ஆர்சனல் வெல்லவு ஏதுமில்லை எனத்தான் தோன்றுகிறது ஆனால் 4ம் இடத்தைத் தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது ஆர்செனல்.


கடந்த முறை லீக்கில் 3வது இடத்தைப்பெற்றதுடன், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதி வரை முன்னேறி சர்ச்சைக்குரிய அரையிறுதியின் இரண்டாவது லெக்கில் பார்சலோனா கழகத்துடன் “எவே கோல்ஸ்” அடிப்படையில் தோல்வி கண்டதுடன், எஃப்.ஏ.கிண்ணத்தைக் கைப்பற்றிய அணி செல்ஸி கழகமாகும். இம்முறை லீக்வெற்றி, சம்பியன்ஸ் லீக் கனவுகளுடன் களத்தில் இறங்கியிருக்கிறது. பருவகாலத்தின் ஆரம்பப்போட்டியான எஃப்.ஏ.கம்யுனிட்டி ஷீல்ட் டில் மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்தை பெனால்டிகளில் 4-1 என்ற அடிப்படையில் தோற்கடித்து வெற்றியுடன் இப்பருவகாலத் ஆரம்பித்திருக்கிறது. இப்பருவகாலத்தில் செல்ஸி கழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் ஏ.சி.மிலான் இத்தாலிய காற்பந்தாட்டக்கழகத்தின் முகாமையாளராக 8 வருடம் கடமையாற்றிய கார்ளோ அன்சலொட்டி செல்ஸி கழகத்தின் முகாமையாளராக நியமிக்கப்பட்டதாகும். அவரது அனுபவமும் பயிற்சி முறைகளும் செல்ஸ கழகத்தை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பு - இதுவரை முற்-பருவகாலப் போ்டிகளில் செல்ஸி கழகம் மிகச் சிறப்பாக செயற்பட்டிருக்கிறது. மேலும் செல்ஸ கழகத்திற்கு மிக ஆறுதலான ஒரு விடயம் ஏனைய 3 முன்னணி கழகங்களைப்போல செல்ஸி இதுவரை தமது முக்கிய வீரர்கள் யாரையும் பறிகொடுக்கவில்லை என்பது தான். அத்தோடு 3 புதிய வீரர்கள் இதுவரை ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சிட்டிக் கழகத்திலிருந்து இளம் ஸ்ரைக்கரான டானியல் ஸ்ரரிஜ், மிடில்ஸ்ப்றோ கழகத்தின் கோல் காப்பாளாரான றொஸ் ரேன்போள் மற்றும் ரஷ்ய டிஃபென்டரும், மிட்ஃபீல்டருமான யுரி ஸேகொவ் ஆகியோரே புதிதாக செல்ஸி கழகத்தில் இணைந்தவர்கள். கார்ளோ அன்சலொட்டியின் அனுபவமும் மாறாக நிலையான உறுதியான அணியும் கொண்டுள்ளதால் செல்ஸி கழகம் இப்பருவகாலத்தின் வெற்றியாளராவதற்கு முதற் தெரிவாக உள்ளது.


லிவர்புல் கழகம் கடந்த பருவகாலத்தில் 2ம் இடத்தைப்பெற்றிருந்தது ஆனால் வேறெந்த வெற்றிகளையும் அதுபெறவில்லை. இம்முறை வெற்றியாளாராக பலரும் லிவர்புலை எதிர்பார்த்தாலும் இரண்டு முக்கிய வீரர்களை ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கழகத்திற்குப் பிகொடுத்ததன் மூலம் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. லிவர்புலின் ஸபி அலொன்ஸோவும், ஆர்பலோவாவும் ரியல் மட்ரிட்டிற்கு விற்கப்பட்டுவிட்டனர். லிவர்புல் முகாமையாளர் ரஃபா பெனீட்டஸ் 2 புதிய வீரர்களை இதுவரை ஒப்பந்தம் செய்துள்ளார் அவர்கள் போர்ட்ஸ்மௌத் டிஃபென்டர் க்ளென் ஜோன்ஸன் மற்றும் இத்தாலிய வீரர் அல்பேர்ட்டோ அக்வலானி ஆகியோர் ஆவர். ஆனால் ஸபி அலன்சோவின் இடத்தை நிரப்ப ஒப்பந்தமான அக்வலானி இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்புல் இம்முறை பலமான ஒரு கழகமாக களத்தில் இறங்குகிறது. அதிகப்படியான காயங்கள் ஏற்படாவிட்டால் லிவர்புல் வெற்றிவாகை சூடுவதற்கு அதிக வாய்ப்புககள் உண்டு.


அனைவரினதும் பெரிய எதிர்பார்ப்பு மஞ்செஸ்டர் யுனைட்டட் கழகமாகும் ஆனால் இம்முறை 2 முக்கிய வீரர்களை இழந்துள்ள யுனைட்டட் வெற்றி பெறுவது சந்தேகமே என பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். கார்ளோ டெவெசும், உலகின் முதல் நிலை வீரர் கிறிஸ்டியானோ
ரொனால்டோவுமே அந்த முக்கிய பறிபோன வீரர்களாவர். கார்ளோ டெவெஸை தமது உள் ஊர் போட்டியாளரான சிட்டி கழககத்திடம் கைநழுவவிட்டது யுனைட்டட்டை மிகவும் பாதித்தது ஆனாலும் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக ரொனால்டோவின் ரியல் மட்றிட் கனவு கடைசியில் 80 மில்லியன் பௌண்ஸ் விலையில் சாத்தியமானது. ரொனால்டோவை 80 மில்லியன் பௌண்ஸிற்கு விற்றாலும் அந்தப் பணத்தில் மாற்று வீரர் ஒருவரை பெரியளவில் யுனைட்டட் முகாமையாளர் சேர்.அலெக்ஸ் ஃபேர்குஸன் வாங்கவில்லை மாறாக விகன் அத்லடிக் கழகத்தின் இளம் வீரரான லுயிஸ் அன்டொனியோ வலென்ஸியாவையே ரொனால்டோவுக்கு மாற்றாக வாங்கினார் ஆனால் அவருக்கு மட்டுமல்ல வலன்சியாவுக்கும் ஏன் இந்த ஊருக்கே தெரியும் ரொனால்டோவை பிரதியீடு செய்ய வலன்சியாவால் முடியாது என்று. மேலும் தரமிறங்கிய நியுகாசல் கழகத்தில் விளையாடி வந்த காயம் பலகண்ட செம்மல் மைக்கேல் ஒவனையும் ஃபேர்குஸன் அதிர்ச்சிதரும் வகையில் ஒப்பந்தம் செய்தார். ஒவன் ஆரம்பகாலங்களில் மிகச் சிறந்த வீரர் ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட காயங்கள் மற்றும் தொ்ர்ந்து ஃபோமில் இல்லாமை என்பன அவரை ஒரு இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருந்தன, அப்படிப்பட்ட வீரரை யுனைட்டட் கழகம் ஒப்பந்தம் செய்தது பலருக்கு அதிர்ச்சிதான் - ஆனால் முற் பருவகாலப் போட்டிகளில் ஒவன் நன்றாகவே விளையாடியிருந்தார், காயங்களின்றி தொடர்வாரானால் இவரும் கோல் மழை பொழிவார் என்பது அறிஞர்கள் கருத்து. மேலும் யுனைட்டட்டின் 3வது புதிய சேர்ப்பு பிரான்ஸ் இளம் வீரரான கப்ரியல் ஓபெர்டான். ரொனால்டோ இல்லாத யுனைட்டட்டால் கோல் மழை பொழிய முடியுமா என்ற சந்தேகம் பலருக்குக் கிளப்பியுள்ளது மேலும் மிக இளமையான வீரர்களையும் மிக வயதான வீரர்களையுமே யுனைட்டட் கழகம் அதிகளவில் கொண்டுள்ளது நடுவயதுகளில் உள்ளவீரர்கள் மிகக் குறைவு இதுவும் ஒரு முக்கிய பின்னடைவு என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அலெக்ஸ் ஃபேர்குஜன் ரூணியை ரொனால்டோ விட்டுச்சென்ற கோலடிக்கும் இடத்துக்கு நம்பிக்கையாக நியமிப்பதாகக் கூறினாலும் அது எ்வவளவு தூரம் சாத்தியம் என்பதும் சந்தேகமே. ஆனால் திறமையான அணி யுனைட்டடிடம் உண்டு என்பது மறுக்க முடியாதது. மேலும் யுனைட்டடினி் முதன்மை கோல் காப்பாளரான வன் டே சார் விரல்களில் காயம் காரணமாக 6 வாரங்களுக்கு ஓரங்கட்டப்பட்டிருப்பதும், பிரதியீட்டுக் காப்பாளர்களான பென் ஃபொஸ்டர், குஸ்கக் ஆகியோரது அனுபவக்குறைவும் பருவகால ஆரம்பத்தை யுனைட்டட்டுக்கு சவாலாக்கியிருக்கிறது. பருவகால ஆரம்பமே செல்ஸியிடம் எஃப்.ஏ. கம்யுனிட்டி ஷீல்ட் தோல்வியில் தொடங்கியிருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறர்கள் இரசிகர்கள்.

சரி காற்பந்தாட்டத்தைத் தொடர்ந்து கவனிக்கு ஒரு இரசிகரான எனது கணிப்பு -

1ம் இடம் - செல்ஸி அல்லது மஞ்செஸ்டர் யுனைட்டட்

மஞ்செஸ்டர் சிட்டி முதல் 4ற்குள் வராது.

ஆர்செனல் 4வது இடத்தைப் பெறப் போராடவேண்டியிருக்கும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.