Nov 29, 2010

றோயல் - தோமியத் தமிழ் விவாதச் சமர் - ஒரு பார்வை

‘எந்தையர் எம்முன் தம்வழியைக் கற்ற கல்லூரி! 
ஏட்டையும் கற்று, மானுடரையும் கற்றனரே – 
அவர்வழியே நாமும் அதைனையே செய்திடுவோம்!’


175 வருடங்கள் நிறைவு செய்யும் றோயல் கல்லூரியின் பாரம்பரிய வைரிகள் கல்கிசைப் பரி தோமாவின் கல்லூரியாகும். அந்தப் பாரம்பரியத்தில் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். நூறாண்டுகள் கடந்த றோயல்-தோமியப் பாரம்பரியம் இங்கும் தமிழ் விவாதத்திலும் தொடர்கிவது வேத்தியர்களும், தோமியர்களும், தமிழர்களும் பெருமைப்ப்பட வேண்டியவிடயம். கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது. 1994ம் ஆண்டு றோயல் கல்லூரி விவாத அணித் தலைவனாக நிலக்‘ன் சுவர்ணராஜா அவர்கள் இருந்த போது முதன்முறையாக றோயல்-தோமிய விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. 56 ஆண்டுகால பாரம்பரியமுடைய றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் மறுமலர்ச்சி இந்தக் காலகட்டத்தில் தான் துளிர்விடத் தொடங்கி அதன் பின் இலங்கையில் தலைசிறந்த விவாத அணிகளுள் ஒன்றாக வேத்திய அணி உயரக் காரணமானது.



றோயல் தோமியத் தமிழ் விவாதப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் குலசேகரம் ஞாபகார்த்தக் கேடயம் வழங்கப்படுகிறது, இது றோயல் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், பதில் அதிபருமான திரு.எம்.எம்.குலசேகரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகிறது. திரு.எம்.எம்.குலசேகரம் அவர்கள் 1922ம் ஆண்டு றோயல் கல்லூரியில் கணித மற்றும் பௌதீகவியல் ஆசிரியராக இணைந்தார். 1946ம் ஆண்டு றோயல் கல்லூரியின் உப-அதிபராக நியமிக்கப்பட்டார். 1953ம் ஆண்டு பதில் அதிபராகக் கடமையேற்று 1954ம் ஆண்டு ஓய்வுபெறும் வரை மிகச் சிறப்பான கடமையாற்றினார். றோயல் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக றக்பி விளையாட்டுத் துறைக்கு பெரும் பணி ஆற்றிய ஆசான் அவர். அவரது நினைவாக றோயல்-தோமிய தமிழ் விவாதக் கேடயம் வழங்கப்படுகிறது. அத்துடன் றோயல் தோமிய விவாதப் போட்டியில் வருடாவருடம் சிறப்பாக வாதிக்கும் வாதி ஒருவருக்கு அல்லது இருவருக்கு ‘சிறந்த விவாதிக்கான விருதும்’ வழங்கப்பட்டு வருகிறது.
எந்தவொரு வேத்தியனுக்கும், தோமியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம். காரணம் மிகப்பழமையான றோயல்-தோமிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தேசியளவிலான விவாதப் போட்டிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட றோயல்-தோமிய விவாதத்திற்கு இரு பாடசாலைகளிலும் சிறப்பான இடம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

  நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியாக பரி. தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு வருடங்கள் உட்பட ஆரம்பகாலங்களில் பரி தோமாவின் கல்லூரி வெற்றிபெற்றிருந்தாலும் கடந்த சில வருடங்களாக பரி தோமாவின் கல்லூரி அணி சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இதை விசேடகமாகக் குறிப்பிடுவதற்குப் பிரதான காரணம் கடந்த 7 வருடங்களில் தொடர்ந்து றோயல் கல்லூரி வெற்றிபெற்ற போது அநேகமான வெற்றிகள் 5-0 என்ற பெரும் வெற்றிகளாகவே இருந்தன ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற 16வது தொடரில் றோயல் கல்லூரி 3-2 என்றளவிலேயே வெற்றி பெற்றது, தோமிய அணி மிகச் சவாலாக வாதிட்டது என்பதை மறுக்கமுடியாது, முதல் சில வருடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தோமிய விவாத அணி தற்போது பலமடைந்திருப்பதை அனைவராலும் காணக்கூடியதாக இருக்கிறது ஆகவே மீண்டும் மிகச் சவாலான தொடராக இது உருப் பெற்று வருகிறது என்பதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

றோயல் தோமிய விவாதத் தொடரின் சிறப்புக்கள் பலவுள. தமிழ் மொழியில் தொடர்ந்து ஒன்றரைத் தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஒரே தமிழ் விவாதத் தொடராக றோயல் தோமிய தமிழ் விவாதச்சமரே காணப்படுகிறது. மேலும் மிகச் சவாலான தலைப்புக்கள் அலசப்படும் விவாதப் போட்டியாகவும் இதுவே காணப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் அரசியலில் மதங்களின் தலையீடு, 13வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் எனச் சாதாரணமாக பாடசாலை மட்டத்தில் விவாதிக்கத் தயங்கும் தலைப்புக்கள் தான் றோயல் தோமிய விவாதப் போட்டிகளில் வாதிக்கப்படுகிறது. சமூகம், அரசியல் சார்ந்த மாணவர்களின் விழிப்புணர்வு, சிந்திக்கும், ஆராயும் தன்மைகள் என்பவற்றைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக றோயல்-தோமிய விவாதங்கள் அமைகிறது என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் சீர்திருத்தம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும் - தீர்வாகாது என்ற தலைப்பிலான விவாதம் பல தரப்பிலும் வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியும், முன்னாள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித் தலைவருமான திரு.எம்.சுமந்திரன் அவர்கள் இந்தத் தலைப்பினை எடுத்து வாதிட்டதற்காகவே இரு அணிகளுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார். நடுவர் குழாமிலிடம்பெற்றிருந்த கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடப் பீடாதிபதி கலாநிதி.கீதபொன்கலனும் இந்தத் தலைப்பை ஆழமாக அலசியதற்காக இரண்டு அணிகளையும் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு சாதாரண விவாதப் போட்டி என்றில்லாமால், வெற்றி தோல்விகளுக்கப்பால், றோயல்-தோமிய விவாதம் ஒவ்வொராண்டும் ஏதோ ஒரு செய்தியை விவாதத்தினூடாக இந்தச் சமூகத்திற்குச் சொல்கிறது. அமெரிக்காவின் முக்கிய சிவில் செயற்றிட்டவாதியான ஜெசி ஜக்ஸன் கூறிய கருத்திலொன்று இங்கு குறிப்பிடத்தக்கது. ‘கலந்துரையாடலும் விவாதமுமே, ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கான வழிகளாகும்’ என்கிறார் அவர். – கற்பிற்; சிறந்தவள் கண்ணகியா? சீதையா?, பாசத்தில் சிறந்தவர்கள் இராம லக்குமணரா? பஞ்சபாண்டவரா? என்ற வழமையான, அடையாளமான தமிழ் விவாதப் பாரம்பரியத்தை மாற்றியதும் றோயல் தோமிய விவாதத்தின் பெருமை. இதன் மூலம் இலக்கிய வாதங்களைப் புறக்கணிப்பதாக அர்த்தமில்லை, ஆனால் அவற்றைத்தாண்டி சமூகம், அரசியல், கொள்கைகள் என்ற பரந்துவிரிந்த பயன் நிறைந்த வாதத்தைச் செய்வதே றோயல் தோமிய பாரம்பரியத்தின் அடையாளமாகிறது. இதுவரை பரி தோமாவின் கல்லூரி 5 முறையும், றோயல் கல்லூரி 9 முறையும் குலசேகரம் நினைவுக் கேடயத்தை சுவீகரித்திருக்கிறது. றோயல் தோமியப் பாரம்பரியமும், தமிழின் பெருமையும் சங்கமிக்கும் இத்தொடர் இன்னும் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே பழைய மாணவராகிய எம் அனைவரதும் அவாவாகும்.

‘எனது வாழ்க்கையில் என்றுமே என்னுடைய கருத்துடன் உடன்பட்டவர்களிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கொண்டதேயில்லை’ – டட்லி ஃபீலட் மலோன் (அமெரிக்க சட்ட வல்லுனர்).

ஆரோக்கியமான விவாதங்கள் எமது அறிவுக் கண்களைத் திறக்கின்றன, ஃபெரஞ்ச்சுத் தார்மீகவாதியான ஜோசஃப் ஜோபேர்ட் சொல்கிறார், ‘ஒரு வினாவினை விவாதித்துப் பின் முடிவுகாணாது விடுவது என்பது, அவ்வினாவினை வாதிக்காமலேயே முடிவு ஒன்றை எடுப்பதை விடச் சிறந்தது’ என்கிறார். ஆகவே மாணவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் மட்டுமல்ல சமூகத்திற்கும் பயனளிக்கும் வேத்திய-தோமிய தமிழ் விவாதப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

‘அது மலரட்டுமாக!’ [Floreat] ‘அது என்றும் நிலைத்திருக்கட்டுமாக’ [Esto Perpetua]


**************************************************************************
இந்தக் கட்டுரை றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் “தமிழ்நயம் 2010” இதழில் இடம்பெற்றது.

படங்கள் - நன்றி திரு.நிமலபிரகாசன் (www.nimal.info)