Showing posts with label Law. Show all posts
Showing posts with label Law. Show all posts

Dec 5, 2010

யுத்தக் குற்றம் என்றால் என்ன?





அண்மைக்காலங்களாக தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சொற்களில் /  விடயங்களில் ஒன்று யுத்தக் குற்றம் (war crime). இது யுத்தக் குற்றம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.


யுத்தக் குற்றம் என்பதை சுருக்கமாக பின்வருமாறு வரையறுக்கலாம் :

யுத்தக் குற்றம் என்பது யுத்தவிதிகளை மீறும் தனிநபர்கள், ராணுவம், சிவிலியன்கள் என்பவருக்குரிய சர்வதேசச் சட்டங்களின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகும்.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது அதிலும் குறிப்பாக 2ம் உலக யுத்தத்தின் பின்னரே யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெறத்தொடங்கியது எனலாம். 2ம் உலப் போரின் போது நாட்ஸிப் படைகள் யூதர்களை (பொதுமக்களை) கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது (இன அழிப்பு), ஜப்பானியப் படைகள் சிவிலியன்களையும், அரசியற்கைதிகளையும் இழிவான விதத்தில் நடத்தின, கொன்று குவித்தன. 2ம் உலக யுத்தம் நேசநாடுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நேச நாடுகள் மேற்கூறிய யுத்தக் குற்றங்களை இழைத்ததாக நம்பப்படும் ஜேர்மனியப் படைத்தளபதிகளையும், ஜப்பானியப் படைத்தளபதிகளையும் கைது செய்து, சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றின. 1945 மற்றும் 1946ல் இடம்பெற்ற “நுரெம்பேர்க் விசாரணைகளின்” பின்னர் 12 நாட்ஸித் தளபதிகளுக்கு யுத்தக் குற்றம் இழைத்தமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 1948 ஜப்பானின் டோக்கியோவில் யுத்தக் குற்றம் இழைத்த 7 தளபதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (நேச நாடுகள் ஜப்பானின் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை). இவை தான் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெற்றதற்கான முன்னோடிகளாகும்.

இதை விட தனியாக அரசாங்கங்களும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களைத் தண்டித்திருக்கிறது. உதாரணமாக 1960ல் ஆர்ஜன்ரீனாவில் வைத்து இஸ்ரேலிய முகவர்களால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கடத்தப்பட்டு அங்கு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெர்மனிய நாட்ஸிப் படையைச் சேர்ந்த, “த ஹொலொகோஸ்ட்” (பேரழிவு) இல் பங்குபற்றி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அடல்ஃப் எய்ஷ்மன்-ஐக் குறிப்பிடலாம். இதே போல 1987ல் க்ளோஸ் பார்பி என்ற நாட்ஸிப் படை முக்கியஸ்தர் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு ஃபிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு யுத்தக் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கருவானது, குறித்த தேசம் அல்லது அதன் .இராணுவ வீரர்கள் இழைத்த குற்றங்களுக்கு (யுத்த விதி/தர்ம மீறல்களுக்கு) தனி நபர் ஒருவரைப் பொறுப்பாளியாக்க முடியும் என்கிறது. அதாவது இராணுவ வீரர்கள் இழைத்த குற்றத்திற்கு அவர்களுக்கு மேலான தளபதிகள், தலைமைத் தளபதிகளைப் பொறுப்பாக்க முடியும்.

இன அழிப்பு, சிவிலியன்களை இழிவான / முறையற்ற விதத்தில் நடத்துதல், போர்க்கைதிகளை முறையற்ற விதத்தில் நடத்துதல் போன்றன் குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்களாகும். அதிலும் இன அழிப்பு என்பது பாரிய யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

யுத்தக் குற்றங்களை வரையறுக்கும் சட்ட அதிகாரங்களாக ஜெனீவா மரபுகள் (Geneva Conventions) மற்றும் பழமையான யுத்த தர்மச் சட்டங்களும் காணப்படுகிறது. 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்து பின்வருமாறு யுத்தக்குற்றத்தை வரையறுக்கிறது :

"Wilful killing, torture or inhuman treatment, including... wilfully causing great suffering or serious injury to body or health, unlawful deportation or transfer or unlawful confinement of a protected person, compelling a protected person to serve in the forces of a hostile power, or wilfully depriving a protected person of the rights of fair and regular trial, ...taking of hostages and extensive destruction and appropriation of property, not justified by military necessity and carried out unlawfully and wantonly." 

அதாவது மனவுறுதியுடன் உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைத்தல், சட்டத்திற்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரை தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புக்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதகமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்கமுடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் யுத்தக்குற்றமாகும் என்று 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்துக் கூறுகிறது.

இதைத் தாண்டியும் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு கூர்ப்படைந்து வருகிறது. யுகோஸ்லாவியா தொடர்பான சர்வதேச ஹேக் ட்ரபியுனல் யுத்தக்குற்றங்களை வரையறுப்பதில் முக்கியம் பெறுகிறது. ஆயுதப் போராட்டங்களின் போது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இங்கும் பிரதான குற்றமான இன அழிப்பு கருதப்படுகிறது.

2002ல் உரோம சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் படி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஹேக் ட்ரிபியுனல்) அதன் அங்கத்தவ நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்டோபர் 2010 வரை 114 நாடுகள் இதில் இணைந்துள்ளன. 114வதாக இணைந்த நாடு மோல்டோவா. அமெரிக்காவும், ரஷ்யாவும் உரோம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் அதை நிறைவேற்றவில்லை. அமெரிக்கா இன்னும் பார்வையாராகவே கலந்து கொள்கிறது. சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தொடர்பிலேயே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் ஐ.நா. உறுப்பு நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்திலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நடத்தும் நீதியதிகாரமுண்டு.

பேரிழிவிற்குரிய யுத்தமானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியம் பெறுகிறது இந்த யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு, ஆனால் மனித உரிமைகள், ஜனநாயம் பற்றிய விழிப்புணர்வு, அறிவு இல்லாதவர்களுக்கு யுத்தக் குற்றத்தின் தார்ப்பரியத்தை புரிய வைப்பது இயலாது.

**********************************************************************
இந்தக் கட்டுரை 12-12-2010 ஞாயிறு தினக்குரலில் 11ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (நன்றி - யாழ்தேவி மற்றும் தினக்குரல்)

Jun 28, 2010

இலங்கை அரசியல் யாப்பும், பௌத்த மதமும்.

உலகிலுள்ள பௌத்த நாடுகளுள் முதன்மையாகக் கருதக்கூடிய தேசமாக இலங்கை காணப்படுகிறது. இலங்கையில் 70 சதவீதமளவிற்கு தேரவாத பௌத்தமே பின்பற்றப்படுகிறது. மேலும் இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம், பௌத்த மதத்திற்கு முதன்மை இடமும், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது. பௌத்தம் என்ற தலைப்பிலேயே இலங்கை அரசியல் யாப்பின் இரண்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

1978ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு யாப்பின், இரண்டாம் அத்தியாயம் (9வது சரத்து) பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Buddhism.
9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).


அதாவது, இலங்கைக் குடியரசானது, பௌத்தத்திற்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன்,  புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடைமையாகும் அதேவேளை ஏனைய 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் 2ம் அத்தியாயம் (9வது சரத்து) குறிப்பிடுகிறது.

10ம் சரத்தானது, மூன்றாவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இடம்பெறுகிறது, அது பின்வருமாறு குறிப்பிடுகிறது,


Freedom of thought, conscience and religion.
10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.


அதாவது, சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தச் சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும், சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது.

14ம் சரத்தும் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல், கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் 1ம் உபசரத்தின் e பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

14. (1) Every citizen is entitled to -
(e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;

அதாவது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தைப் அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும், அதை நடைமுறைப்படுத்தவும், அதைப் போதிக்கவும்  உரித்துடையவராகிறான்.

இந்த அடிப்படையில் வைத்து நோக்கும் போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசிற்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது.

இந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாத படி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த 9வது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே பாராளுமன்றில் 3ல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் சனாதிபதி 80ம் சரத்தின் படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும்.

இது இவ்வாறாக இருக்க, பலபேருக்கு இலங்கையில் பௌத்தத்தின் நிலை பற்றி பல சந்தேகங்களுண்டு அதில் குறிப்பாக பலருக்கு எழும் சந்தேகம் இலங்கையில் பௌத்தரல்லாதவர் சனாதிபதியாக முடியுமா என்பதாகும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் சனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை. இதுவரை நடந்த சனாதிபதித் தேர்தல்களில் திரு.குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய தமிழர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள், இதில் குமார் பொன்னம்பலம் கணிசமானளவு வாக்குகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைவிட முஸ்லிம்களும் போட்டியிட்டிருக்கிறார்கள், ஆக அரசியலமைப்பில் நீங்கள் எண்ணுவதுபோன்ற ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? - இந்த தர்க்கத்தைப் புரிந்தாலே உங்கள் நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும். மேலும் இலங்கை அரசியல் யாப்பின்படி இலங்கையில் தேர்தல்களில் போட்டியிடவோ. பதவிகள் பெறவோ மதம் ஒரு தடையல்ல.

ஆனால் 9ம் சரத்தின் படி சில நடைமுறைச்சிக்கல்கள் வரலாம், அதாவது அரசாங்கம் புத்தசாசனத்திற்கு எதிராக, முரணாக செயற்பட முடியாதவாறு இச்சரத்து கட்டுப்படுத்துவதாகவும் கொள்ளலாம், ஏனெனில் அவ்வாறு செய்யும் போது அரசாங்கம் புத்தசாசனத்தைக் காக்கும், வளர்க்கும் கடமையிலிருந்து தவறுகிறது என வாதிடலாம். இது தொடர்பில் மேலும் விளக்க புத்தசாசனம் தொடர்பான ஆழ்ந்த அறிவு தேவை.

மேலும் இந்தச் சரத்துக்களைப் படித்தக்கொண்டிருக்கும் போது எனக்கு இன்னொரு விடயமும் தென்பட்டது. அதாவது 9ம் சரத்தின் மூலம் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு, அதே சரத்தில், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், 15வது சரத்தின் 7வது உபபிரிவானது பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Restrictions on fundamental Rights.
15.
(7) The exercise and operation of all the fundamental rights declared and recognized by Articles 12, 13(1), 13(2) and 14 shall be subject to such restrictions as may be prescribed by law in the interests of national security, public order and the protection of public health or morality, or for the purpose of securing due recognition and respect for the rights and freedoms of others, or of meeting the just requirements of the general welfare of a democratic society. For the purposes of this paragraph " law " includes regulations made under the law for the time being relating to public security.


அதாவது சுருக்கமாக, தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் 14ம்  சரத்தை நடைமுறைப்படுத்துவதை சட்டரீதியாகக் கட்டுப்படுத்தலாம் என்கிறது. ஆக வெளிப்படையாக மேற்கூறிய காரணங்களைக் காட்டி 14ம் சரத்தின் 1ம் உபசரத்தின் e ப்பிரிவினால் தரப்பட்ட மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம்.


**********************************************************************
Reference

The Constitution of the Democratic Socialist Republic of SriLanka (1978) - 


மேலே தரப்பட்ட அரசியல் அமைப்பின் தமிழ் விளக்கமும், கருத்துக்களும் எனது தனிப்பட்ட தெளிவின் அடிப்படையிலான, தனிப்பட்ட அபிப்ராயமாகும். இது அரசியல் அமைப்பின் மிகச் சரியான தமிழாக்கமோ, விளக்கமோ அல்ல. அரசியலமைப்பிற்கும், சட்டங்களுக்கும் வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கே உண்டு.