Aug 3, 2009

நிலவில் நிலம் வாங்கலாம்...


இன்று சனத்தொகை பெருகிவிட்டது. இந்தப் புவி இதைத் தாங்க முடியாத நிலைமையை அடைந்துகொண்டிருக்கிறது, விஞ்ஞானிகள் சந்திரனில் மற்றும் செவ்வாயில் குடியேறுவது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கையில் நிலவில் நிலங்களை உறுதி போட்டு (பட்டா போட்டு) விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆஹா... விலை மிக அதிகமாக இருக்குமோ என நீங்கள் நினைக்க வேண்டாம் ஒரு ஏக்கர் வெறும் டொலர் 18 முதல் கிடைக்கிறது. என்னடா இது இந்தப் புவியிலே 1000 டொலருக்கு நிலம் எத்தியோப்பியாவில் கூட வாங்க முடியாது அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம் - இது ஒரு சிறிய தர்க்கத்தின் அடிப்படையிலானது - நிலத்தை நீங்கள் 18 டொலருக்கு வாங்கலாம் ஆனால் அனுபவிக்க முடியுமா? என்ன குழப்பமாக இருக்கிறதா?


திங்கள் தூதரகம் என்ற ஒன்றை அமைத்து அதன் மூலம் சந்திரனின் நிலத்தை பொது மக்களிடையே இந்த விலைக்கு சில தனியார் நிறுவனங்கள் உறுதி போட்டு (பட்டா போட்டு) வழங்குகின்றன. இந்த உறுதிக்கும் (பட்டாவிற்கும்) எந்த அரசாங்கத்திற்கும் சம்பந்தமேயில்லை. உறுதி மட்டுமல்ல நீங்கள் செலுத்தும் தொகைக்கேற்ப உங்கள் நிலத்தின் எல்லை குறிக்கப்பட்ட வரைபடம், செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட உங்களுக்கு விற்கப்பட்ட நிலத்தின் படம் என வேறு ஆவணங்களையும் தருகிறார்கள். சரி இதேல்லாவற்றாலும் என்ன பயன் என நீங்கள் கேட்கலாம்? அதற்கும் அவர்கள் தயாரான பதிலை வைத்திருக்கிறார்கள் - அதாவது தனியார் துறை நிலவுக்குப் பயணிக்கும் முயற்சியே இது. இதன் மூலம் சேரும் பணத்தைக் கொண்டு நிலவுப் பணயத்தை தனியார் ரீதியில் சாத்தியமாக்கி உங்களை உங்கள் நிலவு நிலத்திற்கு அழைத்துச் செல்வோம் என்பது தான் இவர்கள் கூறும் கருத்து. இப்ப புரிகிறதா? சாதாரணமாக எங்கள் நாடுகளிலே புவி நிலத்தில் நடக்கும் பித்தலாட்ட வேலைதான் இதுவும் இதை உணர்த்தும் விதமாக இவர்கள் விளம்பரங்கள் மேற்கோள்ளும் போது ”நிலவின் சொந்தக்காரன் என கௌரவமாக சொல்லிக்கொள்ளுங்கள்” என போலி கௌரவத்தை அடிப்படையாகக் கொண்டே தில்லு முல்லைச் செய்கிறார்கள்.

சரி இவ்வளவு சொல்கிறார்களே இது சாத்தியமா எனச் சிந்தித்துப் பாருங்கள்... முதலாவது இவர்கள் தனியார் ரீதியில் நிலவுக்குச் செல்ல வேண்டும் - அது சாத்தியமாவதே கடினம் அடுத்ததாக இவர்கள் இந்த நிலங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அதை தம்மிடம் வாங்கியவருக்கு வழங்க வேண்டும் - இது கனவில் கூட நடக்க முடியாத விடயம். காரணம் இன்று அமெரிக்க, சீனா, ரஷ்யா, ஜப்பான் என விண்வெளியைக் கைப்பற்றுவதில் பெரும் குளிர் யுத்தமே நடக்கிறது - ஒரு வேளை சந்திரனிலோ, செவ்வாயிலோ வாழ்வது சாத்தியமானாலும் அங்கே நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை வந்து பெரும் உலக யுத்தமே..... சீ...சீ.... நிலவு யுத்தமே நடைபெறும் - இதற்கிடையில் சும்மா 18 டொலருக்கும் 30 டொலருக்கும் விற்பனை செய்யும் நிறுவனம் என்னத்தைச் செய்வது?

நீங்களும் நிலவில் காணி வாங்க விரும்பினால் இந்தத் தளங்களுக்குப் போங்கோ....

நிலவுத்தோப்புக்கள் - இந்தத் தளத்தில் செவ்வாய், வெள்ளி என்பனவற்றிலும் நிலம் வாங்க முடியும்.

ஆனால் இலங்கையர்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.... எல்லாம் சாதிக்கக்கூடிய எங்கள் நாட்டின் தலைவர் நிலவென்ன... நினைத்தால் யுரேனஸ், புளுட்டோ என எந்தக் கோளிலும் எம்மைக் கொண்டு போய்ச்சேர்ப்பார்... தெரியும் தானே மக்களைக் “கொண்டு போய்ச் சேர்ப்பதில்” அவர மிஞ்ச ஆளில்லை... !