Aug 25, 2009

முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை.....

இன்று வரை எம்மைத் திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி “கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விதான். கோழியிலிருந்துதான் முட்டை வருகிறது ஆகவே கோழியில்லாமால் கோழி முட்டை வரச்சாத்தியமில்லை ஆனால் அந்தக் கோழியே முட்டையிலிருந்துதானே வருகிறது. ஆப்படிப்பார்த்தால் முட்டையில்லாமல் கோழி வந்திருக்கச் சாத்தியமில்லை. இப்படி குழப்பத்திலேயெ இவை இருக்க கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி மனிதர்களிடம் எப்போதுமே இருந்தவண்ணம் தான் இருந்தது. 
இதை மனிதர்கள் இரண்டு வகையில் அணுகினார்கள் முதலாவது மெஞ்ஙான ரீதியில் அணுகியவர்கள் கடவுள் என்ற “எடுகோட் பொருளை” மையப்படுத்தி கடவுளின் படைப்பாகவே உலகம் உருவானது, எல்லா உயிர்களையும் கடவுளே படைத்தார் என்று கூறினார்கள். இதைப் பகுத்தறிவு வாதிகள் மறுத்தார்கள். யதார்த்தத்தில் காணமுடியாத அல்லது நிரூபிக்கமுடியாத கடவுள் என்பதை ஏற்றுக்கொளவதை அவர்கள் விரும்பவில்லை மாறாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க கூடிய காரணங்களை அவர்கள் தேடினார்கள். காலங்காலமாக மெஞ்ஞான, விஞ்ஞான வாதிகளிடையே இந்த முரண்பாடு இருந்த வண்ணம் தான் இருந்தது. ஆனால் பலகாலம் யாராலும் உறுதியாக விளக்கமொன்றைத் தரமுடியாதிருந்தது. இப்படியான காலகட்டத்தில் தனது கூர்ப்புக் கொள்கை பற்றி சார்ள்ஸ் டார்வின் கருத்துக்களை வெளியிட்டார். உலகிலுள்ள உயிர்கள் அத்தனையும் கூர்ப்படைந்து உருவாகியது, அதாவது உயிரினம் ஒன்று தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து வருகையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைந்து வந்தது என்பதே அவரது கருத்தின் சுரக்கமாகும். இதற்கு அவர் பல காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

உலகின் முதலாவது உயிரினமாக ஒரு பக்டீரியாவை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அது கோடான கோடி ஆண்டுகளாக கூர்ப்படைந்து இன்றைய உயிரினங்கள் உருவானதாகக் கொள்கிறார்கள். இதை விளங்குவதற்குக் கொஞசம் சிக்கலான விஞ்ஙான முறைகள் மூலம் விளக்குகிறார்கள். எல்லாம் சரி ஆனால் இங்கும் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அந்த முதலாவது உயிரிலிருந்து ஏனையவை தோன்றியது என்கிறீர்கள் அப்படியானால் அந்த முதலாவது உயிர் எங்கேயிருந்து தேன்றியது? அது அதுவாகவே தோன்றியதா? இங்கு தான் மீண்டும் மெஞ்ஞானவாதிகளின் கடவுட்கோட்பாடு முக்கியம் பெறுகிறது. அதைக் கடவுள் தானே படைத்திருக்க வேண்டும்?!

உண்மையிலேயே எம்மால் விளங்கப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அல்லது தெரியாத பொருளுக்கு கணிதத்தில் “தீட்டா” போடுவது போல அல்லது “X” “Y” எனப்போடுவது போலத்தான் கடவுள் என்பதும் தோன்றியது. எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. நாம் இன்னும் விளக்கமுடியாத மர்மங்கள் இருக்கிறது அவற்றை “கடவுள்” என்று அடையாளப்படுத்தத் தொடங்கியது தான் இன்று கூர்ப்படைந்து மதம் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. “கடவுள்” தொடர்பில் வளர்ந்த நம்பிக்கைகள் சமூகக் கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபட்டு அவற்றிலிருந்து வேர்விட்ட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுந்த விருட்சமே மதங்கள். இன்று அவை வாழ்க்கை நெறியாக இன்று மாறிவிட்டது. இதுவும் ஒரு விதத்தில் பெரிய கூர்ப்புத்தான்.

இதை நான் சொல்ல வந்ததற்குக் காரணம் உண்டு. கடவுள் இருக்கிறாரா... இல்லையா... போன்ற கேள்விகள் எம்மிடையே எழுவதுண்டு. விஞஞான ரீதியாக நிறுவி்காட்ட முடியாத விடயங்களை நாம் நம்பினாலும் ஏதோ ஒரு சந்தேகம் நம்மிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கும். விஞ்ஞானமோ மெஞ்ஞானமோ எல்லாமே வாழ்க்கையைப் பூரணப் படுத்தும் முயற்சிதான் ஆக பூரணமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நாம் முயற்சிக்கையில் அதில் மதவெறி தலையிட்டு அதைச் சீரழித்து விடக் கூடாது. மதம் என்பது காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு அது வாழ்வை வளப்படுத்த மட்டுமேயன்றி அதனைச் சீரழிக்க அல்ல. சத்தியமாகச் சொல்கிறேன் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும், கவலையும் தான் வருகிறது. மதம் ஒரு நம்பிக்கை மட்டுந்தான் அதுவே வாழ்க்கையல்ல.

Aug 21, 2009

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்...


இன்றுதான் கந்தசாமி உலகம் முழுவதும் வெளியானாலும், நேற்று நள்ளிரவு காட்டப்பட்ட விசேட காட்சியைப் பார்க்கச்சென்றிருந்தேன். ரிக்கட் விலை ரூ.500 மற்றும் ரூ.1000 ஆக இருந்த போதும் சன நெரிசலுக்குக் குறைவில்லை. தமது ஜனநாயகக் கடமையான வாக்களித்தலுக்கே சமுகம் தர பஞ்சிப்படும் தமிழ் இளையோர் மற்றும் குடும்பஸ்தரெல்லாம் கந்தசாமித் தரிசனத்திற்கு அடித்துப்பிடித்து வந்திருந்தார்கள். இரவு 11 மணியளவில் காட்சி ஆரம்பமானது....

கந்தசாமி பார்க்கப்போன எனக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன, பொதுவாக நான் தியட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிகக் குறைவு கடைசியாகத் தியட்டரில் பார்த்த படம் தசாவதாரம் அதற்கு முன்பு சிவாஜி - அவை போன்ற எதிர்பார்ப்பு இதற்குமிருந்ததால் கந்தசாமியைப் பார்க்கச்சென்றிருந்தேன். என் மனமெல்லாம் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்திருந்ததது...

முதல் காட்சிக்கு முன்பு ஒரு வாசகம் போட்டார்கள் “மற்றவன் கண்ணீரைத் துடைப்பவன் தான் கடவுள்” என்று அதற்குப்பிறகு திருப்போரூர் முருகன் கோவில் மரத்தில் தேவையை எழுதி வைத்தால் அது நடைபெறும் என்ற காட்சி அதன்படி ஒரு ஏழைப்பெண் தனது கணவரின் சத்திரசிகிச்சைக்காக பணம் தேவையென எழுத அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்பு கறுப்புப் பையில் பணம் இருக்கிறது இதைக்கண்டு பயந்த அந்த நேர்மையான பெண் அதை பொலீஸில் ஒப்படைக்க ஊழல் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான் அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று அலுமாரியில் மூடி வைத்து விட்டு “தண்ணியடித்துவிட்டுப்” படுக்கிறார் (மன்சூர் அலிகான் தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில்) திடீரென அவரது கட்டிலுக்கு மேல் கூரையிலிருந்து கொக்கரக்கோ-Man (அதாவது முருகனின் கொடியிலிருக்கும் சேவல் போல வேடமிட்ட மனிதன்) பறந்து வந்து மன்சூரை ஒருபிடிபிடிப்பதும் காலையில் பணத்தை மன்சூர் அப்பெண்ணிடம் ஒப்படைக்கச்செய்வதும் அடுத்தகாட்சி. அதற்குப் பிறகு அறிமுகமாகிறார் சி.பி.ஐ. அதிகாரி கந்தசாமி (விக்ரம் தான்) - இவர் பொருளாதார குற்றங்களுக்குப் பொறுப்பான சி.பி.ஐப் பிரிவு அதிகாரி இப்போதே கதை என்க்கு விளங்கிவிட்டது - உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்....

ஷங்கர் 3முறைதானும் எடுத்த இதே கதைப்பாணியையுடைய படத்தை மீள அரைத்த மாவை அரைத்திருக்கிறார் சுசி கணேசன். சுருக்கமாகச் சொன்னால் அந்நியன், சிவாஜி, ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒரு கலவைதான் இந்தக் கந்தசாமி. கானமயிலாகிய ஷங்கர் ஆடக்கண்ட சுசிகணேசன் தானும் அதுவாகப் பாவித்து எடுத்த முயற்சியின் விளைவு இது என நன்றாகத் தெரிகிறது.படத்தின் முடிவு கூட அந்நியனை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாச் சொன்னால் ஜென்டில்மேனின் அடிப்படையில் சிவாஜியின் கருவை வைத்து அந்நியனின் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒப்பித்து அமைக்கப்பட்டதே கந்தசாமி.


படம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது - ஏனென்றால் முதலிலேயே கதை விளங்கிவிட்டது ஆகவே “சஸ்பென்ஸ்” என்று ஒன்றுமில்லை... ஷ்ரேயாவின் கவர்ச்சியின் தாராளத்தன்மை படம் முழுவதும் ஊடாடுகிறது... தனக்கு வில்லிக் கதாப்பாத்திரங்களும் பொருந்தும் என நிரூபித்திருக்கின்றார். படத்தின் சில காட்சிகள் இழுவையோ இழுவை அத்தோடு விசாரணைக்காடசி யொன்றில் விக்ரம் பேசும் வசனம் கூட அவர் அந்நியனில் பேசிய அதே வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. இது போக அடிக்கடி சம்பந்த சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் பெரிய அலுப்பு. ஒரு படத்தில் ஒரு குத்து வகையறாப் பாட்டு இருந்தால் இரசிக்கலாம் படம் முழுக்க அதே வகையறா என்றால் சகிக்ககுமா? இவ்வளவு செலவழித்துப் படம் எடுத்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஹரிஸ் ஜெயராஜையோ, யுவன் ஷங்கர் ராஜாவையோ இசைக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம். பின்னணி இசைகூடப் பெரிதாக நல்லதாக இல்லை. மேலும் பார்ப்பவர்களை அசௌகரியப்படுத்துகிறது ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். வேகமாக நகரும் கமரா அடிக்கடி கண்ணைக்கூசவைக்கும் “எஃபெக்ட்ஸ்” என பார்பவர்களை கஷ்டப்படுத்துகிறது ஆனால் மெக்ஸிகோ காட்சிகள் பரவாயில்லை.

படத்தின் மிகப்பெரிய நிறை விக்ரம். அவரது நடிப்பில் அவரது உழைப்புத்தெரிகிறது ஆனால் படம் அந்தத் தரத்திறகில்லையே. பிரபுவின் நடிப்பும், ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும், வை.ஜி.மகேந்திரனின் நடிப்பும் நன்று. நகைச்சுவையைப் பொருத்தவரை முதற்பாதியில் கலக்கும் வடிவேல் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

3 வருடமாக “பில்டப்” கொடுக்கும் போதே எனக்குள் ஒரு ஐயம் இருந்ததது இப்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் படம் தோற்கும் என்று சொல்வதற்கும் இல்லை.

ஒருவரியில்..

கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....

Aug 18, 2009

தெமழ-இல் ஒரு ஜனாதிபதி வாழ்த்துப் பாடல்

யுத்த வெற்றிக்குப்பின் பல ஜனாதிபதி வாழ்த்துப்பாடல்கள் இலங்கையில் இயற்றப்பட்டது.... இன்றும் அரசாங்க வானொலிகள் அதைப் போட்டுப் போட்டு ....ஹ்ம்ம்... அதைச் சொல்லவும் வேண்டுமோ - அவற்றில் முக்கியமானதும் மிகப் பிரபலம் பெற்ற பாடல் “ஆயுபோவேவா” என்ற சிங்களப் பாடல் ஆகும் ஆகும். இது சஹெலி கமகேவினால் பாடப்பட்டது. இந்தச் சிங்களப் பாடலின் தமிழாக்கம் அதாவது சரியாகச் சொல்வதானால் தெமழ ஆக்கம் ஒன்றும் உண்டு - இதைத் தமிழிலும் சஹெலி கமகேவே பாடியிருக்கிறார். அண்மை மாதங்களாக எனது நண்பர்கள் (சிங்கள நண்பர்கள்) பலரின் மொபைல் கோளர் ட்யுன் ஆக இதன் சிங்கள வடிவமே இருக்கிறது.... அப்படித்தான் முதல்முறையாக இப்பாடலைக் கேட்டேன் பிறகுதான் இதற்கு தமிழ்வடிவமும் உண்டு என்று அறிந்து அதனையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது ஆனால் எல்லாம் சரி இவர்களுக்கு தமிழ் மேல் ஏன் இந்தக் கொலைவெறி... அப்பப்பா உச்சரிப்புதான் உச்ச பட்ச எரிச்சலை உண்டாக்குகிறது.

நீங்களும் கேட்டுப்பாருங்கள் இந்த “நீடுழி வாழ்க அரசரே...” பாடலை.... இனியும் தமிழ் தெரியாது தமிழில் பாட விளைபவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் - தயவு செய்து முயற்சிக்காதீர்கள் எம் மொழியைத் துன்புறுத்தாதீர்கள்.
இங்கு ஒலிக்கும் பாடல் www.helenada.com என்ற தளத்திலிருந்து பெறப்பட்டதாகும். முழுப்பதிப்புரிமையும் சஹெலி கமகேவினைச் சார்ந்தது.

தோரணங்களில் ஒரு முரண்பாடு...


இதைப் பற்றி நீண்டகாலகமாகவே எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் இன்று தான் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது. இன்று பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்குப் போயிருந்தேன் - திருவிழாக்காலம் ஆதலால் கோயிலே சோடிக்கப்பட்டு தோரணங்களும் மின்னொளி அலங்காரமும் நிறைந்து மங்கலகரமாக இருந்தது. என்னுடைய கண்கள் அந்த அலங்காரமான தோரணங்களைப் படம் பிடிக்கையிலே என்றைக்கோ பாடசாலையில் சமய பாடத்தில் படித்த ஒன்று மனதில் தோன்றி ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது.

தென்னங்குருத்திலைத் தோரணமானது மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகள் இரண்டிலும் வெவ்வேறு விதமாகக் கட்டப்படும். அதாவது மங்கல விழாக்களில் தோரணங்களில் காணப்படும் கூர்கள் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வுகளில் அந்தக் கூர்கள் மேல் நோக்கியும் தான் கட்டப்பட வேண்டும் - இதற்கு எங்கள் சமயப் பாடப்புத்தகத்தில் தரப்பட்ட விளக்கமானது மங்கல விழாக்களுக்கு தேவர்கள் மேலுலகத்தினின்று இப்பாருக்கு வருவதனைச் சுட்டும் விதமாக கூர் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வான மரண நிகழ்வுகளில் ஆத்மா மேலுலகத்திற்குச் செல்லுவதைக் குறிக்கும் விதமாக கூர் மேல்நோக்கி அமையுமாறு தோரணம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை நான் தெளிவாகப்படித்திருந்தேன் அந்த ஞாபகம் இந்த மங்கலகரமான திருவிழாவில் தோரணம் அமங்கல முறையில் கட்டப்பட்டதைக் கண்டதும் மனதில் தோன்றியது. சரி நான் ஏதோ குழம்பிவிட்டேனோ என தற்போது இன்னும் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் எனது தம்பி, தங்கையிருவரிடமும் விசாரித்ததில் நான் நினைத்தது சரியே - பாடப்புத்தகத்திலும் அப்படித்தான் இருக்கிறது - அதுவும் 10, 11 ஆம் வகுப்புப் புத்தகங்களிலல்ல ஆண்டு 5 புத்தகத்தில் இது பற்றித் தெளிவாக இருக்கிறது.

இந்தக் கோயிலில் மட்டுமல்ல இன்று பல மங்கல விழாக்களில் நான் இந்த அமங்கல முறைத் தோரணத்தையே காண்கிறேன் - பார்க்கும் போதெல்லாம் இந்தச் சந்தேகம் என்னை பற்றிக்கொள்ளும். இப்படித்தான் பலவிடயங்கள் இந்து சமயத்தில் தடம்மாறி நடந்துகொண்டிருக்கிறது - நிறைய மரபுகள் உடைக்கப்பட்டுவிட்டன - இது மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உரியது. இது பற்றி இப்பதிவை எழுத முன் நண்பன் ஒருவனிடம் பேசினேன், அவன் சொன்ன பதிலும் என்னை மிகவும் வருத்தியது. “மச்சாங், இந்தக் காலத்தில தோரணம் கட்டுறதே பெரிய விசயம் இதுல மங்கலம், அமங்கலம் எண்டுகொண்டு.... மற்றது தோரணத்தை முற்திமாதிரி ஐயர்மாரோ விசயம் தெரிஞ்சஆக்களோ முன்னுக்கு நிண்டு கட்டுவிக்கிறாங்களா??? இல்லை... மாலை கட்டுறவன் ஓடர எடுத்திட்டு தனக்கு தெரிஞ்ச முறையில கட்டுறான்... இதப்பற்றி ஐயர்மாரும் பெரியவங்களுமே கவனிக்கேல... நீ ஏன்டா சும்மா...” - அவன் சொன்னது இந்தக்காலத்தின் பிம்பம் - தவறுகளை நாங்கள் திருத்த முனையாமல் தட்டிக்கழிக்கின்றோம் அல்லது அலட்சியம் செய்கின்றோம் நாளைக்கு அந்தத் தவறுகளே சரி என்ற நிலமைக்கு வந்துவிடும், நாங்களும் “பெரிய மனசுக்காரராக” அதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.....

கொஞ்சம் யோசியுங்கள் இந்தச் சின்னச் சின்ன அலட்சியங்களேல்லாம் எங்கள் இந்து சமய நெறிமுறைகளையெல்லாம் தகர்த்து எறிந்துவிடாதா???

Aug 14, 2009

வாழ்த்துக்களும் வேண்டுகோளும்....

62வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள்!


இந்த இனிய நாளிலே உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்... உங்களுக்குத் தெரியும் அடிமைத்தனத்திலிருந்தான விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானதென்று.... ஆங்கிலேய அடிமைத்தனத்திலிருந்து உடைத்துக்கொண்டு வெளிவர உங்கள் முன்னோர் பட்ட பாடுகளும் சிந்திய இரத்தமும் நீங்கள் அறியாததா? அஹிம்சைத் தீவிரவாதத்தால் காந்தியும், போராட்டத் தீவிரவாதத்தால் சுபாஷ் சந்திரபோசும் போராடிய போராட்டத்தின் வலி நீங்கள் உணராததா? அத்தகைய மகத்தான விடுதலைப்போராட்டத்தின் வெற்றிதான் நீங்கள் இன்று அனுபவித்துக் கொண்டாடும் சுதந்திரதினம்.... விடுதலைப் போராட்டத்தின் மகத்துவத்தை, அதன் தேவையை மேற்கத்தேய நாட்டில் பிறந்த சிலர் உணராது இருக்கலாம்... ஆனால் தயவு செய்து விடுதலையின் தேவையை அதன் மகத்துவம் தெரிந்த நீங்கள் மறந்து விடாதீர்கள்.... இதுவே எனது அன்பான கோரிக்கை.

இங்லிஷ் கால்பந்தாட்டப் பருவகாலம் 2009/10 - ஒரு முன்னோட்டம்


2009-2010 பருவகாலத்திற்கான இங்லிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது. மே மாதம் முடிவடைந்த கடந்த ஆண்டுக்கான பருவகாலத்தில் மஞ்செஸ்டர் யுனைடட் கழகம் வெற்றி பெற்றது, அதே பருவகாலத்தில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் பாசலோனா கழகத்திடம் 2-0 என்ற அடிப்படையில் மஞ்செஸ்டர் யுனைட்டட் கழகம் தோற்றதும், இங்கிலாந்தின் எஃப்.ஏ கிண்ணத்தை செல்ஸி கழகம் கைப்பற்றியதும் பழையகதை. இந்த புதிய பருவத்தின் லீக் போட்டிகள் நாளை, 15ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை ஆரம்பமாகிறது. ப்ரீமியர் லீக்கில்20 அணிகள் விளையாடுகின்றன. கடந்த ஆண்டு ப்ரீமியர் லீக்கில் கடைசி 3 இடம் பெற்ற அணிகள் வெளியேறி 1ம் டிவிசனில் இம்முறை விளையாடுகின்றன. இதில் 16 வருட காலம் தொடுர்ந்து ப்ரீமியர் லீக்கில் விளையாடிய நியுகாசல் யுனைட்டட் கழகம் ப்ரீமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்பட்டு இப்போது 1ம் டிவிசனில் விளையாடுவதும் அனைத்து இரசிகர்களும் அறிந்ததே. இந்தப் பருவகாலத்தில் ப்ரீமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்பட்ட 3 அணிகளுக்குப்பதிலாக கடந்த பருவகாலத்தில் 1ம் டிவிஷனில் முதல் 3 ஸ்தானங்களைப் பெற்ற பேண்லி, வுல்வஹம்டன் வொண்டரர்ஸ் மற்றும் பேமிங்ஹம் சிட்டி ஆகிய கழகங்கள் இம்முறை ப்ரீமியர் லீக்கில் காலடியெடுத்து வைத்திருக்கின்றன. இப்பருவகாலத்தில் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் அணிகளாவன - ஆர்செனள், அஸ்ரன் வில்லா, பேமிங்ஹம், ப்ளக்பேர்ன் ரோவர்ஸ், பொள்டன் வொண்டரர்ஸ், பேண்லி, செல்சி, இவேடன், ஃபுல்ஹம், ஹல் சிட்டி, லிவர்புல், மஞ்செஸ்டர் சிட்டி, மஞ்செஸ்டர் யுனைட்டட், போட்ஸ்மௌத், சண்டர்லண்ட், ஸ்ரோக் சிட்டி, டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர், வெஸ்ட் ஹம், விகன் அத்லடிக் மற்றும் வுல்வஹம்டன் வொண்டரர்ஸ்.


இத்தளை அணிகள் இருந்தாலும் வெற்றி அல்லது ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் அடுத்த பருவகாலத்தில் விளையாடத் தகுதிபெறத் தேவையான லீக்கின் முதல் 4 இடங்கள் என்பவற்றைத் தொடர்ந்து பல வருடங்களாக மஞ்சேஸ்டர் யுனைட்டட், செல்ஸி, லிவர்புல் மற்றும் ஆர்செனல் ஆகிய 4 கழகங்களே கைப்பற்றியிருக்கின்றன. இம்முறையும் அதில் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே பலரது கருத்தாக இருந்தாலும் புதிதாக பொருளாதார ரீதியில்உறுதிபெற்றதன் மூலம் பல் திறமையான வீரர்களை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த டுபாய் ஷெய்க்கிற்குச் சொந்தமான மஞ்செஸ்டர் சிட்டி கழகத்தின் மீதும் பெருங்கவனம் திரும்பியுள்ளது. இதுவரை இப்பருவகாலத்தில் மட்டும் ப்ளக்பேர்ண் கழகத்திலிருந்து ஸ்ரைக்கரான ரொகே சண்டகுரூஸ், அஸ்ரன் விலா கழகத்தின் மிட்ஃபீல்டர் கரத் பரி மற்றும் ஆர்செனல் கழகத்திலிருந்து ஸ்ரைக்கரான எமனுவல் அடபயோர் மற்றும் டிஃபென்டரான கோலோ டுவரே ஆகியோரையும் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்ததுடன், மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கு விளையாடிய ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் ஸ்ரைக்கர் கார்லஸ் டெவேஸ் - ஐயும் 25 மில்லியன் பௌண்ஸ்களை யுனைட்டட் கழகத்துடன் ஒப்பந்தகாலம் முடிந்திருந்த அவ்வீரருக்கு அள்ளி வழங்கி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவருடன் சேர்த்து மொத்தமாக மஞசெஸ்டர் சிட்டி அணியில் இப்போது 10 ஸ்ரைக்கர்கள் இருக்கிறார்கள் - ஒரு போட்டியில் அதிக பட்சம் 3 விளையாடும் ஸ்ரைக்கர்களும் 2 பேர் உதிரிகளாக பென்ஞ்சில் இருப்பதே வழமை ஆனால் 10 ஸ்ரைக்கர்களை எவ்வாறு சிட்டி கழக முகாமையாளர் மார்க் ஹ்யுஸ் பய்னபடுத்தப்போகிறார் எனக் காண நாங்கள் ஆவலாக இருக்கின்றோம் என மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முகாமையாளர் சேர்.அலெக்ஸ் ஃபேகுஸன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரைக்கர்கள் அதிகமாக இருந்தாலும் டிஃபென்டர்களைப் பொறுத்தவரையில் சிட்டி கழகத்திடம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இருக்கவேயில்லை அதனால் டிஃபென்டர்களை ஒப்பந்தம் செய்ய அயராத முயற்சி எடுத்தும் இறுதியில் ஆர்செனல் கழகத்தில் கோலோ டுவரேயை மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடிந்தது. செல்ஸி கழகத்தின் தலைவரும் இங்கிலாந்து அணியின் தலைவரும் நட்சத்திர டிஃபென்டருமான ஜோன் டெரியை 45 மில்லியன் பௌண்ஸ்ஸிற்கும் உலகிலேயே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கான அதிக சம்பளத்தொகையான வாரமொன்றுக்கு 3 இலட்சம் பௌண்ஸிற்கும் ஒப்பந்தம் செய்ய முயன்றும் செல்ஸி கழகமும், ஜோன் டெரியும் இதனை மறுத்துவிட்டனர், மேலும் எவேடன் கழகத்தின் ஜோலியன் லெஸ்கொட்டை ஒப்பந்தம் செய்யுமு் மயற்சியும் இதுவரை தோல்வியையே சந்தித்திருக்கிறது. இது வரை பெரிதாகப் பேசப்படாத கழகமான மஞ்செஸ்டர் சிட்டி கழகம் கடந்த வருடம் டுபாய் ஷெய்க் மன்சூர் வாங்கியதன் முதல் அதிக பணத்தை கொட்டிக்கொட்டிச் செலவழிப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது - அவர்களது கனவு முதல் 4ற்குள் நுழைவது தான் - இது நடக்குமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


இவர்களது முதல் 4 கனவு அப்படியிருக்க ஆர்செனலின் இருப்பு கவலைக்கிடமாகவே இருக்கிறது. கடந்த பருவகாலத்தில் ஒருவாறு பெரும்போராட்டத்திற்குப்பிறது 4ம் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டது ஆர்செனல் கழகம் - கொஞ்சம் அசந்திருந்தாலும் அஸ்ரன்விலா 4ம் இடத்தைத் தடடிச்சென்றிருக்கும். இம்முறையும் ஆர்செனல் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. அவர்கள் புதிதாக ஒரு வீரரை மட்டுமே இதுவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் - பெல்ஜிய டிஃபென்டரான வேர்மலன் மட்டுமே புதிய இணைப்பு ஆனால் பழைய அணியிலிருந்த நட்சத்திர ஸ்ரைக்கரான எமனுவெல் அடபயோர் மற்றும் டிஃபென்டர் கோலோ டுவரே ஆகியோர் சிட்டிக் கழகத்திற்கு மாறிய பின்னரும் கையில் காசிருந்தும் புதிய வீரர்கள் யாரும் சிக்காமல் தவித்து வருகிறார் ஆர்செனல் முகாமையாளர் ஆர்சன் வெங்கர். இதோடு அவரை வாட்டும் பெரிய தலையிடி பருவகாலம் தொடங்கும் முன்பே தோமஸ் ரொஸிஸ்கி, தியோ வொல்கொட், ஃபபியன்ஸ்கி உட்பட 6 முதல்நிலை வீரர்கள் காயமுற்றிருப்பதுதான். தற்போதைய நிலைமைகளை வைத்துப்பார்க்கும் போது இம்முறையும் ஆர்சனல் வெல்லவு ஏதுமில்லை எனத்தான் தோன்றுகிறது ஆனால் 4ம் இடத்தைத் தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது ஆர்செனல்.


கடந்த முறை லீக்கில் 3வது இடத்தைப்பெற்றதுடன், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதி வரை முன்னேறி சர்ச்சைக்குரிய அரையிறுதியின் இரண்டாவது லெக்கில் பார்சலோனா கழகத்துடன் “எவே கோல்ஸ்” அடிப்படையில் தோல்வி கண்டதுடன், எஃப்.ஏ.கிண்ணத்தைக் கைப்பற்றிய அணி செல்ஸி கழகமாகும். இம்முறை லீக்வெற்றி, சம்பியன்ஸ் லீக் கனவுகளுடன் களத்தில் இறங்கியிருக்கிறது. பருவகாலத்தின் ஆரம்பப்போட்டியான எஃப்.ஏ.கம்யுனிட்டி ஷீல்ட் டில் மஞசெஸ்டர் யுனைட்டட் கழகத்தை பெனால்டிகளில் 4-1 என்ற அடிப்படையில் தோற்கடித்து வெற்றியுடன் இப்பருவகாலத் ஆரம்பித்திருக்கிறது. இப்பருவகாலத்தில் செல்ஸி கழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் ஏ.சி.மிலான் இத்தாலிய காற்பந்தாட்டக்கழகத்தின் முகாமையாளராக 8 வருடம் கடமையாற்றிய கார்ளோ அன்சலொட்டி செல்ஸி கழகத்தின் முகாமையாளராக நியமிக்கப்பட்டதாகும். அவரது அனுபவமும் பயிற்சி முறைகளும் செல்ஸ கழகத்தை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பு - இதுவரை முற்-பருவகாலப் போ்டிகளில் செல்ஸி கழகம் மிகச் சிறப்பாக செயற்பட்டிருக்கிறது. மேலும் செல்ஸ கழகத்திற்கு மிக ஆறுதலான ஒரு விடயம் ஏனைய 3 முன்னணி கழகங்களைப்போல செல்ஸி இதுவரை தமது முக்கிய வீரர்கள் யாரையும் பறிகொடுக்கவில்லை என்பது தான். அத்தோடு 3 புதிய வீரர்கள் இதுவரை ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சிட்டிக் கழகத்திலிருந்து இளம் ஸ்ரைக்கரான டானியல் ஸ்ரரிஜ், மிடில்ஸ்ப்றோ கழகத்தின் கோல் காப்பாளாரான றொஸ் ரேன்போள் மற்றும் ரஷ்ய டிஃபென்டரும், மிட்ஃபீல்டருமான யுரி ஸேகொவ் ஆகியோரே புதிதாக செல்ஸி கழகத்தில் இணைந்தவர்கள். கார்ளோ அன்சலொட்டியின் அனுபவமும் மாறாக நிலையான உறுதியான அணியும் கொண்டுள்ளதால் செல்ஸி கழகம் இப்பருவகாலத்தின் வெற்றியாளராவதற்கு முதற் தெரிவாக உள்ளது.


லிவர்புல் கழகம் கடந்த பருவகாலத்தில் 2ம் இடத்தைப்பெற்றிருந்தது ஆனால் வேறெந்த வெற்றிகளையும் அதுபெறவில்லை. இம்முறை வெற்றியாளாராக பலரும் லிவர்புலை எதிர்பார்த்தாலும் இரண்டு முக்கிய வீரர்களை ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கழகத்திற்குப் பிகொடுத்ததன் மூலம் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. லிவர்புலின் ஸபி அலொன்ஸோவும், ஆர்பலோவாவும் ரியல் மட்ரிட்டிற்கு விற்கப்பட்டுவிட்டனர். லிவர்புல் முகாமையாளர் ரஃபா பெனீட்டஸ் 2 புதிய வீரர்களை இதுவரை ஒப்பந்தம் செய்துள்ளார் அவர்கள் போர்ட்ஸ்மௌத் டிஃபென்டர் க்ளென் ஜோன்ஸன் மற்றும் இத்தாலிய வீரர் அல்பேர்ட்டோ அக்வலானி ஆகியோர் ஆவர். ஆனால் ஸபி அலன்சோவின் இடத்தை நிரப்ப ஒப்பந்தமான அக்வலானி இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்புல் இம்முறை பலமான ஒரு கழகமாக களத்தில் இறங்குகிறது. அதிகப்படியான காயங்கள் ஏற்படாவிட்டால் லிவர்புல் வெற்றிவாகை சூடுவதற்கு அதிக வாய்ப்புககள் உண்டு.


அனைவரினதும் பெரிய எதிர்பார்ப்பு மஞ்செஸ்டர் யுனைட்டட் கழகமாகும் ஆனால் இம்முறை 2 முக்கிய வீரர்களை இழந்துள்ள யுனைட்டட் வெற்றி பெறுவது சந்தேகமே என பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். கார்ளோ டெவெசும், உலகின் முதல் நிலை வீரர் கிறிஸ்டியானோ
ரொனால்டோவுமே அந்த முக்கிய பறிபோன வீரர்களாவர். கார்ளோ டெவெஸை தமது உள் ஊர் போட்டியாளரான சிட்டி கழககத்திடம் கைநழுவவிட்டது யுனைட்டட்டை மிகவும் பாதித்தது ஆனாலும் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக ரொனால்டோவின் ரியல் மட்றிட் கனவு கடைசியில் 80 மில்லியன் பௌண்ஸ் விலையில் சாத்தியமானது. ரொனால்டோவை 80 மில்லியன் பௌண்ஸிற்கு விற்றாலும் அந்தப் பணத்தில் மாற்று வீரர் ஒருவரை பெரியளவில் யுனைட்டட் முகாமையாளர் சேர்.அலெக்ஸ் ஃபேர்குஸன் வாங்கவில்லை மாறாக விகன் அத்லடிக் கழகத்தின் இளம் வீரரான லுயிஸ் அன்டொனியோ வலென்ஸியாவையே ரொனால்டோவுக்கு மாற்றாக வாங்கினார் ஆனால் அவருக்கு மட்டுமல்ல வலன்சியாவுக்கும் ஏன் இந்த ஊருக்கே தெரியும் ரொனால்டோவை பிரதியீடு செய்ய வலன்சியாவால் முடியாது என்று. மேலும் தரமிறங்கிய நியுகாசல் கழகத்தில் விளையாடி வந்த காயம் பலகண்ட செம்மல் மைக்கேல் ஒவனையும் ஃபேர்குஸன் அதிர்ச்சிதரும் வகையில் ஒப்பந்தம் செய்தார். ஒவன் ஆரம்பகாலங்களில் மிகச் சிறந்த வீரர் ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட காயங்கள் மற்றும் தொ்ர்ந்து ஃபோமில் இல்லாமை என்பன அவரை ஒரு இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருந்தன, அப்படிப்பட்ட வீரரை யுனைட்டட் கழகம் ஒப்பந்தம் செய்தது பலருக்கு அதிர்ச்சிதான் - ஆனால் முற் பருவகாலப் போட்டிகளில் ஒவன் நன்றாகவே விளையாடியிருந்தார், காயங்களின்றி தொடர்வாரானால் இவரும் கோல் மழை பொழிவார் என்பது அறிஞர்கள் கருத்து. மேலும் யுனைட்டட்டின் 3வது புதிய சேர்ப்பு பிரான்ஸ் இளம் வீரரான கப்ரியல் ஓபெர்டான். ரொனால்டோ இல்லாத யுனைட்டட்டால் கோல் மழை பொழிய முடியுமா என்ற சந்தேகம் பலருக்குக் கிளப்பியுள்ளது மேலும் மிக இளமையான வீரர்களையும் மிக வயதான வீரர்களையுமே யுனைட்டட் கழகம் அதிகளவில் கொண்டுள்ளது நடுவயதுகளில் உள்ளவீரர்கள் மிகக் குறைவு இதுவும் ஒரு முக்கிய பின்னடைவு என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அலெக்ஸ் ஃபேர்குஜன் ரூணியை ரொனால்டோ விட்டுச்சென்ற கோலடிக்கும் இடத்துக்கு நம்பிக்கையாக நியமிப்பதாகக் கூறினாலும் அது எ்வவளவு தூரம் சாத்தியம் என்பதும் சந்தேகமே. ஆனால் திறமையான அணி யுனைட்டடிடம் உண்டு என்பது மறுக்க முடியாதது. மேலும் யுனைட்டடினி் முதன்மை கோல் காப்பாளரான வன் டே சார் விரல்களில் காயம் காரணமாக 6 வாரங்களுக்கு ஓரங்கட்டப்பட்டிருப்பதும், பிரதியீட்டுக் காப்பாளர்களான பென் ஃபொஸ்டர், குஸ்கக் ஆகியோரது அனுபவக்குறைவும் பருவகால ஆரம்பத்தை யுனைட்டட்டுக்கு சவாலாக்கியிருக்கிறது. பருவகால ஆரம்பமே செல்ஸியிடம் எஃப்.ஏ. கம்யுனிட்டி ஷீல்ட் தோல்வியில் தொடங்கியிருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறர்கள் இரசிகர்கள்.

சரி காற்பந்தாட்டத்தைத் தொடர்ந்து கவனிக்கு ஒரு இரசிகரான எனது கணிப்பு -

1ம் இடம் - செல்ஸி அல்லது மஞ்செஸ்டர் யுனைட்டட்

மஞ்செஸ்டர் சிட்டி முதல் 4ற்குள் வராது.

ஆர்செனல் 4வது இடத்தைப் பெறப் போராடவேண்டியிருக்கும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Aug 13, 2009

இளைஞர்களை கட்டிவைக்காதீர்கள்....


இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். உலகைப் பரந்த நோக்கில் பார்க்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முயற்சிக்கின்றார்கள் ஆனால் சமூகம் தொடர்பான அவர்களது சிந்தனை இலங்கை இளைஞர்களிடையே வெகுவாகக் குறைந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தாம், தமது வாழ்க்கை என ஒரே நேர்கோட்டில் சிந்திக்கின்றார்கள். சமூகத்தைப் பற்றியோ அதன் தேவைகள், மாற்றங்கள் பற்றியோ சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது.

சில தினம் முன்பு எனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ஒரு சமூக ஆர்வத்தொண்டு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் அவனும் கேட்டுக்கொண்டி
ருந்தான், உதவிக்கு ஆட்கள் தேடித்தருவதாக வாக்களித்தான் ஆனால் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமில்லை அவனுக்கு, கேட்டேன் “இல்லடா.... வேலை நிறைய இருக்கு... படிக்கவும் வேண்டும்” எனச் சமாளித்துவிட்டான் ஆனால் எனக்குத்தான் தெரியுமே உண்மையான காரணம்... அவன் இப்படி சமூக அக்கறை இல்லாமல் இருந்தவன் இல்லை ஆனால் அவனது சமூக ஆர்வத்தால் வீட்டில் பிரச்சினை, ஒவ்வொருநாளும் வீட்டில் திட்டு வாங்கினான் “படிச்சு வேலைவட்டியைப் பாக்கிறத விட்டுட்டு உது என்னத்துக்கு வேண்டாத வேலை” எனத் திட்டித்திட்டி அவனட மனதில் அது ஆறாத வடுவாகி இன்று சமூகப் பொறுப்பையே அவன் மறந்துவிடும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். இதில் அவன் மேல் பிழையில்லை அவன் பெற்றோர் மீதும் பெரிதும் பழி சுமத்த வழியில்லை ஏனென்றால் சமூகப் பொறுப்பை மறந்து வாழ்க்கையை நடத்த நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் - உண்மையில் நாம் வாழ்கிறோமா இல்லைத் தப்பிப் பிழைக்கிறோமா என எனக்
கு ஐயம் எழுவது கூட உண்டு.

இன்றைய இளைஞர்கள் சமூக சேவையென்றாலே வரத் தயங்குகிறார்கள் - இதற்கு ஆர்வமின்மை காரணமல்ல, அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடும் விருப்பமும் உண்டு ஆனால் உற்றோரும் சுற்றோரும் இது ஏன் வீண்வேலை என அவர்களுக்குத் தடைபோடுவதால் அதனை இடித்தெறியும் வன்மை இலாது அவர்கள் காட்டும் நேர்கோட்டிலேயே பயணிக்கின்றார்கள். சமூகப் பொறுப்புணர்வின் நிலைமையே இப்படியென்றால் அரசியல் பக்கம் இளைஞர்கள் வருகிறார்களா எனப் பார்த்தால், அரசியல் வாரிசுகளும் மற்றும் மிகச் சொற்ப இளைஞர்களும் போக மீதம் பேர் அரசியல் என்றாலே விலகித்தான் நிற்கின்றார்கள். அதுவும் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்ததமிழ் பேசும் எம்மவர் அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று கூறியே இளைஞர் மனதிலிருந்து அதனை விலக்கி வைத்துவிட்டார்கள். விளைவு இன்று இன்னும் அந்தச் சாக்கடை சாக்கடையாகவே இருக்கிறது. அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று சொல்பவர்களை ஒன்று கேட்கின்றேன் உங்கள் வீட்டில் குப்பையிருந்தால் அதை நீங்களோ, உங்கள் பிள்ளையைக்கொண்டோ அப்புறப்படுத்துவீர்களா இல்லை குப்பை குப்பை எனச் சொல்
லிக்கொண்டு அந்தப் பக்கம் போகாமலே குப்பபையைப் பெருகவிட்டு வீட்டை நாறவிடுவீர்களா? நாறவிடுவோம் எனச்சொலபவர் பற்றி எனக்குக் கவலையில்லை அவர்கள் பற்றிக் கவலைப்படவேண்டியது மனநல மருத்துவர்தான் ஆனால் இல்லை எனச் சொல்பவர்கள் வீடு அழுக்கானால் சுத்தம் செய்கிறீர்களே ஆனால் நாடு அமுக்கானால் மட்டும் ஏன் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்??? க்ணணை மூடிக்கொண்டு எவ்வளவு காலம் வாழ்ந்துவிட முடியும்??? யோசியுங்கள் தப்பிப்பிழைப்பது வாழ்க்கையல்ல - அப்படியிருப்பதிலும் செத்துமடிவது மேல்.

அரசியல் என்பதே இன்று தலைகீழ் ஆகிவட்டது. அது ஒரு கலை என்பதிலிருந்து இறங்கி வியாபாரம் ஆனதன் விளைவே இன்று நீங்கள் அதனைச் சாக்கடை சாக்கடை என வையும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இந்தச் சாக்கடையினுள் ஊறியவர்களுக்கு அதனைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது ஆக அவர்கள் சாக்கடையைச் சாக்கடையாகவே இருக்கவிட்டுவிடுவார்களேயன்றி அதனைச் சுத்தம் செய்து மாற்
றம் கொண்டுவர எத்தனிக்கமாட்டார்கள். ஏனென்றால் சாக்கடையில் வாழும் தன்மை அவனுக்கேயுண்டு வேற்றோர் அதனுள் வாழமுடியாது அதனால் தனியுடைமையாக அதனைப் பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கின்றான். நீங்களும் அப்படியே விட்டுவிட்டீர்கள் - ஆனால் இது உங்கள் கழிவுகள் போகும் சாக்கடையல்ல உங்களுக்கு குடிக்க நீர் தரும் சாக்கடை உங்களை ஆளும் சாக்கடை அது எப்படியோ அப்படியே உங்கள் வாழ்கையும் அமையும். ஆனால் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் எத்தனை துன்பத்தை இந்த அரசியல்வாதிகள் தந்தாலும் தாங்கிக்கொண்டு மாற்றம் எதனையும் வேண்டாது அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறீர்களே - சாதனைதான்.

சிந்தியுங்கள்.... இளைஞர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்...
ஏனென்றால் எதற்கும் வளைந்துகொடுக்காத மனோதைரியம் இளைஞர்களுக்குத் தான் உண்டு. எத்தனை காலம் தான் இந்தத் தப்பியொட்டி வாழும் வாழ்ககை... ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்களை தடுக்காதீர்கள் அவனது உறுதியான மனதிலே அடித்து அடித்து அதை வளைத்துவிடாதீர்கள்.... நீங்கள் அறிந்த பெரியோரெல்லாம் வியந்து பாராட்டியது இளைஞனைத்தான். பாரதி தேச விடுதலைக்காக துணைக்கழைத்தது இளைஞர்களைத்தான்.... விவேகானந்தர் நாடடைக் கட்டியெழுப்பக் கேட்டது 100 இளைஞர்களைத்தான்... சேகு
வேரா தூயமையான விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த இளைஞர்களோடுதான்... அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. அவர்களை அவர்களாகக் கனவு காணவிடுங்கள் - அவர்களது கனவினைக்கூட நீங்களே தீர்மானிக்க எத்தனிக்காதீர்கள். மீண்டும் சொல்கிறேன் அரசியல் உங்கள் பார்வையில் சாக்கடையாகவே இருக்கட்டும், அதை சுத்தம் செய்யும் பலமோ திறனோ உங்களுக்கில்லை ஆனால் இன்றைய இளைஞர்கள் எங்களுக்கு அந்தப பலமும் திறமும் உண்டு - அதனைச் செய்யவிடாது தடுக்காதீர்கள்.

நான் இதை உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளும் இந்த தினம் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு சாதனை இளைஞனாக இருந்து கொடுமைகள் நிறைந்த தனது தேசத்திற்கு விடுதலை ஒளியுட்டிய இளைஞன் ஃபிடல் கஸ்ட்ரோ பிறந்த தினம்.... அந்த இளைஞன் அன்று ஏற்படுத்திய அந்த மாற்றம் தான் அத்தனை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு ஒளிகொடுத்தது... இப்படி எங்களுக்குள் ஒளிந்திருக்கும் கோடிக்கணக்கான கஸ்ட்ரோக்களை வேரோடு அறுத்துவிடாதீர்கள்.....

Aug 11, 2009

உண்மையான தேசப்பற்றே இன்றைய தேவை!


தேசப்பற்று, தேசியவாதம் எனஅண்மைக்காலங்களாக ஒலிக்கும் கோஷங்களைக்கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. உண்மையில் தேசப்பற்று என்றால் என்ன என்று அறியாக்கூட்டமெல்லாம் அதைப்பற்றி மேடையேறி வெறித்தனமாக முழங்குவதே மிகக்கொடுமையானது. தேசப்பற்று என்றால் என்ன? அது வெறும் மண்ணின் மீதுள்ள பற்றா? அப்படியானால் அற்பத்தனமாக இந்த மண்ணின் மீது வைக்கும் பற்றைப்பற்றித்தானா இவ்வளவு பேசுகிறீர்கள்? தேசம் என்பதே வெறும் மணதானா? எனக் கேள்விகளெல்லாம் என்னுள் எழுகிறது. தேசம் என்பது வெறும் மண் அல்ல அது அம்மண்ணில் வாழும் மக்களையே குறிக்கிறது. அந்த மண்ணில் வாழும் மக்கள் அனைவர் மீதும் வைக்கும் பற்று - அந்த அன்பு - விருப்பு அதுதான் தேசப்பற்றேயன்றி அற்பத்தனமாக மண்ணுக்காக வெறித்தனம் காட்டுவது தேசப்பற்றேயல்ல. மக்கள் இல்லாத மண் ஒரு தேசமாக முடியுமா?

இன்று இலங்கையில் தேசப்பற்று என்ற போர்வைக்குள் சில அடிப்படைவாதிகள் இனவாதமும் மதவாதமும் பேசி தேசப்பற்றின் தார்ப்பரியத்தையே மாற்றிவிட்டார்கள். அடிப்படையில் தேசப்பற்று என்பது இனவெறியும் மதவெறியும் தான் என்பது போன்ற ஒரு மாயையை இலங்கை மக்களிடையே இந்த வெறியர்கள் தோற்றுவித்துவிட்டார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல முரண்பாடுகளிருந்தாலும் ஓரளவு சுமுகமாகச் சென்று கொண்டிருந்த பல்லின உறவுகளிடையே விரிசலைக் கொண்டு வந்தது இந்த இன, மத அடிப்படைவாதம் தான். இலங்கை வரலாறு இதற்கு மாபெரும் சான்று. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றைப் பார்த்தீர்களேயானால் இலங்கையின் நிலைமை ஒப்பீட்டளவில் சுமுகமாகவேயிருந்தது. ஏற்கனவே சிங்கள் - முஸ்லிம், சிங்கள-கிறிஸ்தவ கலவரங்கள் இடம்பெற்றிருந்தாலும் 1950கள் வரை சிங்கள - தமிழ் உறவுகளும் ஏனைய சிறுபான்மையினருக்கிடையேயான உறவுகளும் ஒப்பீட்டளவில் அமைதியான சூழலிலேயே இயங்கின. ஆனால் இந்த சும்மா இருந்த சங்கான இன, மத வாதத்தை விதையிட்ட பெருமை பண்டாரநாயக்கவைச் சாரும். இலங்கை அரசியல் வரலாறு தொடர்பிலான எனது தேடல்களின் அடிப்படையில் இதனை நான் உறுதியோடு சொல்வேன். இலங்கையில் தான் ஆட்சியைக் கைப்பற்ற “பஞ்சமா பலவேகய” என்ற செயற்பாட்டின் மூலம் அமைதியாக இருந்த பௌத்த பிக்குகளைப் பெருவாரியாக அரசியலில் ஈர்த்ததே பண்டாரநாயக்கவின் வேலைதான். தான் ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளிடம் மட்டும் பெருகியிருந்த இன, மத அடிப்படைவாதத்தை மக்களிடையேயும் பரப்பி தேர்தலில் வென்று 1956ம் ஆண்டு தான் கொடுத்த இனவாத வாக்குறுதியைக் காப்பாற்ற தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது எல்லாம் பண்டாரநாயக்கவின் அரசியல் சித்துவிளையாட்டுக்களே. இப்படியாக மக்களிடையே அடங்கியிருந்த இன,மத அடிப்படைவாதத்தை தமது சுயநல அரசியலுக்காக தூண்டிவிட்ட இத்தகைய அரசியல்வாதிகளால் தான் நாடு இன்று இந்த நிலையில் இருக்கிறது. உண்மையிலேயே தனிச் சிங்களச் சட்டத்திற்கான எத்தகைய அத்தியாவசியத் தேவையும் இருக்கவிலலை - இன்று இது தொடர்பில் எனது சிங்கள நண்பர்களுடன் கலந்துரையாடும் போது கூட அவர்களும் இதேயொத்த கருத்தையே கூறுகிறார்கள்.

இப்படியாக அரசியல்வாதிகளினால் விதைக்கப்பட்டு, நீருற்றி வளர்க்கப்பட்டு இன்று நாட்டின் அடிவயிற்றை ஆட்டிக்கொண்டிருக்கும் இனவாதமும் மதவெறியும் தேசப்பற்றின் இலக்கணங்களா? இல்லை இல்லவேயில்லை. இவற்றுக்கெல்லாம் முந்திய காலம் முதல் இன்று வரை இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றாக இருக்கவில்லையா? அனைத்துப் பண்டிகை, கொண்டாட்டங்களை ஒன்றாகக் கொண்டாடவில்லையா? தமிழர்கள் வெசாக்கூடு கட்டவில்லையா? சிங்களவர்கள் பொங்கல் சாப்பிடவில்லையா? சிங்களவர்களும், தமிழர்களும் வட்டலப்பமும், பிரியாணியும் சாப்பிடத்தான் இல்லையா? இல்லை, அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் மரங்களை வீட்டில் சோடித்து நத்தார் தாத்தாவாக வேடமிட்டு நத்தார்தினம் கொண்டாடத்தான் இல்லையா? மதவாதமும், இனவெறியும் அடிப்படையில் மக்களிடம் இருக்கவில்லை, கயமைபொருந்திய சுயநல அரசியல்வாதிகளின் அற்பத்தமான நடவடிக்கைகளே இத்தனைக்கும் காரணம்.

இலங்கையின் இந்த எல்லாப்பிரச்சினைகளுக்கும் மற்றுமொரு முக்கிய காரணம் “ஸ்ரீ லங்கன்” எனும் உணர்வின்மை. இந்த விடயத்தில் இந்தியா ஒரு பெரிய முன்னுதாரணம். நூற்றுக்கணக்கான இனங்களும், மொழிகளுமுள்ள தேசம் இந்தியா ஆனாலும் அந்த இன, மத உணர்வுகளை விஞ்சி இந்தியன் என்கின்ற தேசப்பற்று அவர்களிடம் இருக்கிறது, அது தான் இன்று வரை அந்தத் தேசத்தின் நிலைப்புக்கும், வெற்றிகரமான அபிவிருத்திக்கும் காரணமாகிறது. ஆனால் இலங்கையரிட்த்தே “ஸ்ரீ லங்கன்” என்ற உயர்வை விஞ்சி சிங்களவன், தமிழன், முஸ்லிம் என்ற இன உணர்வு காணப்படுவதுதான் வேதனையான விஷயம். இதற்கும் காரணம் அரசியல் தலைமைகள் தான். இந்தியாவில் மிக உன்னதமான அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்... இருந்தார்கள். அவர்கள் தேசியத்துவத்தையும், தேசப்பற்றையும் அந்த மக்களிடம் விதைத்தார்கள் இன்று அது பெரும் விருட்சமாகி இந்தியாவுக்கு நிழலைக்கொடுக்கிறது ஆனால் ஈழத்துத் தலைவர்களோ இனவாதத்தையும், மதவெறியையும் விதைத்தார்கள் இன்று அதுவே நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது.

கடந்தவாரம் இலங்கை அமைச்சர் மஹிந்த பிரியதர்ஷன யாப்பா “இலங்கையில் இனத்தை, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை தடை செய்யும் மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது” எனக் கூறினார். யார் எத்தகைய வாதத்தை வைத்தாலும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த மண் இன்னாருக்குத் தான் உரியது என வரையறுக்க யாருக்கும் உரிமையில்லை. இது குறித்த இனத்துக்கே உரியது எனப் பறைசாற்றுவதிலும் அர்த்தமில்லை. அத்தகைய செயற்பாடுகள் வீண் குரோதங்களுக்கும், விரோதங்களுக்குமே வழிவகுக்கும். உண்மையிலேயே மண் யாருக்கும் சொந்தமில்லை.... நாம் தான் இந்த மண்ணுக்கு என்றோ சொந்தமாகப்போகின்றோம். இவ்விடத்தில் மகாபாரதத்தின் முடிவை நினைவு கூறலாம் - “மண்ணுக்கான போரிலே கடைசியில் மண்தான் எஞ்சியது” - ஆக கீழ்த்தனமான கயமைகளிலிருந்து விடுபட்டு மனிதனை மனிதன் மதிக்கும் உயர்ந்த நாகரீகத்தை கடைப்பிடுத்து அருமையான சமுதாயமாக நாங்கள் வாழ முயற்சிக்க வேண்டும். இந்த மதவாதமும், இனவெறியும் இலங்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டு “ஸ்ரீ லங்கன்” எனும் தேசப்பற்றுணர்வு விதைக்கப்பட்டு, சகோதரத்துவமும், புரிந்துணர்வும், மனிதாபிமானமும், மனிதநேயமும் உரமாக இடப்பட்டால் நாளைய இலங்கை உண்மையில் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையாக இருக்கும்.

Aug 10, 2009

சுயமிழந்து போகும் இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்

தலைப்பைப் படித்ததுமே சிலர் வாதாடத் தயார் ஆகலாம் - ஆனால் உண்மையைப் புரிந்து கொண்டால் எந்த விவாதத்திற்குமான தேவை இருக்காது. முதலில் இலங்கைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எத்தனை வீதம் சொந்தத்தயாரிப்பிலானது என்று பாருங்கள் - என் கணிப்புச் சரியென்றால் 40 விழுக்காடுக்கும் குறைவு. அதில் எத்தனை சுய அடையாம் தாங்கியவை - அதாவது சுயமான ஆக்கமாகவும், இலங்கையின் அடையாளத்தையுடையதும் எனப்பார்த்தால் அது மிகச்சொற்பமே, ஏற்கனவே அவ்வாறு சுய அடையாளத்துடன் இருந்த நிகழ்ச்சிகள் கூட ஓரங்கட்டப்பட்டு இந்திய பாதிப்பிலான நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள். இதற்கு கூறப்படும் நியாயம் “மக்கள் இரசனை”. மக்கள் இந்தியத் தன்மையான நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நேரடியாக இந்தியத் தமிழ் அலைவரிசைகளிலிருந்து நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்வதும் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக பிரதி பண்ணுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது - விளைவு இலங்கை நிகழ்ச்சிகளினது தனி அடையாளம் அழிக்கப்பட்டு, இந்தியத் தன்மை அதிகரித்துவிட்டது.

சில பேர் நினைக்கலாம் இது இலங்கைத் தமிழ் - இந்தியத் தமிழ் என நான் பிரிவினை பேசுவதாக - நிச்சயமாக இல்லை. ஒரு மொழியின் அழகு அதுதனிலிருக்கும் வெவ்வேறு பாணிகளிலும் தங்கியுள்ளது. ஒரே மொழியைப் பேசினாலும் ஒவ்வொரு பிரதேசமும் தங்களுக்கேயுரிய பாணியையும் நடையையும் கையாள்வதுதான் அந்த மொழியின் அழகை மட்டுமல்ல தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கர்களும், இங்கிலாந்தவர்களும் பேசுவது ஆங்கிலம் தான் ஆனால் அவரவர்க்கென பாணியிலும், நடையிலும், சொற்பிரயோகத்திலும் உரிய வேறுபாடுண்டு அது அந்த மொழிக்கு மேலும் அழகைச் சேர்க்கிறது. தமிழ்நாட்டை எடுத்துப்பாருங்கள் மதுரைத்தமிழ் வித்தியாசம், சென்னைத்தமிழ் வித்தியாசம், கொங்குநாட்டுத் தமிழ் வேறு - அவை தனித் தன்மையும் அழகும் உடையவை. மதுரைக்காரர்கள் யாருமே சென்னைத் தமிழ் பேச எத்தனிப்தில்லை, கொங்குதமிழ் பேசுபவர்கள் சென்னைத் தமிழ் பேச எத்தனிப்பதில்லை - தத்தமது தனித்துவத்தை நிலைநாட்டும் வல்லமையுடையவர்களாக அவர்கள் இருப்பதனால் இன்னும் அந்தத் தமிழ் நடைகள் வாழ்கின்றன. ஆனால் எங்கே போயிட்டு எங்கள் யாழ்ப்பாணத் தமிழ்? எங்கு மறைந்நது எங்கள் மட்டக்களப்புத் தமிழ்? இலங்கை வானொலிக்கே உரிய செந்தமிழ் உச்சரிப்பு எங்கு போய்விட்டது?

இன்று இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தங்கள் சுய அடையாளத்தை மறந்து, மறைத்து கஷ்டப்பட்டு இந்தியத் தொலைக்காட்சிப் பாணியிலான தமிழ் பேசுவதைக் காணக் கவலையாக இருக்கிறது. காலப்போக்கிலே இவர்களைப் பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு இலங்கைத் தமிழர்களின் தமிழே அழிந்துவிடும், இது இலங்கைத் தமிழர்களுக்கான பாதிப்பு மட்டுமல்ல தமிழ் மொழிக்கான பாதிப்பும் கூட. இவர்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தங்கள் மொழிநடையை மாற்றி, வேறு மொழி நடையைப் பயன்படுத்துகிறார்கள் என எனக்கும் புரியவேயில்லை, இதன் மூலம் தங்கள் மொழிநடையை மறப்பதுடன் அவர்கள் திக்குமுக்காடிப் பேசும் அந்த புதிய மொழிநடையையும் சரியாகப் பேசமால் அதையும் இம்சிக்கின்றார்கள்.

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் - நீங்கள் என்னதான் இந்தியப்பாணியிலான தமிழ் பேசி, அந்த நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணினாலும் அது ஒரு போதும் பெருமையைத் தரப்போவதில்லை மாறாக அது நகைப்புக்குரிய ஒன்றாகவே அமையும். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதற்காக நான் பிரித்தானியப் பாணியில் திக்குமுக்காடிப் பேசுவதால் என்ன பயன்? எனக்குத் தெரிந்த பாணியில் ஆங்கிலத்தைப் பேசுவது தான் சிறப்பு.

இது போல போலியாக, சுயத்தை மறைத்து இன்னொன்றைப் பிரதி பண்ணி வாழ்பவர்களைக் கண்டால் எனக்கு இந்தப் பாடல் தான் ஞாபகம் வந்தது -

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி -
தானும் அதுவாகப் பாவித்துத் - தன்
பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போலுமே
கல்லாதான் கற்ற கவி”

இவர்களோடெல்லாம் ஒப்பிடுகையில் இந்தியத்தொலைக்காட்சியிலும் செந்தமிழ் பேசும் “அப்துல் ஹமீத்” எவ்வளவு சிறப்பான, மேன்மையான தொகுப்பாளர்.

Aug 3, 2009

நிலவில் நிலம் வாங்கலாம்...


இன்று சனத்தொகை பெருகிவிட்டது. இந்தப் புவி இதைத் தாங்க முடியாத நிலைமையை அடைந்துகொண்டிருக்கிறது, விஞ்ஞானிகள் சந்திரனில் மற்றும் செவ்வாயில் குடியேறுவது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கையில் நிலவில் நிலங்களை உறுதி போட்டு (பட்டா போட்டு) விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆஹா... விலை மிக அதிகமாக இருக்குமோ என நீங்கள் நினைக்க வேண்டாம் ஒரு ஏக்கர் வெறும் டொலர் 18 முதல் கிடைக்கிறது. என்னடா இது இந்தப் புவியிலே 1000 டொலருக்கு நிலம் எத்தியோப்பியாவில் கூட வாங்க முடியாது அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம் - இது ஒரு சிறிய தர்க்கத்தின் அடிப்படையிலானது - நிலத்தை நீங்கள் 18 டொலருக்கு வாங்கலாம் ஆனால் அனுபவிக்க முடியுமா? என்ன குழப்பமாக இருக்கிறதா?


திங்கள் தூதரகம் என்ற ஒன்றை அமைத்து அதன் மூலம் சந்திரனின் நிலத்தை பொது மக்களிடையே இந்த விலைக்கு சில தனியார் நிறுவனங்கள் உறுதி போட்டு (பட்டா போட்டு) வழங்குகின்றன. இந்த உறுதிக்கும் (பட்டாவிற்கும்) எந்த அரசாங்கத்திற்கும் சம்பந்தமேயில்லை. உறுதி மட்டுமல்ல நீங்கள் செலுத்தும் தொகைக்கேற்ப உங்கள் நிலத்தின் எல்லை குறிக்கப்பட்ட வரைபடம், செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட உங்களுக்கு விற்கப்பட்ட நிலத்தின் படம் என வேறு ஆவணங்களையும் தருகிறார்கள். சரி இதேல்லாவற்றாலும் என்ன பயன் என நீங்கள் கேட்கலாம்? அதற்கும் அவர்கள் தயாரான பதிலை வைத்திருக்கிறார்கள் - அதாவது தனியார் துறை நிலவுக்குப் பயணிக்கும் முயற்சியே இது. இதன் மூலம் சேரும் பணத்தைக் கொண்டு நிலவுப் பணயத்தை தனியார் ரீதியில் சாத்தியமாக்கி உங்களை உங்கள் நிலவு நிலத்திற்கு அழைத்துச் செல்வோம் என்பது தான் இவர்கள் கூறும் கருத்து. இப்ப புரிகிறதா? சாதாரணமாக எங்கள் நாடுகளிலே புவி நிலத்தில் நடக்கும் பித்தலாட்ட வேலைதான் இதுவும் இதை உணர்த்தும் விதமாக இவர்கள் விளம்பரங்கள் மேற்கோள்ளும் போது ”நிலவின் சொந்தக்காரன் என கௌரவமாக சொல்லிக்கொள்ளுங்கள்” என போலி கௌரவத்தை அடிப்படையாகக் கொண்டே தில்லு முல்லைச் செய்கிறார்கள்.

சரி இவ்வளவு சொல்கிறார்களே இது சாத்தியமா எனச் சிந்தித்துப் பாருங்கள்... முதலாவது இவர்கள் தனியார் ரீதியில் நிலவுக்குச் செல்ல வேண்டும் - அது சாத்தியமாவதே கடினம் அடுத்ததாக இவர்கள் இந்த நிலங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அதை தம்மிடம் வாங்கியவருக்கு வழங்க வேண்டும் - இது கனவில் கூட நடக்க முடியாத விடயம். காரணம் இன்று அமெரிக்க, சீனா, ரஷ்யா, ஜப்பான் என விண்வெளியைக் கைப்பற்றுவதில் பெரும் குளிர் யுத்தமே நடக்கிறது - ஒரு வேளை சந்திரனிலோ, செவ்வாயிலோ வாழ்வது சாத்தியமானாலும் அங்கே நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை வந்து பெரும் உலக யுத்தமே..... சீ...சீ.... நிலவு யுத்தமே நடைபெறும் - இதற்கிடையில் சும்மா 18 டொலருக்கும் 30 டொலருக்கும் விற்பனை செய்யும் நிறுவனம் என்னத்தைச் செய்வது?

நீங்களும் நிலவில் காணி வாங்க விரும்பினால் இந்தத் தளங்களுக்குப் போங்கோ....

நிலவுத்தோப்புக்கள் - இந்தத் தளத்தில் செவ்வாய், வெள்ளி என்பனவற்றிலும் நிலம் வாங்க முடியும்.

ஆனால் இலங்கையர்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.... எல்லாம் சாதிக்கக்கூடிய எங்கள் நாட்டின் தலைவர் நிலவென்ன... நினைத்தால் யுரேனஸ், புளுட்டோ என எந்தக் கோளிலும் எம்மைக் கொண்டு போய்ச்சேர்ப்பார்... தெரியும் தானே மக்களைக் “கொண்டு போய்ச் சேர்ப்பதில்” அவர மிஞ்ச ஆளில்லை... !