Jul 3, 2009

காலங்கடந்த ஞானம்

அண்மையிலே ரவி அவர்களின் “ரவி ட்ரீமஸ்” வலைப்பதிவில் பழைய பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன் ”தமிழில் கையெழுத்துப் போடுதல்” பற்றி அருமையாக எழுதியிருந்தார். தமிழில் கையெழுத்து - நான் தமிழன் அப்படியிருக்க கையெழுத்து மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? - அந்தப் பதிவின் தாக்கம் என்னை இவ்வாறெல்லாம் சிந்திக்கவைத்தது. ஒரு வேளை பலவருடம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்ததன் விளைவோ? ”அடிமையின் மோகமோ”? இல்லை அறியாமையின் நிலையோ? - தமிழன் இன்று தமிழைப் பேசக் கூச்சப்பட்டுக்கொண்டடிருக்கின்றான். பிரெஞ்சுக்காரனும், இத்தாலியனும் தங்கள் மொழியை மறந்து ஆங்கிலத்தைக் காதலிக்கவில்லையே? ஏன் தமிழனாய்ப்பிறந்து விட்ட நாம் மட்டும் சுயமிழந்து வாழ்கின்றோம்? - உணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகள் காட்டாறாய் என் சிந்தையில் பாய்கிறது.


சிர வாரங்களுக்கு முன் கனடாவிலிருந்து எனது சித்தப்பா தொலைபேசியில் என்னோடு பேசிக்கொண்டு - இல்லை, இல்லை - விவாதித்துக் கொண்டிருந்தார். நான் தமிழ், தமிழன் பற்றி உணர்ச்சி வசமாகப் பேசிக் கொண்டிருந்தேன், திடீரென ”தமிழ் - தமிழ் என்கிறாய் தமிழிலேயா கையொப்பம் இடுகிறாய்?” என்று கேட்டார் - ஒரு நொடி தாமதித்த நான் விவாதத்தில் தோல்வியடைய மறுத்து ”ஆம்” எனப் பதிலளித்துவிட்டேன் - அவரும் ”நல்லது - ஆனால் எத்தனை தமிழ்ர்கள் அப்படி விரும்பிச் செய்கிறார்கள்?” என்க கேட்டு விட்டு அத்தோடு வேறும் சில விவாதங்களின் பின் தொலைபேசியழைப்பு முற்றிட்டு. அன்று நான் சொன்ன அந்தப் பொய் “என்னை நானே ஏமாற்றிவிட்டேனா?” என எண்ணத் தோன்றியது.


தமிழனென இப்பாரதனில் பிறந்து தமிழை மறப்பேனானால் தமிழன் என்பதன் அர்த்தம் என்ன? 20 வயதை எட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஞானம் பிறந்தது. எத்தனை மேடைகளில் ”தமிழ் - தமிழ்” என முழங்கியிருப்பேன், எத்தனை தமிழ் நூல்களைப் படித்திருப்பேன், உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகவும் எடுத்துக்கொண்டேன், ஆனால் இந்த சிறிய வி்டயத்தை ஏன் நான் இவ்வளவு நாளாக கவனிக்கவில்லை? பதிலில்லை என்னிடம். இன்று ஒரு உணர்வு என்னை உறுதியான முடிவு எடுக்கத் தூண்டியது - இன்று முதலட தமிழிலேயே கையொப்பம் இடுவேன் - இதில் எந்த இனவெறியோ, மொழிவெறியோ இல்லை. என் மொழியை நான் மதிக்காவிட்டால் மற்றவனா வந்து சீராட்டிப் பாராட்டுவான்?