
யுத்தம் ஓய்ந்த நிலையில் இலங்கையில் சூடான செய்திகள் பெரிதாக இக்காலகட்டத்தில் வருவதில்லை - புளித்துப் போன ஒரே முகங்களைப் பத்திரிகையிலும் ஏனைய ஊடகங்களிலும் மட்டுமல்ல பாதையோரமெல்லாம் கண்டு கண்டு எரிச்சல்தான் அதிகரிக்கிறது. இது இவ்வாறு இருக்க இலங்கையை ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறது இந்தப்பா
டசாலை மாணவியின் தற்கொலை முயற்சி.
இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதேயான மாணவி ஜீலை மாதம் 22ம் திகதி
பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டுவந்ததற்காக பாடசாலை மாணவ தலைவிகளால் கண்டிக்கப்பட்டு அதிபர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வேளை அம் மாணவி மலசலகூடத்திறகுச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார். 15-20 நிமிடமாகியும் அவர் திரும்பாதது கண்டு மாணவதலைவிகளும் ஆசிரியர்களும் மலசலகூட்த்திற்குச் சென்று
பார்த்தபோது அங்கு அம்மாணவி தனது கழுத்துப்பட்டியைப் பயன்படுத்தித் தூக்கிட்டுத் தொங்கியபடி காணப்பட்டார். உடனே அம்மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டி போதும் உடற்பாகங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தார். இநதத் துயர சம்பவம் இலங்கை மாணவர்களை மட்டுமல்ல அரசாங்கத்தையும் கொஞ்சம் தடுமாறச் செய்திருக்கிறது.
மேலே நான் தந்தது பத்திரிகையிலும் வேறு ஊடகங்களிலும் வந்த செய்தியின் தொகுப்பு. இது தொடர்பிலான இன்னும் சில பல விஷயங்களை பாடசாலை மட்டத்தில் இருப்பதால் வதந்திகளாகவும், கதைகளாகவும் நாம் அறிந்து கொண்டோம் - ஆனால் அவையெல்லாம் இங்கு பகிர்வது நியாமல்ல முறையுமல்ல - ஆயினும் இது நடந்த பின்பு இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனியார் பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதையும் கொண்டுவருவதையும் தடை செய்தது (அரசாங்க பாடசாலைகளில் முன்னமிருந்தே இவ்விதியுண்டு). அதோடு மட்டும் நின்று விடாமல் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இலங்கையிலிருந்து இயங்கும் “வயது வந்தோருக்கான” தளங்களைத் தடைசெய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த
இரண்டு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு ஒருங்கிணைத்துப் பார்க்கையிலே அச்சம்பவத்தை உங்களால் முழுமையாக ஊகிக்க முடியும் எனக் கருதுகிறேன்.

இலங்கை அரசாங்கம் எடுத்த உருப்படியான முடிவுகளில் ஒன்று இலங்கையிலிருந்தான “நீலத் தளங்களை” தடைசெய்தது. இதற்குப் பிரதான காரணம் வெளிநாட்டுத் தளங்களைப் போல இத்தளங்களில் “தொழில் ரீதியாக” நடிக்கப்பட்டு வெளியடப்படும் படங்கள் இருப்பதில்
லை மாறாக திருட்டுத்தனமாகவும், முறைகேடாகவும் எடுக்கப்படும் பட்ங்களும் வீடியோக்களுமே அதிகமுண்டு - இதனால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பெண்களும், சிறுவர்களும் எக்கச்சக்கம். அத்தகைய ஈனத்தனமான தளங்களைத் தடைசெய்தது மிகச் சிறந்த முடிவு.

ஆனால் கைத்தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்தது சளிப்பிடித்ததற்கு மூக்கை வெட்டிய கதைதான். கைத்தொலைபேசி தடைக்கு மூல காரணமே அதன் மூலம் அநாவசிய விடயங்கள் பரப்பப்படுவதும், தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாகும் இதற்காக பல வகைகளில் பயனுள்ள அந்தச் சாதனத்தைத் தடை செய்வதில் அர்த்தமில்லை மாறாக அநாவசிய விடங்களுக்கு அது பயன்படுத்தப்படாமிலிருக்கும் படி சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சில பலமான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக இலங்கையிலிருந்து மட்டும் இயங்கும் “நீலத் தளங்களைத்” தடைசெய்தது போல (அல்லது வெளிறாட்டிலிருந்து இயங்கும் “தமிழ் நெட்டைத்” தடைசெய்தது போல) சகல “நீலத்தளங்களையும்” தடைசெய்யலாம். மேலும் உள்நாட்டில் அநாவசியச் செயல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் இவற்றின் மூலம் இதைத் தடுப்பதை விட்டு விட்டு கைத்தொலைபேசிப் பாவனையைத் தடுப்பதில் பயனில்லை.
இன்னும் ஒரு விடயத்தை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பாலியல் ரீதியான முறைகேடுகளுக்குக் காரணம் பாலியல் தொடர்பான முறையான புரிந்துணர்வின்மையே, ஆகவே அரசாங்கம் பாலியல் கல்வி தொடர்பான அறிவை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்து இத்தகைய முறைகேடுகளிலிருந்து பெருமளவுக்கு நாளைய சமுதாயத்தைப் பாதுகாக்கலாம். மாறாக இன்னும் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுண) அல்லது ஹெல உறுமய போல பிற்போக்கு வாதம் பேசிக் கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை இன்னும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
மாணவர்களுக்கு ஒரு கருத்து - தவறு என்பது தவறிச் செய்வது, அல்லது அறியாமையினால் விளைவது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான், அந்தக்கற்றல் அதிகமாக தவறுவிடுவதன் மூலமே கிடைக்கிறது. ஆக உங்கள் அறியாமையால் செய்யும் தவறுக்காக வருந்துங்கள் அதோடு திருந்துங்கள் - தயவு செய்து தண்டனையை நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டியவரே அல்ல. தப்பு என்பது தான் தெரிந்தே செய்வது - ஆனால் எனக்குத் தெரியும் மாணவர்கள் (நாங்கள்) எதையுமு் அதிகம் தெரிந்து செய்வதில்லை - அடிப்படையில் அதற்கான பக்குவம் எமக்கில்லை ஆக நாம் விடுகிற சின்னச் சின்னத் தவறுக்ளுக்காக எம்மை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாணவப் பருவம் என்பது எல்லாவிதமான அனுபவங்களையும் உங்களுக்குத் தரக்கூடியது. இனிப்பானவற்றைச் சுவையுங்கள் கசப்பானவற்றை வாயில் போட்டுக்கொண்டுவிட்டால் கூடப் பயப்படாமல் துப்பிவிடுங்கள் - இதற்காக எல்லாம் வருத்தப்படத்தேவையில்லை. மனித வாழ்வின் சுவைகளை உணரும் பருவம் இது - சுவைத்துப்பாருங்கள்...
இறுதியாக இந்த அருமையான வரிகள் உங்களுக்காக -
“தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் -
தப்பு செய்தவன் வருந்தியாகணும்”
மேலேயுள்ள வண்ணந்தீட்டப்பட்ட பெண் மாணவியின் படத்திற்கும் செய்தியில் குறிப்பிட்ட எந்நபருக்கும் சம்பந்தமேதும் இல்லை. அது இணையித்திலிருற்து பெறுப்பட்டவெறும் வண்ணப் படம் மட்டுந்தான்.