Jul 7, 2009

கலங்கடிக்கும் வானொலிச் சேவைகள்


நான் விரும்பி வானொலி கேட்டே பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் தற்செயலாக வாகனத்திலோ, தேநீர் கடையிலோ அல்லது வேறெங்காவதோ கேட்டால் தான் உண்டு. நானாக விரும்பி வானொலியைக் கேட்பதே இல்லை - யாராவது விரும்பியே தலைவலியைப் பெற்றுக்கொள்வார்களா என்ன?

உண்மையிலேயே வானொலிச் சேவையென்பது மக்களை மகிழ்விப்பதாகவே இருக்கவேண்டும் ஆனால் ஏதோ ஒரு குழப்பத்தில் இன்று அது அலட்டல் அரங்கமாகிவட்டது. அறிவிப்பு என்பது ஒரு கலை என்பதிலிருந்து தேய்ந்து அலட்டுதலாகிவிட்டது இன்றைய தமிழ் வானொலிகளில். குறிப்பாக இலங்கைத் தமிழ் வானொலிகளை எடுத்துக்கொண்டீர்களானால் எங்களுக்கேயுரிய எங்கள் தமிழ் இந்த வானொலிகளில் இல்லாமல் போய்விட்டது. இது வெறும் தனியார் வானொலிகளில் மட்டுமல்ல - ஒரு காலத்தில் இந்தியாவிலேயும் விரும்பிக் கேட்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபனச் சேவை கூட இன்று ”எஃப். எம்” சாயலுக்கு மாறினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

சாதாரணமாக நல்ல ஒலிபரப்பாளர் என்றால் அருமையான குரலும் நல்ல ஆளுமையுடன் கூடிய பேச்சும் விரிவான அறிவும் இருக்கவேண்டும். அன்றைய ஒலிபரப்பாளர்கள் அப்படியிருந்தார்கள். இன்றும் கேட்கக் கேட்கத் திகட்டாத குரல் பி.எச.அப்துல் ஹமீதினுடையது - அவர் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூட நல்ல தமிழில் நடத்துகிறார். அன்றைய ஒலிபரப்பாளர்களுக்கு அது சாத்தியமாயிற்று ஏனெனில் மக்களின் இரசனையை அவர்களே தீர்மானித்தார்கள் அவர்களிடம் அந்தளவுக்கு ஆளுமை இருந்தது. ஆனால் இன்றோ மக்களது இரசனைக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் அப்பட்டமான கேடு கெட்ட வியாபாரமாக்கிவிட்டார்கள். இதை நான் புரிந்து கொண்டது இலங்கையின் பிரபல தனியார் தமிழ் ”எஃப். எம்” பொறுப்பாளர் ஒருவருடன் உரையாடிய போதேயாகும். அவர் எனது நல்ல நண்பர், அடிக்கடி நாங்கள் பல விடயங்களை விவாதித்துக்கொளவது வழக்கம். ஒருமுறை அவரது வானொலி தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தபோது நான் கேட்டேன் ”நீங்கள் எவ்வளவு தூரம் சிறப்பாகவும், ஆளுமையுடனும் சிந்திக்கிறீர்கள் ஆனால் ஏன் இந்தப் பயனற்ற அலட்டல் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நடத்துகிறீர்கள்?” அதற்கு அவர் தந்த பதில் முக்கியமானது ”நாங்கள் என்ன செய்ய?. தரமான நிகழ்ச்சிகளைத் தந்தால் மக்கள் கேட்பதில்லை - வெறும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளுக்காக நாம் நிகழ்ச்சி நடத்த முடியுமா? அவ்வாறு யாரும் கேட்காவிட்டால் நிகழ்ச்சியின் “ரேட்டிங்” குறையும் அப்படிக் குறைந்தால் விளம்பரங்கள் கிடைக்காது - வயித்துப் பிழைப்பும் நடக்காது” என்றார். உடனே நான் ”ரேட்டிங்கை” தீர்மானிப்பது யார்? என்று கேட்டதற்கு ரேட்டிங்கை சில தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. ஒரு சிறப்பு மீற்றர் பொருத்தப்பட் வானொலிப் பெட்டியை எழுமாற்றாகத் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு வழங்குவார்கள், அவர்கள் குறிப்பாக நடுத்தர அல்லது அதற்குக் கீழான வரையறைக்குட்ப பட்ட மக்களாகவே அதிகளவில் இருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்தில் எந்த அலைவரிசைளைக் கேட்கின்றார்கள் என்பது அந்த மீற்றரில் பதியப்படும் அதன் படி எல்லோரும் அதிகம் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சி அதிக “ரேட்டிங்” பெறும் யாரும் கேட்காவிட்டால் “ரேட்டிங்” குறையும் ஆக அந்த மடையன் (அவர் சொன்ன அதே வார்த்தை) எதைக் கேட்கிறானோ அதைத் தான் நாங்கள் போ் வேண்டும் - அப்பதான் பிழைக்கலாம்” - அவர் சொன்னவை நம்பக் கூடியதாகத் தான் இருக்கிறது ஏனெனில் இனறைய அநேகமான ஊடக நிறுவனங்கள் இலாபத்தைப் பார்க்கின்றனவேயன்றி தரத்திற் கவனஞ் செலுத்துவதில்லை. மேற்கூறிய அந்தவானொலிப் பொறுப்பாளரே இந்த பயனற்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் விருப்பமற்றவர் ஆனால் வேறுவழியின்றி செய்து வருகிறார்.

இரசிகர்களது இரசனையை ஒலிபரப்பாளர்கள் தீர்மானிக்கும் காலம் போய் அந்த வானொலி ஒலிபரப்பாளரின் கருத்துப்படி யாரோ ஒரு மடையன் தீர்மானிக்கும் அளவுக்கு இந்த “கோபரேட்” நிறுவனங்கள் எங்களை மொழியையும், இரசனையையும் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. அதனால் இவர்களும் அலட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அது சரி என்றை மறந்துவிட்டேனே இன்று இலங்கையில் தமிழ் வானொலித் துறையில் அதிகமிருப்பவர்கள் நானறிந்த மட்டில் உயர் தரப் பரீட்சையில் கூட சிறப்பாக சித்தியடைய முடியாதவர்களே - சும்மா அலட்டுவதற்கு முதுமாணிப் பட்டமா தேவை?

நான் இதை எழுதுவது யாரையும் தாக்கவோ புண்படத்தவோ அல்ல மாறாக இன்றைய தமிழனது இழிவு நிலையை எடுத்துக்காட்ட - எத்தனையோபேர் இந்த மொழியையும் கலாசாரத்தையும் கட்டிக்காக்க பலபாடுகள் படும் வேளையில் அற்பத்தனமாக நாம் சில பயனற்ற காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம் என்ற ஆதங்கம் தான் இதை எழுத வைத்தது. வாழ்ககைக்கு சினிமா பார்க்கலாம் ஆனால் சினிமாவே வாழ்கையாகிவிடக்கூடாது - சினிமாவை மையப்படுத்தி எம் தமிழினம் வாழக் கற்றுக்கொண்டதன் வினளவுதான் இன்று நாங்கள் உணர்ச்சியும், உயர்ச்சியுமற்ற ஒரு இனக்குழுவாக இருக்கின்றோம்.

இந்த வேளையில் உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் எம் தமிழின் உயர்ச்சிக்காகப் பாடுபடும் நல்லுள்ளங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

பி.கு. - இலங்கையின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி நடத்தும் விருது பெற்ற பெண் அறிவிப்பாளர் ஒருவர் மகாபாரதமும், இராமாயணமும் இதிகாசங்களல்ல எனக் கூறிக் குழப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.