Jul 22, 2009

பெருமை மிகு வேத்தியனாய்...

கொழும்பு மாநகரின், கொழுத்த வீதிகள்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிர் வீசும் மரங்கள்
சுற்றும் வீதியெல்லாம் மாபெரும் நிலையங்கள்
எல்லாவற்றிற்கும் நடுவில் இதயமாய் ஒரு ராஜ்ஜியம்….
மாபெரும் சாம்ராஜ்ஜியம்…. வேத்தியக் கல்லூரி….


மணி மகுடந் தரித்த பழம் பெருமையின் வதனம்
தூர இருந்து பார்ப்பவர்க்கெல்லாம் கோயிற் கோபுரமாய்…
அந்த வதனம் கூறும் ‘கற்க அன்றேல் விலகுக’
வளரும் தலைவர்களின் ஆதர்ஷ வரிகளாய்…..
திருவதனம் மிளிரும் எங்கள் வேத்தியத் தாய்…..

வெள்ளியின் அழகில், வேத்திய முத்திரையின் பெருமையில்
வாயிலில் வரவேற்கிறது ‘போக் கேட்ஸ்’ - பூரிப்புடன்…
வருக வருகவென தலையசைத்து, குழலிசை பயின்று
வரவேற்கும் பச்சைப் பசேல் மூங்கில்கள்….
வந்தாரை வரவேற்கும் பண்பாடு எங்கள் தாயின் பெருமை…

பச்சைப் புல்வெளியும், அழகிய பூவனமும் -
இனிய மரநிழல்களும் தரும் பருத்த இனிமையிலே…
பல்லாண்டுப் பழமை கூறும் அரிய கல்வெட்டின் அணைப்பிலே
வேத்தியச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் வாயிற் கோபுரங்கள்….
பல நன்மக்களைப் பெற்று பெரிதுவந்த பெருமையினால்…

தன் மக்களைச் சான்றோர்களாய்க் கண்ட எம் தாய்
மண்டபம் சூழ அவர்கள் முகங்களையும், பெயர்களையுங்கொண்டு
பெருமை கொள்கிறாள்….. நாமும் பூரிப்படைகிறோம்!
ஆயிரமாயிரம் சான்றோர்களை உருவாக்கிய தாய் பெருமையடைகிறாள்…
அந்தத் தாயின் மடியில் தவழ்வதால் நாமும் உயர்வு பெறுகிறோம்…

ஐயிரண்டு திங்கள் எமைச்சுமந்து காக்கிறாள் ஒருதாய்….
பதின்மூன்று வருடங்கள் எமைச்சுமந்து உய்விக்கிறாள் இத்தாய்…
கல்வியாகட்டும், விளையாட்டாகட்டும், கலையாகட்டும், வேறு திறனுமாகட்டும்
வேத்தியத்தாய் தன் குழந்தைக்கு ஊட்டாத செல்வமென்றொன்றுண்டோ?
அதனாலன்றோ அவள் நன் மக்களையே இப்பாரினுக்குத் தருகிறாள்….

அவள் தந்த அமுதமெல்லாம் சுவைத்த களைப்பொடு, அந்தக் களிப்பொடு
நூற்றைம்பத்தாறு திங்கள் கடந்தாயிற்று, காலமும் சொல்லாமலே ஓடிற்று…
தாய் எமைக்காத்து, எமக்கறிவு+ட்டி வளர்த்த காலம் முடிந்து
நாம் நாமாக வாழவேண்டிய காலம் வந்து விட்டது….
தாயைப் பிரியும் சோகம், நோயிலும் கொடியதன்றோ?

எமை வளர்த்து, பெருமை தந்து, வாழ வழிசமைத்தல் தாயின் கடன்
வாழ்வாங்கு வாழ்ந்து பெருமைபெற்று தாயைக் கௌரவித்தல் எம்கடன்
அந்த ஆயிரமாயிரம் சான்றோர்களுடன் நாமும் எம் தாய்க்குப்
பெருமை சேர்க்கும் காலம் வந்துவிட்டது - அதுவே மகன் தாய்க்காற்றும் உதவி!

பெருமை மிகு வேத்தியனாய், வேத்திய நண்பர்களுடன் விடைபெறுகிறேன்….