டாக்டர்.அவர் - டாக்டர் இவர் என கண்டவன் போனவனெல்லாம் இப்போது பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக்கொண்டு அலைகிறார்கள். அப்பிடியென்றால் டாக்டர் பட்டம் பெறுவது அவ்வளவு இலகுவானதா என்று நாம் நினைக்கலாம் - உண்மையான கலாநிதிப்பட்டம் பெறுவது மெத்தக் கடினம் ஆனால் கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தள்ளுவண்டிக்கடையில் கச்சான் வாங்கிச் சாப்பிடுவது போல மிக இலகுவானது.
உலகத்திலேயே டாக்டர் பட்டம் போட்டுக்கொள்பவர்கள் ஒன்றில் வைத்தியர்களாக இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்து ஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றவர்களாக இருக்க வேண்டும் - இது தான் நியதி ஆனால் சில “படிக்காத மேதைகளை” கெளரவிக்க அவ்வப்போது பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வந்தன - வருகின்றன ஆனால் இன்றைய கேவலமான நிலை என்ன தெரியுமா கண்டவன் போனவனெல்லாம் இப்படி கௌரவ டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொண்டு அந்தப் பட்டத்தின் மதிப்பையே கெடுத்துவிட்டார்கள்.
இந்தியாவின் நிலை வேறு - அங்கே நடிகர்களும் அரசியல்வாதிகளும் பல்கலைக்கழங்களுடாக கௌரவ டாக்டர்கள் ஆகின்றனர். எமது இலங்கையின் நிலையைப் பார்ப்போம். இலங்கையில் பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவது மிக அரிது (அண்மையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது). அப்படியானால் இலங்கையில் இத்தனை தொகைப்பேர் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி? - கொஞ்சம் ஆழமாய் அலசிப் பார்த்தேன் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பது ஒரு கராத்தேச் சங்கம். சர்வதேச போர்க்லைப் பல்லைக்கழகம் என ஜப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறர்கள். இதனால் இவர்கள் கராத்தே துறையில் சிறந்தவர்களுக்குத்தான் வழங்குகிறார்கள் என நீங்கள் எண்ணிவிட வேண்டாம், இதன் மூலம் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எது வித சம்பந்தமுமில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக தேடிப்பார்த்ததில் ஒரு டாக்டர் பட்டத்திற்கு ரூபாய்.20000 முதல் அவரவர் தகுதிக்கேற்ப வசூலிக்கிறார்கள். காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் தயார் - வருடத்திற்கொருமுறை ஜப்பானிலிருந்தொருவரை அழைத்து இங்கே பட்டமளிப்பு விழா வேறு நடாத்துகிறார்கள், அதைப் பத்திரிகைகளில் வேறு வெளியிடுகிறார்கள். சரி இதெல்லாம் உண்மையில் படித்தவர்களுக்குத் தெரியாதா? என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இதிலுள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் சில முக்கிய பதவிகளில், இருப்பிடங்களில் உள்ளவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வைத்திருக்கிறார்கள் ஆக இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, மேலும் சட்ட ரீதியாகவும் இதனை அணுகுவது கடினம் காரணம் ஒரு ஜப்பானியப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதாகவே அது அமையும் அதில் சட்டரீதியாகப் பிழை காண முடியாது. அது சரி, இவர்கள் டாக்டர் பட்டம் மட்டுமா வழங்குகிறார்கள்? பேராசிரியர் பட்டமும், கௌரவ தூதர் பட்டமும் (அதாவது தமது பெயருக்கு மன்னால் Hon. என இட்டுக்கொளள முடியும்) வழங்குகிறார்கள். பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக உயர் பதவியிலுள்ளவர்களும் பாவிக்க வேண்டிய கௌரவ. எனும் பதத்தை இவர்கள் தமக்குதட தாமே சூட்டிக்கொள்ளும் கேவலமும் நடக்கிறது. இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கௌரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பட்டமது அதை ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் கூட இங்பே போட்டுக்கொள்கிறார்கள்.
அடுத்த எனது தேடல் இந்தப் பட்டம் பெற்றுக்கொண்டவர்கள் பக்கம் போனது, கொஞ்சம் அலசிப் பார்த்தேன் - முதலாவதாக எனது தேடலில் நான் கண்டத ஒரு இரண்டாம் நிலைப் பள்ளி ஆசிரியரை. அவர் ஒரு பட்டதாரி கூட இல்லை மாறாக பயிற்றப்பட்ட ஆசிரியர் அவர் டாக்டர்.பேராசிரியர் மற்றும் கௌரவ எனும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக நான் கண்டது ஒரு தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் கணணி கற்பிக்கும் ஒருவரை. அவரது விளம்பரம் பத்திரிகையில் வந்திருந்தது அதில் அவரது பெயருக்கு முன்னால் கௌரவ. டாக்டர் எனப் போடப்பட்டிருந்தது, உடனே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பேசிப்பார்த்தேன், தடுமாறிவிட்டார் - உடனே நான் தாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றீர்கள் எனக் கேட்ட போது பதிலேதும் இல்லை தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது - பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து அலசியதில் அவர் உயர்தரம் கூட சித்தியடையவில்லை என்பது அதிர்ச்சித் தகவலாக வந்தது. அடுத்ததாக இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் - குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன் என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
இதெல்லாம் சரி - இதை நான் எழுதவும் இது தொடர்பில் தேடவும் என்னைத் தூண்டிய சம்பவம் என்ன தெரியுமா? எனக்கு நண்பர் ஒருவரின் உறவினா ஒருவரை அண்மையில் சந்தித்தேன் அவர் இங்கிலாந்தில் மனோ த்துவத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் அதைவிட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொ்டர்பிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர் - அவரோடு பலதரப்பட்ட விடயங்களைப் பேசி விவாதித்து விட்டு விரடைபெறும் வேளை அவரது தொடர்பு அட்டையை என்னிடம் தந்தார் அதில் அவரது பெயரும் அதன் பின்னால் 5-6 பட்டங்களும் இடம்பெற்றிருந்தன அதில் 2 கலாநிதிப் பட்டங்களும் உள்ளடக்கம். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் ஏன் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளவில்லை எனக் கேட்டேன் அதற்கு அவர் பிறகு எனக்கும் உங்கள் அமைச்சருக்கும் (இவ்வமைச்சரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) என்ன வித்தியாசம்? நான் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளப் படிக்கவில்லை, எனது திறனை மெருகேற்றப் படித்தேன் என்றார். அவர் அன்று சொன்ன விடயம் என்னை மிகவும் உறுத்திற்று - அடடா உண்மையாப் படித்து பட்டம் பெற்றவனே இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிற அளவுக்கு இந்த போலி (அதாவது கௌரவ) டாக்டர்கள் செய்து விட்டார்களே என எண்ணி வருத்தம் கொண்டேன் அதன் பின்பு தேடிய தகவல்கள் தாம் இவை.
“என்று தணியும் இந்த மடமையின் மோகம்?”