Jul 8, 2009

கூட்டணிகள் என்ற சாபக்கேடு

“கூட்டணிப் பிளவுகள்”, “கட்சித் தாவல்கள்” இவையெல்லாம் நாம் அதிகம் அறியாத விடயங்களல்ல, மாறாக தினந்தினம் பார்த்துக்கொணடிருக்கும் “கூத்துக்களே!”. தனிக்கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியா நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பயன்படுத்தும் “மாத்திரையே” கூட்டணி. காசு, சொகுசு, அமைச்சுப் பதவிகள். இதர சலுகைகளைப் பெறறுக்கொண்டு சிறு சிறு கட்சிகள் கூட ஆட்சிக்காதரவளிக்கின்றன. விளைவு “உறுதியற்ற அரசாங்கம்”.

சமகால இலங்கை, இந்திய அரசாங்கங்களின் நிலையைப் பார்த்தால் இந்த விளைவு புரியும். இலங்கை அரசாங்கமோ ஏறத்தாழ பாராளுமன்றத்தின் பாதியளவுக்கு அமைச்சர்களை மற்றும் பிரதி அமைச்சர்களை நியமித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சத்தியமாக இலங்கையில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றெனக்குத் தெரியாது - சில வேளைகளில் ஒரே துறைக்குப் பல அமைச்சர்கள் உண்டு - உதாரணமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சைக் குறிப்பிடலாம். இந்த “மெகா” அமைச்சர்களுக்கான செலவே பல நூறு கோடிகள். இந்தியாவிலோ “கோடிகளைக் கொட்டிக்கொடுத்து” ஆட்சியைக் காப்பாற்றியது காங்கிரஸ். இவையெல்லாம் ஜனநாயகத்திற்கெதிரான அநியாயச்செயல்கள்.

மேலும் கூட்டணி அரசாங்கங்களின் உறுதி சந்தேகத்திற்குரியது. அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையே இதற்குச்சாட்சி. இடதுசாரிகளின் ஆதரவு பின்வாங்கப்பட்டதன் பின் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் பட்டபாடு ஒரு தேர்தலைச் சந்தித்ததற்கு ஒப்பானது. இலங்கையிலோ கதை வேற - இலங்கை அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைச்சர் பதவி கொடுத்து வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது இதனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்லாது ஏனைய சிறிய கட்சிகளும் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.


சித்தாந்த ரீதியாகப கூட்டணி முறையில் பல சிக்கல்கள் உண்டு. முதலாவது கொள்கை. இரண்டு முரண்பட்ட கொள்கைகளையுடைய கட்சிகள் “சலுகைகள்” காரணமாகக் கூட்டணி அமைக்கும் போது பின்னர் வரக்கூடிய கொள்ளை முரண்பாடுகள் பற்றி சிந்திப்பதில்லை. இன்று இந்தியாவிலும், இலங்கையிலு் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் கொள்கை(ளை!) வேறுபாடுகளே பிரதான காரணிகளாயின. காங்கிஸின் “அமெரிக்கப்” போக்கு முதலாளித்துவத்தை எதிர்க்கும் இடதுசாரிகளிடையே காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கலாம், அதே போல இலங்கையில் அரசாங்கத்தின் யுத்தந்தவிர்ந்த ஏனைய போக்குகள் ஜே.வி.பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் இவையெல்லாவறறையும் கூட்டணியமைக்க முன்பே இவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். காலச்சூழலுக்கு தகுந்தாற்போல தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், சலுகைகளுக்குத் தக்கதாக வளைந்து கொடுத்துக் கொண்டும் இவர்கள் நடத்து நாடகம் அரசியலின் சாபக்கேடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரு தனியான கட்சி, மக்கள் விரும்பத்தக்க கொள்கையோடும் நடத்தையோடும் செயற்படுமாயின், அவை எவ்வகைக்கூட்டணித் தேவையுமின்றி ஆட்சியமைக்கும். ஆனால் இன்றைய கட்சிகள் மக்களால் விரும்பப்படாத மாறாக வெறுக்கப்படுவனவாக மாறிக்கொண்டு வருவதே கட்சி அரசியலின் தோல்வியை இந்த 3ம் உலக நாடுகளில் நிரூபித்து வருகிறது.

இந்திய தேர்தல் முறைமையின்படி கட்சிச் செல்வாக்கில்லாமலேயே, மக்களிடையே செல்வாக்கிருப்பின் தேர்தலில் வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் மிக அதிகம். ஆனால் அப்படிொரு தேசத்திலும் இந்தக் கட்சிகளின் கபட நாடகம் அதியளவில் அரங்கேறிவருவது கவலைக்குரியது.

இலங்கையில் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் இடம்பெறுவதால் கட்சிமுறை அவசியமாகிறது. விகிதசமத் தேர்தல் முறையினால் ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பது சாத்தியமில்லை. 1978 யாப்பின் படி நடந்த எத்தேர்தலிலும் தனிக்கட்சிொன்று அதிக பெரும்பான்னை பெற்றதில்லை, ஆகவே ஆட்சியமைப்பில் கூட்டணி அவசியமாகிறது. எனினும் இந்த கூட்டணித் தத்துவம் இன்று நாட்டையே கலங்கடிக்கும் “கூத்தாக” மாறியிருப்பது வருந்தத்தக்கது.

அரசியல் பயின்ற, அதன் புனிதம் உணர்ந்த அரசியல்வாதிகள் வரும் வரை இதுபோன்ற சாபக்கேடுகள் தவிர்க்க முடியாதவை! அரசியல் வாதிகளைப் மட்டும் குறை சொல்விப் பயனில்லை - இன்னும் இன்னும் அவர்களுக்கு வாக்கிட்டுக்கொண்டிருக்கும் மக்கள் மேல் தான் முதற்பிழை - அது பற்றி வேறோர் பதிவில்.