Jul 16, 2009

தமில்...

தவறு விடவில்லை நான்….
நிச்சயம்…அது…நிச்சயம்!
பக்தியுடனேயே தமிழ் கற்றேன்…
விடுவேனா தவறு…அதில்…

கணணித் தட்டச்சுப் பிழையுமல்ல…
நானறிவேன்… உண்மை!
ஒருமுறைக்கிருமுறை சரி பார்த்ததல்லவா…
வரவே வராது பிழை….

எல்லாம் சரியாயிருக்க…
தமிழ் - தமிலாகிய கதை தானென்ன?
இது இன்றைய யதாhத்தத்தின் விம்பமோ?
இல்லை…இலகுவாக - காலஞ்செய்த கோலமோ?

கேள்விக்கு மேல் கேள்விகள்….
பாவம் நான்… எனக்குப் பதில்தான் தெரியவில்லை…
ஏனெனில் நான் படிக்கும் “சிலபசில்”…
இந்தக் கேள்வி;க்கெல்லாம் பதிலில்லை…

இதற்குப் பதில் தேட நேரமில்லை என்னிடம்…
நேரமிருந்தும் ஆர்வமில்லைப் பலரிடம்…
ஆனால் சாட்டு மட்டும் உண்டு எம்மிடம்…
“ஒரு “ல” தானே வித்தியாசம்... - எல்லாம் ஒன்றுதான்”

தமிழ், தமிலாகி விட்டால் பரவாயில்லை…
மொழி, பண்பாடு, பற்றி எமக்கென்ன கவலை….
வாயிற்கு வுருவதைப் பேசுவோம் -
மற்றவருக்குப் புரிந்தால் சரி தானே!
நண்பா கவனம்… நாளை இந்தத் தவறுகளால்
உன் “வாழ்க்கை” சில வேளை “வழுக்கை” ஆகிவிடும்!

(தமிழைத் - தமில், டமில் எனவாறெல்லாம் கொச்சைப்படுத்தும் ஈகர் கண்டு எழுதினேன் - உண்மையில் மொழி மீதான பற்றும் ஆர்வமும் தமிழரிடையே பெருமளவில் குறைந்து வருகிறது. காலப்போக்கில் தமிழ் தமிலாகி டமிலாகி தமிங்கிலிஷ் ஆகி மண்ணாகிப் போக இத்தகைய சிறிய அலட்சியங்கள் கூடக் காரணமாக இருக்கலாம்!)