அண்மைக்காலமாக இலங்கையில் போக்குவரத்துச் சாதனங்களினால் (அட... வாகனங்கள் தான்) வெளியிடப்படும் காபன் கழிவகளால் வளி மாசு ஏற்படுவதைக் குறைக்க (தடுக்க முடியாதே!) வாகனங்கள் வருடாவருடம் பெற வேண்டிய வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு புகை வெளியேற்றத் தராதரச் சான்றிதழ் பெற வேண்டும். அதாவது குறித்த வாகனமானது குறிப்பிட்ட அளவிலான காபனையே வெளியேற்றுகிறது எனச் சான்றிதழ் பெற வேண்டும், பரிசோதளையின் போது வாகனம் குறிக்கப்பட்ட எல்லையளவுக்கு அதிகமாக வளியை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டால் குறித்த வாகனம் பழுதுபார்க்கப்பட்டு வாகனக் கழிவு வெளியேற்றல் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (சுருக்கமாக பச்சைச் சான்றிதழ்) பெறும் வரை வாகன வரி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட முடியாது - அப்பத்திரம் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணாண
து.
இந்த பச்சைச் சான்றிதழை வழங்குவதும் அது தொடர்பான பரிசோதனைகளைச் செய்வதும் யாரெனத் தெரியுமா? அரசாங்கமோ, போக்குவரத்துத் திணைக்களமோ அல்ல மாறாக லாஃப்ஸ் பிடிமானங்கள் தனியார் குழுமத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் லாஃப்ஸ் எகோ ஸ்ரீ தனியார் நிறுவனமாகும். இலங்கையின் பல பகுதிகளிலும் பரிசோதனைக் கூடங்களை அமைத்திருக்கிறார்களாம், ஆனால் நான் ஒரு பரிசோதனைத் தளம் எங்கே இருக்கிறது எனக் கண்டறிய மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். பரிசோதனைகளும் சான்றிதழும் இலவசமல்ல. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.284.50 முதல் கார்களுக்கு ரூ.759ம், பேரூந்துகளுக்கு ரூ.696ம், லொறிகளுக்கு ரூ.1138.50ம் அறவிடுகிறார்கள். பரிசோதிக்கப்பட்டுப் பழுதுபார்க்கப்பட வேண்டியிருந்தால் குறிப்பிட்ட பழுதுபார்ப்பு வேலைகள் முடிந்த பின்பு முதலாவது மீள் பரிசோதனை இலவசமாச் செய்து தரப்படும். இது தொடர்பில் மேலுமறிய இங்கே சொடுக்கவும்.
சரி, நான் இப்பதிவை எழுதுவதற்குக் காரணம் இந்தத் தகவல்களைத் தொகுப்பது அல்ல. சாதாரணமாகப் பாதையில் போகும் போது சில பேரூந்துகளையும், சில வாகனங்களையுந்தவிர 90மூ வாகனங்கள் பெருமளவு கரும்புகையை வெளியேற்றுவதில்லை நாம் அனைவருமே கண்டு கொண்டிருப்போம். இப்போது இவற்றுக்கெல்லாம் பரிசோதனையும் பச்சைச் சான்றிதழும் அவசியமாக்கப்பட்டிருப்பது நல்லது (கொஞ்சம் அலைச்சல் தான்). சூழல் பாதுகாப்புத் தொடர்பில் மனிதன் விழிப்படைய வேண்டிய அவசரக் காலகட்டம் வந்து விட்டது. இந்த வாகனங்களுக்கெல்லாம் புகைப் பரிசோதனையும், கட்டுப்பாடும் விதித்த அரசாங்கம் அதிகமாக புகையை வெளியேற்றும் ஒரு போக்குவரத்துச் சாதனத்தை மறந்து விட்டது.
இன்று முச்சக்கரவண்டியில் வெள்ளவத்தைக் கடற்கரையோரம் பயணிக்கும் போது புகையிரதமொன்று கரும் புகையைக் கக்கியபடி சென்றது. படத்தில் நீங்கள் காணும் புகைமூட்டம் அந்தப் புகையிரதம் வெளியேற்றிய புகைக்கழிவே. கொஞ்சம் முதல் பட்மெடுத்திருந்தால் இன்னும் அழகாகத் தெரிந்திருக்கும், ஆனால் அது கக்கிய புகையில் கொஞ்சம் மூச்சடைத்துத் தடுமாறிவிட்டேன். “புதுமைகள்” செய்யும் அரசாங்கம் (அட... வேற மாதிரியென்றும் நினைக்க வேண்டாம்) இதையும் கவனிக்கவும். கட்டுப்பாடு விதித்த எல்லா வாகனங்களையும் விட அதிக புகையை புகையிரதங்கள் வெளியேற்றுகிறது. இது புகையிரதப் பயணிகளுக்கு மட்டுமன்றி புகையிரதம் பயணிக்கும் பாதையருகே இருப்பவர்களையும் பெருமளவு பாதிக்கிறது.