Jul 13, 2009

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

அகதியாய் கூடாரம் நிறைந்த முகாமில் அடைபட்டு வருந்தும் ஒரு தாயின் தாலாட்டிது.... (எத்தனையோ பேர் சொன்ன நிதர்சனத் தகவல்களின் விளைவாக உணர்ச்சியின் உச்சத்தில் எழுதியது)


கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
குண்டுகளும் இனி விழாது
இரத்தமும் இனி ஓடாது
நிம்மதியாய் நீயுறங்க
தாயின் மடியிங்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மனியே கண்ணுறங்காயோ...
யுத்தமும் இனியில்லை
சத்தமும் இனியில்லை
நித்தமும் நீயுறங்க
அன்னைமடி இங்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ உறங்கிவிட்டால்
அம்மா நானும் உறங்கிடலாம்
விடிய முன்ன எழும்பி நானும்
“மல” வரிசையில் நிண்டிடணும்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ படுக்காவிட்டால்
நாளைக்கும் நான் பிந்திடுவன்
பிந்தியங்க போய்விட்டால்
பிறகு சாப்பிட ஒண்டும் கிடைக்காது
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கொஞ்சங்கூடக் கலங்காதே
சாப்பாடு கிடைக்காட்டியும்
கடைசி சொட்டு உள்ள வரை
தாய்ப்பால் என்றும் உனக்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
என்ட பிள்ளை உன்ளை நானும்
நல்லாத்தான் வளர்த்திடுவன்
இந்தக் முகாமில் உள்ளதில
வள்ளிசாய் உனக்குச் செய்திடுவன்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கனவு நீயும் காணுறாயோ
விடிவு காலம் பிறக்குமெண்டு
தமிழனாய் நீ பிறந்த நாளிலல்லோ
இருள் உன்னைப் பிடிச்சிட்டுது
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
தமிழனெண்டு நீ சொல்லிடாதே
உணர்ச்சி வசமும் பட்டிடாத
சுரணையற்ற ஈனக் கூட்டமடா
கொடியுறவெல்லாம் சுத்தப் பொய்களடா
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
நாளையொன்று உனக்கு இருக்குதெண்டு
நம்பிக் கொண்டு இருக்கிறன்
நாளை என்ன நடக்குமெண்டு
ஆரறிவார் என்மகனே?
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ தூங்கிவிடு
விடியலுக்கு நேரமாச்சு
அம்மா நான் தண்ணீ கொஞ்சம்
பக்கற்றில எடுத்துட்டு வாரன்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...