Nov 13, 2009

ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும்.

ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது.


இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டுந்தான் - யுத்த வெற்றியின் காரணமாக அவருக்கு அந்த தரவுயர்வு வழங்கப்பட்டது ஆனாலும் இருவாரங்களுக்குள்ளாகவே இராணுவத் தளபதிப் பதிவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு படைகளின் தலைமையதிகாரி என்ற உயர் பதவி வழங்கப்பட்டது. ”மக்களுக்கு அது ஓர் உயர்பதவி போல காட்டப்பட்டாலும் அதில் எனக்கு அதிகாரங்கள் இருக்கவில்லை” என சரத் ஃபொன்சேகா தனது ஓய்வ பெறுகைக் கடிதத்தில் காரணப்படுத்தியிருக்கின்றார் மேலும் தன்னைத் தேசத்துரோகி போல ஊடகங்களில் மறைமுகமாக பிரச்சாரம் செய்வதாகவும் தனக்கு இது மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் தருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார் - இவையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் அவர் பாதிக்கப்பட்ட காரணங்கள். ஆனால் அடுத்த சில காரணங்கள் இங்கு உற்று நோக்கப்பட வேண்டியவை. அரச படைகளிடையே விசுவாச வேறுபாட்டைத் திணிப்பதாகவும், இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களிலும் பாதுகாப்பிலும் தலையிட விடுவதாகவும், அகதி முகாமிலுள்ள மக்களை விடுதலை செய்ய முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனவும் அரசாங்கத்தின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் - இது தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அவரது அரசியல் பிரவேசத்தை உறுதியாகக் கூறக்கூடிய வகையில் பொதுமக்கள், நாடு சம்பந்தமான குறைகளை அவர் இங்கு சுட்டிக்காட்டியிருப்பதை நோக்கலாம்.

அதிலும் குறிப்பாக அகதிகள் பிரச்சினை, தமிழர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பான கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விடயமாகக் கூட அமையும். தனது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அரசாங்கத்தை விமர்சித்திருப்பதானது இன்றைய அரசாங்கத்தில் அவருக்கு இருக்கும் திருப்தியின்மையையும், தான் மாற்றத்தை விரும்புவதையும் பறை சாற்றுகிறது.


அப்படியானால் சரத் ஃபொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றாரா? இதுவரை அது தொடர்பில் நேரடியான கருத்தினை அவர் தெரிவிக்கவில்லை ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதுடன் அது ஏறத்தாழ 90வீதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இது வரை தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சாதாரணமாக தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடம் முன்பே நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பிரதான கட்சிகள் தங்கள் அபேட்சகர்களை அடையாளப்படுத்துவது வழக்கம். மேலும் இம்முறை ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட மாட்டார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் தாமதம் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து வெற்றி கொள்ளக் கூடிய அல்லது வெற்றியின் விளிம்பையாவது எட்டக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. இதேவேளை ஜே.வி.பி. பகிரங்கமாகவே சரத் ஃபொன்சேகாவை ஆதரித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் சரத் ஃபொன்சகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தக் கோரியமையுமு் குறிப்பிடத்தக்கது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை பதிலளிக்காவிட்டாலும் வெளிநாட்டில் ரணில் விக்ரமசிங்ஹவும், சரத் ஃபொன்சேகாவும் சந்தித்துப் பேசிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியிக் கூட்டணியிலுள்ள கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஜே.வி.பி. கோரிக்கை வைத்த போது அதை தாம் எதிர்ப்பதாக அறிவித்திருந்த போதும், பின்னர் தனது கேள்விகளுக்கு தகுந்த பதிலும், உத்தரவாதமும் சரத் ஃபொன்சேகாவால் தரப்பட்டால் ஆதரிப்போம் எனக் கூறினார். இவற்றைத் தொடர்ந்து சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் நடைபெற்றது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் ஃபொன்சேகா நிற்பார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு வேளை சரத் ஃபொன்சேகா தேர்தலில் நின்றால் கூட என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது என்பது பலரது கேள்வி. ஏனெனில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதியாக இருந்து கொண்டு இரண்டாம் முறை போட்டியிட்டவர்கள் தோற்றதில்லை - மேலும் இன்றைய நிலைமையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமல்ல - போரிட்டது ஃபொன்சேகாவாக இருந்தாலும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் போரை நடத்தி வெற்றியைத் தந்தவர் ஜனாதிபதி தான் என்ற நம்பிக்கை பெரும்பான்மை மக்களிடையே இருக்கிறது மேலும் தற்போது இருக்கும் மகா அமைச்சரவையின் அமைச்சர்களின் ஆதரவும், பலதரப்பட்ட பெரிய சிறிய கட்சிகளின் மற்றும் அழுத்தக் குழுக்களின் ஆதரவும் குறிப்பாக பல பெரிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் அது கட்டாயமாக 51வீதம் வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொடுக்கும் - ஆகவே தற்போதைய ஜனாதிபதியின் அடுத்த வெற்றி என்பது நிச்சயம்.


மேலும் சிறுபான்மையினர் நிலமையிலிருந்து பார்த்தாலும் சரத் ஃபொன்சேகாவிற்கான ஆதரவு தொடர்பில் தமிழர்கள் இருமுறை சிந்திக்க வேண்டிய நிலமையிலேயே இருக்கின்றார்கள். இன்று இவர் தமிழர் நலம் பற்றிப் பேசலாம் ஆனால் ஒரு வேளை ஜனாதிபதியான பின்பு என்ன நடக்கும்? ஏற்கனவே இந்த அனுபவம் தமிழ் மக்களுக்குண்டு. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தலில் போட்டியிட்ட போது தமிழ மக்கள் மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மையினர்களும் அவர் சமாதானம் பெற்றுத் தருவேன் என்று கூறியதை நம்பி வாக்களித்து வெற்றியை வழங்கி கடைசியில் அல்லல்பட்டது ஞாபகம் இருக்கும். அது தான் மீண்டும் நடக்கும் என்பது நிச்சயமல்ல ஏனெனில் சந்திரிக்கா குமாரதுங்கவும், சரத் ஃபொன்சேகாவும் இரு வேறு நபர்கள். ஆனாலும் அந்த பழைய கசப்பான அனுபவம் இன்னும் தமிழர்கள் மனதைவிட்டுப் போவதாக இல்லை.

எது எவ்வாறு நடந்தாலும் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்ந்தால் இவர்கள் எல்லாம் வார்த்தைகளால் வர்ணிக்கும் சுபீட்சம் என்பதை இலங்கைத் தேசம் இனிக் காணவே முடியாது. இப்போது இலங்கைக்குத் தேவை “நல்ல மாற்றம்” அதை யார் வழங்கினாலும் ஆதரிக்கலாம்.