அண்மையில் இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் சில தமக்குள் கூட்டமைப்பு உருவாக்கும் நோக்கில் பிரபல ஹொட்டேல் ஒன்றில் சந்திப்பொன்றை நடத்தியதாக அறியக்கிடைத்தது. ஊடகங்களில் அதிகம் இது பெரியளவில் பேசப்படாவிட்டாலும் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இலங்கையில் இந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணி என்பது சாத்தியமா? என்ற கேள்வி என்னுள் எழுகிறது - இது உங்களில் பலருள்ளும் எழும் என்று நினைக்கின்றேன்.
இலங்கையின் சிறுபான்மையினரிடையே இருக்கின்ற மிகப்பெரிய அரசியல் பலவீனம் கட்சிப் பிளவுகள் தான். ஆளாளுக்கு சிறுபான்மைக் கட்சிகளை அமைத்துக்கொண்டு போவதால் வாக்குகள் சிதறி சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் அல்லது குறைந்து போகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் சிறுபான்மையினராக இருந்த கொண்டு அதிலும் அதிக கட்சிப் பிளவுகள் ஏற்பட்டால் இம்மக்களின் நிலை என்ன?
அண்மையில் பிரபலத் தமிழ்நாட்டு அரசியல் வாதியொருவர் இலங்கைத் தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. தொண்டமான் ஒருபக்கம், சந்திரசேகரன் ஒருபக்கம், தமிழ்க்கூட்டமைப்பு ஒருபக்கம், டக்ளஸ் தேவானந்தா ஒரு பக்கம், சந்திரகாந்தன் ஒருபக்கம், மனோகணேசன் ஒருபக்கம் என்று இப்படியாகத் தமிழர்களே பிரிந்து நின்றால் எப்படி? எனக் கேட்டிருந்தார். திமுக ஒருபக்கம், அதிமுக ஒருபக்கம், மதிமுக ஒருபக்கம், பாமக ஒருபக்கம், விடுதலைச் சிறுத்தைகள் ஒருபக்கம், காங்கிரஸ் ஒருபக்கம், பாஜக ஒருபக்கம், கம்யுனிஸ்ற் ஒருபக்கம், நெடுமாறன் ஒருபக்கம், விஜயகாந்த் ஒருபக்கம், சரத்குமார் ஒருபக்கம், எனத் தமிழர்கள் பிரிந்து நிற்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு எங்களைக் கேட்க அவருக்குத் தகுதியிருக்கிறதா என்பது கேள்விக்குரியது எனினும் அவர் சொன்ன கருத்தில் பிழையில்லையே? எமக்குள்ளேயே ஒற்றுமையில்லையே.... எத்தனை பயனற்ற கட்சிப்பிளவுகள்?!
சரி இந்தக் கட்சிப் பிளவுகளில் பயன்தான் ஏதும் இருக்கிறதா? பல கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலாவது அந்த கட்சிப் பிளவுகளை நியாயப்படுத்தலாம் ஆனால் அவ்வாறு ஒன்றுமில்லாமல் ஆளாளுக்கு கட்சியை அமைத்துத் தலைவராகும் கலாசாரம் தான் இன்று சிறுபான்மையினரைத் திக்கற்றவர்களாக நிறுத்தியிருக்கிறது. நல்லகாலம் சில காலம் முன்பதாக வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகள் சில இந்தப் பிளவகளின் பிரதிகூலங்களையும் பயனற்ற நிலையையும் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்து அதை வட-கிழக்கில் ஒரு பலமாக சக்தியாக நிறுவினார்கள் (அதன் இன்றைய நிலை???!). இந்தப் பிரிவனைகள் வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகளிடையே மட்டுமல்ல மலையகக் கட்சிகளிடையேயும், முஸ்லிம் கட்சிகளிடையேயும் இருக்கிறது - இது சிறுபான்மையினருக்கும் பலம் அல்ல - பலவீனமே.
உதாரணத்திற்கு மலையகத்தை எடுத்தால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸற்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் வெளிப்படையாகக் கொள்கையில் வேறுபாடு தெரியவில்லை - இருவரும் அரசாங்கக் கொள்கையை ஆதரித்து அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படியிரக்கையிலே அவை ஏன் இரு வேறு கட்சிகளாக இருக்க வேண்டும்?
இதற்கு முஸ்லிம் கட்சிகளும் பல வட-கிழக்குத் தமிழ் கட்சிகளும் விதிவிலக்கல்ல. கொள்கைகளும் நோக்கும் ஒன்றானாலும் வேறு வேறாகப் பிரிந்து நிற்கின்றனர்.
இந்நிலையில் இன்று தோன்றியிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற எண்ணம் சிறப்பானது என்ற பூரிப்பிற்கப்பால் இது சாத்தியமா என்ற ஐயமே விஞ்சி நிற்கிறது. இலங்கை வரலாற்றில் இது போன்ற முயற்சியில் இதுவே முதலாவது இல்லை அப்படி இருக்கவும் முடியாது ஆனால் கூட்டமைப்பு என வரும் போது பல கட்சிகளும் விட்டுக் கொடுப்புக்ளையும் தியாகங்களையும் செய்ய வேண்டியிருக்கும். சுயநலங்களைக் கடந்து இதனை இன்றைய சிறுபான்மைக் கட்சிகள் செய்யுமா என்பது அது நடக்கும் வரை நிச்சயமற்றது. மேலும் அவர்கள் வார்த்தைகளால் பூசி மெழுகினாலும் தமிழ்-முஸ்லிம் கசப்புணர்வுகளும் காழ்ப்புணர்வுகளும் இந்தக் கட்சிகளினால் களையப்பட்டு ஒற்றுமையான அணி ஏற்படுத்தப்படுமா என்பதும் ஐயமே.
இவற்றைவிட இந்தக் கூட்டமைப்பு வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக் கட்சியின் கூட்டமைப்பாக மட்டுமே அமையுமானால் அதனால் பெரும் பயன் ஏற்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இன்று தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை வட-கிழக்கில் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மலையகத்தின் இருபெரும் சக்திகளான தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸீம், சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியும், பேரியல் அஷ்ரப்பின் நுவாவும், ஏனைய சில முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றன. இவற்றை விடுத்து வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக்கட்சிகளின் கூட்டமைப்பு என்பது பெரிதாக எதையும் சாதித்து விடாது.
இவற்றைவிட இந்தக் கூட்டமைப்பு வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக் கட்சியின் கூட்டமைப்பாக மட்டுமே அமையுமானால் அதனால் பெரும் பயன் ஏற்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இன்று தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை வட-கிழக்கில் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மலையகத்தின் இருபெரும் சக்திகளான தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸீம், சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியும், பேரியல் அஷ்ரப்பின் நுவாவும், ஏனைய சில முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றன. இவற்றை விடுத்து வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக்கட்சிகளின் கூட்டமைப்பு என்பது பெரிதாக எதையும் சாதித்து விடாது.
மறுகரையில் இந்த எதிர்க்கட்சியிலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளில் சில பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. அவற்றின் வாக்கு வங்கிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியதாக இருக்கும் வேளையில் சுதந்திரமான சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பாக அவை இயங்கும் சாத்தியம் இல்லை.
இவற்றை விட யதார்த்தத்தில் பார்க்கும் போது தலைமைத்துவப் போட்டிகளும் ஆசனங்களுக்கான போட்டிகளும் பின்னர் அமைச்சர்களாவதற்கான போட்டிகளும், குழறுபடிகளும் தவிர்க்கமுடியாத படி எழும் - இவற்றை இக் கட்சிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பானமையுடன் அணுகுமா? ஒரே பொதுக் கொள்கையில் நிலைத்திருக்குமா? தனித்தீர்மானங்களின்றி கூட்டுத்தீர்மானங்களின் படி இயங்குமா? தேர்தலின் பின்னும் பிரியாது ஒன்றித்தே இயங்குமா? அல்லது தேர்தல்காலக் கூட்டமைப்பாக மட்டுமே இயங்குமா போன்ற பல கேள்விகள் இன்னும் தொக்கு நிற்கிறது.
இவற்றுக்கெல்லாம் சாத்தியமான தீர்வுகளை இந்தத் தலைவர்கள் தூய்மையாக எடுக்கும் வரை இது வெறும் “ஏழையின் கனவாக”த்தான் இருக்கும். உண்மையில் இப்படி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் - சகல சிறுபான்மைக் கட்சிகளும் பேதமின்றி ஒன்றிணைந்தால் நாளை சிறுபான்மையினருக்கு அது சாதகமான நிலையை இத்தேசத்தில் உண்டு பண்ணும். அமரர்.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கோரியது போல 50:50 தீர்வு கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் ஆனால் இவை நடக்குமா? இன்றைய தலைவர்கள் இதைச் சாத்தியமாக்குவார்களா? - மனம் முழுவதும் சந்தேகமான கேள்விகள் மட்டுமே விடைகளாக இருக்கிறது.
நாளை நமதே! - எங்கள் கனவு!