இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் இதுவரை ஏறத்தாழ 50 தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின்னர் தமிழ்த்திரைப்படத்துறை முடங்கிவிட்டது. ஆயினும் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் மிகத் தரமான திரைப்படங்கள் எம்மவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற கதையம்சம் பொருந்திய படங்களும், நான் உங்கள் தோழன் போன்ற எம்.ஜி.ஆர் படங்களை ஒத்த திரைப்படங்களும், கோமாளிகள் - நகைச்சுவைத் திரைப்படமும் என வகை வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன - பல வெற்றியும் பெற்றன.
இலங்கையில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ன என்று பலர் வினவலாம். இன்று தமிழர்களுடைய அடையாளமாகவே தமிழக சினிமா மாறிவிட்டது. எந்த விசேஷமானாலும் சினிமாவும் அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது - நவீன இலக்கிய வடிவமாக சினிமாவைக் கொள்ளமுடியும் - அந்தளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் தமிழரிடையே ஊறிவிட்டது. இன்று தமிழ்ப் பாடல் ஒன்று பாடும் படித் தமிழ்ச் சிறுவனிடமோ, இளைஞனிடமோ கேட்டால் நிச்சயமாக அவன் பாடுவது சினிமாப்பாடலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் இன்று தமிழ் ஊடகங்களின் உயிர்நாடியே சினிமாதான். இப்படியாக தென்னிந்திய சினிமாவே உலகத் தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.
சங்ககாலம் முதல் 18ம், 19ம் நூற்றாண்டு காலம் வரை நாங்கள் இலக்கிய வரலாற்றை உற்றுநோக்கினால் - தென்னிந்தியாவில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையிலும் தனித்துவத்துடன் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. பிற்பட்ட காலங்களில் தமிழக இலக்கியங்கள் அழகியல் ரீதியானவற்றில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது ஈழத் தமிழ் இலக்கியங்கள் வைத்தியம், சோதிடம் போன்ற விஞ்ஞானபூர்வமான இலக்கியப்படைப்பிலும் ஈடுபட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழருக்கென தனித்துவமான இலக்கியப் படைப்புக்களும், பண்புகளும் காணப்பட்டன. காலப்போக்கில் இனப்பிரச்சினையும், புலம்பெயர்வுகளும், இவற்றைவிட இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியும் இலங்கைத் தமிழரது தனித்துவமான இலக்கியப் படைப்புக்களுக்கு சிறுது சிறிதாய் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கின. சினிமா எனும் நவீன இலக்கிய வடிவத்தைக் கைக்கொண்டு இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருந்தாலும் பிற்பாடு அவற்றின் தயாரிப்பு நின்ற பிறகு நாமும் எனது ஊடகங்களும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இன்று அதிலேயே ஊறிவிட்டோம். விளைவு எனது தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடுகள் எம் கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை கண்டும் காணாதது போல இருந்துகொண்டிருக்கின்றோம்.
அப்படி என்னடா பெரிய கலாசார பேதம் என நீங்கள் வினவலாம். நான் நேரிடையாகக் கண்ட ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். எமது இலங்கைத் தமிழர் கலாசாரத்தில் தாய் தந்தையரை, பெரியோர்களை “நீ” என விளிக்கும் பண்பாடு இல்லை மாறாக மரியாதை நிமித்தம் நாம் “நீங்கள்” என்று தான் விளிப்போம் ஆனால் தென்னிந்திய முறையில் “நீ” என்று விளிப்பது அவர்கள் அளவில் தவறல்ல. இதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்று - கலாசார, பண்பாடு பேதங்களில் ஒன்றைச் சரி அல்லது தவறு என கூறமுடியாது ஆனால் எமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் இருக்கிறது - இந்தியத் தமிழோ அவர்களது கலாசாரமோ தவறல்ல ஆனால் எமது கலாசாரத்தை நாமே கெடுக்கக்கூடாது அல்லது கைவிடக்கூடாது ஏனென்றால் அது தான் எமது தனித்துவத்தின் அடையாளம் - நாம் யார் என்பதன் அடையாளம் அதுதான்.
எனக்கேற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்று உண்டு. இத்தாலியில் உலகப் பாடசாலைகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நிகழ்வாக அவரவர் தமது கலாசார நிகழ்வொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலிருந்து நானும் 2 சிங்களத் தம்பிமார்களும் சென்றிருந்தோம் - நாம் மூவரும் ஒரு கலாசார நடனமும், பாடலும் பாடுவதாக இருந்தது. நாட்டியத்தில் அவர்கள் சிங்கள முறை நாட்டியத்தை ஆட நான் காவடியை வைத்துக்கொண்டு கால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தேன் (அட நடனமாடியதாக எடுத்துக் கொண்டால் சரி) அடுத்து பாடல் பாடப் புறப்பட்ட போது தான் எனக்குப் பொறி தட்டியது. தம்பிமார் ஒரு சிங்களப் பாடலும் நான் ஒரு தமிழ்ப் பாடலும் பாடுவதாக இருந்தது. ஆனால் நான் தயாராகிக்கொண்டு போனது “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் - ஆனால் எதிரே இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடசாலை தென்னிந்தியாவின் பிரபல பாடசாலை- வந்திருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். நான் இந்தப்பாடலைப் பாட இது உங்களுடைய பாடல் அல்ல இந்தியாவின் பாடல் என உரிமை கொண்டாடிவிட்டால் அது அவமானமாயிற்றே என்று எண்ணி சுதாகரித்துக்கொண்டு பெரியதம்பிப் புலவரின் கவிதை ஒன்றை கவிதைத் தொனியில் கூறி அதன் ஆங்கில அர்த்தத்தையும் கூறி கைதட்டு வாங்கி விட்டு மேடையிலிருந்து இறங்கினேன் - ஆனால் அந்த சில நிமிடங்கள் என் மனத்தில் ஆறாத வடுவாகப் படிந்துவிட்டது - இலங்கைத் தமிழருக்கென ஏன் தரமான பாடல்களோ, இலக்கியங்களோ இன்றில்லை அல்லது இருந்தும் ஊடகங்களின் அலட்சியப்போக்கால் அவை உயர்வடையவில்லையோ என்ற ஏக்கம் என்னிடம் இன்றுவரை இருக்கிறது.
இலங்கையில் எமக்கென ஒருவேளை தமிழ் சினிமாத் துறை இருந்திருந்தால் அந்த வலிமையான ஊடகம் எமது தனித்துவ அடையாளத்தைக் காக்கவும் எம்முடையது என உரிமையுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்திருக்கும் ஆனால் எமது துரதிர்ஷ்டம் இலங்கையில் தமிழ் சினிமாத்துறை இல்லை என்பது அதனால் இன்றும் எமது ஊடகங்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களிலும், நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலுமே தங்கியிருக்கிறது.
நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது....