Jun 26, 2009

பயனுள்ள மதுரைத்திட்டம்

project maduraiபுத்தகங்கள் படிப்பது எனது மிக முக்கிய பொழுதுபோக்கு. இரவில் ஏதாவது ஒரு புத்தகமாவாது வாசிக்காவிட்டால் தூக்கம் வராது, இவ்வளவு ஏன் இயற்கைக் கடன் கழிப்பின் போதும் எனது துணை புத்தகம் அல்லது பத்திரிகை தான். 10ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நான் றோயல் கல்லூரி விவாத அணியில் இடம்பெற்றிருந்தேன். அணிப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலக்கியங்களைப் படித்தல் கட்டாயமானதாக இருந்தது. நாலைந்து தடவை படிக்காது “எஸ்கேப்” ஆக முயற்சி செய்திருந்தேன், ஆனால் அவர்கள் விடவில்லை. படிக்க வேண்டிய இலக்கிய நூல்களின் பட்டியல் என்னிடம் தரப்பட்டது. அகநானூறு, புறநானூறு முதல் கம்பராமாயணம், பாரதி பாடல்கள் என நீண்டது பட்டியல். சாதாரணமாக நான் நூலகங்களில் புத்தகங்கள் எடுத்துப் படிப்பதில்லை, எந்தப் புத்தகமானாலும் வாங்கிப் படிப்பது தான் வழக்கம். இதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களைச் சரியாகத் திருப்பித் தர மறந்து விடுவேன் - எதற்கு வீண் சிக்கல் என நான் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால் இந்தப் பெரிய பட்டியலை வாங்கிப் படிக்கும் நிலையில் நானில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பாடசாலை நூலகத்திலும், கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திலுமாக ஒருவாறு தேடிப்பிடித்து தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டேன் இதெல்லாம் நடந்தது 2004ல்.- இப்படியாகத்தான் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் உருவானது. 2007ல் விவாத அணித்தலைவனாக ஆன பின்பு அப்போது இணைந்த புது முகங்களுக்கும் இதே பயிற்சியை வழங்கிய போது அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினார்கள் - ஆனால் என்ன செய்ய இலகுவான வேறு தீர்வுகள் இருக்கவில்லை.


பின்னர் ஒரு நாள் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மதுரைத் திட்டம் பற்றிப் படிக்கக் கிடைத்தது. மதுரைத்திட்டமென்பது தமிழ் இலக்கியங்களை கணணிமயப்படுத்தும் திட்டமாகும். இதன்படி பலநூறு தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியம் உட்பட கணணிமயப்படுத்தப்பட்டு PDF கோவைகளாக உருவாக்கப்ட்டிருக்கிறது. தன்னார்வத் தொண்டாக இயங்கும் இச்சேவை இலவசமாக இந்நூல்களைப் பதிவிறக்கம் செய்ய வழிசமைத்திருக்கிறது. இத்திட்டம் 1998லிருந்து இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் நான் மிக மிகக் காலங்கடந்து தான் அறிந்து கொண்டேன். நான் தேடித்திரிந்த பல பழந்தமிழ் இலக்கியங்களை கைக்கெட்டிய தூரத்தில் இலவசமாகத் தருகிறது இச்சேவை.


சகல நூல்களும் திஸ்கி, யுனிகோட் முறைகளில் தமிழில் அச்சிடப்பட்டிருக்கிறது. PDF கோப்பாக அமைந்திரக்கும் நூல்களை Adobe PDF Reader மென்பொருளின் மூலம் அல்லது வேறு ஏதாவது PDF Reader மென்பொருளின் மூலம் வாசிக்க முடியும்.


பழந்தமிழ் நூல்கள் மட்டுமல்ல, அமரர்.கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் போன்ற நூல்களும் இங்கு உண்டு. இந்தக் களஞ்சியத்திலிருந்தவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்தது “காளமேகப் புலவர் பாடல்கள்” - அந்த வசைபாடும் கவிஞனின் பாடல் திரட்டை நான் தேடியலையாத புத்தகக்கடைகளில்லை. இன்னும் எத்தனையோ எம் தமிழ்ப் பொக்கிஷங்கள் அங்கே இருக்கின்றன. விரும்புபவர்கள் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.மதுரைத்திட்டம்
http://pm.tamil.net/
http://projectmadurai.tamil.net/

இவற்றைவிட மிக விரிவான பதிவிறக்கம் செய்யக்கூடிய நூற்பட்டியலுக்கு
http://www.infitt.org/pmadurai/pmworks.html
என்ற முகவரியை நாடவும். இங்கு பொன்னியின் செல்வன் உட்பட மேலும் பல நூற்றொகுதிகள் உண்டு.