Jun 20, 2009

வெற்றியின் பரிசு!

வெற்றி - வாழ்க்கையில் வாழத்துடிக்கின்ற மனிதனின் உயர்ந்த இலட்சியம் வெற்றி. இந்த வெற்றிக்காகவே மனிதன் தினந்தினம் போராடிக்கொண்டிருக்கின்றான். இன்று அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்றுப் போரிலே இலங்கை வெற்றிபெற்றிருக்கிறது. “எங்கள் தேசத்திலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்” என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி முழக்கமிட்டதும், அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து ஓயந்த கொண்டாட்டங்களும் - இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்களும் அந்த வெற்றிக் களிப்பின் வெளிப்பாடுகள். அது ஒவ்வொரு இலங்கைக் குடிமகனதும் வெற்றிப் பூரிப்பு.வெற்றியின் களிப்பில்!


பயங்கரவாதமும், தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும் “இது” பயங்கரவாதமா இல்லையா என விவாதம் நடத்தவும் நான் விரும்பவில்லை - ஏனெனில் வாலி வதம் போல இந்த விவாதமும் காலங்காலமாகத் தொடர்ந்ததன்றி முடிவுற்றபாடில்லை. ஏனெனில் இவை ஒவ்வொரு தனி மனிதனதும் தனிப்பட்ட உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள் சார்ந்தவை. ஆனால் இந்த வெற்றி தந்த பரிசினைப் பற்றி கொஞ்சம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.


எதிர்காலத்தின் கனவுகளுடன்...எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலுங்கூட வெற்றிவாகை சூடிய அணி தங்கள் கொண்டாட்டங்களுக்கு முன்பதாக தோல்லியடைந்த அணியினரை வாழ்த்திப் பாராட்டுவது வழக்கம். அது அவர்கள் உணர்வு ரீதியாகப் புண்படாமலிருக்க உதவி புரியும். சரி எதிரிகளுடன் தான் கைகுலுக்க வேண்டாம் நடுவில் நின்று இரசித்த அப்பாவிகளையும் வெறுப்புடன் நோக்குவது சரியா?


யுத்தத்தின் கொடூரத்தால் ஊரிழந்து, வீடிழந்து, ஒட்டு உறவுகளையெல்லாம் இழந்து, மனதுடைந்து, உடலுழைந்து கிடக்கும் இந்நாட்டின் குடித்தொகுதியொன்று நீங்களெல்லாம் “சுதந்திரத்தை” கொண்டாடும் வேளையிலே “கூடுகளுக்குள்” அடைபட்டு, வதைபட்டுத் துன்பமடைவதென்ன நியாயம்?


சுதந்திரத்துக்கான எதிர்பார்ப்பு...ஒத்துக் கொள்கிறோம் “வைரஸ்” தாக்கியவர்களை நீங்கள் வடிகட்ட நினைப்பது நியாயம், ஆனால் அச்செயலில் அப்பாவிகளும் உழலுருவது என்ன நியாயம்? “இது எங்கள் அனைவரினதும் தேசம்” என நீங்கள் உரக்க உரைத்தால் மட்டும் போதாது அதை உணரச்செய்ய வேண்டும். துன்புறுத்துவதால் அதைச் செய்யமுடியாது மேலும் அது வெறுப்புணர்வையும், கசப்புணர்வையுமே மேலோங்கச் செய்யும்.


வெற்றியின் பரிசு சகலருக்கும் கிடைக்கட்டும் - தினந்தினம் “அந்தக்” கூடுகளில் துன்புறும் எம்மக்களுக்கும் இந்தச் சுதந்திர ஒளி கிடைக்கட்டும் - அதுவே நிஜ வெற்றி! அதை நீங்கள் சாதித்துக் காடடினால் நாளை சரித்திரம் உங்களை “உண்மையாய்ப்” புகழும், இல்லாவிட்டாலும் புகழும் (------).



இலங்கை, சகலரும் சௌபாக்கியத்துடனும், நிம்மதியுடனும் சமாதானமாக வாழும் நாடாகட்டும்!
May Sri Lanka be a peaceful & prosperous nation, May all Sri Lankans live in peace & harmony forever!