
வாழ்கையில் எல்லாமே இலவசமாகக் கிடைத்தால் எவ்வளவு நலம்? - இப்படி வெட்கமில்லாமல் சொல்லக் கூடிய இனமொன்றும் உலகிலுண்டு. இலங்கைக்கண்மைய தேசமொன்றின் தென் மாநிலமொன்றின் நிலை இதுதான். உலகின் பாரம்பரிய இனக்கூட்டத்தின் தலைநகர் அதுதான், தற்போது அதனாட்சியும் அவ்வினத்தின் சர்வதேசத் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் ஒருவரிடம் தான் இருக்கிறது, இப்படியெல்லாம் இருக்கையிலே அந்த இனம் கேவலப்பட்டுப் போனது ஏன் தெரியுமா? இந்தக் கையேந்திப் பிழைப்பினால் தான்.
தமிழ், தமிழன் என மூச்சுக்கு மூவாயிரந்தரம் சொல்லிக்கொண்டாலும் தமிழனின் வளர்ச்சியில் அந்த அக்கறையைக் காட்டவில்லை. ஒரு இனத்தின், ஏன் ஒரு தனிமனிதனின் வளர்ச்சியே “உழைப்பில்” தான் இருக்கிறது - எந்த இனம் உழைப்பை உதறித்தள்ளுகிறதோ அவ்வினம் அடியோடு அழிந்துவிடும். அதனாலன்றோ எந்தவொரு தொழிலை விடவும் வள்ளுவன் உழுதுண்டு வாழ்வதை முதன்மைப்படுத்துகின்றான். நாம் உழைத்து வாழும் வரைதான் நமக்குப் பலம், பிறர் உழைப்பை நம்பி வாழப் பழகி விட்டோமென்றால் ஒரு கட்டத்தில் பிறர் கருணை கிடைக்காது விட்டால் அழிவு நமக்குத்தான்.

ஆனால் இங்கோ கதை வேறு. ஆட்சியைப் பிடிப்பதற்கான சூத்திரமே “இலவசங்களை” அறிவிப்பதுதான். உழைப்பினால் பெற வேண்டிய சௌகரியங்களை “இலவசமாய்” அய்யன் அள்ளி வழங்க, உணவுக்கலைந்த விலங்குகள்போல மக்களும் வாக்களித்தனர். இப்படியாக இலவசம் மேல் இலவசமாக அள்ளி வழங்கி, மானியம் மேல் மானியமாக வழங்கோ வழங்கென்று வழங்கி மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டனர். இந்தச் சோம்பலினால் தான் என்னவோ அவர்களுக்கு இன உணர்வு கூட அடங்கிவிட்டது.
மானியங்களினாலும், இலவச விநியோகங்களினாலும் அரசாங்கம் மனித உழைப்பைக் குறைத்துவிடுகிறது. பல ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் “இலவசங்கள்” எல்லாம் இல்லை மாறாக உழைப்பின் 50 விழுக்காடு வரை வரியாச் செலுத்த வேண்டிய நிலைமையும் உண்டு. இந்நிலைமையினால் அங்கு கடின உழைப்பின் தேவையேற்பட்டு மனிதன் மிகக் கடினமாக உழைக்கின்றான் - விளைவு அந்நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சி அடைகின்றன.

ஒரு சின்ன உதாரணம். ஒரு தொலைக்காட்சிப்பெட்டி கூட இல்லாத சாதாரண குடிமகனின் வீடு, அங்கு கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருவரும் உழைத்துச் சம்பாதிக்கிறார்கள் - வாழ்க்கையும் சாதாரணமாக போய்ககொணடிருக்கறது. சிறுகச் சிறுகச் சேமித்துச் சேமித்தும், தவணை முறையிலும் சௌகரியங்களைக் கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலைமையில் இந்த வீட்டில் 4 பேர் உழைக்கிறார்கள். இதே நிலைமையில் அரசாங்கம் இலவசமாகச் சௌகரியங்களையும், மிகக் குறைந்த விலையில் பொருட்களையும், மானியங்களையும் வழங்குமாயின் மனைவிக்கும் ஒரு மகனதும் உழைப்புக்கான அத்தியாவசியத் தேவை இல்லாது போய்விடும் ஆக பொருளாதாரத்திற்கு மக்கள் வழங்கத் தயாரான உழைப்பினளவு குறைய பொருளாதார வளர்ச்சியும் குன்றும் - இது ஒரு பொருயாதார நோக்கு.
ஆயினும் “நோகாமல் நுங்கு பருக” கௌரவமானவர்கள் விரும்புவதில்லை - ஆனால் இந்த இனத்துக்கு அது இப்போது எங்கே போயிற்று?