சும்மா பொழுதுபோக்கா தொடங்குற விஷயங்களெல்லாம் மிக மிக சீரியஸான விஷயங்களா மாறிவிடுவதை நாம் அடிக்கடி கண்டிருக்கின்றோம். ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சும்மா பொழுதுபோக்கா தொடங்கிய “வதனவேடு” - அதுதான் facebook ஐ தமிழில் சொன்னேன் இப்போது மிக முக்கியமான சமூக வலைப்பின்னலாகிவிட்டது. அதை விடுங்கோ - இங்கு நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல - விளையாட்டைப் பற்றித் தான்.
விளையாட்டாக இருக்க வேண்டிய விளையாட்டு, வியாபாரமாகிவிட்டதால் விளையாட்டு அதன் தன்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது. அதிகமாக யோசிக்கத் தேவையில்லை எங்கள் நாட்டில் மற்றும் இந்தியாவில் மிகப்பிரபலமான கிரிக்கட்டை எடுத்துக் கொள்ளுங்கள் - இன்று போட்டிகளில் விளையாடி உழைப்பதை விட வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதிலேயே அதிகமாக உழைக்கிறார்கள். விளம்பர நிறுவனங்களும் நீயா நானா எனப் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கட் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகின்றன, விளைவு விளையாட்டின் மீதான கவனம் வீரர்களுக்கு குறைவடைய அதிகமாகக் கொட்டும் பண மழை அவர்களது திறமையையும் குழி தோண்டிப் புதைத்துவிடுகிறது.
நான் உலகக்கிண்ண 20 - 20 சுற்றுப் போட்டிகளை ஸ்டார் கிரிக்கட் அலைவரிசையிலேயே கண்டு களித்தேன்(?). அதில் இடையிடையில் வரும் விளம்பரங்களில் 100க்கு 80 விழுக்காடு கிரிப்பட் வீரர்களின் முகங்கள்தான் தெரிந்தது - அதிலும் முக்கியமாக இந்திய கிரிக்கட் வீரர்களின் வதனங்கள். இதில் என்னைக் கடுப்பேற்றிய விடயம் எதுவென்றால் - இந்தியா பரிதாபமாக சுற்றுத்தொடரிலிருந்து வெளியேறிய பின்பு தோனி ரசிகர்களிடம் மன்னிப்புக்கூடக் கேட்டிருந்த பின்பு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தோனியின் விளம்பரம். அதில் தோனி ஒரு குறிப்பிட்ட கைத்தொலைபேசிச் சேவையினைப் பயன்படுத்துவதால் தான் ஆட்ட நாயகன் போல உணர்கிறேன் என்று சொல்வார். ஆட்டமாடி முடியாமல் பரிதாபமாக வெளியேறிய பின்பு, ரசிகர்களிடம் குற்ற உணர்வுடன் மன்னிப்புக்கேட்ட பின்பும் அந்த விளம்பரத்தை பார்க்கும் போது கடுப்பாகுமா இல்லையா?
கைத்தொலைபேசி, குடிபானம், புரதப்பால்மா, சவரக்கத்தி, தலைமுடிக்களி என பல விளம்பரங்களில் “ஈ” என இளித்த படி சிரிக்கும் அந்த முகங்களைக் கண்டாலே ரசிகர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. எனது நண்பனொருவன் எரிச்சலடைந்து சொன்னான் “ஒழுங்கா விளையாட வக்கில்லை, அதுக்கு மட்டும் நல்லா ஈயெண்டு வந்து இளிக்குதுகள்”. ரசிகர்களது கோபமும் நியாயமானது தான். நீங்கள் அதிக முயற்சியெடுத்து பயிற்சிசெய்து வெற்றிகளைக் குவித்த பிறகு இவ்விளம்பரங்களில் நடித்தால் பரவாயில்லை - அதாவது ஒரு பணமீட்டும் பொழுதுபோக்காக விளம்பரங்களைப் பயன்படுத்தினால் பரவாயில்லை ஆனால் இங்கு இந்த விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரங்கள் பிரதான தொழிலாகவும், விளையாட்டு பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது.
எத்தனையோ இளைஞர்கள் விளையாட்டில் சாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டு போராடிக்கொண்டிருக்கும் போது - தேசிய அணிகளில் விளையாட இடங்கிடைத்த வீரர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டாமா? நீங்கள் அணியிலிடம்பிடித்துக்கொண்டும் ஆனால் நியாயமான முயற்சிகள் செய்யாதும் வெறும் பணத்துக்காக நடித்து வந்தால் அணியின் நிலையென்ன? உங்கள் நாட்டின் மதிப்பென்ன?
அது சரி - பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் போது நீங்கள் திறக்கமாட்டீர்களா என்ன?