அண்மையில் இலங்கை அரசாங்கம் வாகனங்கள் மற்றும் இலத்திரனியற்பொருட்கள் மீதான இறுக்குமதி வரிகளை கணிசமான அளவு குறைத்துள்ளது. சராசரியாக 50வீதமளவிற்கு இறக்குமதி வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பற்றாக்குறை வரவுசெலவையுடைய தேசத்தில் திடீரென அரசாங்கம் 50வீதளமளவிற்கு இறக்குமதி வரியைக் குறைப்பதன் நோக்கமென்ன? இறக்குமதிகள் அதிகரித்தால் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்காது, ஆக அதனைக் கட்டுப்படுத்தவும், வருமானம் பெறவுமே அரசாங்கம் இறக்குமாதிகளுக்கு வரிவிதிக்கிறது ஆனால் இலங்கையரசாங்கத்தின் இந்தத் திடீர்முடிவுக்குக் காரணமென்ன?
30 வருட யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் சுமுகமான சூழல் நிலவுவாதாகக் கூறும் அரசாங்கம், இச்சூழலைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதைவிடுத்து இறக்குமதியை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதேன்? இதில் ஏதும் உட்-காரணங்கள் ஒளிந்திருக்குமா? போன்ற சந்தேகங்கள் எழவே செய்கிறது.
சாதாரணமாக கொழும்பில் வசிக்கும், நல்ல வேலையில் இருக்கும், இளைஞர்கள் இந்த வரிக்குறைப்பை ஆவலுடன் வரவேற்கிறார்கள். ஏனெனில் இதுவரை விலைகூடவாக இருந்த வாகனங்களைக்கூட இனி கணிசமானளவு குறைந்தவிலைக்கு வாங்கலாம். உதாரணமாக வரிக்கு முன்னைய பெறுமதி 500000 உடைய 1000cc க்கு குறைந்த இயந்திரவலுவுடைய பெற்றோல் காரொன்று முன்பு வரியின் பின் 1435000 ஆகக் காணப்பட்டது, இப்போது வரிக்குறைப்பின் பின் அதன் விலை 950000 ஆகக்குறைந்துள்ளது. வாகனங்கள் போலவே இலத்திரனியற்பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக வளிச்சீராக்கி இயந்திரங்கள் (Air Conditioning Machines) மீதான இறக்குமதி வரி 94வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இனி கொழுத்தும் வெயில்காலத்தில் அநேகமான நடுத்தர வீடுகளும் குளிரூட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியான விலைக்குறைப்பு நல்லதுதானே என சாதாரண பொதுமகன் சொல்வது கேட்கிறது. என்ன செய்ய இந்தச் சாதாரண பொதுமகன்கள் தானே இந்த அரசாங்கத்தை அரியணையில் இருத்தியவர்கள்! அவர்களுக்குச் சந்தோஷம் ஆனால் அந்த சந்தோஷ மிகுதியில் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் கூட காற்றோடு காற்றாய் அலட்சியம் செய்யப்பட்டுப் போய்விட்டது. இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்ட மறுதினம் ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “பென்ஸ் காரின் விலையைக் குறைத்த அரசால், ரின் மீன் விலையைக்குறைக்க முடியாதா?” என்று அவர் கேட்டிருந்தார். வழமையாகவே ரணிலின் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை ஆனாலும் அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பால்மாவிலிருந்து, தினம் உண்ணும் அரிசி முதல் முக்கிய உணவுப்பொருள் இறக்குமதிக்கெல்லாம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரிசி, சீனி, பருப்பு விலைகளெல்லாம் உச்சஸ்தாயியில் ஏறிக்கொண்டிருக்கிறது ஆனால் இதைக்குறைக்க வேண்டும் என்று எண்ணாத அரசு வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றின் மீதான வரியினைக் குறைத்ததன் சூட்சுமம் என்ன?கார் மற்றும் ஏனைய சொகுசு வாகனங்களின் மீதான இறக்குமதிவரிகளைக் குறைத்த அரசாங்கம், நடுத்தரப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மீதான இற்குமதி வரியைக் குறைக்காதது ஏன்? இதை யோசிக்கத் தெரிந்தவர்கள் இத்தேசத்தில் பெரும்பான்மையளவில் இருந்திருந்தால் இந்த அரசாங்கமே அரியணையேறியிருக்காது.
இரண்டாவதாக வாகன இறக்குமதியை ஊக்குவிக்கும் முகமாக வரிகளைக் குறைத்த அரசாங்கம் வாகனம் பயணிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? இந்த வரிக்குறைப்பினால் நாட்டுக்குள் வரும் இலட்சோப இலட்சம் வாகனங்களும் இதே வீதிகளிலேயே பயணித்தால் போக்குவரத்து நெரிசல் இன்னும் பலமடங்காகும், அப்படி உருவாகும் நெரிசலை இரும்பு மேம்பாலங்களை 3மாத காலத்துக்குள் போட்டுக்கூடக் கட்டுப்படுத்த முடியாது. இன்று காலைவேளைகிலும், மாலை அலுவலகம் முடியும் நேரங்களிலும் கொழும்பு வீதிகளில் பயணிப்பது என்பது சவலான காரியம், இன்னும் வாகனங்கள் இதே வீதியில் இறக்கப்பட்டால் போக்குவரத்தின் நிலையென்ன? இதற்கான மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் வகுத்திருக்கிறதா? அப்படி வகுத்தாலும் பாதைகள் பெருப்பிக்கப்பட்ட பின் தான் இந்த வரிக்குறைப்பு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், அது நீண்டகாலத்திட்டமாக அமுல்ப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் மாறாக இரவோடு இரவாக வரியைக்குறைப்பது என்பது பொருந்தாத செயல்.
அடுத்ததாக இந்த விலைகுறைந்த காலத்தில் வாகனங்களை வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது. முதலாவதாக எரிபொருள் விலை. இன்று வாகன வரிகளைக் குறைத்த அரசாங்கம் சில மாதம் கழித்து கணிணசமான வாகனங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின் எரிபொருள் விலைகளை அதிகரித்தால் என்ன செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். அண்மை வருடங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 180ரூபாய்கள் வரை கூடியிருந்ததைக் கருத்திற்கொள்ளவேண்டும். ஆக விலை இன்று குறைவு என்பதற்காக வாகனங்களை அவசரப்பட்டு ஆராயாமால் வாங்கிவிட முடியாது. அடுத்ததாக இரண்டாம் சந்தைவிலை. அண்மை வாரங்களில் இரண்டாஞ்சந்தை விலைகள் இந்த வரிக்குறைப்புக் காரணமாக ஓரளவு தளம்பலடையத் தொடங்கியுள்ளன. ஆக இரண்டாஞ்சந்தையில் வாகனம் வாங்க எண்ணியிருப்பவர்கள் இன்னும் சிலவாரங்கள் பொருத்திருக்கலாம். ஆனால் இன்று புதிதாக வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்பவர்கள், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் கூடினால் வாகனங்களின் இரண்டாஞ்சந்தைவிலைகள் குறையும் என்பதையும் யோசிக்கவேண்டும். மேலும் அதிக விலையுள்ள சொகுசு ரக வாகனங்களை வாங்க எண்ணியுள்ளவர்கள், இறக்குமதி வரிமட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, வருடாவருடம் கட்ட வேண்டிய சொகுசு வாகனங்களுக்கான சொகுசுவரிகள் குறைக்கப்படவில்லை என்பதைக் கருத்தற்கொள்க.
நல்ல குளிர் காலத்தில் குளிர்களி விற்பதைப்போல அரசாங்கமும் வேண்டாத நேரத்தில், வேண்டப்படாத சலுகையை அறிவித்துள்ளது. நாளை இதன் மூலம் அரசாங்கம் இழக்கும் வருவாயை உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் மீது இன்னும் அதிக வரி விதிப்பதன் மூலம் மீட்டுக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.
குறைக்கப்பட்ட இறக்குமதி வரி விபரங்கள் :