இலங்கை உள்நாட்டு யுத்தம் அரச படைகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வருடகாலம் ஆயிட்டு. இன்னும் அகதி முகாம்களில் மக்கள் அல்லற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், மீள்குடியேற்றப்பட்டோர் என்பவர்கள் எல்லாம் வெற்றுக் குடில் அமைத்து உயிருடன் இருந்துகொண்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள், இன்று உயிரோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் என்ற பதமே ஒரு காலத்தில் பிரச்சினைக்குரிய பதமாகவே இருந்தது. இலங்கைத் தமிழர்கள் என்றால் யார்? ஒவ்வொருவரும் தங்களைச் சார்ந்து வரைவிலக்கணப் படுத்திக்கொண்டாலும், அரசின் உத்தியோகபூர்வ பிரிப்பின் படி இந்தியத் தமிழர், முஸ்லிம் அல்லாத தமிழர்களே இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பினைக்கும் காரணம் இலங்கைத் தமிழர்கள் அக்காலத்தில் தம்மை இந்தியாவிலிருந்து தோட்ட வேலைகளுக்காக இங்கு வந்த இந்தியத் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி இம்மண்ணின் வம்சாவழிக்குடிகளாக அடையாளப்படுத்த எண்ணியதும், இஸ்லாம் மார்க்கத்தையுடைய தமிழ் பேசுவோர் தங்களை தமிழர்களாக அன்றி முஸ்லிம்களாகவே அடையாளப்படுத்தியதும் ஆகும். பிற்காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனத்தவர் இணைந்து சிலவேளைகளில் தமிழ்பேசும் இனத்தவர் என்றும் அடையாளப்படுத்தியதைக் காணலாம்.
ஒவ்வொரு பிரிவினைக்கும் ஏதோ ஒரு சுயநலமே காரணமாக இருக்கிறது. நான், எனது குடும்பம், எனது உறவுகள், எனது நண்பர்கள், எனது சுற்றும், எனது இனம், எனது கிராமம், எனது பிரதேசம், எனது மாவட்டம், எனது மாகாணம், எனது தேசம் என்று ஒரு படிமுறை உலகில் அனைத்து மனிதர்களிடமும் உண்டு. இதில் சிலது மற்றையதை விட முக்கியம் பெறுகிறது. இந்த முக்கியத்துவம் மனிதனிலிருந்து மனிதனுக்கு வேறுபடும். ஜின்னா எனது இனம் என்று சிந்தித்தார், கஸ்ட்ரோ எனது நாடு என்று சிந்தித்தார், திரு.எக்ஸ் எனது குடும்பம் என்று சிந்திக்கலாம்! இவ்வாறாக இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்லிம்கள் எனப்பிரிவடைந்தனர். இலங்கைத் தமிழரிடையே யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், கொழும்புத் தமிழர், மட்டக்களப்புத்தமிழர், திருகோணமலைத் தமிழர், மன்னார்த் தமிழர், தீவுத் தமிழர் என்று பல பிரிவினைகளைக் காணலாம். இவற்றைச் சுருக்கி மேலோட்டமாக வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், கொழும்புத் தமிழர் எனப்பிரிக்கலாம். இதைவிட அந்தந்தத் தமிழரிடையே சாதிப்பிரிவினைகளையும் காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள சாதிப்பிரிவுகளைப் பார்த்தோமேயானால், கலாநிதி.எச்.டபிள்யு. தம்பையாவின் 'The Laws and Customs of The Tamils of Jaffna' என்ற நூலின் படி பிராமணர், வேளாளர் (வெள்ளாளர்), மடைப்பள்ளி, கரையார், சிவியார், குசவர், வண்ணார், அம்பட்டர், கோவியர், தனகாரர், நளவர், பள்ளர், பறையர், துரும்பர் என வகைப்படுத்தப்படுகிறது, இவை செய்தொழில் வேற்றுமையால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் பின்பு வம்சாவழி ரீதியாகக் கருதப்பட்டன. இது போன்ற சாதிப்பிரிவினைகளை ஏனைய தமிழர்களிடமும் காணலாம். இப்படியாக இலங்கைத் தமிழர்கள் பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக பெருமளவு பிரிந்தேயிருந்தனர். இலங்கையில் காணப்படும் பாரம்பரியச் சட்டங்களிலில் யாழ்ப்பாணத்தமிழரின் தேசவழமைச் சட்டமும், மட்டக்களப்புத்தமிழரின் முக்குவச் சட்டமும் குறிப்பிடத்தக்கது, இதில் முக்குவர்ச் சட்டம் காலப்போக்கில் வழக்கிழந்துவிட இன்று வரை எழுதப்பட்ட சட்டமாகிய தேசவழமை தொடர்கிறது. இலங்கைத் தமிழர்களது அரசியலைப் பார்த்தோமேயானால் யாழ்ப்பாண, வன்னி இராச்சியங்களின் பின் ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் எல்லாம் வேளாளர் (வெள்ளாளர்) இனத்தவரின் ஆதிக்கத்தைக் காணலாம். பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் எழுதிய “இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்” என்ற ஆய்வில் அவர் கூறுவதாவது -
........இலங்கைத் தமிழர்களின் அரசியல் யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளேயும் யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பை சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது........ மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியலை முக்குவர் ஆக்கிரமித்ததற்கான சான்றுகள் இல்லை.
ஆகவே இலங்கைத் தமிழர் அரசியலை யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணலாம். இந்நிலை ஆயுதக்குழுக்களின் வருகை வரை தொடர்ந்தது. ஆயுதக் குழுக்களின் வருகையின் பின் சாதி, பிரதேசவாதப் பிரிவுகளில் நிறைய மாற்றம் வந்தது. எல்லாப் பிரதேசத்தைச் சேர்ந்து, எல்லாச்சாதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதன் விளைவு இலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு தனித் தமிழீழக் கொள்கை உருவானது. வடக்கு - கிழக்குப் பிரிவினைகள் மூட்டை கட்டப்பட்டு இணைந்த வடகிழக்கையுடைய தமிழீழக் கனவினை இவ்வாயுதக்குழுக்கள், அதிலும் குறிப்பாக பிற்காலத்தில் பலம்பொருந்திய தனி அமைப்பாக விளங்கிய விடுதலைப்புலிகள் அறிமுகஞ்செய்தனர். வடக்குக் கிழக்கில் ஆயுதக்குழுக்களின் அரசியல் ஆக்கிரமிப்பால் ஏனைய கட்சிகள் பலம் இழந்தன, அழிந்தன அல்லது ஆயுதக்குழுவின் கொள்கையை ஆதரித்தன. ஆயுதக் குழுக்கள் பலம்பெற்றிருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களிடையே கொள்கையளவிலாவது பிரிவினை இல்லாதிருந்தது. இலங்கைத் தமிழரை ஒன்றுபடுத்தி அவர்களின் ஒருமித்த கருத்தாக தமிழீழக் கோரிக்கையைக் காட்டவே ஆயுதக்குழுக்களும் அவை சார்ந்த அரசியல் கட்சிகளும் முயன்றன. 2002-2004 காலப்பகுதியில் மலையத் தலைமைகளையும் அதே குடையின் கீழ் இணைக்கவே முயற்சித்தன. கொள்கையளவிலாவது ஒன்றுபட்டிருந்தது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பலமாகவே இருந்தது. இதற்கு பெருஞ்சூத்திரமெல்லாம் அவசிமில்லை நாம் சிறுவயதில் படித்த ஒற்றுமையே பலம் கதையே போதும், இது மனிதவளம், எண்ணிக்கை சார்ந்த பலமாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவின் பிரிவினை வரை இந்த கொள்கையளவு ஒற்றுமை ஆயுதக்குழுக்களினால் காப்பாற்றப்பட்டே வந்தது, கருணாவின் வெளியேற்றமும், அதனைத் தொடர்ந்து கருணாவின் கிழக்குத் தமிழர் மைய அரசியலும் மீண்டும் ஒரு வடக்குக்-கிழக்குத் தமிழர் பிரிவினையை உண்டாக்க வித்திட்டது, அதன் தொடர்ச்சிதான் இன்று பிள்ளையானின் கிழக்குமாகாண அரசியல். ஆனால் அவர்களுக்கு மக்கள் கொடுத்ததோ பேரதிர்ச்சி. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இரண்டிலுமே பிள்ளையானின் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரதேசவாத விஷமப் பிரச்சாரங்கள் சுயநல-அரசியல் தரப்புக்களால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மீண்டும் தமிழர்களிடையே பிரதேச வாதப் பிரிவினைகளை உருவாக்கி அதில் தமது சொந்த இலாபங்களைச் சேர்த்துக்கொள்ள சில அரசியல் விஷமிகள் இந்தப் பிரிவனையைத் தூண்டுகின்றன. பழைய அரசியல் கதைகளை மீண்டும் எழுதி குழம்பித் தெளிந்த குட்டையை மீண்டும் குழப்ப விளைகிறார்கள். இவர்களிடம் சில கேள்வி கேட்க என் மனம் விளைகிறது. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் (ஒரு பேச்சுக்கு!) இதைச் சொல்வதன் மூலம் நீங்கள் அடைய நினைப்பது என்ன? மீண்டும் பிரதேச வாதப் பிரிவினையால் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன? தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று பட முடியாதா? பழையன கழிதலும், புதியன புகுதலும் வேண்டும். பழைய கதைகளை மீண்டும் ஓதி, குரோதத்தை வளர்த்து, பேராதிக்க சக்திகளின் பிரித்தாழும் தந்திரத்திற்கு இரையாகலாமா?
இன்று பிரதேசரீதியாகப் பிரிவோம், மீண்டும் சாதிகள் ரீதியாகப் பிரிவோம், ஏற்கனவே சிறு பான்மையினம், இனிக் குறுஞ் சிறு பான்மை இனங்களாகப் பிரிந்துபோவோமா? இலங்கைத் தமிழ்மக்கள் பிரிவினைகளைக் களைந்து இன்னும் உறுதியாக ஒன்றுபட வேண்டிய காலம் இது.
****************************************************
References / உசாத்துணை
Tambiah H.W. Dr. 'The Laws and Customs of The Tamils of Jaffna', Women's Education & Research Center Publication 2004.
அம்பலவாணர் சிவராஜா, 'இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் ', கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003.