May 25, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...

இது ஒரு தொடர் பதிவு

இதற்கு முன்னைய அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (01) ஒரு பயணம் தொடங்குகிறது...

முடியாத ஒரு சுற்றுப்போட்டியுடன் எனது றோயல்கல்லூரி விவாத அணிப்பயணம் ஆரம்பமானது. புனித பேதுரு கல்லூரி நடாத்திய அந்த விவாதச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு றோயல் கல்லூரி அணி தெரிவாகியிருந்தது, இறுதிப் போட்டியைப் பின்னொருநாள் நடத்துவோம் என்று கூறியவர்கள் அதன் பின் இன்றுவரை 6 வருடங்களாகியும் இன்னும் நடத்தவேயில்லை. சிலர் தமது விவாத பயணத்தை ஆரம்பிக்கும் முதல் போட்டியின் முடிவை sentimental ஆக நினைப்பது வழக்கம். முதல் போட்டியில் வென்றிருந்தால் நன்று, தோற்றிருந்தால் கவலை ஆனால் எனக்கு எல்லாம் கலந்த ஒரு sentimental உணர்வு!

ஒருவாறு விவாதக் கழகத்திலிருந்து அணிக்குத் தெரிவாகிவிட்டாச்சு இனி ராஜா போல இருக்கலாம் என்று நான் அந்த பதினைந்தாம் வயதில் கட்டிய மனக்கோட்டை உடைய சில நாட்களே தேவைப்பட்டது. அடுத்த பயிற்சி நாளில் எங்களுக்கான பயிற்சிகள் இன்னும் அதிகமாக்கப்பட்டது. முன்னமே குறிப்பிட்டது போல றோயல் கல்லூரி விவாத அணியில் இடம்பெறுவது என்பது இன்னொரு பாடத்தை மேலதிகமாப்க படிப்பதற்குச்சமமானது, அந்த பயிற்சி வகுப்பில் நாம் படிக்கவேண்டிய புத்தகங்கள், எமக்குத் தெரிந்திருக்க வேண்டிய விடயப்பரப்புக்கள், மனப்பாடம் செய்ய வேண்டிய பாடல்கள் என பட்டியல் பட்டியலாக எமக்கு வீட்டு வேலை தரப்பட்டது. அதுவும் இலக்கியத்தில் இன்பம் காணும் senior ஒருத்தர் எங்களுக்கு தந்த இலக்கியப் புத்தகங்களின் பட்டியலைக் கண்டால் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவருக்குக்கூட வயிற்றைக்கலக்கும். மிகைப்படுத்திச் சொல்லவில்லை ஆனால் அதுதான் உண்மை. சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஓரளவாவது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம், மகாபாரதம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், சினிமாப் பாடல்கள், புதுக்கவிதைகள், புரட்சிக்கவிதைகள் என்று கட்டுக்கட்டாய் இன்னும் பல (நான் இப்போது ஞாபகப்படுத்த விரும்பாத) இலக்கிய வீட்டுவேலைகள் ஒருபுறம், மறுபுறம் அரசியல் சமூகஞ் சார்ந்த விடயங்கள் பற்றிய வாசிப்புக்களைச் செய்யவேண்டும், அத்தோடு தினமும் பத்திரிகைகள் வாசித்து, அதிலும் குறிப்பாக ஞாயிறு வாரப் பத்திரிகைகள் வாசித்து அவற்றில் வரும் அரசியல், இலக்கியக் கட்டுரைகள் என்பனவற்றில் முக்கியமானவற்றை தொகுக்கவும் வேண்டும். இவ்வளவும் எங்களுக்குத் தரப்பட்டது நாங்கள் தரம் 10 படிக்கும் போது. அன்றைக்கு நாங்கள் எங்களுக்குள் எங்கள் seniors ஐ திட்டடியது போல இதற்கு முன்பு யாரும் திட்டியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இத்தனை ஆக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தாலும் இவற்றில் பலதை நான் விருப்புடன் படித்தேன், அதிலும் குறிப்பாக கம்பராமாயணத்தை மிகவும் ஆர்வத்தோடு படித்தேன், கம்பனுக்குப் பிறகு எனக்கு மிகப்பிடித்தது பாரதியார் கவிதைகள். சங்கப் பாடல்களில் புறநானூற்றுப் பாடல்களிலும் எனக்கொரு காதல் பிறந்தது. அரசியல் சமூக விடயங்களைப் படிப்பதில் எனக்கு அவ்வளவு பிரச்சினை இருக்கவில்லை ஏனெனில் ஏற்கனவே நான் அதைப் படித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் நாம் எல்லோரும் எல்லாவற்றையும் படித்தோம் என்று சொல்வதற்கில்லை.அப்படியே seniors அதிகம் கண்டிப்போடு கேட்டால் கூட O/L exam வருது என்று சாக்குச் சொல்லி escape ஆகிவிடுவோம்! ஆனாலும் அந்தக் கண்டிப்பு எங்கள் அறிவிற்கு நிறைய ஊட்டத்தை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது தம்பி அடுத்த மேசையிலிருந்து 10 பாரதியார் கவிதைகளை மனனஞ்செய்து கொண்டிருந்தான், அதுவும் சும்மா அல்ல, இடைவெளிக்கிடைவெளி அந்த வீட்டுவேலையைத் தந்த senior ஐ நன்கு திட்டியபடி. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு சின்ன புன்முறுவல் பூத்தது.  அடடா நாங்கள் அன்று செய்தததைத் தான் இன்று வருபவர்களும் செய்கிறார்கள்,  நாங்கள் எங்கள் seniors ஐத் இந்த கண்டிப்புக்காக மனதுக்குள் திட்டினோம், நாங்கள் seniors ஆன போது எங்களையும் சிலர் திட்டித்தானே இருப்பார்கள்! “வாழ்க்கை ஒரு வட்டமடா”! - என்தம்பிக்கும் ஒருநாள் புரியும் இந்த வீட்டுவேலைகளின் அருமை! (எனக்கும் ஒரு நாள் புரிந்தது போல....)

இத்தனை இலக்கியங்கள் படிப்பது மட்டுமல்ல அதை அடுத்த பயிற்சி நாளில் விவாதத்தில் பயன்படுத்தவும் செய்தோம். Theory மட்டுமல்ல Practicals ம் எங்கள் பயிற்சியில் முக்கியம் பெற்றது. அண்மையில் வெற்றியின் சூத்திரம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை்ப படிக்கும் போது அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், உங்களிடம் எவ்வளவு வளம் இருக்கிறதென்பது பிரச்சினையல்ல, அதை திறமையாகப் பயன்படுத்தும் திறன் உங்களிடம் இருக்கிறதா? என்பதே முக்கியமானது. வெறுமனே புத்தகங்களை வாசித்துவிட்டால் போதாது அந்த அறிவைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் தான் வெற்றியின் திறவுகோல். நாங்கள் இரண்டையும் இங்கு படித்தக்கொண்டோம்! 

இன்றைய கல்வித்திட்டத்தில் இணைப்-பாடவிதானச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், காரணம், நாம் பெறும் ஏட்டுக்கல்வியைப் பிரயோகப் படுத்த அதுவே சந்தர்ப்பமாக அமைகிறது. ஆனால் பல மாணவர்கள் இணைப்-பாடவிதானச் செயற்பாடுகளில் அதிகம் அக்கறைகாட்டாமல் இருப்பது மிகக்கவலையளிக்கிறது. படிப்பதைவிட்டு விட்டு ஏனைய செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்ற தேவையில்லை ஆனால் வெறும் புத்தகங்களும் பரீட்சைகளும், உயர்புள்ளிகளும் மட்டும் வாழ்க்கைக்குத் தேவையானதைத் தந்து விடாது. இந்த உண்மையை நான் உணர்ந்து கொண்டது இந்த அணியில் சேர்ந்ததன் பின்புதான். எனக்கு நல்ல நண்பர்களைத் தந்ததும், தோல்வியைக் கண்டால் துவண்டுவிடும் எனக்கு, அந்தத் தோல்வியையே தோற்கடித்துவிடும் மனத்திடத்தை உண்டாக்கியதும், மனிதர்களைப் படிக்கும் அனுபவத்தைத் தந்ததும் இந்த விவாத அணிதான் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவேன்..... வெற்றி தோல்வி நிறைந்த ஒரு பயணத்தின் ஆரம்பத்திற்கு அருமையான பயிற்சியை விவாத அணி எனக்கு வழங்கியது.....

தேடிச் சோறு நித‌ந்தின்று   
பல‌ சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம் வாடித் துன்பம் மிக உழ‌ன்று  
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்  
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்  
பல வேடிக்கை மனிதரைப் போல் 

இவனும் வீழ்வானென நினைத்தாயோ....

- மகாகவி சுப்ரமணிய பாரதி