Dec 27, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 01

 ஜனவரி 26! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவது யார் என்ற கேள்வி இன்று அனைத்து இலங்கையர் மனத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இம்றை 22பேர் போட்டியிட்டாலும் 2 பேரின் பெயர்தான் பரபரப்பாக அடிபடுகிறது, அவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளா் ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவினதும் ஆகும். ஆனால் தமிழர் மத்தியில் , இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்ணவும், சுயேட்சைத் தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கமும் கூடக் கருதப்படுகிறார்கள். இந்தச் சந்தியில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார்? (யாருக்கு எந்தளவு வாய்ப்பு இருக்கிறது), பிரதான வேட்பாளர்களின் குறை நிறைகள் பற்றிய கொள்கைகள் பற்றிய அலசலாக இந்தப் பதிவு அமையும்.

மஹிந்த ராஜபக்ஷ




தற்போதைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணைக்காக தனது முதற்தவணைப் பதவிக்காலம் நிறைவடைய 2 வருடக காலம் முன்பாகவே ஜனாதிபதித்தேர்தலை நடாத்துகிறார். இவருக்கு மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுவதாகத் தெரிகிறது இதற்கு மிகப்பிரதானமான காரணம் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியேயாகும். இவற்றைவிட நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் இடம்பெற்ற சமூக, பொருளாதாரக் கீழ்க் கட்டுமானப் பணிகளும் அதிலும் குறிப்பாக தென் மாகாணத்தில் செய்த அபிவிருத்திப் பணிகளும் மக்கள் மத்தியில் இவருக்கான நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை நான் எழுமாற்றாக எழுதவில்லை - இந்நாட்டில் பல பகுதிகளிலுமுள்ள வேறுபட்ட மக்களிடையே பேசி அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் தான் நான் இந்தப் பதிவை வரைகின்றேன். இப்படியாக தற்போதைய ஜனாதிபதி மீது மக்களுக்கு (குறிப்பாகச் சிங்கள மக்களுக்கு) நன்மதிப்பு இருந்தாலும் அவற்றை மீறி பல அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கிறது. அடிப்படையில் பொருளாதார ரீதியில் மக்கள் ஏதோ ஒரு குறையை உணர்ந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். விலையேற்றம் பாரிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் உலாவிக்கொண்டிருந்தாலும் “யுத்த வெற்றி” என்ற மாயத்திரை அதை மறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. 



இதை விட இன்னும் பல அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இலங்கையின் மெகா அமைச்சரவை தொடர்பிலும், அமைச்சர்களின் நியமனம் தொடர்பிலும் இலங்கையின் பலதரப்பட்ட மக்களும் அதிருப்தியுற்றே இருக்கின்றார்கள். கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி பரிசளிக்கப்படுவதும், “தகுதி” அற்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதும், ஒரே துறைக்கு பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் மக்கள் இதை ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கும் படி செய்திருக்கிறது. இந்த அமைச்சர்களுக்கான வீண் செலவுகள் தொடர்பிலும் இலங்கையின் புத்திஜீவிக் குழாம் கவலை தெரிவித்திருக்கிறது - இதை பொதுநிதியின் வீணாக்கலாகவே பலர் கருதுகிறார்கள். மேலும் குடும்ப ஆட்சி தொடர்பிலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.  அதிலும் குறிப்பாக சரத் .ஃபொன்சேகா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பெரும்பாலான ஆட்சிக்கேடுகளுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. 



இவற்றுக்கும் மேலாக யுத்த வெற்றி என்பதையே ஜனாதிபதி பிரதான பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ஆனால் அது “தமிழ்ச் சமூகத்தைப்” பெரிதும் ஆர்வங்கொள்ள வைக்கும் ஒன்றாக இருக்கவில்லை. தமிழர் விடுதலைப் போரின் தோல்வி என்பதற்கப்பால் (அதை ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தினாலும் கூட) அகதி முகாம்களில் தமிழர்கள் அகதிகளாகச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழிந்ததும், மேலும் யுத்தத்தின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் தொடர்பிலான பல்வேறுபட்ட கருத்துக்களும் தமிழர்களை இந்த அரசாங்கத்தின் மீது பெருமளவு நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 



என்னதான் கோடி கோடியாகக் கொட்டி விளம்பரங்களும், பிரச்சாரங்களும் செய்தாலும் மக்களின் மனதில் இருக்கும் வடுக்களுக்கு மருந்து கொடுக்காத வரை அவர்களது நிகழ்காலப் பிரச்சினைகளுக்கே தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வரை “வளமான எதிர்காலம்” பற்றி மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள். இன்று காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவனுக்கு நாளைக்குக் கிடைக்கப்போகும் மாடமாளிகை பற்றிக் கவலையில்லை அவனது கவலையும் தேவையுமெல்லாம் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காயத்திற்கான மருந்தும் தீர்வும்தான். 



இவற்றைவிட யுத்தவெற்றிக்குப் பெரிதும் பங்களித்த சரத் ஃபொன்சேகா (தற்போதைய பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்) தற்போது ஜனாதிபதி பற்றியும் அரசாங்கம் பற்றியும் வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்திகளும், குற்றச்சாட்டுகளும் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஜனாதிபதியின் வாக்கு வங்கி மீது ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிதர்சனம். பதவிக்காலம் நிறைவடைய 2 வருடங்கள் முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தக் கோரியதன் காரணம் வெற்றியின் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கிருக்கும் உறுதியான நம்பிக்கையாகும் ஆனால் இன்று அரச ஊடகங்களின் மூலம் நடாத்தப்படும் அதீத பிரச்சாரங்களும், பிரதான எதிர்த்தரப்பு வேட்பாளர் மீதான வசைத் தாக்குதல்களும் அவரது வெற்றியின் மீதான உறுதியான நம்பிக்கை சரத் ஃபொன்சேகாவின் அரசியற் பிரவேசத்தால் அசைக்கப்பட்டிருக்கிறது என்பதையே பறை சாற்றுகிறது. எதிரிகள் தானாக உருவாவதில்லை - நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கின்றோம் என்பது பிரபலமான கூற்று அதுபோல மீதம் 20 வேட்பாளர்கள் இருக்க ஒரு வேட்பாளர் மீது வசை பாடத் தொடங்கியதனூடாக அவரையே தனது பிரதான எதிர்த்தரப்பாக அடையாளப்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.



இந்நிலையில் இத்தேர்தலில் ஜனாதிபதியின் அதீத வெற்றியின் நம்பிக்கை குறைந்து போய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றிபெற மாட்டார் என்று அறுதியாகக் கூறிவிட முடியாது. நிகருக்கு நிகராகப் போட்டியிருந்தாலும் அமைச்சர்கள், அரசியல் தலைவா்கள் பலரின் ஆதரவும் விளம்பரம், பிரச்சாரங்கள் என்பனவற்றுக்காகச் செலவழிக்கப்படும் பல கோடி ரூபாய்களும் அதிலும் இம்முறை புதுமையாக இணையவழி விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களிலும், செய்தி, விளையாட்டு மற்றும் இலங்கையர்கள் சொடுக்கும் முக்கிய தளங்களிலெல்லாம் “வளமான எதிர்காலம்” தேர்தல் பிரச்சார விளம்பரங்களும் அந்த மிக நெருங்கிய போட்டியை மீறி மயிரிழையில் வெற்றியை ஜனாதிபதிக்குத் தரவாய்ப்பிருக்கிறது. மேலும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் பதவியிலிருந்த ஜனாதிபதி 2ம் முறை தேர்தலில் போட்டியிட்டுத் இதுவரை தோல்வி கண்டதில்லை. எது எவ்வாறு இருப்பினும் இம்முறை தேர்தல் மிக விறுவிறுப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி.


பகுதி 02ல் அலசல் தொடரும்....


அடுத்தடுத்த பகுதிகளில் ஏனைய முக்கிய வேட்பாளர்கள் தொடர்பாக அலசப்படுவதுடன், வெற்றிவாய்ப்புக்கள், தேர்தல் கால நிகழ்வுகள் பற்றியும் ஆராயப்படும்.