Jan 15, 2010

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 03

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள இந்நிலையில் எனது தொடர் பதிவின் 3வது பகுதியைப் பதிவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு தொடர்கிறேன்.

கடந்த பதிவைச் சில கேள்விகளுடன் முடித்திருந்தேன்...

அடுத்த ஜனாதிபதியாக ஃபொன்சேகாவால் வர முடியுமா? அவரது கொள்கை என்ன? தமிழர்கள் அவரை நம்பலாமா? சிறுபான்மையினர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன? ஒரு வேளை சிறுபான்மையினர் ஃபொன்சேகாவை ஆதரிப்பது இஞ்சி கொடுத்த மிளகாய் வாங்கிய கதையாகுமா?


இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றோடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்த சிலர், அரசாங்கத்திலிருந்து பிரிந்துவந்த சிறுபான்மைப் பிரதிநிதிகள் என அநேக சிறுபான்மையினங்களின் பிரதிநிதிகள் சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளித்திருக்கும் இந்நிலையில் சிறுபான்மையினர் எவ்வளவு தூரம் அவரை நம்பலாம் என்பது சிறுபான்மையினர் எவ்வளவு தூரம் தமது பிரதிநிதிகளை நம்பலாம் எனும் நிலைக்குத் திரிபடைந்துள்ளது. விரிவாகக்கூறின் இன்று தமிழர்கள் ஒரு முன்னாள் இராணுவத் தளபதியை ஆதரிக்க நிச்சயம் தயக்கம் காட்டுவார்கள் ஆனால் அதை மீறியும் சரத் என்ற தனிநபருக்கு ஆதரவு அளிக்க அந்தத் தனிநபர் மீதான நம்பிக்கையை விட அவரை ஆதரிக்கும் நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மீதான நம்பிக்கையின் பேரிலேயே வாக்களிக்கவுள்ளார்கள் என்பது நிதர்சனம். இலங்கையின் எந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும் இம்முறைத் தேர்தல் மிகவும் சிக்கலான நிலையை சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து நம்பி வாக்களித்த தலைவர்கள் கடைசியில் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையுமே அளித்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் கதை (உதாரணம் - ஜே.ஆர், சந்திரிக்கா) ஆனால் இம்முறை தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் சரத் ஃபொன்சேகாவிற்கு வாக்களிக்கப்போகின்றார்கள் என்றால் அதன் காரணம் சரத் மீது கொண்ட நம்பிக்கை என்பதைவிட அவரை ஆதரிக்கும் தமது நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மீதான நம்பிக்கையே ஆகும். தமிழர்களைப்பொருத்தவரை கூட்டமைப்பு, மனோகணேசன் மற்றும் ரணில் விக்ரமசிங்ஹ மீதான நம்பிக்கையிலேயே மக்கள் சரத்திற்கு வாக்களிக்கப் போகின்றார்களேயன்றி அது சரத் மீதான முழு நம்பிக்கையினால் அல்ல.


அண்மையில் எனக்கு முதலில் அதிர்ச்சி கொடுத்த விடயம் சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனமான “விஷ்வாசனீய வெனசக்”  - நம்பிக்கையான மாற்றம். 10 முக்கிய அம்சங்களை முன்வைத்திருக்கும் ஃபொன்சேகா அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உறுதியான தீர்வேதும் பற்றிக் கூறாதமை பற்றி நான் முதலில் அதிர்ச்சியடைந்திருந்தேன் ஆனாலும் அதற்கான காரணத்தை ஊகிக்க நீண்ட நேரம் பிடிக்கவில்லை. முன்னர் குறிப்பிட்டது போல இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் முதுகெலும்பாக அமைவது “யுத்த வெற்றி” - அதைப் பெற்றுக்கொடுத்தது மஹிந்தவா? சரத்தா? என்பது தான் ஆரம்ப கட்டப் பிரச்சாரமாக இருக்கிறது. இந்நிலையில் சிங்கள மக்களைப் பொருத்தவரையில் யத்த வெற்றி தொடர்பில் இருவரும் சமமான நிலையிலேயே கருதப்பட்டாலும் மாற்றம் ஒன்று அவசியம் - ஊழலற்ற தேசம் வேண்டும் என்ற நோக்கத்துக்காக சரத்தை அவர்கள் ஆதரிக்கலாம் இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய மஹிந்த சிந்தனை 2ல் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடாத நிலையில் சரத் ஃபொன்சேகா அது பற்றித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தால் உடனே அரசாங்கமும், அரச ஊடகங்களும் அடித்துப்பிடித்தக்கொண்டு தேசத்தை சரத் துண்டாக்கப்போகிறார் தமிழருக்கு தனிநாடு கொடுக்கப்போகிறார் எனப்பிரச்சாரப் பீரங்கிகளை இயக்கத்தொடங்கிவிடுவார்கள் - இது சரத்தின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும். இது நடக்கும் என்பதற்கு உதாரணத்தை நாம் இங்கு எமது கண்முன்னே கண்டு கொண்டுதான் இருக்கிறோம். கூட்டமைப்பக்கும்-சரத்துக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் - அதை வெளிப்படுத்துக என அரசாங்கம் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபடுவதும், பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கூறிய கருத்தை வைத்தக்கொண்டு விளம்பரம் செய்து சரத் தமிழருக்கு சுயாட்சி கொடுக்கப்போகிறார் என விளம்பரம் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் அவர்களின் ராஜதந்திரத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என நான் எண்ணுகிறேன். ஏனெனில் தமிழர் அல்லது முஸ்லிம்கள் ஃபொன்சேகாவிற்கு அளிக்கும் வாக்குகளுக்கு அவரை ஆதரிக்கும் சிறுபான்மைத் தலைவர்களே நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்.


மேலும் சரத் ஃபொன்சேகாவைவிட உறுதியான வேறு வேட்பாளர் இல்லாமையை குறிப்பிட்டே ஆகவேண்டும். சிலர் விக்கிரமபாகுவையும், சிவாஜிலிங்கம் பற்றியும் குறிப்பிடலாம். என்னுடைய முழுத்திறனையும் பந்தயத்திலிட்டு சவாலிடுகிறேன் இந்தத் தேர்தலல்ல, எந்தத் தேர்தலிலும் விக்கிரமபாகுவால் வெற்றி பெற முடியாது - விக்கிரமபாகு தமிழருக்காகக் குரல் கொடுத்தார் என்பார்கள் - நான் ஏன் என்று யோசித்தென். விக்கிரமபாகு சிங்களவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு தலைவர் - அவருக்கு அடுத்த வாக்கு வங்கி உருவாககத்திற்குத் தமிழர்களை விட்டால் வேறு வழி?


சிவாஜிலிங்கத்தை பொருத்த வரையில் எனக்குச் சில முரண்பாகள் தோன்றியது - அவற்றின் விளைவாக ஒரு முடிவும் தோன்றியது. முரண்பாடுகளைச் சொல்கிறேன் முடிவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்படுவார் என்ற நிலையிலிருந்தவர் - இங்கு வந்து இதுவரை கைது செய்யப்படாது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எங்ஙனம்? அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர் என்றால் ஏன் கூட்டமைப்பு அவரை ஆதரிக்கவில்லை? கூட்டமைப்பில்அதிகம் “பேசக்” கூடியவரான ஸ்ரீகாந்தா இப்போதெல்லாம் ஏன் அமைதியுடன் இருக்கிறார்? சரத்தை ஆதரசிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் திட்டும் அரசாங்கம் - சுயாட்சிக் கோரிக்கையுடன் களம் புகுந்த சிவாஜிலிங்கம் பற்றி ஏன் கருத்தேதும் பேசவில்லை - அவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஏன் கூறவில்லை? இந்த முரண்பாடுகளை வைத்து இந்த Puzzle ஐப் பொருத்திப் பாருங்கள் உங்களுக்கும் ஒரு முடிவு கிடைக்கும். ஆக தமிழ் புத்திஜீவிகள் பகிரங்கமாகக் கோரிக்கைவிடுத்தது போல - எமது வாக்குகளை ஜனாதிபதியாக வரவாய்ப்பில்லாதவர்களுக்கு அளித்து வீணாக்குவதைவிட - வரத் தகுதியானவர்களுக்கு அளித்து அவர்களிடம் எமது கோரிக்கைகளை பேரம் பேசுவதன் மூலமே நாம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இங்க ஒன்றைக் கவனிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ. ஜனநாயக மக்கள் முன்னணியோ, முஸ்லிம் காங்கிரஸோ எழுமாற்றாக சரத்தை ஆதரிக்கவில்லை - தமது கோரிக்கைக்கு அவர் இசைந்ததனால் மட்டுமே அவரை ஆதரிக்கின்றன்.

சரத் ஃபொன்சேகாவின் கொள்கையைப் பொருத்தவரை அவரது எல்லாத் திட்டங்களதும் அடிநாதம் பாராளுமன்றத்தில் தங்கியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றை மையப்படுத்திய ஆட்சியை கொண்டு வர அவர் உறுதிகூறுகிறார். ஆக அது நிறைவேறும் பட்சத்தில் மக்கள் சரத்தின் தனிப்பட்ட நிலைப்பாடுகள் பற்றிப் பயப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு வேளை அது நடைபெறாது போனால்?


ஒருவேளை பதவிக்கு வந்தபின்னே அவர் அவரை ஆதரித்த ஏனைய தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு எதேச்சாதிகாரமாக நடந்துகொண்டால்? இந்தக் கேள்வி பலர் மனதில் இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். சரத் ஜனாதிபதியானாலும் அவருக்கென்று தனிக் கட்சியோ, அல்லது பாரளுமன்ற பலமோ இல்லை. ஆக அவர் எதேச்சாதிகரமாகச் செயற்படத்துணிந்தால் நிச்சயமாக பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலமோ (அது நடப்பது கொஞ்சம் சிக்கலானது) அல்லது பாராளுமன்றம் அரசியல் யாப்புத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து அவரது நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதன் மூலமும் அந்நிலையை மாற்றிவிடலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் பொருத்தவரையில் அவருக்கு என்று கட்சியிருக்கிறது - பாராளுமன்ற பலம் இருக்கிறது ஆகவே அவர் ஒருவேளை எதேச்சாதிகரமாகச் செயற்பட்டால் (!?) அவரது கட்சியினர் அவருக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அவர் தயக்கமின்றி தனது எதேச்சாதிகாரத்தைத் தொடரலாம், ஆனால் சரத் ஃபொன்சேகாவின் நிலைவேறு - அவர் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குப்படி அவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வருவார் (இங்கு அவர் சார்ந்து நிறைவேற்று அதிகார ஒழிப்பு அமையாது என்பதை கருத்திற் கொள்க - அது முழுமையாகப் பாராளுமன்றம் சார்ந்தது - ஆனால் ஜனாதிபதியாக அவர் அதை செய்ய ஆதரிப்பது ஒரு பலம் - அவ்வளவே). அவர் முன்வராத பட்சத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளெல்லாம் இந்த ஜனாதிபதி முறை ஒழிப்பையே எதிர் பார்த்திருக்கிறது ஆகவே அவை நிச்சயமாக தமது பாராளுமன்ற பலத்தின் மூலம் (இன்றைய ஆளுங்கட்சியும் உடன்படும் - ஏனெனில் அவர்கள் தாம் சாராத ஒருவரை நிறைவேற்றதிகாரத்தில் வைக்க விரும்பமாட்டார்கள்) அரசியல் யாப்புத்திருத்தமொன்றினூடாக நிறைவெற்றதிகாரமுள்ள ஜனாதிபதிமுறையை ஒழிப்பார்கள். ஆக மொத்தத்தில் சரத் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பது நிதர்சனம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமா? அதன் விளைவுகள் என்ன? - இது பற்றி பின்னர் வேறொரு பதிவில் அலசுவோம். ஆக இன்று உள்ள முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுள் பல கட்சிகளின் ஆதரவு உள்ள சரத் ஃபொன்சேகா அடுத்த ஜனாதிபதியானாலும் அவரின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தடுக்கும் பிரம்மாஸ்திரமும் அந்தக் ஆதரவுக் கட்சிகளிடமுண்டு.

அடுத்த கேள்வி சரத் ஜனாதிபதியாவாரா? வாய்ப்பு இருக்கிறதா? - இந்தக் கேள்வி பற்றி நான் சிந்தித்திருந்த வேளை ஒரு குறுஞ்செய்தி என் கைத்தொலைபேசியை எட்டியது - அதில் கூறியதை தருகின்றேன் - நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

இலங்கையில் ஒருவர் ஜனாதிபதியாக 50 வீத வாக்குகள் தேவை. ஐ.தே.கவிடம் 35வீத வாக்குப்பலமுண்டு, ஜே.வி.பியிடம் ஒரு 5 சதவீத வாக்குப்பலமும், ஜ.ம.மு, த.தே.கூ, மலையத் தலைவர்கள் மற்றும் ஃபொன்சேகாவின் ஏனைய ஆதரவுத் தலைவர்களிடம் எனக்கூட்டாக ஒரு 10வீத வாக்குப்பலமும் இருக்கிறது. இவை மொத்தமாக 50 வீதத்தைத் தந்துவிடும். இதைவிட ஃபொன்சேகாவுக்கென மேற்கூறிய கட்சிகள், தலைவர்கள் சாராத வாக்குகள் (சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் பலர் கூட ஃபொன்சேகாவை விரும்புகிறார்கள்) இன்னும் எத்தனை வீதமுண்டு ஆக அவருக்கு வெற்றிவாய்ப்பு உண்டு!

இப்படிச் சொல்கிறது அந்த குறுஞ்செய்தி - இது கொஞ்சம் மிகையான பக்கச்சார்பான தகவல்தான் ஆனால் இதை முற்றிலுமாக மறுப்பதற்குமில்லை. நான் இலங்கையின் அனேக பகுதிகளைச் சார்ந்தவர்களோடு எதேச்சையாக பேசியதில் பலர் நேரடியாகத் தங்கள் விருப்பத்தைச் சொல்ல விரும்பாவிடினும் (இல்லை - பயப்பட்டாலும்) மாற்றத்தை விரும்புகிறோம் என்கிறார்கள்.


எல்லாம் சரி நான் என்ன ஃபொன்சேகா ஆதரவாளனா? (நீங்கள் யோசிக்கலாம்) - பதிலுடன் மேலும் பல்வேறுபட்ட தேர்தல் சம்பந்தமான அலசல்களுடன் அடுத்தபதிவில் சந்திக்கின்றேன்.

பி.கு. - 2ம் பகுதிக்கும் 3ம் பகுதிக்குமிடையிலான நீண்ட கால இடைவெளிக்கு வருத்தத்தைத் தெரிவித்தக்கொள்கின்றேன். களநிலவர தேடலுக்காகக் கொஞ்சக் காலம் காத்திருந்தேன் அவ்வளவுதான்.

பகுதி 04ல் அலசல் தொடரும்....