Oct 24, 2009

அடுத்த ஜனாதிபதி யார்?

எலெக்ஷன் நடக்காத ஸ்ரீலங்கா பூ இல்லாத பூந்தோட்டம் மாதிரி. தேர்தல்கள் என்பது அடிக்கடி நடந்து கொண்டிருப்பதால் கடந்த ஒரு தசாப்தத்தில் பாராளுமன்றம் தனது முழு ஆயுளைப் பூர்த்தி செய்ததே இல்லை. எப்படியாவது ஜனாதிபதியாக இருக்கும் பெருமகனார் பாராளுமன்றத்தை இடையிலேயே கலைத்து மறுதேர்தல் நடாத்திவிடுவார். இப்போதும் இலங்கையர் நாம் அனைவரும் அடுத்து ஜனாதிபதித் தேர்தலா இல்லை பாராளுமன்றப் பொதுத் தேர்தலா என எண்ணிக்கொண்டிருக்கின்றோம். பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட தங்கள் ஊகங்களைப் போட்டிபோட்டுக் கொண்டு எழுதி வருகிறது.

எனது கணிப்பு என்னவென்றால் அடுத்து நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தல்தான். சாணக்கியத்தனமான எந்த ஜனாதிபதியும் இந்த முடிவையே எடுப்பார்கள் ஏனெனில் “யுத்த வெற்றி” என்ற பிரம்மாஸ்திரம் கையில் இருக்கும் போது தேர்தல் யுத்தத்தில் குதிப்பதில் பயமில்லை அதுவும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி என்பது சாத்தியமில்லை என்ற கணிப்புடன் தாராளமாகத் தேர்தலை நடத்தலாம். ஆனால் அதற்கு முன்பாக பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தினால் எதிர்க்கட்சிகளிடம் வலுவான “விலையேற்றம்” - “பொருளாதார வீழ்ச்சி” போன்ற அஸ்திரங்கள் இருப்பது முழுத்தோல்வியை ஆளுங்கட்சிக்குத் தராவிட்டாலும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். தென்மாகாண சபைத் தேர்தல் இதைத் தெளிவாக உணர்த்தியிருந்தது.

சரி அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் என்றால் அடுத்த ஜனாதிபதி யார்? யோசிக்காமலேயே விடையளித்துவிடலாம். ஏனெனில் இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வரலாற்றில் இரண்டாம் முறையாகத் தெரிவுசெய்யப்படப் போட்டியிட்ட எந்த ஜனாதிபதியும் தோற்றதில்லை. (ஜே.ஆர் சாணக்கியத்தனமாக சர்வசன வாக்குப்பதிவை நடத்தி ஒப்பங்கோடல் மூலம் தனது பதிவிக்காலத்தை இரண்டாம் முறைக்கு நீட்டித்துக் கொண்டார், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருமுறையம் வெற்றிபெற்றார்). ஆனாலும் போட்டியென்று வந்துவிட்டால் இன்னார் தான் வெற்றியாளர் என்று 90 வீதம் தெரிந்து விட்டாலும் கூட எதிர்ப் போட்டியாளர்கள் யார் என்பதை ஆராய்வதில் சுவையிருக்கிறது. ஏனெனில் 90 வீதம் தோல்வி நிச்சயம் எனறு தெரிந்தும் போட்டியிடுபவர்கள் அவர்கள். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்ற பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது தான் கோடி ருபாய்க் கேள்வி (அது தான் மில்லியன் டொலர் குவஸ்ஷன்!).

அண்மையில் ஜே.வி.பி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி, முன்னாள் இராணுவத்தளபதியும் இன்னாள் விளையாட்டமைச்சின் செயலாளருமான சரத் .ஃபொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் “பொது“ அபேட்சகராக நியமிக்க வேண்டி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கூட்டணியிடம் (ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகளின் கூட்டணி) வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இன்றுவரை மௌனமாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் சில இதனை வலுவாக எதிர்த்திருந்தன. குறிப்பாக மனோ கணேசன் பகிரங்கமாக இதனை எதிர்த்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி முடிவு இன்னும் சரியாகத் தெரியவில்லை

ஆனாலும் அவர்கள் இதற்கு ஒத்துப் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு என்றுதான் தெரிகிறது. ஏனெனில் பொதுவே ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் கொள்கை ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் ஒத்துப் போவதில்லை (முதலாளித்துவத்திற்கும் இடதுசாரித்துவத்திற்கும் ஒத்துப் போகுமா என்ன?). ஐக்கிய தேசியக் கட்சி தனது தலைவரை அல்லது முக்கிய உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துமெ ஒழிய வேற்றொருவருக்கு ஆதரவளிக்கும் சாத்தியம் குறைவு அதிலும் தன்னுடைய சில ஒன்றியக் கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்தை மீறி இந்த விடயத்தில் முடிவெடுக்காது.

அப்படியானால் மீண்டும் தேர்தலில் பிரதான எதிர்ககட்சி அபேட்சகராக நிற்கப்போவது ரணில் விக்ரமசிங்ஹவா? என்ற கேள்வி இங்குதான் எழுகிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தர்க்க ரீதியாகக் குறைவுதான். ஏனெனில் இதுவரை ஆளுங்கட்சியினரால் தோல்வியின் கின்னஸ் சாதனை நாயகன் என போற்றப்படும்(?) ஐக்கியத் தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தோல்வி 90 வீதம் உறுதியான தேர்தலில் மீண்டுமொரு முறை போட்டியிட்டு ஆளுங்கட்சியினரின் “போற்றுதலை” உண்மையென உறுதிப்டுத்துவாரா என்பது நிச்சயமில்லை அதேவேளை அரசியலிலும் எதுவும் நிச்சயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் நெருங்கிய வட்டாரங்களின் கருத்துக்களின்படி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தலில் நிற்கப்போவதில்லை என்பதே தற்போதைய நிலைப்பாடாம். அப்படியானால் யார் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்துத் தேர்தலில் நிற்பார் என்ற கேள்வி இன்னும் விடையின்றி தொக்கு நிற்கிறதே...

 இது தொடர்பில் பலர் பல கருத்துக்களையும் வதந்திகளையும் கூடக் கூறுகிறார்கள். சிலரின் கருத்துப்படி எஸ்.பி.திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது என்கிறார்கள். எந்தச் சவாலையும் சந்திக்கும் பலம் எஸ்.பி.யிடம் உண்டு என்பது அவரது பேச்சில் தெரிகிறது ஆனால் அது வெறும் வாய்ச்சொல்தானா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இடையில் சில காலம் அனைவர் மனத்திலும் அடிபட்ட பெயர் முன்னாள் தலைமை நீதிபதி சரத். என்.சில்வாவினுடையது - ஒரு வேளை இவர்கூட நிறுத்தப்படாலாம் என்கின்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. தனது தலைமை நீதிபதிப் பதவியின் இறுதிக்காலகட்டத்தில் மக்கள் நலன் கருதி அவர் வழங்கிய சில தீர்ப்புக்கள் இன்னும் மக்கள் மறக்கவில்லை என்பது தான் அவரது பெயரும் அடிபடக்காரணம். ஆனால் இன்னமும் எனக்குள் எரியும் நெருப்பு ஒன்று உள்ளது அதுதான் இலங்கைத் தமிழ் மக்களின் தவறான ஒரு நம்பிக்கை. அதாவது தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதி ஆக முடியாது என்ற கருத்து. அதை ஒரு அரசியல் யாப்பு விதி என பல தமிழர்களும் நினைத்துக்கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இனம் ஒரு தடையல்ல அப்படி எந்த ஒரு அரசியல் யாப்பு விதியும் இல்லை அப்படியிருந்திருந்தால் அமரர்.குமார் பொன்னம்பலம் 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது எப்படி? பல இலட்சம் வாக்குகளைப் பெற்றது எப்படி? சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழர்களும், முஸ்லிம்களும் கூட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் இன விகிதாசாரத்தின் படி கிட்டத்தட்ட 78 வீதம் சிங்களவர்களே இருப்பதாலும் இனம் சார்ந்து வாக்களித்தல் பழக்கப்பட்டு விட்டதாலும் சிறுபான்மையினத்தவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது இது வரை எட்டாக்கனியாகவே இருக்கிறது.

எனக்குள்கும் ஒரு கனவுண்டு - ஒரு நாள் இன பேதங்களைக் கடந்த இலங்கையில், இன்று அமெரிக்காவில் நிறபேதம் கடந்து பராக் ஒபாமா ஜனாதிபதியானது போல இன பேதங்களைக் கடந்து தமிழன் ஒருவன் ஜனாதிபதியாக வேண்டும் - இது சர்வ லோகத்திற்கும் இலங்கையை முன்னுதாரணமாகக் காட்டக்கூடிய உயர்ந்த சாதனையாக அமையும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றிய யூகங்கள் நிறைய இருந்தாலும் நிச்சயமான பிரதான எதிர் வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் - வேட்பு மனுத் தாககல் செய்யும் இறுதி நாளில் யார் பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்பது தெரியவரும் - ஏனெனில் பிரதான வேட்பாளர்கள் எல்லாம் இறுதி நாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதுதானே இலங்கையின் அரசியற்பாணி (ஸ்டைல்!).

எல்லாம் சரி அடுத்த ஜனாதிபதி யார்? - வரலாறு மீளும் ஆனால் நல்ல தலைவன் உதிக்கும் போது அது கூட மாறும்.!