Jun 29, 2021

பல்கலைக்கழக அனுமதியில் "தரப்படுத்தல்"

- என்.கே.அஷோக்பரன்


இலங்கைத் தமிழ்ச் சமூகமானது, அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழ் சமூகமானது காலனித்துவக் காலகட்டத்திலிருந்து கல்விச் சமூகமாக தன்னை வடிவமைத்திருந்தது. தன்னுடைய பிரதான வாழ்வாதாரமாக கல்வியினாலும் விளையும் தொழில்வாய்ப்பை, குறிப்பாக அரசதுறை வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வியில் உயர் தேர்ச்சி பெற்றிருந்தது. அதனால்தான் இலங்கையின் காலனித்துவ வரலாற்றிலும், சுதந்திரத்தின் பின்னரும் கூட, மிக முக்கிய பதவிகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் சிவில் உத்தியோகத்திலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க நிலையிலிருந்தனர்.

சிறிமாவோ தலைமையிலான அரசாங்கத்தினால் 1971இலும், 1972இலும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தரப்படுத்தலானது' தமிழ் மக்களின் அடிமடியிலேயே கைவைப்பதாக அமைந்தது. 'தரப்படுத்தலின்' மூலம் பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பில், வெளிப்படையாக இன ரீதியாக ஓரவஞ்சனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இதுவே தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஏனெனில், கல்வி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தது, 'தாம் திட்டமிட்டமுறையில் உயர் கல்வியிலிருந்து ஒதுக்கித்தள்ளப்படுகிறோம் என்பதைவிடக் கொடும் வேதனை தமிழர்களுக்கு இருக்கமுடியாது' என வோல்டர் ஷ்வாஸ் குறிப்பிடுகிறார்.

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அறிமுகத்தோடு, தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தன. 1956இல் இலங்கை நிர்வாகச் சேவையில் 30 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமானார்கள். 1956இல் மருத்துவம், பொறியியல், விரிவுரை போன்ற துறைகளில் அரசபணியில் 60 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 10 சதவீதமாக ஆனார்கள்;. 1956இல் எழுதுவினைஞர் சேவையில் 50 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமாக ஆனார்கள். 1956இல் ஆயுதப் படையில் 40 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 1 சதவீதம் ஆனார்கள். தமிழ்ப் புலமையாளர்கள், தொழில்நிபுணர்கள் என பலரும் புலம்பெயர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தமிழ் மக்கள், அரச சேவையில் வஞ்சிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களின் உயர் கல்விக்கும் குந்தகம் விளைவிக்கும் 'தரப்படுத்தல்' நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அன்றைய பல்கலைக்கழக அனுமதிகள், தகுதி அடிப்படையிலேயே அமைந்தன. அதிக புள்ளிகள் பெறுபவர்களுக்கு முன்னுரிமை. இதனால் அதிக போட்டி நிறைந்த மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பெருமளவு மாணவர்கள், வடக்கு-கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்துமே தெரிவாகினர். 1970இல், பொறியியல்துறைக்கு ஏறத்தாழ 40 சதவீதமும், மருத்துவத்துறைக்கு ஏறத்தாழ 50 சதவீதமும், விஞ்ஞானத்துறைக்கு ஏறத்தாழ 35 சதவீதமும் தமிழ் மாணவர்கள் தகுதியடிப்படையில் அனுமதி பெற்றனர். இந்த நிலையை மாற்றவேண்டும் இனவாரிஃமதவாரி ஒதுக்கீட்டு முறை வேண்டும் என சிங்கள-பௌத்த அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கின.

1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், 'இனவாரி' தரப்படுத்தல் முறையை சிறிமாவோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது, குறித்த துறைக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகளைவிட, தமிழ் மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகள் அதிகமாக இருந்தன. இரு இன மாணவர்களும், பரீட்சையை ஒரே மொழியில் (ஆங்கிலத்தில்) எழுதியிருப்பினும் இருவருக்குமான வெட்டுப்புள்ளிகளில் அதே வேறுபாடு இருந்தது. மருத்துவத்துறைக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 229 புள்ளிகளே தேவை என நிர்ணயிக்கப்பட்டது. பௌதீகவியல் விஞ்ஞானத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு 204 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 183 புள்ளிகளே வேண்டப்பட்டது. பொறியியலில், தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் தேவை என நிர்ணயிக்கப்பட்ட போது, சிங்களவர்களுக்கு அது வெறும் 227 ஆக அமைந்தது. இந்தத் 'தரப்படுத்தல்' முறையை விமர்சித்த தேவநேசன் நேசையா, இதனை 'பாரதூரமான இனவெறி நடவடிக்கை' என்று குறிப்பிடுகிறார். இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட கே.எம்.டீ சில்வா, இது ஐக்கிய முன்னணி அரசு, இலங்கையின் இன-உறவுக்கு ஏற்படுத்திய பெருந்தீங்கு என்கிறார்.

1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'இனவெறி' 'தரப்படுத்தல்' முறை கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதால், அடுத்தடுத்த வருடங்களில் அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக நான்கு வருடங்களில், 'மாவட்ட ஒதுக்கீட்டு முறையின்' அடிப்படையில், நான்கு வேறுபட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெளிப்படையான இனவாரி ஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மறைமுகமாக அதனைச் சாத்தியமாக்குவதாகவே 'மாவட்ட ஒதுக்கீட்டு முறை' அமைந்தது. தகுதி அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று வந்த தமிழ் மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்துபவையாகவே, இந்த ஒவ்வொரு முறைகளும் இருந்தன. இது பற்றி குறிப்பிடும் பேராசிரியர்.சீ.ஆர்.டீ சில்வா 'அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு மாற்றமும் சிங்களவர்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன, இது சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவு பெற்ற ஒன்றாக மாறியது. மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது' என்கிறார்.

இந்த இனவாரி ஒதுக்கீட்டு முறை, பல தகுதிவாய்ந்த தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுத்தமை, தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணம் என, தனது இலங்கை இன முரண்பாடு பற்றிய அறிக்கையொன்றில் வேர்ஜீனியா லியரி குறிப்பிடுகிறார். இதையே பேராசிரியர் சீ.ஆர்.டீ.சில்வாவும் 'பல்கலைகழக அனுமதியில் பாகுபாடு என்ற விடயமே, யாழ்ப்பாண இளைஞர்களை களத்திலிறங்கிப் போராடச் செய்தது. அதுவே, தமிழ் ஐக்கிய முன்னணி தனிநாடு பிரிவினையைக் கோரவும் செய்தது' என்கிறார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் 'தரப்படுத்தலுக்கு' வேறு நியாயங்களைச் சொன்னது.


பிரிவினைக்கு வித்திட்ட 'தரப்படுத்தல்'

'ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது, தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். தொழில்நுட்பக் கல்வியும் உயர் தொழிற்கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது, யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்' - சரத்து 26 (1) - மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது.

தமிழ் இளைஞர்கள் இந்நாட்டில் தமிழர்களுக்கான பிரிவினை அரசியலை முன்னெடுக்க இதுவோர் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது எனலாம். இதுபற்றிக் கருத்துரைத்த சீ.ஆர்.டீ.சில்வா, 'தமிழ் இளைஞர்கள், தமக்கெதிரான இந்த ஓரவஞ்சனை பற்றி கசப்படைந்திருந்தனர். இவர்களின் உந்துதலால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவானது. பலரும் தனித் தமிழீழம் உருவாக்கப்படுதற்காக வன்முறையைக் கையிலெடுக்க சித்தம் கொண்டனர். முறையற்ற கொள்ளை முன்னெடுப்புக்களும். சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற்கொள்ளாத நடவடிக்கைகளும் இனமுரண்பாட்டை எத்தனை தூரம் அதிகரிக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' என்கிறார்.

'தரப்படுத்தல்' - விவாதங்களும் விதண்டாவாதங்களும்

மறுபுறத்தில் அரசாங்கம் சார்பிலும், சிங்கள இனவாத சக்திகள் சார்பிலும் 'தரப்படுத்தலுக்கு' ஆதரவாக பிரசாரங்களும் வாதங்களும் வதந்திகளும் முன்வைக்கப்பட்டன. அன்றைய காலப்பகுதியில், தமிழ்மொழி மூலமான பரீட்சகர்கள், தமிழ்மொழி மூலமான மாணவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர், அவர்களுக்கு நிறையப் புள்ளிகளை வழங்குகின்றனர் என்ற வதந்தி தீயாகப் பரப்பப்பட்டது. ஆனால், இது உண்மையல்ல. ஆங்கில மொழிமூலத்தில் கல்வி இருந்தபோதே, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கு தமிழ் மாணவர்கள் தமது திறமையினடிப்படையில் அதிகளவில் அனுமதி பெற்றிருந்தனர். 

1872இல் கொழும்பு மருத்துவக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது, அதில் ஏறத்தாழ பாதியளவு மாணவர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தமிழர்கள் மத்தியில் நிபுணத்துவத் தொழில்சார் கல்விக் கலாசாரமொன்று உருவாகியிருந்தது. அது, 2-3 தலைமுறைகளாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவுதான், தமிழ் மாணவர்கள் பரீட்சைகளில் உயர் சித்தி பெறுதல், அதனூடாக அதிகளவில் பல்கலைக்கழக அனுமதி பெறுதல் என்ற நிலையை உருவாக்கியிருந்தது.

'தரப்படுத்தல்' அறிமுகப்படுத்தப்பட முன்பு திறமையடிப்படையில் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி அமைந்திருந்தது. 1964ஆம் ஆண்டு, இலங்கையின் இரண்டு பிரதமர்களின் மகளாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு திறமையடிப்படையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவர். தன்னுடைய உயர் கல்வியை அக்வைனாஸ் பல்கலைக்கழக கல்லூரியிலும், பின்னர் பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்கச் சென்றார்.

சிங்களவர்களுக்கு, கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பல்கலைக்கழக அனுமதி போதவில்லை என்ற ஆதங்கம், பல்வேறு சிங்கள இனவாத அமைப்புக்களினால் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவு அனுமதி பெற்றமையானது, சிங்களவர்களின் வாய்ப்பினைத் தட்டிப்பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அம்மாணவர்கள் திறன், தகுதி அடிப்படையில்தான் அனுமதி பெற்றார்கள் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள மறந்துவிட்டார்கள்.

மொழிவாரி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து, பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, கடைசியில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒதுக்கீட்டு முறைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிறையவே இருக்கின்றன. காலங்காலமாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அந்த அடக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கு ஒதுக்கீட்டு முறை தேவை. ஆனால், இங்கு அதற்காகவா ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலே பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. அமெரிக்காவில் கூட தொல்குடி அமெரிக்கர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. இவர்கள் யாவரும் சிறுபான்மையினர். காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்டவர்கள்.

ஆனால், இலங்கையில் இந்த ஒதுக்கீட்டு முறையானது, பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. அது, ஏலவே திறனடிப்படையில் முன்னிலையிலிருந்த சிறுபான்மையினரை பின்தள்ளுவதாக அமைந்தது. இதுதான் இந்த 'தரப்படுத்தலில்' இருந்த பிரச்சினை.

மாவட்ட ஒதுக்கீட்டு முறை கூட, தமிழர்களைப் பெருமளவு பாதித்தது. தமிழர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் கொழும்பிலுமே கணிசமானளவில் வசித்தனர். ஆகவே, மாவட்ட ஒதுக்கீடு என்பது கூட பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. ஆனால், சிங்கள அரசியல் சக்திகள் மாவட்ட ஒதுக்கீடு பற்றி வேறோர் வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த மாவட்ட ஒதுக்கீட்டு முறை ஏற்பட்டதனால்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மலையகம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடிந்தது. இல்லையென்றால், தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் யாழ்ப்பாண மாணவர்களும் கொழும்பு மாணவர்களும் மட்டுமே பல்கலைக்கழகம் சென்றார்கள் என்று வாதிட்டனர். இதில் நிச்சயமாக கொஞ்சம் உண்மை இருக்கிறது. மாவட்டவாரி ஒதுக்கீட்டு முறையினால், தமிழர் பிரதேசங்களில் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள், பல்கலைக்கழகம் ஏகியது உண்மை. ஆனால், இந்த விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 'தரப்படுத்தலை' நியாயப்படுத்திவிட முடியாது. ஏனென்றால், தரப்படுத்தலின் பின் ஒட்டுமொத்தமாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இலங்கையின் 'சிங்கள-பௌத்த' அரசியல் பற்றி கருத்துரைப்பவர்கள் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம், இலங்கையின் 'சிங்கள-பௌத்த' பெரும்பான்மை என்பது, சிறுபான்மை மனப்பான்மையைக் கொண்டது என்று (A majority with a minority complex). அதாவது, சிறுபான்மையினருக்கு தமது இருப்பு, நிலைப்பு தொடர்பாக இருக்கக்கூடிய அச்சம், சந்தேகம் எல்லாம், இங்கே பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ உலகம் முழுவதும் சிறுபான்மையினர், அடக்கியொடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் ஒதுக்கீட்டு முறையை, 'தரப்படுத்தல்' என்ற முகமூடிக்குள் பெரும்பான்மையினருக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

'தரப்படுத்தலினால்' உயர் கல்வி வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு இருந்த ஒரே மாற்றுவழி, வெளிநாட்டில் கல்வியைத் தொடர்தல். ஆனால், சிறிமாவோ அரசாங்கத்தின் மூடிய பொருளாதாரக் கொள்கையின் கீழ், கல்விக்கான அந்நிய செலவாணி கொடுக்கல் வாங்கல் அளவு மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் கல்விக்காக வெளிநாடு செல்வதும் இயலாததாகியது.


சா.ஜே.வே.செல்வநாயகம் இந்த 'தரப்படுத்தல்' முறையை முற்றிலும் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்தார். இந்த அடக்குமுறை தமிழ் இளைஞர்களிடையே கோபக்கனலைத் தோற்றுவித்தது. அந்த கோபக்கனல் விடுதலையை வேண்டி, தமிழ் இளைஞர்களை நகரச் செய்தது. தமிழ் இளைஞர் பேரவைக் கூட்டமொன்றில் உரையாற்றிய சத்தியசீலன், 'தரப்படுத்தலானது தமிழினத்தின் இருண்டகாலத்தைச் சுட்டும் சமிஞ்ஞையாகும். அது, உயர்தரத்தில் சித்தியடைந்த பல தமிழ் இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. தரப்படுத்தல் தமிழ் மக்களுக்கிருந்த கடைசி வாய்ப்பையும் தட்டிப்பறித்துவிட்டது' என்றார்.

தரப்படுத்தல் எனும் ஓரவஞ்சனையின் விளைவாக, தமிழ் இளைஞர்கள் அரசியலில் நேரடித்தாக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். தமிழ் இளைஞர்கள் பிரிவினை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கடுமையான அழுத்தம் தரத்தொடங்கினார்கள். தரப்படுத்தல் பற்றிய கட்டுரையொன்றில், 1973ஆம் ஆண்டு சா.ஜே.வே.செல்வநாயகம் சொன்ன விடயமொன்றை, ரீ.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.

'சமஷ்டிக்கான எனது போராட்டத்தில், நான் தோல்வியடைகிறேன். இதற்கு காரணம் பண்டாரநாயக்க, அவரது பாரியார் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், சமஷ்டிக்கான எனது போராட்டத்தில் நான் தோல்வியடைந்தால், அதன் பின் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோர மாட்டார்கள். மாறாக தனிநாட்டைத்தான் கோருவார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறீர்கள்தானே, நான் அஹிம்சையையும், சத்தியாக்கிரகத்தையும், ஹர்த்தாலையும் முன்வைத்தேன், அவர்கள் வன்முறையை முன்வைக்கிறார்கள்'

உங்கள் பிரச்சினைக்கு ஆயுதம் தாங்கிய வன்முறைதான் தீர்வா என்ற கேள்வி, ஈழத் தமிழர்களை நோக்கி பல தளங்களிலும் வீசப்படுவதுண்டு. சர்வநிச்சயமாக ஆயுதம் தாங்கிய வன்முறை தீர்வில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருபோதும் அதனை விரும்பியதும் இல்லை.

சுதந்திர காலத்திலிருந்து இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்த்தோமானால், தமிழ் மக்கள் மீது வன்முறை வெறித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், கலவரங்களில் தமிழர்கள் நசுக்கப்பட்டபோதிலும் கூட, தமிழ் மக்கள் ஆயுதங்களையோ, வன்முறையையோ கையிலெடுக்கவில்லை. தமது மொழியுரிமை மறுக்கப்பட்டு, அதன் விளைவாக தமது வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போது கூட அஹிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் ஹர்த்தாலையும் பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையுமே தங்கள் அரசியல் ஆயுதங்களாக தமிழ் மக்கள் கைக்கொண்டார்கள். 1956லிருந்து ஒன்றரைத் தசாப்தகாலத்துக்கு தமிழ் மக்கள் மிகுந்த பொறுமையுடனும், எதிர்பார்ப்புடனும் நியாயமான தமது அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்தார்கள்.

ஜனாதிபதி வழக்குரைஞர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண 26.04.2014 அன்று ஆற்றிய 'செல்வநாயகம் நினைவுரை'யில் குறிப்பிட்டது போலவும், அவரது சில கட்டுரைகளில் குறிப்பிட்டது போலவும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் சிக்கல் நிலையையும், முரண்பாட்டையுமே 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கியது.

'பண்டா-செல்வா' கிழித்தெறியப்பட்டு, 'டட்லி-செல்வா' உடைக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பில் மொழியுரிமை இல்லாது போய், மதத்தில் பௌத்தம் முதன்மை பெற்று தமிழர் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தில் 'தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனையானது சத்தியசீலன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் கடைசி வாய்ப்பும், நம்பிக்கையும் தட்டிப் பறிக்கப்பட்டதாகவே தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் உணர்ந்தார்கள்.

கல்விச் சமூகமொன்றில் உயர் கல்வி வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படும்போது அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலமே இருண்டதாக, சூனியமானதாக உணர்வது யதார்த்தமானதே. பிரிவினைக்கான கோசத்தையும், ஆயுதமேந்தலின் ஆரம்பத்தையும் இந்தப் பின்புலத்தையும் கருத்திற் கொண்டுதான் நாம் பார்க்க வேண்டும்.


(தமிழ் மிரர் பத்திரிகையில் என்.கே.அஷோக்பரன் எழுதிய "தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?" என்ற நீண்ட தொடரிலிருந்து எடுக்கப்பட்டது)

Jun 16, 2011

இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)

உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம் உலகில் நடக்குமா? என்று யோசித்திருந்தவர்கள், இலங்கையிலே அதுவும் நமது இனமக்களுக்கு நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பல காணொளிகள் முன்பே வெளிவந்திருந்தாலும், இந்த தொகுப்பைக் காணும் போது நெஞ்சு கனக்கிறது... மனது “நீதி வேண்டும்” என்று கொதிக்கிறது. 

செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கை - கொலைக்களம்” எனத் தலைப்பிடப்பட்ட காணொளி இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்களின் மறுபக்கத்தை, பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதை, சரணடைந்த போராளிகள் சர்வதேச சட்டத்திற்கெதிராக கொல்லப்பட்டதை, பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை, காணொளி மூலமும், நேரச் சாட்சிகளின் வாக்குமூலமாகவும் உலகத்திற்கு முன்னர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ( காணொளியை இங்கு காணலாம் - http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od ) 

உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில் இன்று உலக நாடுகள் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றிற்காக இலங்கையை வலியுறுத்தி வருகிறது - இலங்கை அரசாங்கமும் வழமைபோல குற்றச்சாட்டுக்களை மறுத்தும், பரிசீலிப்போம் என்று சாக்குப் போக்குச் சொல்லி காலதாமதப்படுத்தியவண்ணம் இருக்கிறது. காணொளியைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் அலிஸ்ரெயார் பேட் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 

‎'“I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. ..... The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full response to this evidence.' - British Foreign Minister Alistair Burt. 

(முழுமையான அறிக்கையை இங்கு காண்க - http://ukinsudan.fco.gov.uk/en/news/?view=News&id=615115382 )

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நடவடிக்கையொன்றை எடுக்காததன் காரணமாக இந்தியா வெளிப்படையான ஆதரவை இலங்கைக்கு வழங்காது மௌனம் சாதிக்கிறது, மேலும் தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம், நடைமுறையில் பயனேதுமில்லாவிட்டாலும், அரசியல் ரீதியில் ஒரு அழுத்தமாகவே காணப்படுகிறது. இவற்றைவிட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்திருந்த ஆதரவும், அமெரிக்கா தெரிவித்த ஆதரவும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சனல் 4ன் காணொளி ஒளிபரப்பானது இன்னும் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும். 

இவ்வேளையில் சனல் 4ன் காணொளி தொடர்பான இலங்கை அரசின் பதிலளிப்புக்களில் பல முரண்பாடுகளைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கமானது தனது தடவியல் நிபுணர்களைக் கொண்டு குறித்த காணொளியை மீண்டும் பரீசீலிக்கும் என்று கூறியிருந்தார். 

பின்னர் அல்-ஜஸீராவில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் ஆலோசகரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்ஹ, யுத்தக் குற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்காது, இக்காணொளிகள் போலியென்றும், இவை புலிகளினால் நடிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முழு யானையை மண்பானைக்குள் மறைக்க முயற்சிக்கும் தனது படித்த முட்டாள்தனத்தை உலகிற்கு மீண்டுமொருமுறை பறைசாற்றியிருந்தார். (குறித்த காணொளியை இங்கு காண்க - http://www.youtube.com/watch?v=sdrCR-X4iH0 )

இது தவிர இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோட்டாபய, சனல் 4 தொலைக்காட்சிக்கு புலி ஆதரவு சக்திகள் இலஞ்சம் ஊட்டி இலங்கையினது, இலங்கையினது இராணுவத்தினதும் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். 

இவர்கள் எல்லோருடைய பதில்களிலுமிருந்து நாம் அறிய முடிவுது, இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போய் இருக்கிறது, செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறது. அநேகமான காணொளி ஆதாரங்கள் இராணுவ வீரர்களினால் அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவையே என சனல் 4 தெரிவிக்கிறது. ஆகவே யுத்தத்தை வென்றபோது (?! - முடிவுக்குக் கொண்டுவந்தபோது!) இலங்கை அரசாங்கமோ, ராஜபக்ஷவோ இப்பொழுது எழுந்திருக்கும் இந்த நிலையைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டார்கள், யுத்தக்குற்றம் பற்றி கொஞ்சமேனும் தெளிவிருந்திருந்தால் ஒருவேளை கைத்தொலைபேசிக் கமராக்கள் கடைசெய்யப்பட்டிருந்திருக்கும். 

குறித்த காணொளி போலியானது. இது இலங்கையின் பெயரைக் கெடுக்கும் நடவடிக்கை என மீண்டும் மீண்டும் புலம்பும் அரசாங்கம், நீங்கள் அவ்வளவு சுத்தமானவர்கள் என்றால் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முன்வராதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. சில மேதாவித்தனமான அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறைமைக்கு எதிரானது என விதண்டாவாதம் புரிவார்கள். இறைமை என்பதே மக்களுடையது, அந்த மக்களே அநியாயமாக, அநீதியான முறையில் கொல்லப்பட்ட, சித்திரவதைசெய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட போது இறைமை என்பது யாரைப் பாதுகாக்கத் தேவைப்படுகிறது?

இன்னும் சில அதிமேதாவிகள், 30 ஆண்டு யுத்தத்தில் நடக்காத யுத்தக்குற்றமா இப்போது நடந்து விட்டது என வியாக்கியானம் பேசுகிறார்கள். இவர்களது முட்டாள்தனத்தக்கு விளக்கமளிப்பது வீண்வேலை. அவர்களிடம் ஒரே கேள்வி, சித்திரவதைசெய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது உங்கள் சகோதரன் என்றால்? உங்கள் தாயார் என்றால்? உங்கள் சகோதரி என்றால்? உங்கள் மனைவி என்றால்? உங்கள் பிள்ளைகள் என்றால்? இவ்வளவு ஏன் உங்கள் இனம் என்றால் - இதே போன்ற அலட்சியமான கேள்விகளை எழுப்பவீர்களா?



இன்னும் சிலர் புலிகளை (தீவிரவாதிகளைக்) கொன்றது ஒரு குற்றமா என்று கேட்கிறார்கள். இங்கே பிரச்சினை தீவிரவாதிகளைக் கொன்றதல்ல. சர்வதேசச் சட்டங்களுக்கும், மனிதஉரிமைச் சாசனங்களுக்கும் எதிராக நடந்து கொண்டது தான். சிவிலியன்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் அறிந்தே தாக்கப்பட்டது, மனித உரிமைகளை மதிக்காது அரசாங்கம் செயற்பட்டது, சரணடைந்த போராளிகள் நீதிமுன் நிறுத்தப்படாது கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை சனல் 4 காணொளியும், ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையும் முன்வைக்கின்றன - இவை தான் பிரச்சினை. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியம் எழுதியிருந்த ஒரு விடயம் முக்கியம் பெறுகிறது - 

That the LTTE assassinated presidents and invented the suicide belt, that the Tigers used civilians as human shields, is no defence from the charge that Sri Lankan soldiers summarily executed prisoners in their custody. Sri Lanka is trying to pretend these events are history, as the economy and tourism pick up. They are not. This evidence has to be faced. - The Guardian Editorial. 

(காடியன் ஆசிரியம் முழுமையான வடிவத்தை இங்கு காண்க - http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/15/sri-lanka-evidence-that-wont-be-buried ) 


இவை இவ்வாறு இருக்க பலபேர் இன்று கேட்கும் கேள்வி “இனி இலங்கைக்கு என்ன நடக்கும்?” இது தொடர்பில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசேர்க்கி இலங்கைவிவகாரம் தொடர்பிலான நடவடிக்கை பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறிய விடயம் முக்கியமானது. “இலங்கை அரசாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்டசத்தில் மட்டுமே பான் கீ மூனினால் நிபுணர் குழுவின் சிபாரிசின் படி சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை முன்னெடுக்க முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இது தான் நிதர்சனம். இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைத் தோற்றுவித்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை ஆகவே நேரடியாக இலங்கையை யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் ஹேக்கிற்குக் கிடையாது. (இது பற்றி என்னுடைய முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - http://nkashokbharan.blogspot.com/2010/12/blog-post.html ) ஆகவே ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இங்கு தான் சிக்கலே. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஆதரவளித்தாலும், இவ்வளவு ஏன் பெரும்பான்மை எண்ணிக்கையிலான நாடுகள் ஆதரவளித்தாலும் சீனா, ரஷ்யா என்ற 2 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பது இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானது. வீட்டோ அதிகாரம் உடைய இந்த 2 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதால் குறித்த சபைகளில் இலங்கைக்கெதிராக பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் அவற்றை வீட்டோ செய்யும் அதிகாரம் இவற்றிடம் உண்டு. இதுதான் இலங்கையரசாங்கத்திற்கிருக்கும் ஒரேயொரு நம்பிக்கை. தற்போது மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபெறச் சென்றிருக்கும் அவர் அங்கு ரஷ்ய மற்றும் சீனத் தேசத் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, நிச்சயமாக யுத்தக் குற்றம் தொடர்பிலான ஆதரவு தேடலாகவே இந்தச் சந்திப்பு இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

இஸ்ரேல் இலங்கைக்குக் ஆதரவு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே அதை இலங்கைக்கான ஆதரவாக என்னால் பார்க்கமுடியவில்லை. பலஸ்தீன விடுதலையை உலகறிய ஆதரித்த, இஸ்ரேலை எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உண்மையிலேயே இலங்கை மீதான நிபுணர் குழு அறிக்கையை ஆதரிப்பது பின்னர் தனக்கே ஆபத்தாக முடியும் என்ற இஸ்ரேலின் பயம்தான் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டிற்குக்காரணம் என்பது எனது கணிப்பு.

அநியாயத்திற்கு தலைவர்கள் துணைபோகலாம், நாடுகள் துணைபோகலாம், ஏன் வீட்டோ அதிகாரம் கூட துணைபோகலாம் ஆனால் அவற்றால் நியாயத்தையும், நீதியையும், சத்தியத்தையும் மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. அவை நியாயத்தை, நீதியை, சத்தியத்தைத் தோற்கடிப்பது தற்காலிகமானதே நிரந்தரமல்ல. 

ஒருவேளை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டால், புதிய அரசாங்கம் யுத்தக் குற்றம் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு அனுமதியளித்தால் நிச்சயம் நீதி பிறக்கும். இந்த நிலை வரவேண்டுமென்றால் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது அவசியம், அந்த அழுத்தம் தொடரவேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்தே ஆகவேண்டும், பதிலளிக்கும் கடப்பாடுடைய ஒரு ஜனநாயக அரசாங்கம் அதிலிருந்து மாறுபட்டு பின்வாசலால் தப்பிக்கும் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக தேசம் - தன்னுடைய நாட்டு மக்களின் பாதுகாப்பையே சவாலுக்குட்படுத்தும் ஒரு தேசத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

உங்கள் கை சுத்தமானது என்றால் அதை நிரூபிக்க நீங்கள் தயங்குவது ஏன்?


“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”

Dec 29, 2010

2010ன் எனது தெரிவுகள்!


எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -

********************************************************

வருடத்தின் சோகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?

********************************************************

வருடத்தின் மகிழ்ச்சி



தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.

********************************************************

வருடத்தின் அதிர்ச்சி



சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது! 


********************************************************

வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.


********************************************************

வருடத்தின் சிறந்த திரைப்படம்




என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை. 


********************************************************

வருடத்தின் இனிய பாடல்





நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!


********************************************************

வருடத்தின் சிறந்த பத்திரிகை

சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.


********************************************************

வருடத்தின் கேவலம்



ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!


********************************************************

வருடத்தின் சிறந்த நாடகம்




விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த மனிதன்



சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!

********************************************************