Showing posts with label Presidential Polls 2010. Show all posts
Showing posts with label Presidential Polls 2010. Show all posts

Jan 25, 2010

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 04

நாளை இலங்கையின் தலையெழுத்தை மட்டுமல்ல மக்களின் நிலையையும் தீர்மானிக்கவிருக்கும் முக்கியமான தேர்தல். எத்தனையோ தேர்தல்களைக் கண்டிரக்கின்றேன், தேர்தல் காலப் பிரச்சாரப் பணிகளில் கூட ஈடுபட்டிருக்கின்றேன், தேர்தல் அரசியலின் உள்ளும் புறமும் பற்றி குறிப்பிட்டளவு தெரிந்து வைத்திருக்கின்றேன் ஆனால் இந்தத் தேர்தல் போன்ற படு மோசமான, கேவலமான தேர்தல் காலத் “தந்திரங்கள்” நிறைந்த தேர்தலை நான் கண்டதேயில்லை. அத்தளை தூரத்திற்கு குறிப்பாக அரசாங்கம் வளங்களைத் துஷ்பிரயோகம் செய்து பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது இதன் உச்சகட்டமாக இந்த நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் அழாத குறையாக இப்படிநடந்துகொள்ளவேண்டாம் என்று வேண்டிக்கொண்டதும், இறுதியில் இவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தமுடியாது இதுவே தனது இறுதித் தேர்தல் என்றும் தேர்தலின் பின் தான் பதிவி விலகுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிக்குமளவிற்கு படு கேவலமான அரசியல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சிந்தித்துப பாருங்கள் - தேர்தல்கள் ஆணையாளரே இப்படி விரக்தியடையும் நிலையில் தேர்தல் நடக்கிறதென்றால் அது எத்தனை தூரம் நியாயமான தேர்தலாக அமையும்? மறுகையில் தேர்தல் நாடகங்கள் பல மேடையேறிய வண்ணமுள்ளது அதுவும் குறிப்பாக மக்களை ஏமாற்றும் அல்லது தவறாக வழிகாட்டும் முகமாக கையேடுகளும், போலித் தேர்தல் வாக்குச்சீட்டுக்களும் எல்லாவற்றிற்கும் உச்சமாக இலங்கையின் தலைசிற்ந்த தமிழ் தினசரிகள் போன்று போலித் தினசரிப் பத்திரிகைகளையே அச்சிட்டு வெளியிடுமளவுக்கு ஈனத்தனமாக நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் போலப் போலிப் பத்திரிகைகள் அச்சிட்டு தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட்டு தமது கேவலத்தை நிரூபித்திருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க மலையகத்தில் போலி வாக்குச் சீட்டுக்களை கட்டவிழ்த்து விட்டு அந்த அப்பாவி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சரத் ஃபொன்சேகா அன்னமல்ல தாராச்சின்னம் என மிகக்குழறுபடியான மக்களைக் குழப்பும் முகமான தேர்தல் சிட்டைகளை விநியோகித்திருக்கிறார்கள் - இந்த வதந்தி இணையத்திலும் பெருமளவில் பரப்பப்பட்டது (அதை நானும் நம்பியது - மிகவும் வருத்தம் தருகிறது).

இப்படியாக நாகரீகமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அரச ஊடகங்கள் தாம் “பொது ஊடகம்” என்பதை மறந்து ஆட்சியாளரின் ஊடகமாக மாறி பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இவற்றையும் விட தொலைபேசிகள், குறுஞ்செய்திகள் ஊடாகவும் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பதிவியிலுள்ள ஜனாதிபதிக்குச் சார்பான தகவல்களாகவே இருக்கிறது.

இவ்வளவு தூரம் அசிங்கமான வேலைகளில் ஈடுபட்டுத்தான் தேர்தலை வெல்லவேண்டுமென்றால் தனது பதவிக்காலம் முடிவதற்கு 2 வருடகாலம் முன்பே ஜனாதிபதித்தேர்தலை நடத்த மஹிந்த ராஜபக்ஷ முடிவெடுத்தது ஏன்? உண்மையிலே இந்தத் தேர்தல் இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். யுத்த வெற்றி என்ற பிரம்மாஸ்திரத்தை வைத்துக்கொண்டே தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என்பது தான் அவர் கணிப்பாக இருந்தது. ஆனால் சரத் ஃபொன்சேகா போட்டிக்கு வந்தபோது கூட மஹிந்த பெரிதாகக் கலங்கியிருக்கமாட்டார் ஆனால் சரத் யுத்த வெற்றி என்ற மஹிந்தவின் பிரம்மாஸ்திரத்தைப் பங்குபோட்டதோடில்லாமல், இலஞ்சம், ஊழல், இனப்பிரச்சினை, அகதிகள் என மஹிந்தவிற்கு எதிரான அஸ்திரங்களை ஏவத்தொடங்கியபோதுதான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தத் தேர்தலின் ஆழம் புரிந்தது. அதுவும் உள்ளுக்குள் விரக்தியால் புழுங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு சரத் நம்பிக்கை ஒளியாக வந்ததும் தான் மஹிந்த விழித்தக்கொண்டார் - அதன் பின் ஆரம்பமான அதிஅதிஅதிதீவிரப் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் எப்படியாவது, என்னசெய்தாவது பதிவியைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறார் - அதற்காக அசிங்கமான - நாகரீகமற்ற கருத்துக்களை விளம்பரமாகவும், பிரச்சாரக்கூட்டங்களிலும் சொல்வது அபத்தமானது. இன்று மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான அஸ்திரமாக மாறியிருப்பது சரத்-சம்பந்தன் ஒப்பந்தம் - அதை ஏதோ தமிழீழப் பிரிவினையொப்பந்தம் போல வர்ணித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அப்படி ஒப்பந்தமேதும் இல்லை என மறுதரப்பு உறுதியாகக் கூறுகிறது. மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என அரசு வர்ணிக்கிறது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு கூட்டமைப்பைப் பற்றி இவ்வாறு கூற என்ன அருகதையிருக்கிறது? ஒருவேளை கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரித்திருந்தால் அவர்கள் நல்லவர்களாக, செல்லக்குழந்தைகளதக இருந்திரு்பபார்கள் மாறாக சரத்தை ஆதரித்ததனால் விடுதலைப்புலிகளுக்கு மறுவாழ்வளிப்பவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் இன்று முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள் - காரணம் அங்கொன்றும், இங்கொன்றுமாக வரும் முரண்பட்ட கருத்துக்கள். குறிப்பாக புலம்(ன்) பெயர்ந்த தமிழர்கள் எனக் கூறிக்கொள்வோர் சிலர் தேசப்பற்று பற்றியும், அரசாங்கத்திற்கு ஆதரவு பற்றியும் அறிக்கை விடுகிறார்கள். என்னடா இது இப்படி நடக்கிறார்களே என்று தேடித்துருவிப்பார்த்ததில் உண்மை புரிந்தது. அதாவது அப்படிச் சொல்வோரில் பலர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்தில் இருப்பவாகள் ஒரு வேளை நாடு சுமுகமான நிலைக்குத்திரும்பினால் அவர்களுக்கு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவர நேரிடும், ஆக தமிழருக்கு இலங்கையில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று காட்டும் வரைதான் அவர்கள் அங்கே பிழைக்கமுடியும். இது தான் அப்பட்டமான உண்மை. ஆக இலங்கை ஒரு அமைதியான, சுபீட்சமான தேசமாக மாறுவதில் அவர்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஒருசிலருக்காக இந்த நாட்டில் இருந்து சிரமப்படும் மக்களெல்லாம் அவல வாழ்க்கையைத் தொடர வேண்டுமா? - யோசியுங்கள். (நான் எல்லாப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடவில்லை ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்துப் பிழைத்தக்கொண்டிருப்போரையே குறிப்பிடுகிறேன்)

இந்தத் தொடரை முடிக்கமுன் இறுதியாக ஒன்று - இதுவரை நான் இவ்வளவு வெளிப்படையாக எழுதியதில்லை - இன்று எழுதலாம் என்னும் சுதந்திர உணர்வும் நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கிறது - நாளை மறுதினமே அந்த நம்பிக்கை கொழுந்திலேயே கிள்ளியெறியப்படலாம் அல்லது இன்னும் வளர்ச்சிக்கான ஒளிபிறக்கலாம் எல்லாம் தேர்தல் முடிவுகளில் தங்கியிருக்கிறது. சிலபேர் அமெரிக்கா, சீனா அது, இது என்றெல்லாம் அதிகம் யோசிக்கிறார்கள் என்னைப் பொருத்தவரை ஒரு மனித குலத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான உரிமைகளும், சுதந்திரங்களும் இருந்தாலே போதும் அந்த மனிதக் கூட்டம் விரைவில் வளர்ச்சியடைந்துவிடும். உரிமைகள் மட்டுறுத்தப்பட்ட, சுதந்திரம் எல்லைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்வது கடினம் என்பது யாவருக்கும் புரிந்ததே ஆகையில் இந்நிலை தொடரவேண்டுமா இல்லை மாற்றம் வேண்டுமா என்று நாம் தான் முடிவெடுக்கவேண்டும்.

நான் சரத் ஃபொன்சேகா ஆதரவாளனா? இல்லை நிச்சயமாக இல்லை. நான் யாருக்கும் ஆதரவாளன் அல்ல ஆனால் கொள்கைகளின் ஆதரவாளன். ஏமாற்றுக்கள், போலிப்பித்தலாட்டங்களற்ற கொள்கைகளை மதிப்பவன். இம்முறை நான் சரத் ஃபொன்சேகாவின் தரப்பில் நியாயத்தைக் காண்கிறேன் - நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை ஒழித்தல், பாராளுமன்றத்தை மையப்படுத்திய அரசை உருவாக்குதல் ஆகியவற்றை விரும்புகிறேன். சரத் ஃபொன்சேகாகூட பல பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பற்றி தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை ஆனால் அதற்குள் மறைந்துள்ள .ராஜதந்திரத்தை உணர்கின்றேன். உள்ளதுக்குள்ள வள்ளிசாய் சரத் ஃபொன்சேகாவைத் தெரிகிறேன் அவ்வளவே.

ஒருவேளை 27ம் திகதி பித்தலாட்டங்களும், ஏமாற்றுவேலைகளும் வெற்றிபெற்றுவிட்டால் - என் (எனது மட்டுமல்ல யாவருடையதும்) சுதந்திரம் மீண்டும் உறங்கிவிடும்..... அடுத்தத் தேர்தல் திகதி வரை (8 வருடங்கள்) நம்பிக்கை கூட கோமா நிலைக்குச் சென்றுவிடும் ஆனால் உயிருடன் இருக்கும் ஏனென்றால் நம்பிக்கைகள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருக்கிறது.

முற்றும். (ஆனால் தொடரும்....)




பி.கு. இதை எழுதும் போது நான் இருந்த மனநிலை கொஞ்சம் குழப்பகரமானது. ஒரு மனிதனுக்கு எது பறிபோனாலும் பரவாயில்லை ஆனால் சுதந்திரமும், உரிமைகளும் பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டால் மனம் துடிக்கும் வேதனை சொல்வதற்கரியது. அந்த பயம் மனத்தினைக் குழைத்துச் சரித்தாலும் நம்பிக்கை என்னும் விதை வேர்கொண்டிருக்கிறது.... அந்த நம்பிக்கையுடன் இருக்கின்றேன்...

Jan 15, 2010

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 03

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள இந்நிலையில் எனது தொடர் பதிவின் 3வது பகுதியைப் பதிவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு தொடர்கிறேன்.

கடந்த பதிவைச் சில கேள்விகளுடன் முடித்திருந்தேன்...

அடுத்த ஜனாதிபதியாக ஃபொன்சேகாவால் வர முடியுமா? அவரது கொள்கை என்ன? தமிழர்கள் அவரை நம்பலாமா? சிறுபான்மையினர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன? ஒரு வேளை சிறுபான்மையினர் ஃபொன்சேகாவை ஆதரிப்பது இஞ்சி கொடுத்த மிளகாய் வாங்கிய கதையாகுமா?


இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றோடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்த சிலர், அரசாங்கத்திலிருந்து பிரிந்துவந்த சிறுபான்மைப் பிரதிநிதிகள் என அநேக சிறுபான்மையினங்களின் பிரதிநிதிகள் சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளித்திருக்கும் இந்நிலையில் சிறுபான்மையினர் எவ்வளவு தூரம் அவரை நம்பலாம் என்பது சிறுபான்மையினர் எவ்வளவு தூரம் தமது பிரதிநிதிகளை நம்பலாம் எனும் நிலைக்குத் திரிபடைந்துள்ளது. விரிவாகக்கூறின் இன்று தமிழர்கள் ஒரு முன்னாள் இராணுவத் தளபதியை ஆதரிக்க நிச்சயம் தயக்கம் காட்டுவார்கள் ஆனால் அதை மீறியும் சரத் என்ற தனிநபருக்கு ஆதரவு அளிக்க அந்தத் தனிநபர் மீதான நம்பிக்கையை விட அவரை ஆதரிக்கும் நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மீதான நம்பிக்கையின் பேரிலேயே வாக்களிக்கவுள்ளார்கள் என்பது நிதர்சனம். இலங்கையின் எந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும் இம்முறைத் தேர்தல் மிகவும் சிக்கலான நிலையை சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து நம்பி வாக்களித்த தலைவர்கள் கடைசியில் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையுமே அளித்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் கதை (உதாரணம் - ஜே.ஆர், சந்திரிக்கா) ஆனால் இம்முறை தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் சரத் ஃபொன்சேகாவிற்கு வாக்களிக்கப்போகின்றார்கள் என்றால் அதன் காரணம் சரத் மீது கொண்ட நம்பிக்கை என்பதைவிட அவரை ஆதரிக்கும் தமது நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மீதான நம்பிக்கையே ஆகும். தமிழர்களைப்பொருத்தவரை கூட்டமைப்பு, மனோகணேசன் மற்றும் ரணில் விக்ரமசிங்ஹ மீதான நம்பிக்கையிலேயே மக்கள் சரத்திற்கு வாக்களிக்கப் போகின்றார்களேயன்றி அது சரத் மீதான முழு நம்பிக்கையினால் அல்ல.


அண்மையில் எனக்கு முதலில் அதிர்ச்சி கொடுத்த விடயம் சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனமான “விஷ்வாசனீய வெனசக்”  - நம்பிக்கையான மாற்றம். 10 முக்கிய அம்சங்களை முன்வைத்திருக்கும் ஃபொன்சேகா அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உறுதியான தீர்வேதும் பற்றிக் கூறாதமை பற்றி நான் முதலில் அதிர்ச்சியடைந்திருந்தேன் ஆனாலும் அதற்கான காரணத்தை ஊகிக்க நீண்ட நேரம் பிடிக்கவில்லை. முன்னர் குறிப்பிட்டது போல இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் முதுகெலும்பாக அமைவது “யுத்த வெற்றி” - அதைப் பெற்றுக்கொடுத்தது மஹிந்தவா? சரத்தா? என்பது தான் ஆரம்ப கட்டப் பிரச்சாரமாக இருக்கிறது. இந்நிலையில் சிங்கள மக்களைப் பொருத்தவரையில் யத்த வெற்றி தொடர்பில் இருவரும் சமமான நிலையிலேயே கருதப்பட்டாலும் மாற்றம் ஒன்று அவசியம் - ஊழலற்ற தேசம் வேண்டும் என்ற நோக்கத்துக்காக சரத்தை அவர்கள் ஆதரிக்கலாம் இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய மஹிந்த சிந்தனை 2ல் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடாத நிலையில் சரத் ஃபொன்சேகா அது பற்றித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தால் உடனே அரசாங்கமும், அரச ஊடகங்களும் அடித்துப்பிடித்தக்கொண்டு தேசத்தை சரத் துண்டாக்கப்போகிறார் தமிழருக்கு தனிநாடு கொடுக்கப்போகிறார் எனப்பிரச்சாரப் பீரங்கிகளை இயக்கத்தொடங்கிவிடுவார்கள் - இது சரத்தின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும். இது நடக்கும் என்பதற்கு உதாரணத்தை நாம் இங்கு எமது கண்முன்னே கண்டு கொண்டுதான் இருக்கிறோம். கூட்டமைப்பக்கும்-சரத்துக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் - அதை வெளிப்படுத்துக என அரசாங்கம் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபடுவதும், பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கூறிய கருத்தை வைத்தக்கொண்டு விளம்பரம் செய்து சரத் தமிழருக்கு சுயாட்சி கொடுக்கப்போகிறார் என விளம்பரம் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் அவர்களின் ராஜதந்திரத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என நான் எண்ணுகிறேன். ஏனெனில் தமிழர் அல்லது முஸ்லிம்கள் ஃபொன்சேகாவிற்கு அளிக்கும் வாக்குகளுக்கு அவரை ஆதரிக்கும் சிறுபான்மைத் தலைவர்களே நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்.


மேலும் சரத் ஃபொன்சேகாவைவிட உறுதியான வேறு வேட்பாளர் இல்லாமையை குறிப்பிட்டே ஆகவேண்டும். சிலர் விக்கிரமபாகுவையும், சிவாஜிலிங்கம் பற்றியும் குறிப்பிடலாம். என்னுடைய முழுத்திறனையும் பந்தயத்திலிட்டு சவாலிடுகிறேன் இந்தத் தேர்தலல்ல, எந்தத் தேர்தலிலும் விக்கிரமபாகுவால் வெற்றி பெற முடியாது - விக்கிரமபாகு தமிழருக்காகக் குரல் கொடுத்தார் என்பார்கள் - நான் ஏன் என்று யோசித்தென். விக்கிரமபாகு சிங்களவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு தலைவர் - அவருக்கு அடுத்த வாக்கு வங்கி உருவாககத்திற்குத் தமிழர்களை விட்டால் வேறு வழி?


சிவாஜிலிங்கத்தை பொருத்த வரையில் எனக்குச் சில முரண்பாகள் தோன்றியது - அவற்றின் விளைவாக ஒரு முடிவும் தோன்றியது. முரண்பாடுகளைச் சொல்கிறேன் முடிவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்படுவார் என்ற நிலையிலிருந்தவர் - இங்கு வந்து இதுவரை கைது செய்யப்படாது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எங்ஙனம்? அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர் என்றால் ஏன் கூட்டமைப்பு அவரை ஆதரிக்கவில்லை? கூட்டமைப்பில்அதிகம் “பேசக்” கூடியவரான ஸ்ரீகாந்தா இப்போதெல்லாம் ஏன் அமைதியுடன் இருக்கிறார்? சரத்தை ஆதரசிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் திட்டும் அரசாங்கம் - சுயாட்சிக் கோரிக்கையுடன் களம் புகுந்த சிவாஜிலிங்கம் பற்றி ஏன் கருத்தேதும் பேசவில்லை - அவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஏன் கூறவில்லை? இந்த முரண்பாடுகளை வைத்து இந்த Puzzle ஐப் பொருத்திப் பாருங்கள் உங்களுக்கும் ஒரு முடிவு கிடைக்கும். ஆக தமிழ் புத்திஜீவிகள் பகிரங்கமாகக் கோரிக்கைவிடுத்தது போல - எமது வாக்குகளை ஜனாதிபதியாக வரவாய்ப்பில்லாதவர்களுக்கு அளித்து வீணாக்குவதைவிட - வரத் தகுதியானவர்களுக்கு அளித்து அவர்களிடம் எமது கோரிக்கைகளை பேரம் பேசுவதன் மூலமே நாம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இங்க ஒன்றைக் கவனிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ. ஜனநாயக மக்கள் முன்னணியோ, முஸ்லிம் காங்கிரஸோ எழுமாற்றாக சரத்தை ஆதரிக்கவில்லை - தமது கோரிக்கைக்கு அவர் இசைந்ததனால் மட்டுமே அவரை ஆதரிக்கின்றன்.

சரத் ஃபொன்சேகாவின் கொள்கையைப் பொருத்தவரை அவரது எல்லாத் திட்டங்களதும் அடிநாதம் பாராளுமன்றத்தில் தங்கியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றை மையப்படுத்திய ஆட்சியை கொண்டு வர அவர் உறுதிகூறுகிறார். ஆக அது நிறைவேறும் பட்சத்தில் மக்கள் சரத்தின் தனிப்பட்ட நிலைப்பாடுகள் பற்றிப் பயப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு வேளை அது நடைபெறாது போனால்?


ஒருவேளை பதவிக்கு வந்தபின்னே அவர் அவரை ஆதரித்த ஏனைய தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு எதேச்சாதிகாரமாக நடந்துகொண்டால்? இந்தக் கேள்வி பலர் மனதில் இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். சரத் ஜனாதிபதியானாலும் அவருக்கென்று தனிக் கட்சியோ, அல்லது பாரளுமன்ற பலமோ இல்லை. ஆக அவர் எதேச்சாதிகரமாகச் செயற்படத்துணிந்தால் நிச்சயமாக பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலமோ (அது நடப்பது கொஞ்சம் சிக்கலானது) அல்லது பாராளுமன்றம் அரசியல் யாப்புத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து அவரது நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதன் மூலமும் அந்நிலையை மாற்றிவிடலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் பொருத்தவரையில் அவருக்கு என்று கட்சியிருக்கிறது - பாராளுமன்ற பலம் இருக்கிறது ஆகவே அவர் ஒருவேளை எதேச்சாதிகரமாகச் செயற்பட்டால் (!?) அவரது கட்சியினர் அவருக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அவர் தயக்கமின்றி தனது எதேச்சாதிகாரத்தைத் தொடரலாம், ஆனால் சரத் ஃபொன்சேகாவின் நிலைவேறு - அவர் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குப்படி அவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வருவார் (இங்கு அவர் சார்ந்து நிறைவேற்று அதிகார ஒழிப்பு அமையாது என்பதை கருத்திற் கொள்க - அது முழுமையாகப் பாராளுமன்றம் சார்ந்தது - ஆனால் ஜனாதிபதியாக அவர் அதை செய்ய ஆதரிப்பது ஒரு பலம் - அவ்வளவே). அவர் முன்வராத பட்சத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளெல்லாம் இந்த ஜனாதிபதி முறை ஒழிப்பையே எதிர் பார்த்திருக்கிறது ஆகவே அவை நிச்சயமாக தமது பாராளுமன்ற பலத்தின் மூலம் (இன்றைய ஆளுங்கட்சியும் உடன்படும் - ஏனெனில் அவர்கள் தாம் சாராத ஒருவரை நிறைவேற்றதிகாரத்தில் வைக்க விரும்பமாட்டார்கள்) அரசியல் யாப்புத்திருத்தமொன்றினூடாக நிறைவெற்றதிகாரமுள்ள ஜனாதிபதிமுறையை ஒழிப்பார்கள். ஆக மொத்தத்தில் சரத் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பது நிதர்சனம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமா? அதன் விளைவுகள் என்ன? - இது பற்றி பின்னர் வேறொரு பதிவில் அலசுவோம். ஆக இன்று உள்ள முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுள் பல கட்சிகளின் ஆதரவு உள்ள சரத் ஃபொன்சேகா அடுத்த ஜனாதிபதியானாலும் அவரின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தடுக்கும் பிரம்மாஸ்திரமும் அந்தக் ஆதரவுக் கட்சிகளிடமுண்டு.

அடுத்த கேள்வி சரத் ஜனாதிபதியாவாரா? வாய்ப்பு இருக்கிறதா? - இந்தக் கேள்வி பற்றி நான் சிந்தித்திருந்த வேளை ஒரு குறுஞ்செய்தி என் கைத்தொலைபேசியை எட்டியது - அதில் கூறியதை தருகின்றேன் - நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

இலங்கையில் ஒருவர் ஜனாதிபதியாக 50 வீத வாக்குகள் தேவை. ஐ.தே.கவிடம் 35வீத வாக்குப்பலமுண்டு, ஜே.வி.பியிடம் ஒரு 5 சதவீத வாக்குப்பலமும், ஜ.ம.மு, த.தே.கூ, மலையத் தலைவர்கள் மற்றும் ஃபொன்சேகாவின் ஏனைய ஆதரவுத் தலைவர்களிடம் எனக்கூட்டாக ஒரு 10வீத வாக்குப்பலமும் இருக்கிறது. இவை மொத்தமாக 50 வீதத்தைத் தந்துவிடும். இதைவிட ஃபொன்சேகாவுக்கென மேற்கூறிய கட்சிகள், தலைவர்கள் சாராத வாக்குகள் (சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் பலர் கூட ஃபொன்சேகாவை விரும்புகிறார்கள்) இன்னும் எத்தனை வீதமுண்டு ஆக அவருக்கு வெற்றிவாய்ப்பு உண்டு!

இப்படிச் சொல்கிறது அந்த குறுஞ்செய்தி - இது கொஞ்சம் மிகையான பக்கச்சார்பான தகவல்தான் ஆனால் இதை முற்றிலுமாக மறுப்பதற்குமில்லை. நான் இலங்கையின் அனேக பகுதிகளைச் சார்ந்தவர்களோடு எதேச்சையாக பேசியதில் பலர் நேரடியாகத் தங்கள் விருப்பத்தைச் சொல்ல விரும்பாவிடினும் (இல்லை - பயப்பட்டாலும்) மாற்றத்தை விரும்புகிறோம் என்கிறார்கள்.


எல்லாம் சரி நான் என்ன ஃபொன்சேகா ஆதரவாளனா? (நீங்கள் யோசிக்கலாம்) - பதிலுடன் மேலும் பல்வேறுபட்ட தேர்தல் சம்பந்தமான அலசல்களுடன் அடுத்தபதிவில் சந்திக்கின்றேன்.

பி.கு. - 2ம் பகுதிக்கும் 3ம் பகுதிக்குமிடையிலான நீண்ட கால இடைவெளிக்கு வருத்தத்தைத் தெரிவித்தக்கொள்கின்றேன். களநிலவர தேடலுக்காகக் கொஞ்சக் காலம் காத்திருந்தேன் அவ்வளவுதான்.

பகுதி 04ல் அலசல் தொடரும்....

Dec 28, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 02

சரத் ஃபொன்சேகா


இலங்கை இராணவ வரலாற்றின் முதலாவது நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஜென்றள் தர அதிகாரி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்குக் முக்கிய காரணகர்த்தா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே “முன்பு” புகழப்பட்டவர். இன்று அரசாங்கத்துடனான கசப்புணர்வுகளால் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமையதிகாரி என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி கூட்டின் பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிக்கிறார் ஆனால் ஐ.தே.க வின் யானைச் சின்னத்திலோ ஜே.வி.பி யின் மணிச் சின்னத்திலோ தேர்தல் களம் புகாது புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அன்னச் சின்னத்தில் தேர்தல் களம் புகுந்திருக்கிறார்.



சரத் ஃபொன்சேகா என்றதும் விடுதலைப்புலிகளக்கெதிரான யுத்த வெற்றிதான் மக்கள் கண் முன் நிற்கின்றது. என்னதான் “மன்னன்” அந்தஸ்திலிருந்து யுத்தத்தை நடாத்தியது மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் களத்திலிருந்து படைகளை வழிநடாத்தி வெற்றியைத் தேடிக்கொடுத்ததில் பெருமளவு பங்கு ஃபொன்சேகாவைச் சார்ந்தது - இதனை “முன்பு” அரசாங்கமும், ஜனாதிபதியும் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் புகழ்ந்திருந்தார்கள். இப்படியாக ஜனாதிபதியின் “வெற்றி” முழக்கத்தின் முக்கிய காரணகர்த்தாவாக முன்பு இருந்தாலும் எங்கு இவர்களிடையெ முரண்பாடு தோன்றியது என்பதில் இன்றுவரை தெளிவாக விடைகாண இயலவில்லை. அண்மையில் ஃபொன்சேகா வழங்கிய செவ்விகளிலிருந்தும் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்தும் சில, பல கருத்துக்கள் வெளிவந்திருந்தாலும் எதுவும் அந்த வினா முடிச்சை முற்றாக அவிழ்க்கவில்லை. மேலும் சரத் .பொன்சேகா வெளியிட்ட பெரும்பாலான கருத்தக்களிலிருந்து அவருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிரச்சினையைவிட அவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் (கோத்தாபய ராஜபக்ஷ) இடையிலான கருத்துமுரண்பாடுகளும், புரிந்துணர்வின்மையுமே இந்தப் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த 24ம் திகதி இரவு சிரச தொலைக்காட்சியில் ஃபொன்சேகா வழங்கிய செவ்வியில் அவர் பாதுகாப்பச் செயலாளரைப் பெருமளவு தாக்கியிருந்தார், “15 வருடங்கள் நான் யுத்த களத்தில் போரிட்டுக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் கணணியில் தட்டிக்கொண்டிருந்தவர், பிறகு இங்கு வந்து விட்டு என்னைப் பற்றி அவதூறு கூறவும், எனது இராணுவ அனுபவம் பற்றிப் பேசவும் அவருக்கு லாயக்கில்லை” என ஃபொன்சேகா அந்தச் செவ்வியில் கூறியிருந்தார்.



இப்படியாக அவர்கள் இருவருக்கிடையிலான முறுகல் நிலையே ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகைக்கும் அரசியல் களப் பிரவேசத்திற்கும் காரணம் என்பது தெளிவான நிலையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கும் ஃபொன்சேகாவின் கொள்கைகள் பற்றியம். அவரது திட்டங்கள் பற்றியும் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். என்னதான் சொன்னதைச் சொன்னவாறு செய்து முடிப்பவர் எனும் நன்மதிப்பு ஃபொன்சேகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்தாலும் அவர் என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறார் என்பது பலர் மத்தியில் கேள்விக்குறியாகத் தொக்கு நிற்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட்டிருந்தால் கூட இவ்வளவு யோசிக்காமல் தங்கள் வாக்குகளை இவ்வேளை தீர்மானித்திருப்பார்கள் ஆனால் சரத் ஃபொன்சேகா என்றதும், அதுவும் முன்னாள் இராணுவத் தளபதி - யத்தத்தை வென்றவர் - தமிழரின் இரத்தம் சிதறடிக்கப்பட்ட யத்தத்தை நடாத்தியவர் என்றதும் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். பலர் ஜனாதிபதியாகட்டும், ஃபொன்சேகாவாகட்டும் இருவரும் ஒன்றுதான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஃபொன்சேகாவின் வாக்கு வங்கியைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் பலரும் ஃபொன்சேகாவின் பக்கத்தில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களில் ஏனைய வேட்பாளர்களுக்குள்ள ஆதரவை விட சரத் ஃபொன்சேகாவிற்கு அதிக ஆதரவு உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் கொழும்பைப்பொறுத்த வரையில் அது ஐ.தே.க வின் தொகுதி அத்துடன் ஏனைய கட்சி சார்ந்தவர்களிடம் கூட ஃபொன்சேகாவுக்கு ஆதரவு இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கொழும்பில் ஃபொன்சேகாவுக்கிற்கிருக்கம் அதிக ஆதரவுக்குப் பிரதான காரணம் மக்கள் ஒர மாற்றத்தை வேண்டுவதாகும். பொருளாதார நிலை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி முதலாவது காரணம். பொருளாதார மாற்றங்கள் இலங்கையின் வேறு எப்பகுதியையும் தாக்குவதை விட கொழும்பைத்தான் உடனடியாக, அதிகமாகப் பாதிக்கிறது. மேலும் கொழும்பில் அதிகரித்த பாதுகாப்புக் கெடுபிடிகளும், அடிக்கடி பாதைகள் மூடப்படுதலும் கூட மக்களுக்கு அதிருப்தியை மட்டுமல்லாது எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் யுத்தம் முடிந்தபின்னும் அங்குமிங்குமாகப் பாதுகாப்புச் சாவடிகள் இருப்பதும் அதே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பதும் மக்களை மிகவும் எரிச்சலடையச் செய்துள்ளது. கொழும்பின் நிலை இப்படியிருக்க வெளிமாவட்டங்களைப் பொறுத்தவரையில் இவை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை ஆனால் அம்மாவட்டஙக்ளின் கட்சி வாக்கு வங்கிகளின் படி வேட்பாளர்களிடையே வாக்குகள் பிரிவடையும் என்பதே எனது கருத்து.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் சரத் ஃபொன்சேகாவின் பிரதான பலம் மக்களும் இளைஞர்களும் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவரது “ஹீரோ” அந்தஸ்து. ஃபொன்சேகா நியாயமானவர், கறைபடியாதவர் என மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அத்தோடு ஃபொன்சேகாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மற்றும் 3வது பெரிய கட்சி ஜே.வி.பி. மங்கள் சமரவீர, மனோகணேசன், ரவுஃப் ஹக்கிம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஆதரவு இருப்பது பெரும்பலம். ஒரு வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் ஆதரவுக்கரத்தை வழங்கினால் சரத் ஃபொன்சேகாவினால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலமான போட்டியை வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வளவு ஆதரவு இருந்த போதும் பிரச்சாரம், விளம்பரங்கள் என்று பார்த்தால் சரத் ஃபொன்சேகாவின் தரப்பு இந்நாள் வரை பலம் குறைந்துதான் காணப்படுகிறது.



சரத் ஃபொன்சேகாவின் விளம்பரங்களும். பிரச்சாரங்களும் ஜனாதிபதியின் பிரச்சாரம் அளவுக்கு இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதே பலரது கருத்து - அது ஏன் என்பது இன்னும் சிதம்பரசக்கரமாகவே இருக்கிறது. அத்துடன் மறுபக்கத்தில் ஃபொன்சேகாவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் அவர் வெளியிட்ட சச்சரவுமிக்க கருத்துக்கள் (குறிப்பாக யுத்தகால மனித உரிமை மீறல் தொடர்பானவை) இன்று சகல ஊடகங்களிலும் அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதைக் காணலாம். அதிலும் குறிப்பாக இலங்கை முழுக்க வீச்சுள்ள அரச இலத்திரனியல் ஊடகங்கள் பெருமளவு ஜனாதிபதிக்கு ஆதரவான கருத்தக்களைக் கொண்டுசெல்வதால் அதற்குச் சமமான மாற்றுப் பிரச்சாரத்தை ஃபொன்சேகா செய்ய வேண்டியிருக்கிறது. என்ன தான் சுவரொட்டி நிபுணர்களான ஜே.வி.பி.யினர் ஃபொன்சேகாவுடன் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அவைகூட மிகக் குறைவாகத்தான் கண்களில் படுகிறது.


சரி, அடுத்த ஜனாதிபதியாக ஃபொன்சேகாவால் வர முடியுமா? அவரது கொள்கை என்ன? தமிழர்கள் அவரை நம்பலாமா? சிறுபான்மையினர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன? ஒரு வேளை சிறுபான்மையினர் ஃபொன்சேகாவை ஆதரிப்பது இஞ்சி கொடுத்த மிளகாய் வாங்கிய கதையாகுமா? போன்ற கேள்விகள் பலர் மனதில் உள்ளன என்பதை என்னால் ஊகிக்கமுடியகிறது. இவற்றுக்கான பதில்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கின்றேன்.


பகுதி 03ல் அலசல் தொடரும்....

Dec 27, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 01

 ஜனவரி 26! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவது யார் என்ற கேள்வி இன்று அனைத்து இலங்கையர் மனத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இம்றை 22பேர் போட்டியிட்டாலும் 2 பேரின் பெயர்தான் பரபரப்பாக அடிபடுகிறது, அவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளா் ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவினதும் ஆகும். ஆனால் தமிழர் மத்தியில் , இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்ணவும், சுயேட்சைத் தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கமும் கூடக் கருதப்படுகிறார்கள். இந்தச் சந்தியில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார்? (யாருக்கு எந்தளவு வாய்ப்பு இருக்கிறது), பிரதான வேட்பாளர்களின் குறை நிறைகள் பற்றிய கொள்கைகள் பற்றிய அலசலாக இந்தப் பதிவு அமையும்.

மஹிந்த ராஜபக்ஷ




தற்போதைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணைக்காக தனது முதற்தவணைப் பதவிக்காலம் நிறைவடைய 2 வருடக காலம் முன்பாகவே ஜனாதிபதித்தேர்தலை நடாத்துகிறார். இவருக்கு மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுவதாகத் தெரிகிறது இதற்கு மிகப்பிரதானமான காரணம் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியேயாகும். இவற்றைவிட நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் இடம்பெற்ற சமூக, பொருளாதாரக் கீழ்க் கட்டுமானப் பணிகளும் அதிலும் குறிப்பாக தென் மாகாணத்தில் செய்த அபிவிருத்திப் பணிகளும் மக்கள் மத்தியில் இவருக்கான நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை நான் எழுமாற்றாக எழுதவில்லை - இந்நாட்டில் பல பகுதிகளிலுமுள்ள வேறுபட்ட மக்களிடையே பேசி அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் தான் நான் இந்தப் பதிவை வரைகின்றேன். இப்படியாக தற்போதைய ஜனாதிபதி மீது மக்களுக்கு (குறிப்பாகச் சிங்கள மக்களுக்கு) நன்மதிப்பு இருந்தாலும் அவற்றை மீறி பல அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கிறது. அடிப்படையில் பொருளாதார ரீதியில் மக்கள் ஏதோ ஒரு குறையை உணர்ந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். விலையேற்றம் பாரிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் உலாவிக்கொண்டிருந்தாலும் “யுத்த வெற்றி” என்ற மாயத்திரை அதை மறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. 



இதை விட இன்னும் பல அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இலங்கையின் மெகா அமைச்சரவை தொடர்பிலும், அமைச்சர்களின் நியமனம் தொடர்பிலும் இலங்கையின் பலதரப்பட்ட மக்களும் அதிருப்தியுற்றே இருக்கின்றார்கள். கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி பரிசளிக்கப்படுவதும், “தகுதி” அற்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதும், ஒரே துறைக்கு பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் மக்கள் இதை ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கும் படி செய்திருக்கிறது. இந்த அமைச்சர்களுக்கான வீண் செலவுகள் தொடர்பிலும் இலங்கையின் புத்திஜீவிக் குழாம் கவலை தெரிவித்திருக்கிறது - இதை பொதுநிதியின் வீணாக்கலாகவே பலர் கருதுகிறார்கள். மேலும் குடும்ப ஆட்சி தொடர்பிலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.  அதிலும் குறிப்பாக சரத் .ஃபொன்சேகா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பெரும்பாலான ஆட்சிக்கேடுகளுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. 



இவற்றுக்கும் மேலாக யுத்த வெற்றி என்பதையே ஜனாதிபதி பிரதான பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ஆனால் அது “தமிழ்ச் சமூகத்தைப்” பெரிதும் ஆர்வங்கொள்ள வைக்கும் ஒன்றாக இருக்கவில்லை. தமிழர் விடுதலைப் போரின் தோல்வி என்பதற்கப்பால் (அதை ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தினாலும் கூட) அகதி முகாம்களில் தமிழர்கள் அகதிகளாகச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழிந்ததும், மேலும் யுத்தத்தின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் தொடர்பிலான பல்வேறுபட்ட கருத்துக்களும் தமிழர்களை இந்த அரசாங்கத்தின் மீது பெருமளவு நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 



என்னதான் கோடி கோடியாகக் கொட்டி விளம்பரங்களும், பிரச்சாரங்களும் செய்தாலும் மக்களின் மனதில் இருக்கும் வடுக்களுக்கு மருந்து கொடுக்காத வரை அவர்களது நிகழ்காலப் பிரச்சினைகளுக்கே தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வரை “வளமான எதிர்காலம்” பற்றி மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள். இன்று காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவனுக்கு நாளைக்குக் கிடைக்கப்போகும் மாடமாளிகை பற்றிக் கவலையில்லை அவனது கவலையும் தேவையுமெல்லாம் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காயத்திற்கான மருந்தும் தீர்வும்தான். 



இவற்றைவிட யுத்தவெற்றிக்குப் பெரிதும் பங்களித்த சரத் ஃபொன்சேகா (தற்போதைய பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்) தற்போது ஜனாதிபதி பற்றியும் அரசாங்கம் பற்றியும் வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்திகளும், குற்றச்சாட்டுகளும் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஜனாதிபதியின் வாக்கு வங்கி மீது ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிதர்சனம். பதவிக்காலம் நிறைவடைய 2 வருடங்கள் முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தக் கோரியதன் காரணம் வெற்றியின் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கிருக்கும் உறுதியான நம்பிக்கையாகும் ஆனால் இன்று அரச ஊடகங்களின் மூலம் நடாத்தப்படும் அதீத பிரச்சாரங்களும், பிரதான எதிர்த்தரப்பு வேட்பாளர் மீதான வசைத் தாக்குதல்களும் அவரது வெற்றியின் மீதான உறுதியான நம்பிக்கை சரத் ஃபொன்சேகாவின் அரசியற் பிரவேசத்தால் அசைக்கப்பட்டிருக்கிறது என்பதையே பறை சாற்றுகிறது. எதிரிகள் தானாக உருவாவதில்லை - நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கின்றோம் என்பது பிரபலமான கூற்று அதுபோல மீதம் 20 வேட்பாளர்கள் இருக்க ஒரு வேட்பாளர் மீது வசை பாடத் தொடங்கியதனூடாக அவரையே தனது பிரதான எதிர்த்தரப்பாக அடையாளப்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.



இந்நிலையில் இத்தேர்தலில் ஜனாதிபதியின் அதீத வெற்றியின் நம்பிக்கை குறைந்து போய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றிபெற மாட்டார் என்று அறுதியாகக் கூறிவிட முடியாது. நிகருக்கு நிகராகப் போட்டியிருந்தாலும் அமைச்சர்கள், அரசியல் தலைவா்கள் பலரின் ஆதரவும் விளம்பரம், பிரச்சாரங்கள் என்பனவற்றுக்காகச் செலவழிக்கப்படும் பல கோடி ரூபாய்களும் அதிலும் இம்முறை புதுமையாக இணையவழி விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களிலும், செய்தி, விளையாட்டு மற்றும் இலங்கையர்கள் சொடுக்கும் முக்கிய தளங்களிலெல்லாம் “வளமான எதிர்காலம்” தேர்தல் பிரச்சார விளம்பரங்களும் அந்த மிக நெருங்கிய போட்டியை மீறி மயிரிழையில் வெற்றியை ஜனாதிபதிக்குத் தரவாய்ப்பிருக்கிறது. மேலும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் பதவியிலிருந்த ஜனாதிபதி 2ம் முறை தேர்தலில் போட்டியிட்டுத் இதுவரை தோல்வி கண்டதில்லை. எது எவ்வாறு இருப்பினும் இம்முறை தேர்தல் மிக விறுவிறுப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி.


பகுதி 02ல் அலசல் தொடரும்....


அடுத்தடுத்த பகுதிகளில் ஏனைய முக்கிய வேட்பாளர்கள் தொடர்பாக அலசப்படுவதுடன், வெற்றிவாய்ப்புக்கள், தேர்தல் கால நிகழ்வுகள் பற்றியும் ஆராயப்படும்.