எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -
********************************************************
வருடத்தின் சோகம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?
********************************************************
வருடத்தின் மகிழ்ச்சி
தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.
********************************************************
வருடத்தின் அதிர்ச்சி
சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.
********************************************************
வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்
என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது!
********************************************************
வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்
என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.
********************************************************
வருடத்தின் சிறந்த திரைப்படம்
என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை.
********************************************************
வருடத்தின் இனிய பாடல்
நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!
********************************************************
வருடத்தின் சிறந்த பத்திரிகை
சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.
********************************************************
வருடத்தின் கேவலம்
ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!
********************************************************
விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.
********************************************************
வருடத்தின் சிறந்த மனிதன்
சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!
********************************************************