Dec 11, 2010

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக Sunday Times செய்தி வெளியிட்டிருக்கிறது. 


மேற்படி செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு தேசத்திலும் 2 மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்று அமைச்சரவையில் தெரிவித்ததாகவும், அதனை ஆதரித்த விமல் வீரவன்ச, 300ற்கும் மேற்பட்ட மொழிகளுடைய இந்தியாவில் கூட ஹிந்தியில்தான் தேசிய கீதம் இருப்பதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, றாஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இருவர் மட்டுமே தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை நீக்கும் முன்மொழிவுக்கு மறுப்பாகக் கருத்துத் தெரிவித்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தப் பதிவை நான் எழுதக்காரணம் அமைச்சரவையின் முடிவைக்கண்டிப்பதற்கு மட்டுமல்ல மாறாக, பொய்யான கருத்துக்களைக்கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரசின்ஹவும் மக்களை ஏமாற்ற விளைந்ததைச் சுட்டிக்காட்டவுமேயாகும்.

முதலாவதாக ஜனாதிபதி, உலகில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் வேறு தேசமெதிலும் இல்லை என்று கூறிய கருத்து, அப்பட்டமான பொய். கனடாவின் தேசிய கீதம் 3 மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் இனுக்டிடுட் ஆகிய மொழிகளில் கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது. சுவிற்சலாந்துத் தேசிய கீதம் சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸ்ஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான ஃபிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் றொமான்ஷ் ஆகிய மொழிகளில் சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்படுகிறது. இதை விட தென்னாபிரிக்க தேசிய கீதத்தில் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் 5 மொழிகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அஃப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி) மற்றும் ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது.

அடுத்ததாக விமல் வீரவன்ச சொன்ன கருத்து - “இந்தியத் தேசிய கீதம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது” - அடுத்த அப்பட்டமான பொய், இதை இவர் சொன்னதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையானோரின் மொழி ஹிந்தி, ஆகவே பெரும்பான்மையானோரின் மொழியிலேயே தேசியகீதம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் தான் இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபெல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டது. ஆக பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது, அதற்கு சீன, தமிழ் மற்றும் ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக்கள் உண்டு எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற நம்ப நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியதன் மூலம், அரசாங்கம் தனது தமிழின விரோத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளில் இது பாரிய பின்னடைவாகும், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படச்சம்மதித்து ஒரு நாள் கூட ஆகமுன் இத்தகைய முடிவானது தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது போலும்.

இனவாத அரசியலை இலங்கைத் தலைவர்கள் கைவிடும் வரை இலங்கையின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

"Racism is man's gravest threat to man - the maximum of hatred for a minimum of reason."  ~Abraham Joshua Heschel

**************************************************************************

அமைச்சரவை நீக்குவதற்கு முடிவெடுத்த இலங்கைத் தேசிய கீததத்தின் தமிழ்ப்பதிப்பு (இனி சுவடியாகப் பாதுகாக்கப்படவேண்டியதுதானா?!)

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே



Dec 5, 2010

யுத்தக் குற்றம் என்றால் என்ன?





அண்மைக்காலங்களாக தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சொற்களில் /  விடயங்களில் ஒன்று யுத்தக் குற்றம் (war crime). இது யுத்தக் குற்றம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.


யுத்தக் குற்றம் என்பதை சுருக்கமாக பின்வருமாறு வரையறுக்கலாம் :

யுத்தக் குற்றம் என்பது யுத்தவிதிகளை மீறும் தனிநபர்கள், ராணுவம், சிவிலியன்கள் என்பவருக்குரிய சர்வதேசச் சட்டங்களின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகும்.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது அதிலும் குறிப்பாக 2ம் உலக யுத்தத்தின் பின்னரே யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெறத்தொடங்கியது எனலாம். 2ம் உலப் போரின் போது நாட்ஸிப் படைகள் யூதர்களை (பொதுமக்களை) கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது (இன அழிப்பு), ஜப்பானியப் படைகள் சிவிலியன்களையும், அரசியற்கைதிகளையும் இழிவான விதத்தில் நடத்தின, கொன்று குவித்தன. 2ம் உலக யுத்தம் நேசநாடுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நேச நாடுகள் மேற்கூறிய யுத்தக் குற்றங்களை இழைத்ததாக நம்பப்படும் ஜேர்மனியப் படைத்தளபதிகளையும், ஜப்பானியப் படைத்தளபதிகளையும் கைது செய்து, சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றின. 1945 மற்றும் 1946ல் இடம்பெற்ற “நுரெம்பேர்க் விசாரணைகளின்” பின்னர் 12 நாட்ஸித் தளபதிகளுக்கு யுத்தக் குற்றம் இழைத்தமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 1948 ஜப்பானின் டோக்கியோவில் யுத்தக் குற்றம் இழைத்த 7 தளபதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (நேச நாடுகள் ஜப்பானின் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை). இவை தான் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெற்றதற்கான முன்னோடிகளாகும்.

இதை விட தனியாக அரசாங்கங்களும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களைத் தண்டித்திருக்கிறது. உதாரணமாக 1960ல் ஆர்ஜன்ரீனாவில் வைத்து இஸ்ரேலிய முகவர்களால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கடத்தப்பட்டு அங்கு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெர்மனிய நாட்ஸிப் படையைச் சேர்ந்த, “த ஹொலொகோஸ்ட்” (பேரழிவு) இல் பங்குபற்றி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அடல்ஃப் எய்ஷ்மன்-ஐக் குறிப்பிடலாம். இதே போல 1987ல் க்ளோஸ் பார்பி என்ற நாட்ஸிப் படை முக்கியஸ்தர் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு ஃபிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு யுத்தக் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கருவானது, குறித்த தேசம் அல்லது அதன் .இராணுவ வீரர்கள் இழைத்த குற்றங்களுக்கு (யுத்த விதி/தர்ம மீறல்களுக்கு) தனி நபர் ஒருவரைப் பொறுப்பாளியாக்க முடியும் என்கிறது. அதாவது இராணுவ வீரர்கள் இழைத்த குற்றத்திற்கு அவர்களுக்கு மேலான தளபதிகள், தலைமைத் தளபதிகளைப் பொறுப்பாக்க முடியும்.

இன அழிப்பு, சிவிலியன்களை இழிவான / முறையற்ற விதத்தில் நடத்துதல், போர்க்கைதிகளை முறையற்ற விதத்தில் நடத்துதல் போன்றன் குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்களாகும். அதிலும் இன அழிப்பு என்பது பாரிய யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

யுத்தக் குற்றங்களை வரையறுக்கும் சட்ட அதிகாரங்களாக ஜெனீவா மரபுகள் (Geneva Conventions) மற்றும் பழமையான யுத்த தர்மச் சட்டங்களும் காணப்படுகிறது. 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்து பின்வருமாறு யுத்தக்குற்றத்தை வரையறுக்கிறது :

"Wilful killing, torture or inhuman treatment, including... wilfully causing great suffering or serious injury to body or health, unlawful deportation or transfer or unlawful confinement of a protected person, compelling a protected person to serve in the forces of a hostile power, or wilfully depriving a protected person of the rights of fair and regular trial, ...taking of hostages and extensive destruction and appropriation of property, not justified by military necessity and carried out unlawfully and wantonly." 

அதாவது மனவுறுதியுடன் உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைத்தல், சட்டத்திற்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரை தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புக்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதகமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்கமுடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் யுத்தக்குற்றமாகும் என்று 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்துக் கூறுகிறது.

இதைத் தாண்டியும் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு கூர்ப்படைந்து வருகிறது. யுகோஸ்லாவியா தொடர்பான சர்வதேச ஹேக் ட்ரபியுனல் யுத்தக்குற்றங்களை வரையறுப்பதில் முக்கியம் பெறுகிறது. ஆயுதப் போராட்டங்களின் போது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இங்கும் பிரதான குற்றமான இன அழிப்பு கருதப்படுகிறது.

2002ல் உரோம சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் படி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஹேக் ட்ரிபியுனல்) அதன் அங்கத்தவ நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்டோபர் 2010 வரை 114 நாடுகள் இதில் இணைந்துள்ளன. 114வதாக இணைந்த நாடு மோல்டோவா. அமெரிக்காவும், ரஷ்யாவும் உரோம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் அதை நிறைவேற்றவில்லை. அமெரிக்கா இன்னும் பார்வையாராகவே கலந்து கொள்கிறது. சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தொடர்பிலேயே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் ஐ.நா. உறுப்பு நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்திலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நடத்தும் நீதியதிகாரமுண்டு.

பேரிழிவிற்குரிய யுத்தமானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியம் பெறுகிறது இந்த யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு, ஆனால் மனித உரிமைகள், ஜனநாயம் பற்றிய விழிப்புணர்வு, அறிவு இல்லாதவர்களுக்கு யுத்தக் குற்றத்தின் தார்ப்பரியத்தை புரிய வைப்பது இயலாது.

**********************************************************************
இந்தக் கட்டுரை 12-12-2010 ஞாயிறு தினக்குரலில் 11ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (நன்றி - யாழ்தேவி மற்றும் தினக்குரல்)

Nov 29, 2010

றோயல் - தோமியத் தமிழ் விவாதச் சமர் - ஒரு பார்வை

‘எந்தையர் எம்முன் தம்வழியைக் கற்ற கல்லூரி! 
ஏட்டையும் கற்று, மானுடரையும் கற்றனரே – 
அவர்வழியே நாமும் அதைனையே செய்திடுவோம்!’


175 வருடங்கள் நிறைவு செய்யும் றோயல் கல்லூரியின் பாரம்பரிய வைரிகள் கல்கிசைப் பரி தோமாவின் கல்லூரியாகும். அந்தப் பாரம்பரியத்தில் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். நூறாண்டுகள் கடந்த றோயல்-தோமியப் பாரம்பரியம் இங்கும் தமிழ் விவாதத்திலும் தொடர்கிவது வேத்தியர்களும், தோமியர்களும், தமிழர்களும் பெருமைப்ப்பட வேண்டியவிடயம். கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது. 1994ம் ஆண்டு றோயல் கல்லூரி விவாத அணித் தலைவனாக நிலக்‘ன் சுவர்ணராஜா அவர்கள் இருந்த போது முதன்முறையாக றோயல்-தோமிய விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. 56 ஆண்டுகால பாரம்பரியமுடைய றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் மறுமலர்ச்சி இந்தக் காலகட்டத்தில் தான் துளிர்விடத் தொடங்கி அதன் பின் இலங்கையில் தலைசிறந்த விவாத அணிகளுள் ஒன்றாக வேத்திய அணி உயரக் காரணமானது.



றோயல் தோமியத் தமிழ் விவாதப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் குலசேகரம் ஞாபகார்த்தக் கேடயம் வழங்கப்படுகிறது, இது றோயல் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், பதில் அதிபருமான திரு.எம்.எம்.குலசேகரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகிறது. திரு.எம்.எம்.குலசேகரம் அவர்கள் 1922ம் ஆண்டு றோயல் கல்லூரியில் கணித மற்றும் பௌதீகவியல் ஆசிரியராக இணைந்தார். 1946ம் ஆண்டு றோயல் கல்லூரியின் உப-அதிபராக நியமிக்கப்பட்டார். 1953ம் ஆண்டு பதில் அதிபராகக் கடமையேற்று 1954ம் ஆண்டு ஓய்வுபெறும் வரை மிகச் சிறப்பான கடமையாற்றினார். றோயல் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக றக்பி விளையாட்டுத் துறைக்கு பெரும் பணி ஆற்றிய ஆசான் அவர். அவரது நினைவாக றோயல்-தோமிய தமிழ் விவாதக் கேடயம் வழங்கப்படுகிறது. அத்துடன் றோயல் தோமிய விவாதப் போட்டியில் வருடாவருடம் சிறப்பாக வாதிக்கும் வாதி ஒருவருக்கு அல்லது இருவருக்கு ‘சிறந்த விவாதிக்கான விருதும்’ வழங்கப்பட்டு வருகிறது.
எந்தவொரு வேத்தியனுக்கும், தோமியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம். காரணம் மிகப்பழமையான றோயல்-தோமிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தேசியளவிலான விவாதப் போட்டிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட றோயல்-தோமிய விவாதத்திற்கு இரு பாடசாலைகளிலும் சிறப்பான இடம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

  நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியாக பரி. தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு வருடங்கள் உட்பட ஆரம்பகாலங்களில் பரி தோமாவின் கல்லூரி வெற்றிபெற்றிருந்தாலும் கடந்த சில வருடங்களாக பரி தோமாவின் கல்லூரி அணி சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இதை விசேடகமாகக் குறிப்பிடுவதற்குப் பிரதான காரணம் கடந்த 7 வருடங்களில் தொடர்ந்து றோயல் கல்லூரி வெற்றிபெற்ற போது அநேகமான வெற்றிகள் 5-0 என்ற பெரும் வெற்றிகளாகவே இருந்தன ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற 16வது தொடரில் றோயல் கல்லூரி 3-2 என்றளவிலேயே வெற்றி பெற்றது, தோமிய அணி மிகச் சவாலாக வாதிட்டது என்பதை மறுக்கமுடியாது, முதல் சில வருடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தோமிய விவாத அணி தற்போது பலமடைந்திருப்பதை அனைவராலும் காணக்கூடியதாக இருக்கிறது ஆகவே மீண்டும் மிகச் சவாலான தொடராக இது உருப் பெற்று வருகிறது என்பதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

றோயல் தோமிய விவாதத் தொடரின் சிறப்புக்கள் பலவுள. தமிழ் மொழியில் தொடர்ந்து ஒன்றரைத் தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஒரே தமிழ் விவாதத் தொடராக றோயல் தோமிய தமிழ் விவாதச்சமரே காணப்படுகிறது. மேலும் மிகச் சவாலான தலைப்புக்கள் அலசப்படும் விவாதப் போட்டியாகவும் இதுவே காணப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் அரசியலில் மதங்களின் தலையீடு, 13வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் எனச் சாதாரணமாக பாடசாலை மட்டத்தில் விவாதிக்கத் தயங்கும் தலைப்புக்கள் தான் றோயல் தோமிய விவாதப் போட்டிகளில் வாதிக்கப்படுகிறது. சமூகம், அரசியல் சார்ந்த மாணவர்களின் விழிப்புணர்வு, சிந்திக்கும், ஆராயும் தன்மைகள் என்பவற்றைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக றோயல்-தோமிய விவாதங்கள் அமைகிறது என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் சீர்திருத்தம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும் - தீர்வாகாது என்ற தலைப்பிலான விவாதம் பல தரப்பிலும் வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியும், முன்னாள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித் தலைவருமான திரு.எம்.சுமந்திரன் அவர்கள் இந்தத் தலைப்பினை எடுத்து வாதிட்டதற்காகவே இரு அணிகளுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார். நடுவர் குழாமிலிடம்பெற்றிருந்த கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடப் பீடாதிபதி கலாநிதி.கீதபொன்கலனும் இந்தத் தலைப்பை ஆழமாக அலசியதற்காக இரண்டு அணிகளையும் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு சாதாரண விவாதப் போட்டி என்றில்லாமால், வெற்றி தோல்விகளுக்கப்பால், றோயல்-தோமிய விவாதம் ஒவ்வொராண்டும் ஏதோ ஒரு செய்தியை விவாதத்தினூடாக இந்தச் சமூகத்திற்குச் சொல்கிறது. அமெரிக்காவின் முக்கிய சிவில் செயற்றிட்டவாதியான ஜெசி ஜக்ஸன் கூறிய கருத்திலொன்று இங்கு குறிப்பிடத்தக்கது. ‘கலந்துரையாடலும் விவாதமுமே, ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கான வழிகளாகும்’ என்கிறார் அவர். – கற்பிற்; சிறந்தவள் கண்ணகியா? சீதையா?, பாசத்தில் சிறந்தவர்கள் இராம லக்குமணரா? பஞ்சபாண்டவரா? என்ற வழமையான, அடையாளமான தமிழ் விவாதப் பாரம்பரியத்தை மாற்றியதும் றோயல் தோமிய விவாதத்தின் பெருமை. இதன் மூலம் இலக்கிய வாதங்களைப் புறக்கணிப்பதாக அர்த்தமில்லை, ஆனால் அவற்றைத்தாண்டி சமூகம், அரசியல், கொள்கைகள் என்ற பரந்துவிரிந்த பயன் நிறைந்த வாதத்தைச் செய்வதே றோயல் தோமிய பாரம்பரியத்தின் அடையாளமாகிறது. இதுவரை பரி தோமாவின் கல்லூரி 5 முறையும், றோயல் கல்லூரி 9 முறையும் குலசேகரம் நினைவுக் கேடயத்தை சுவீகரித்திருக்கிறது. றோயல் தோமியப் பாரம்பரியமும், தமிழின் பெருமையும் சங்கமிக்கும் இத்தொடர் இன்னும் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே பழைய மாணவராகிய எம் அனைவரதும் அவாவாகும்.

‘எனது வாழ்க்கையில் என்றுமே என்னுடைய கருத்துடன் உடன்பட்டவர்களிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கொண்டதேயில்லை’ – டட்லி ஃபீலட் மலோன் (அமெரிக்க சட்ட வல்லுனர்).

ஆரோக்கியமான விவாதங்கள் எமது அறிவுக் கண்களைத் திறக்கின்றன, ஃபெரஞ்ச்சுத் தார்மீகவாதியான ஜோசஃப் ஜோபேர்ட் சொல்கிறார், ‘ஒரு வினாவினை விவாதித்துப் பின் முடிவுகாணாது விடுவது என்பது, அவ்வினாவினை வாதிக்காமலேயே முடிவு ஒன்றை எடுப்பதை விடச் சிறந்தது’ என்கிறார். ஆகவே மாணவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் மட்டுமல்ல சமூகத்திற்கும் பயனளிக்கும் வேத்திய-தோமிய தமிழ் விவாதப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

‘அது மலரட்டுமாக!’ [Floreat] ‘அது என்றும் நிலைத்திருக்கட்டுமாக’ [Esto Perpetua]


**************************************************************************
இந்தக் கட்டுரை றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் “தமிழ்நயம் 2010” இதழில் இடம்பெற்றது.

படங்கள் - நன்றி திரு.நிமலபிரகாசன் (www.nimal.info)