Nov 1, 2009

“யாழ்தேவி” திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவர்!


“யாழ்தேவி” திரட்டியினர் இவ்வாரத்திற்கான (02-11-2009 முதல் 08-11-2009) நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள். நீண்டகாலத்திற்குப் பின் அண்மையில் தான் ஒரு பதிவினை இடுவதற்கு நேரம் கிடைத்திருந்தது இந்த வேளையில் இந்த கௌரவம் எனக்களிக்கப்பட்டிருப்பதனால் எப்படியாவது இவ்வாரம் முழுவதும் ஆகக் குறைந்தது நாளுக்கொரு பதிவாவது எழுத வேண்டிய தார்மீகக் கடமைப்பாடும் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது - களைப்பிலும் களிப்பு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த நாள் முதல் நான் நானாக இல்லை என்பதை உணர்கின்றேன். சூழல் மாற்றம் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வாரம் இரண்டரை நாட்கள் கொழும்பில் இருக்கும் நாட்களே என்னை கொஞ்சம் குதூகலமாக வைத்திருக்கிறது - மற்றப்படி பேராதனை வாழ்க்கை எனக்கு வெறுப்பையும் கசப்பையுமே ஊட்டிக்கொண்டிருக்கிறது. காரணங்கள் பல. முதலாவது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நான் போகத் தொடங்கிய நாள் முதலே வகுப்புப் பகீஷ்கரிப்புப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது - நான் பகிடிவதைக்கு எதிரான குழாமில் இருந்தாலும் பகிடிவதைக் குழாமிலுள்ளோர் வகுப்புக்கைளப் பகிஷ்கரிக்கும் போது நாம் ஒருவர் இருவர் வகுப்புக்குச் செல்வதில் பயனில்லை ஆக வாரமொருமுறையாவது இந்த வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் இடம்பெறுவதால் மனம் அந்தச் சூழலில் சுமுகமடைய மறுக்கிறது.

மேலும் பகிடிவதைக் குழாம் - பகிடிவதைக்கெதிரானோர் குழாம் என பிரிவினைகள் உள்ளதால் எனது பிரிவில் உள்ள மற்ற மாணவர்களோடு கூட சகஜமாகப் பழக முடியாத நிலையும் இருக்கிறது. இவற்றோடு காலைவேளையிலே பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும் போது வாசலில் வரவேற்கும் கறுப்புக் கொடிகளும் தோரணங்களும் - எதிர்ப்புப் பதாகைகளும் படிக்கும் மனநிலையைக் குலைத்துவிடுகிறது. அடிப்படையிலே கம்யுனிச-இடதுசாரித்துவ மறுப்பாளனான எனக்கு இந்தச் சூழல் இயல்பான நிலையைத் தரவில்லை.

இவ்வாறாக எனது பல்கலைக்கழக நிலைமை இருக்க, திடீர் வாழ்க்கை முறை மாற்றம் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்போட்டுவிட்டது. கண்டியில் பொதுவாக பின்னேரம் 6-7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடி வீதிகளெல்லாம் வெறுமையாகிவிடும். பொதுவாக 7-8 மணிக்கெல்லாம் எல்லாரும் இராப்போசனம் உண்டு உறங்கிவிடுவார்கள். இரவு 10-11 மணிக்கு இராப்போசனத்தை உண்டு 12-1 மணிக்கு படுத்துப் பழகிய எனக்கு இந்த மாற்றம் கொஞ்சம் அவதியாகத்தான் இருக்கிறது. இவற்றைவிடப் பெரிய மனக்குறை “தனிமை” - தனிமையில் புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் நண்பர் சுற்றத்துடன் வாழ்ந்து பழகிய பின் இம்முறைக்கு பரிச்சயமாக மனம் இழுத்தப்பறித்துக் கொண்டு நிற்கிறது.அடுத்த முக்கிய பிரச்சினை உணவு... இங்கிருக்கும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையை விட எமது பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை ஆயிரம் மடங்கு மேல். சரி பக்கத்திலாவது நல்ல சாப்பாட்டுக் கடைகள் இருக்குமென்றால் இங்கே சாப்பாட்டுக் கடையைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இப்படியாக மனநிலையில் அமைதி குன்றிய காலப்பகுதியில் போராடிக்கொண்டிருக்கின்றேன் - ஆனால் இந்தச் சவால்களும் ஒருவகையில் சுவையாகத் தான் இருக்கிறது.


இக்காலகட்டத்தில் பதிவுகள் எழுத நேரமும் மனமும் என்னைச் சவாலுக்குட்படுத்தினாலும் இந்தக் கௌரவத்தை எனக்குத்தந்த “யாழ்தேவி” திரட்டியினருக்கு நன்றிகளைப் பகிர்ந்து இவ்வாரம் முழுவதும் பதிவெழுதத் துணிகின்றேன்.

இவ்வேளையில் தமிழ்ப் பதிவுலகத்தில் எனக்கு அங்கீகாரம் அளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து வாசகர்களுக்கும், அபிமானிகளுக்கும், நண்பர்களுக்கும் அன்பு நன்றிகள்!

Oct 24, 2009

அடுத்த ஜனாதிபதி யார்?

எலெக்ஷன் நடக்காத ஸ்ரீலங்கா பூ இல்லாத பூந்தோட்டம் மாதிரி. தேர்தல்கள் என்பது அடிக்கடி நடந்து கொண்டிருப்பதால் கடந்த ஒரு தசாப்தத்தில் பாராளுமன்றம் தனது முழு ஆயுளைப் பூர்த்தி செய்ததே இல்லை. எப்படியாவது ஜனாதிபதியாக இருக்கும் பெருமகனார் பாராளுமன்றத்தை இடையிலேயே கலைத்து மறுதேர்தல் நடாத்திவிடுவார். இப்போதும் இலங்கையர் நாம் அனைவரும் அடுத்து ஜனாதிபதித் தேர்தலா இல்லை பாராளுமன்றப் பொதுத் தேர்தலா என எண்ணிக்கொண்டிருக்கின்றோம். பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட தங்கள் ஊகங்களைப் போட்டிபோட்டுக் கொண்டு எழுதி வருகிறது.

எனது கணிப்பு என்னவென்றால் அடுத்து நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தல்தான். சாணக்கியத்தனமான எந்த ஜனாதிபதியும் இந்த முடிவையே எடுப்பார்கள் ஏனெனில் “யுத்த வெற்றி” என்ற பிரம்மாஸ்திரம் கையில் இருக்கும் போது தேர்தல் யுத்தத்தில் குதிப்பதில் பயமில்லை அதுவும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி என்பது சாத்தியமில்லை என்ற கணிப்புடன் தாராளமாகத் தேர்தலை நடத்தலாம். ஆனால் அதற்கு முன்பாக பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தினால் எதிர்க்கட்சிகளிடம் வலுவான “விலையேற்றம்” - “பொருளாதார வீழ்ச்சி” போன்ற அஸ்திரங்கள் இருப்பது முழுத்தோல்வியை ஆளுங்கட்சிக்குத் தராவிட்டாலும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். தென்மாகாண சபைத் தேர்தல் இதைத் தெளிவாக உணர்த்தியிருந்தது.

சரி அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் என்றால் அடுத்த ஜனாதிபதி யார்? யோசிக்காமலேயே விடையளித்துவிடலாம். ஏனெனில் இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வரலாற்றில் இரண்டாம் முறையாகத் தெரிவுசெய்யப்படப் போட்டியிட்ட எந்த ஜனாதிபதியும் தோற்றதில்லை. (ஜே.ஆர் சாணக்கியத்தனமாக சர்வசன வாக்குப்பதிவை நடத்தி ஒப்பங்கோடல் மூலம் தனது பதிவிக்காலத்தை இரண்டாம் முறைக்கு நீட்டித்துக் கொண்டார், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருமுறையம் வெற்றிபெற்றார்). ஆனாலும் போட்டியென்று வந்துவிட்டால் இன்னார் தான் வெற்றியாளர் என்று 90 வீதம் தெரிந்து விட்டாலும் கூட எதிர்ப் போட்டியாளர்கள் யார் என்பதை ஆராய்வதில் சுவையிருக்கிறது. ஏனெனில் 90 வீதம் தோல்வி நிச்சயம் எனறு தெரிந்தும் போட்டியிடுபவர்கள் அவர்கள். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்ற பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது தான் கோடி ருபாய்க் கேள்வி (அது தான் மில்லியன் டொலர் குவஸ்ஷன்!).

அண்மையில் ஜே.வி.பி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி, முன்னாள் இராணுவத்தளபதியும் இன்னாள் விளையாட்டமைச்சின் செயலாளருமான சரத் .ஃபொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் “பொது“ அபேட்சகராக நியமிக்க வேண்டி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கூட்டணியிடம் (ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகளின் கூட்டணி) வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இன்றுவரை மௌனமாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் சில இதனை வலுவாக எதிர்த்திருந்தன. குறிப்பாக மனோ கணேசன் பகிரங்கமாக இதனை எதிர்த்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி முடிவு இன்னும் சரியாகத் தெரியவில்லை

ஆனாலும் அவர்கள் இதற்கு ஒத்துப் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு என்றுதான் தெரிகிறது. ஏனெனில் பொதுவே ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் கொள்கை ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் ஒத்துப் போவதில்லை (முதலாளித்துவத்திற்கும் இடதுசாரித்துவத்திற்கும் ஒத்துப் போகுமா என்ன?). ஐக்கிய தேசியக் கட்சி தனது தலைவரை அல்லது முக்கிய உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துமெ ஒழிய வேற்றொருவருக்கு ஆதரவளிக்கும் சாத்தியம் குறைவு அதிலும் தன்னுடைய சில ஒன்றியக் கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்தை மீறி இந்த விடயத்தில் முடிவெடுக்காது.

அப்படியானால் மீண்டும் தேர்தலில் பிரதான எதிர்ககட்சி அபேட்சகராக நிற்கப்போவது ரணில் விக்ரமசிங்ஹவா? என்ற கேள்வி இங்குதான் எழுகிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தர்க்க ரீதியாகக் குறைவுதான். ஏனெனில் இதுவரை ஆளுங்கட்சியினரால் தோல்வியின் கின்னஸ் சாதனை நாயகன் என போற்றப்படும்(?) ஐக்கியத் தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தோல்வி 90 வீதம் உறுதியான தேர்தலில் மீண்டுமொரு முறை போட்டியிட்டு ஆளுங்கட்சியினரின் “போற்றுதலை” உண்மையென உறுதிப்டுத்துவாரா என்பது நிச்சயமில்லை அதேவேளை அரசியலிலும் எதுவும் நிச்சயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் நெருங்கிய வட்டாரங்களின் கருத்துக்களின்படி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தலில் நிற்கப்போவதில்லை என்பதே தற்போதைய நிலைப்பாடாம். அப்படியானால் யார் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்துத் தேர்தலில் நிற்பார் என்ற கேள்வி இன்னும் விடையின்றி தொக்கு நிற்கிறதே...

 இது தொடர்பில் பலர் பல கருத்துக்களையும் வதந்திகளையும் கூடக் கூறுகிறார்கள். சிலரின் கருத்துப்படி எஸ்.பி.திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது என்கிறார்கள். எந்தச் சவாலையும் சந்திக்கும் பலம் எஸ்.பி.யிடம் உண்டு என்பது அவரது பேச்சில் தெரிகிறது ஆனால் அது வெறும் வாய்ச்சொல்தானா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இடையில் சில காலம் அனைவர் மனத்திலும் அடிபட்ட பெயர் முன்னாள் தலைமை நீதிபதி சரத். என்.சில்வாவினுடையது - ஒரு வேளை இவர்கூட நிறுத்தப்படாலாம் என்கின்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. தனது தலைமை நீதிபதிப் பதவியின் இறுதிக்காலகட்டத்தில் மக்கள் நலன் கருதி அவர் வழங்கிய சில தீர்ப்புக்கள் இன்னும் மக்கள் மறக்கவில்லை என்பது தான் அவரது பெயரும் அடிபடக்காரணம். ஆனால் இன்னமும் எனக்குள் எரியும் நெருப்பு ஒன்று உள்ளது அதுதான் இலங்கைத் தமிழ் மக்களின் தவறான ஒரு நம்பிக்கை. அதாவது தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதி ஆக முடியாது என்ற கருத்து. அதை ஒரு அரசியல் யாப்பு விதி என பல தமிழர்களும் நினைத்துக்கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இனம் ஒரு தடையல்ல அப்படி எந்த ஒரு அரசியல் யாப்பு விதியும் இல்லை அப்படியிருந்திருந்தால் அமரர்.குமார் பொன்னம்பலம் 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது எப்படி? பல இலட்சம் வாக்குகளைப் பெற்றது எப்படி? சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழர்களும், முஸ்லிம்களும் கூட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் இன விகிதாசாரத்தின் படி கிட்டத்தட்ட 78 வீதம் சிங்களவர்களே இருப்பதாலும் இனம் சார்ந்து வாக்களித்தல் பழக்கப்பட்டு விட்டதாலும் சிறுபான்மையினத்தவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது இது வரை எட்டாக்கனியாகவே இருக்கிறது.

எனக்குள்கும் ஒரு கனவுண்டு - ஒரு நாள் இன பேதங்களைக் கடந்த இலங்கையில், இன்று அமெரிக்காவில் நிறபேதம் கடந்து பராக் ஒபாமா ஜனாதிபதியானது போல இன பேதங்களைக் கடந்து தமிழன் ஒருவன் ஜனாதிபதியாக வேண்டும் - இது சர்வ லோகத்திற்கும் இலங்கையை முன்னுதாரணமாகக் காட்டக்கூடிய உயர்ந்த சாதனையாக அமையும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றிய யூகங்கள் நிறைய இருந்தாலும் நிச்சயமான பிரதான எதிர் வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் - வேட்பு மனுத் தாககல் செய்யும் இறுதி நாளில் யார் பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்பது தெரியவரும் - ஏனெனில் பிரதான வேட்பாளர்கள் எல்லாம் இறுதி நாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதுதானே இலங்கையின் அரசியற்பாணி (ஸ்டைல்!).

எல்லாம் சரி அடுத்த ஜனாதிபதி யார்? - வரலாறு மீளும் ஆனால் நல்ல தலைவன் உதிக்கும் போது அது கூட மாறும்.!

Sep 25, 2009

பதிவு எழுத வந்த கதை...

பதிவு எழுத வந்த கதை என்ற இந்தத் சங்கிலித் தொடர்ப் பதிவிற்கு என்னை “காலப்பெருங்களம்” புகழ் வி.விமலாதித்தன் அழைத்திருந்தார். நான் பதிவு எழுத வந்த கதை இது தான்....

தரம் 5-6 படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே (1999-2000) இணைய உலகு பற்றிய எனது சிற்றறிவை விரிவாக்க விஷப்பரீட்சைகளையெல்லாம் கணணியில் செய்து வருவேன் அந்த வகையில் அந்தக் காலம் முதலே “வெப் டிசைனிங்” இணையத்தள வடிவமைப்பில் எனக்கு ஈடுபாடு அதிகம். யாஹீவின் ஜியோசிட்டீஸில் தொடங்கிய பரீட்சார்த்த முயற்சிகள் படிப்படியாக வளர்ந்து ஃப்ரீசேவர்ஸ் தளத்தில் மைக்ரோசொஃப்ட் ஃப்ரண்டபேஜைப் பயன்படுத்தி தளம் வடிவமைத்து மேலேற்றியது எனத் தொடர்ந்தது. 2003-2004ம் ஆண்டு காலப்பகுதிகளில் எனது வேலையே இணையத்தில் இலவச ஹோஸ்டிங் மற்றும் வெப் மாஸ்டர் டூள்ஸ் தேடுதல் போன்றவைதான். இப்படியாக இணையத்தள வடிவமைப்பைச் சொந்தமாகவே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். 2004ம் ஆண்டு எனது தளவடிவமைப்புப் பற்றிய சிற்றறிவைக் கொண்டு ஹரி பொட்டர் இரசிகனான நான் ஹொக்வார்ட்ஸ் மாயாஜாலக் கல்லூரி போன்ற இணையத்தளம் ஒன்றை அமைத்தேன். அது இன்று வரை ஏஞ்ஜல் ஃபயர் ஹொஸ்ரிங் தளத்தில் தொடர்ந்திருப்பதை அண்மையில் தான் கண்டறிந்தேன் - http://www.angelfire.com/ultra2/hogwarts/.

இப்படியாக இணையத்திலே பல பரீட்சார்த்த முயற்சிகளின் படியாகவே எனது வலைப்பதிவுப் பிரவேசமும் இருந்தது. 2007ம் ஆண்டு ஜீன் மாதம் ப்ளொக்கர் தளத்தில் கணக்கொன்றை ஆரம்பித்து “புதிய காளமேகம்” என்ற தலைப்பில் சமுதாயத் தவறுகளைச் சுட்டிக்காட்டி வசைக்கவி பாடும் கவிதைப் பதிவாக எனது பதிவுலக ஆரம்பம் இருந்தது. 15ற்கும் மேற்பட்ட கவிதைகளை அதிலே எழுதியிருந்தேன். பலபேர் வலைப்பதிவில் வாசகர்களாகித்தான் பின் எழுதத் தொடங்கியிருப்பார்கள். நான் எழுதத் தொடங்கிய பின் தான் ஏனைய பதிவுகளை வாசிக்கவே தொடங்கினேன். எனது புதிய காளமேகம் தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்கெட்டுக்கள், அட்சென்ஸ் எனச் சேர்த்து பார்த்துப் பார்த்து எனது பரீட்சார்த்த முயற்சிகளைத் தொடர்ந்த வண்ணம் தான் இருந்தேன். அப்போதே http://nkashokbharan.blogspot.com என்ற வலைப்பதிவையும் பதிவு செய்து வைத்திருந்தேன் ஆனால் பயன்படுத்தத் தொடங்கவில்லை. http://puthiya-kalamegam.blogspot.com தான் எனது அப்போதைய பதிவிடும் வலைப்பதிவாக இருந்தது - இன்றும் அன்றிட்ட அந்தப் பதிவுகளுடன் அந்தத் தளம் தொடர்ந்து இருக்கிறது. 2008 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர்தான் உயர்தரப் பரீட்சையெல்லாம் முடித்துவிட்டு எனது கருத்துக்களுக்குக் களமமைக்க http://nkashokbharan.blogspot.com என்ற தமிழ் வலைப்பதிவையும், http://nkashokbharan.wordpress.com என்ற ஆங்கில வலைப்பதிவையும் தொடர ஆரம்பித்தேன் - இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு கிடப்பில் கிடந்தவை. இப்படியாகத் தான் நான் பதிவெழுதத் தொடங்கினேன். இவற்றை விட றோயல் கல்லூரித் தமிழ் விவாதக் கழகத்தின் மின்னிதழாக “விவாதி” என்ற வலைத்தளத்தையும் ஆரம்பித்தேன். இன்னும் எனது பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்த கட்டம் “ஜீம்லா”-வைப் பயன்படுத்தி செய்தியேடு ஒன்றை உருவாக்குதல்...

இந்த இடத்தில் சிலருக்கு நன்றிகளைப் பகிர வேண்டும். முதலாவதாக எனது எண்ணங்களையெல்லாம் வாசித்துப் பாராட்டும்/விமர்சிக்கும் நல்லுள்ளங்களுக்கு எனது நன்றிகள். அடுத்ததாக என்னை ஊக்குவிக்கும் எனது குடும்பத்தாருக்கும் குறிப்பாக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் அவ்வப்போது எனக்கு ஏற்படும் தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு விடையளித்து உதவிய திரு.நிமலப்பிரகாசன் அவர்களுக்கும் இங்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். மேலும் திரட்டிகளுக்கும் ஏனைய பெயர் குறிப்பிட மறந்த ஆனாலும் பல்வகையிலும் எனக்கு உதவியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.