Aug 25, 2009

முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை.....

இன்று வரை எம்மைத் திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி “கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விதான். கோழியிலிருந்துதான் முட்டை வருகிறது ஆகவே கோழியில்லாமால் கோழி முட்டை வரச்சாத்தியமில்லை ஆனால் அந்தக் கோழியே முட்டையிலிருந்துதானே வருகிறது. ஆப்படிப்பார்த்தால் முட்டையில்லாமல் கோழி வந்திருக்கச் சாத்தியமில்லை. இப்படி குழப்பத்திலேயெ இவை இருக்க கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி மனிதர்களிடம் எப்போதுமே இருந்தவண்ணம் தான் இருந்தது. 
இதை மனிதர்கள் இரண்டு வகையில் அணுகினார்கள் முதலாவது மெஞ்ஙான ரீதியில் அணுகியவர்கள் கடவுள் என்ற “எடுகோட் பொருளை” மையப்படுத்தி கடவுளின் படைப்பாகவே உலகம் உருவானது, எல்லா உயிர்களையும் கடவுளே படைத்தார் என்று கூறினார்கள். இதைப் பகுத்தறிவு வாதிகள் மறுத்தார்கள். யதார்த்தத்தில் காணமுடியாத அல்லது நிரூபிக்கமுடியாத கடவுள் என்பதை ஏற்றுக்கொளவதை அவர்கள் விரும்பவில்லை மாறாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க கூடிய காரணங்களை அவர்கள் தேடினார்கள். காலங்காலமாக மெஞ்ஞான, விஞ்ஞான வாதிகளிடையே இந்த முரண்பாடு இருந்த வண்ணம் தான் இருந்தது. ஆனால் பலகாலம் யாராலும் உறுதியாக விளக்கமொன்றைத் தரமுடியாதிருந்தது. இப்படியான காலகட்டத்தில் தனது கூர்ப்புக் கொள்கை பற்றி சார்ள்ஸ் டார்வின் கருத்துக்களை வெளியிட்டார். உலகிலுள்ள உயிர்கள் அத்தனையும் கூர்ப்படைந்து உருவாகியது, அதாவது உயிரினம் ஒன்று தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து வருகையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைந்து வந்தது என்பதே அவரது கருத்தின் சுரக்கமாகும். இதற்கு அவர் பல காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

உலகின் முதலாவது உயிரினமாக ஒரு பக்டீரியாவை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அது கோடான கோடி ஆண்டுகளாக கூர்ப்படைந்து இன்றைய உயிரினங்கள் உருவானதாகக் கொள்கிறார்கள். இதை விளங்குவதற்குக் கொஞசம் சிக்கலான விஞ்ஙான முறைகள் மூலம் விளக்குகிறார்கள். எல்லாம் சரி ஆனால் இங்கும் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அந்த முதலாவது உயிரிலிருந்து ஏனையவை தோன்றியது என்கிறீர்கள் அப்படியானால் அந்த முதலாவது உயிர் எங்கேயிருந்து தேன்றியது? அது அதுவாகவே தோன்றியதா? இங்கு தான் மீண்டும் மெஞ்ஞானவாதிகளின் கடவுட்கோட்பாடு முக்கியம் பெறுகிறது. அதைக் கடவுள் தானே படைத்திருக்க வேண்டும்?!

உண்மையிலேயே எம்மால் விளங்கப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அல்லது தெரியாத பொருளுக்கு கணிதத்தில் “தீட்டா” போடுவது போல அல்லது “X” “Y” எனப்போடுவது போலத்தான் கடவுள் என்பதும் தோன்றியது. எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. நாம் இன்னும் விளக்கமுடியாத மர்மங்கள் இருக்கிறது அவற்றை “கடவுள்” என்று அடையாளப்படுத்தத் தொடங்கியது தான் இன்று கூர்ப்படைந்து மதம் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. “கடவுள்” தொடர்பில் வளர்ந்த நம்பிக்கைகள் சமூகக் கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபட்டு அவற்றிலிருந்து வேர்விட்ட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுந்த விருட்சமே மதங்கள். இன்று அவை வாழ்க்கை நெறியாக இன்று மாறிவிட்டது. இதுவும் ஒரு விதத்தில் பெரிய கூர்ப்புத்தான்.

இதை நான் சொல்ல வந்ததற்குக் காரணம் உண்டு. கடவுள் இருக்கிறாரா... இல்லையா... போன்ற கேள்விகள் எம்மிடையே எழுவதுண்டு. விஞஞான ரீதியாக நிறுவி்காட்ட முடியாத விடயங்களை நாம் நம்பினாலும் ஏதோ ஒரு சந்தேகம் நம்மிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கும். விஞ்ஞானமோ மெஞ்ஞானமோ எல்லாமே வாழ்க்கையைப் பூரணப் படுத்தும் முயற்சிதான் ஆக பூரணமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நாம் முயற்சிக்கையில் அதில் மதவெறி தலையிட்டு அதைச் சீரழித்து விடக் கூடாது. மதம் என்பது காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு அது வாழ்வை வளப்படுத்த மட்டுமேயன்றி அதனைச் சீரழிக்க அல்ல. சத்தியமாகச் சொல்கிறேன் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும், கவலையும் தான் வருகிறது. மதம் ஒரு நம்பிக்கை மட்டுந்தான் அதுவே வாழ்க்கையல்ல.

Aug 21, 2009

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்...


இன்றுதான் கந்தசாமி உலகம் முழுவதும் வெளியானாலும், நேற்று நள்ளிரவு காட்டப்பட்ட விசேட காட்சியைப் பார்க்கச்சென்றிருந்தேன். ரிக்கட் விலை ரூ.500 மற்றும் ரூ.1000 ஆக இருந்த போதும் சன நெரிசலுக்குக் குறைவில்லை. தமது ஜனநாயகக் கடமையான வாக்களித்தலுக்கே சமுகம் தர பஞ்சிப்படும் தமிழ் இளையோர் மற்றும் குடும்பஸ்தரெல்லாம் கந்தசாமித் தரிசனத்திற்கு அடித்துப்பிடித்து வந்திருந்தார்கள். இரவு 11 மணியளவில் காட்சி ஆரம்பமானது....

கந்தசாமி பார்க்கப்போன எனக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன, பொதுவாக நான் தியட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிகக் குறைவு கடைசியாகத் தியட்டரில் பார்த்த படம் தசாவதாரம் அதற்கு முன்பு சிவாஜி - அவை போன்ற எதிர்பார்ப்பு இதற்குமிருந்ததால் கந்தசாமியைப் பார்க்கச்சென்றிருந்தேன். என் மனமெல்லாம் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்திருந்ததது...

முதல் காட்சிக்கு முன்பு ஒரு வாசகம் போட்டார்கள் “மற்றவன் கண்ணீரைத் துடைப்பவன் தான் கடவுள்” என்று அதற்குப்பிறகு திருப்போரூர் முருகன் கோவில் மரத்தில் தேவையை எழுதி வைத்தால் அது நடைபெறும் என்ற காட்சி அதன்படி ஒரு ஏழைப்பெண் தனது கணவரின் சத்திரசிகிச்சைக்காக பணம் தேவையென எழுத அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்பு கறுப்புப் பையில் பணம் இருக்கிறது இதைக்கண்டு பயந்த அந்த நேர்மையான பெண் அதை பொலீஸில் ஒப்படைக்க ஊழல் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான் அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று அலுமாரியில் மூடி வைத்து விட்டு “தண்ணியடித்துவிட்டுப்” படுக்கிறார் (மன்சூர் அலிகான் தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில்) திடீரென அவரது கட்டிலுக்கு மேல் கூரையிலிருந்து கொக்கரக்கோ-Man (அதாவது முருகனின் கொடியிலிருக்கும் சேவல் போல வேடமிட்ட மனிதன்) பறந்து வந்து மன்சூரை ஒருபிடிபிடிப்பதும் காலையில் பணத்தை மன்சூர் அப்பெண்ணிடம் ஒப்படைக்கச்செய்வதும் அடுத்தகாட்சி. அதற்குப் பிறகு அறிமுகமாகிறார் சி.பி.ஐ. அதிகாரி கந்தசாமி (விக்ரம் தான்) - இவர் பொருளாதார குற்றங்களுக்குப் பொறுப்பான சி.பி.ஐப் பிரிவு அதிகாரி இப்போதே கதை என்க்கு விளங்கிவிட்டது - உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்....

ஷங்கர் 3முறைதானும் எடுத்த இதே கதைப்பாணியையுடைய படத்தை மீள அரைத்த மாவை அரைத்திருக்கிறார் சுசி கணேசன். சுருக்கமாகச் சொன்னால் அந்நியன், சிவாஜி, ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒரு கலவைதான் இந்தக் கந்தசாமி. கானமயிலாகிய ஷங்கர் ஆடக்கண்ட சுசிகணேசன் தானும் அதுவாகப் பாவித்து எடுத்த முயற்சியின் விளைவு இது என நன்றாகத் தெரிகிறது.படத்தின் முடிவு கூட அந்நியனை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாச் சொன்னால் ஜென்டில்மேனின் அடிப்படையில் சிவாஜியின் கருவை வைத்து அந்நியனின் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒப்பித்து அமைக்கப்பட்டதே கந்தசாமி.


படம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது - ஏனென்றால் முதலிலேயே கதை விளங்கிவிட்டது ஆகவே “சஸ்பென்ஸ்” என்று ஒன்றுமில்லை... ஷ்ரேயாவின் கவர்ச்சியின் தாராளத்தன்மை படம் முழுவதும் ஊடாடுகிறது... தனக்கு வில்லிக் கதாப்பாத்திரங்களும் பொருந்தும் என நிரூபித்திருக்கின்றார். படத்தின் சில காட்சிகள் இழுவையோ இழுவை அத்தோடு விசாரணைக்காடசி யொன்றில் விக்ரம் பேசும் வசனம் கூட அவர் அந்நியனில் பேசிய அதே வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. இது போக அடிக்கடி சம்பந்த சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் பெரிய அலுப்பு. ஒரு படத்தில் ஒரு குத்து வகையறாப் பாட்டு இருந்தால் இரசிக்கலாம் படம் முழுக்க அதே வகையறா என்றால் சகிக்ககுமா? இவ்வளவு செலவழித்துப் படம் எடுத்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஹரிஸ் ஜெயராஜையோ, யுவன் ஷங்கர் ராஜாவையோ இசைக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம். பின்னணி இசைகூடப் பெரிதாக நல்லதாக இல்லை. மேலும் பார்ப்பவர்களை அசௌகரியப்படுத்துகிறது ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். வேகமாக நகரும் கமரா அடிக்கடி கண்ணைக்கூசவைக்கும் “எஃபெக்ட்ஸ்” என பார்பவர்களை கஷ்டப்படுத்துகிறது ஆனால் மெக்ஸிகோ காட்சிகள் பரவாயில்லை.

படத்தின் மிகப்பெரிய நிறை விக்ரம். அவரது நடிப்பில் அவரது உழைப்புத்தெரிகிறது ஆனால் படம் அந்தத் தரத்திறகில்லையே. பிரபுவின் நடிப்பும், ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும், வை.ஜி.மகேந்திரனின் நடிப்பும் நன்று. நகைச்சுவையைப் பொருத்தவரை முதற்பாதியில் கலக்கும் வடிவேல் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

3 வருடமாக “பில்டப்” கொடுக்கும் போதே எனக்குள் ஒரு ஐயம் இருந்ததது இப்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் படம் தோற்கும் என்று சொல்வதற்கும் இல்லை.

ஒருவரியில்..

கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....

Aug 18, 2009

தெமழ-இல் ஒரு ஜனாதிபதி வாழ்த்துப் பாடல்

யுத்த வெற்றிக்குப்பின் பல ஜனாதிபதி வாழ்த்துப்பாடல்கள் இலங்கையில் இயற்றப்பட்டது.... இன்றும் அரசாங்க வானொலிகள் அதைப் போட்டுப் போட்டு ....ஹ்ம்ம்... அதைச் சொல்லவும் வேண்டுமோ - அவற்றில் முக்கியமானதும் மிகப் பிரபலம் பெற்ற பாடல் “ஆயுபோவேவா” என்ற சிங்களப் பாடல் ஆகும் ஆகும். இது சஹெலி கமகேவினால் பாடப்பட்டது. இந்தச் சிங்களப் பாடலின் தமிழாக்கம் அதாவது சரியாகச் சொல்வதானால் தெமழ ஆக்கம் ஒன்றும் உண்டு - இதைத் தமிழிலும் சஹெலி கமகேவே பாடியிருக்கிறார். அண்மை மாதங்களாக எனது நண்பர்கள் (சிங்கள நண்பர்கள்) பலரின் மொபைல் கோளர் ட்யுன் ஆக இதன் சிங்கள வடிவமே இருக்கிறது.... அப்படித்தான் முதல்முறையாக இப்பாடலைக் கேட்டேன் பிறகுதான் இதற்கு தமிழ்வடிவமும் உண்டு என்று அறிந்து அதனையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது ஆனால் எல்லாம் சரி இவர்களுக்கு தமிழ் மேல் ஏன் இந்தக் கொலைவெறி... அப்பப்பா உச்சரிப்புதான் உச்ச பட்ச எரிச்சலை உண்டாக்குகிறது.

நீங்களும் கேட்டுப்பாருங்கள் இந்த “நீடுழி வாழ்க அரசரே...” பாடலை.... இனியும் தமிழ் தெரியாது தமிழில் பாட விளைபவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் - தயவு செய்து முயற்சிக்காதீர்கள் எம் மொழியைத் துன்புறுத்தாதீர்கள்.




இங்கு ஒலிக்கும் பாடல் www.helenada.com என்ற தளத்திலிருந்து பெறப்பட்டதாகும். முழுப்பதிப்புரிமையும் சஹெலி கமகேவினைச் சார்ந்தது.