Jun 29, 2021

பல்கலைக்கழக அனுமதியில் "தரப்படுத்தல்"

- என்.கே.அஷோக்பரன்


இலங்கைத் தமிழ்ச் சமூகமானது, அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழ் சமூகமானது காலனித்துவக் காலகட்டத்திலிருந்து கல்விச் சமூகமாக தன்னை வடிவமைத்திருந்தது. தன்னுடைய பிரதான வாழ்வாதாரமாக கல்வியினாலும் விளையும் தொழில்வாய்ப்பை, குறிப்பாக அரசதுறை வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வியில் உயர் தேர்ச்சி பெற்றிருந்தது. அதனால்தான் இலங்கையின் காலனித்துவ வரலாற்றிலும், சுதந்திரத்தின் பின்னரும் கூட, மிக முக்கிய பதவிகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் சிவில் உத்தியோகத்திலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க நிலையிலிருந்தனர்.

சிறிமாவோ தலைமையிலான அரசாங்கத்தினால் 1971இலும், 1972இலும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தரப்படுத்தலானது' தமிழ் மக்களின் அடிமடியிலேயே கைவைப்பதாக அமைந்தது. 'தரப்படுத்தலின்' மூலம் பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பில், வெளிப்படையாக இன ரீதியாக ஓரவஞ்சனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இதுவே தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஏனெனில், கல்வி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தது, 'தாம் திட்டமிட்டமுறையில் உயர் கல்வியிலிருந்து ஒதுக்கித்தள்ளப்படுகிறோம் என்பதைவிடக் கொடும் வேதனை தமிழர்களுக்கு இருக்கமுடியாது' என வோல்டர் ஷ்வாஸ் குறிப்பிடுகிறார்.

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அறிமுகத்தோடு, தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தன. 1956இல் இலங்கை நிர்வாகச் சேவையில் 30 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமானார்கள். 1956இல் மருத்துவம், பொறியியல், விரிவுரை போன்ற துறைகளில் அரசபணியில் 60 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 10 சதவீதமாக ஆனார்கள்;. 1956இல் எழுதுவினைஞர் சேவையில் 50 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமாக ஆனார்கள். 1956இல் ஆயுதப் படையில் 40 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 1 சதவீதம் ஆனார்கள். தமிழ்ப் புலமையாளர்கள், தொழில்நிபுணர்கள் என பலரும் புலம்பெயர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தமிழ் மக்கள், அரச சேவையில் வஞ்சிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களின் உயர் கல்விக்கும் குந்தகம் விளைவிக்கும் 'தரப்படுத்தல்' நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அன்றைய பல்கலைக்கழக அனுமதிகள், தகுதி அடிப்படையிலேயே அமைந்தன. அதிக புள்ளிகள் பெறுபவர்களுக்கு முன்னுரிமை. இதனால் அதிக போட்டி நிறைந்த மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பெருமளவு மாணவர்கள், வடக்கு-கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்துமே தெரிவாகினர். 1970இல், பொறியியல்துறைக்கு ஏறத்தாழ 40 சதவீதமும், மருத்துவத்துறைக்கு ஏறத்தாழ 50 சதவீதமும், விஞ்ஞானத்துறைக்கு ஏறத்தாழ 35 சதவீதமும் தமிழ் மாணவர்கள் தகுதியடிப்படையில் அனுமதி பெற்றனர். இந்த நிலையை மாற்றவேண்டும் இனவாரிஃமதவாரி ஒதுக்கீட்டு முறை வேண்டும் என சிங்கள-பௌத்த அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கின.

1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், 'இனவாரி' தரப்படுத்தல் முறையை சிறிமாவோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது, குறித்த துறைக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகளைவிட, தமிழ் மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகள் அதிகமாக இருந்தன. இரு இன மாணவர்களும், பரீட்சையை ஒரே மொழியில் (ஆங்கிலத்தில்) எழுதியிருப்பினும் இருவருக்குமான வெட்டுப்புள்ளிகளில் அதே வேறுபாடு இருந்தது. மருத்துவத்துறைக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 229 புள்ளிகளே தேவை என நிர்ணயிக்கப்பட்டது. பௌதீகவியல் விஞ்ஞானத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு 204 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 183 புள்ளிகளே வேண்டப்பட்டது. பொறியியலில், தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் தேவை என நிர்ணயிக்கப்பட்ட போது, சிங்களவர்களுக்கு அது வெறும் 227 ஆக அமைந்தது. இந்தத் 'தரப்படுத்தல்' முறையை விமர்சித்த தேவநேசன் நேசையா, இதனை 'பாரதூரமான இனவெறி நடவடிக்கை' என்று குறிப்பிடுகிறார். இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட கே.எம்.டீ சில்வா, இது ஐக்கிய முன்னணி அரசு, இலங்கையின் இன-உறவுக்கு ஏற்படுத்திய பெருந்தீங்கு என்கிறார்.

1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'இனவெறி' 'தரப்படுத்தல்' முறை கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதால், அடுத்தடுத்த வருடங்களில் அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக நான்கு வருடங்களில், 'மாவட்ட ஒதுக்கீட்டு முறையின்' அடிப்படையில், நான்கு வேறுபட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெளிப்படையான இனவாரி ஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மறைமுகமாக அதனைச் சாத்தியமாக்குவதாகவே 'மாவட்ட ஒதுக்கீட்டு முறை' அமைந்தது. தகுதி அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று வந்த தமிழ் மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்துபவையாகவே, இந்த ஒவ்வொரு முறைகளும் இருந்தன. இது பற்றி குறிப்பிடும் பேராசிரியர்.சீ.ஆர்.டீ சில்வா 'அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு மாற்றமும் சிங்களவர்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன, இது சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவு பெற்ற ஒன்றாக மாறியது. மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது' என்கிறார்.

இந்த இனவாரி ஒதுக்கீட்டு முறை, பல தகுதிவாய்ந்த தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுத்தமை, தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணம் என, தனது இலங்கை இன முரண்பாடு பற்றிய அறிக்கையொன்றில் வேர்ஜீனியா லியரி குறிப்பிடுகிறார். இதையே பேராசிரியர் சீ.ஆர்.டீ.சில்வாவும் 'பல்கலைகழக அனுமதியில் பாகுபாடு என்ற விடயமே, யாழ்ப்பாண இளைஞர்களை களத்திலிறங்கிப் போராடச் செய்தது. அதுவே, தமிழ் ஐக்கிய முன்னணி தனிநாடு பிரிவினையைக் கோரவும் செய்தது' என்கிறார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் 'தரப்படுத்தலுக்கு' வேறு நியாயங்களைச் சொன்னது.


பிரிவினைக்கு வித்திட்ட 'தரப்படுத்தல்'

'ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது, தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். தொழில்நுட்பக் கல்வியும் உயர் தொழிற்கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது, யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்' - சரத்து 26 (1) - மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது.

தமிழ் இளைஞர்கள் இந்நாட்டில் தமிழர்களுக்கான பிரிவினை அரசியலை முன்னெடுக்க இதுவோர் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது எனலாம். இதுபற்றிக் கருத்துரைத்த சீ.ஆர்.டீ.சில்வா, 'தமிழ் இளைஞர்கள், தமக்கெதிரான இந்த ஓரவஞ்சனை பற்றி கசப்படைந்திருந்தனர். இவர்களின் உந்துதலால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவானது. பலரும் தனித் தமிழீழம் உருவாக்கப்படுதற்காக வன்முறையைக் கையிலெடுக்க சித்தம் கொண்டனர். முறையற்ற கொள்ளை முன்னெடுப்புக்களும். சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற்கொள்ளாத நடவடிக்கைகளும் இனமுரண்பாட்டை எத்தனை தூரம் அதிகரிக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' என்கிறார்.

'தரப்படுத்தல்' - விவாதங்களும் விதண்டாவாதங்களும்

மறுபுறத்தில் அரசாங்கம் சார்பிலும், சிங்கள இனவாத சக்திகள் சார்பிலும் 'தரப்படுத்தலுக்கு' ஆதரவாக பிரசாரங்களும் வாதங்களும் வதந்திகளும் முன்வைக்கப்பட்டன. அன்றைய காலப்பகுதியில், தமிழ்மொழி மூலமான பரீட்சகர்கள், தமிழ்மொழி மூலமான மாணவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர், அவர்களுக்கு நிறையப் புள்ளிகளை வழங்குகின்றனர் என்ற வதந்தி தீயாகப் பரப்பப்பட்டது. ஆனால், இது உண்மையல்ல. ஆங்கில மொழிமூலத்தில் கல்வி இருந்தபோதே, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கு தமிழ் மாணவர்கள் தமது திறமையினடிப்படையில் அதிகளவில் அனுமதி பெற்றிருந்தனர். 

1872இல் கொழும்பு மருத்துவக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது, அதில் ஏறத்தாழ பாதியளவு மாணவர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தமிழர்கள் மத்தியில் நிபுணத்துவத் தொழில்சார் கல்விக் கலாசாரமொன்று உருவாகியிருந்தது. அது, 2-3 தலைமுறைகளாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவுதான், தமிழ் மாணவர்கள் பரீட்சைகளில் உயர் சித்தி பெறுதல், அதனூடாக அதிகளவில் பல்கலைக்கழக அனுமதி பெறுதல் என்ற நிலையை உருவாக்கியிருந்தது.

'தரப்படுத்தல்' அறிமுகப்படுத்தப்பட முன்பு திறமையடிப்படையில் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி அமைந்திருந்தது. 1964ஆம் ஆண்டு, இலங்கையின் இரண்டு பிரதமர்களின் மகளாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு திறமையடிப்படையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவர். தன்னுடைய உயர் கல்வியை அக்வைனாஸ் பல்கலைக்கழக கல்லூரியிலும், பின்னர் பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்கச் சென்றார்.

சிங்களவர்களுக்கு, கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பல்கலைக்கழக அனுமதி போதவில்லை என்ற ஆதங்கம், பல்வேறு சிங்கள இனவாத அமைப்புக்களினால் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவு அனுமதி பெற்றமையானது, சிங்களவர்களின் வாய்ப்பினைத் தட்டிப்பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அம்மாணவர்கள் திறன், தகுதி அடிப்படையில்தான் அனுமதி பெற்றார்கள் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள மறந்துவிட்டார்கள்.

மொழிவாரி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து, பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, கடைசியில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒதுக்கீட்டு முறைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிறையவே இருக்கின்றன. காலங்காலமாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அந்த அடக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கு ஒதுக்கீட்டு முறை தேவை. ஆனால், இங்கு அதற்காகவா ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலே பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. அமெரிக்காவில் கூட தொல்குடி அமெரிக்கர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. இவர்கள் யாவரும் சிறுபான்மையினர். காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்டவர்கள்.

ஆனால், இலங்கையில் இந்த ஒதுக்கீட்டு முறையானது, பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. அது, ஏலவே திறனடிப்படையில் முன்னிலையிலிருந்த சிறுபான்மையினரை பின்தள்ளுவதாக அமைந்தது. இதுதான் இந்த 'தரப்படுத்தலில்' இருந்த பிரச்சினை.

மாவட்ட ஒதுக்கீட்டு முறை கூட, தமிழர்களைப் பெருமளவு பாதித்தது. தமிழர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் கொழும்பிலுமே கணிசமானளவில் வசித்தனர். ஆகவே, மாவட்ட ஒதுக்கீடு என்பது கூட பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. ஆனால், சிங்கள அரசியல் சக்திகள் மாவட்ட ஒதுக்கீடு பற்றி வேறோர் வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த மாவட்ட ஒதுக்கீட்டு முறை ஏற்பட்டதனால்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மலையகம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடிந்தது. இல்லையென்றால், தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் யாழ்ப்பாண மாணவர்களும் கொழும்பு மாணவர்களும் மட்டுமே பல்கலைக்கழகம் சென்றார்கள் என்று வாதிட்டனர். இதில் நிச்சயமாக கொஞ்சம் உண்மை இருக்கிறது. மாவட்டவாரி ஒதுக்கீட்டு முறையினால், தமிழர் பிரதேசங்களில் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள், பல்கலைக்கழகம் ஏகியது உண்மை. ஆனால், இந்த விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 'தரப்படுத்தலை' நியாயப்படுத்திவிட முடியாது. ஏனென்றால், தரப்படுத்தலின் பின் ஒட்டுமொத்தமாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இலங்கையின் 'சிங்கள-பௌத்த' அரசியல் பற்றி கருத்துரைப்பவர்கள் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம், இலங்கையின் 'சிங்கள-பௌத்த' பெரும்பான்மை என்பது, சிறுபான்மை மனப்பான்மையைக் கொண்டது என்று (A majority with a minority complex). அதாவது, சிறுபான்மையினருக்கு தமது இருப்பு, நிலைப்பு தொடர்பாக இருக்கக்கூடிய அச்சம், சந்தேகம் எல்லாம், இங்கே பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ உலகம் முழுவதும் சிறுபான்மையினர், அடக்கியொடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் ஒதுக்கீட்டு முறையை, 'தரப்படுத்தல்' என்ற முகமூடிக்குள் பெரும்பான்மையினருக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

'தரப்படுத்தலினால்' உயர் கல்வி வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு இருந்த ஒரே மாற்றுவழி, வெளிநாட்டில் கல்வியைத் தொடர்தல். ஆனால், சிறிமாவோ அரசாங்கத்தின் மூடிய பொருளாதாரக் கொள்கையின் கீழ், கல்விக்கான அந்நிய செலவாணி கொடுக்கல் வாங்கல் அளவு மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் கல்விக்காக வெளிநாடு செல்வதும் இயலாததாகியது.


சா.ஜே.வே.செல்வநாயகம் இந்த 'தரப்படுத்தல்' முறையை முற்றிலும் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்தார். இந்த அடக்குமுறை தமிழ் இளைஞர்களிடையே கோபக்கனலைத் தோற்றுவித்தது. அந்த கோபக்கனல் விடுதலையை வேண்டி, தமிழ் இளைஞர்களை நகரச் செய்தது. தமிழ் இளைஞர் பேரவைக் கூட்டமொன்றில் உரையாற்றிய சத்தியசீலன், 'தரப்படுத்தலானது தமிழினத்தின் இருண்டகாலத்தைச் சுட்டும் சமிஞ்ஞையாகும். அது, உயர்தரத்தில் சித்தியடைந்த பல தமிழ் இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. தரப்படுத்தல் தமிழ் மக்களுக்கிருந்த கடைசி வாய்ப்பையும் தட்டிப்பறித்துவிட்டது' என்றார்.

தரப்படுத்தல் எனும் ஓரவஞ்சனையின் விளைவாக, தமிழ் இளைஞர்கள் அரசியலில் நேரடித்தாக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். தமிழ் இளைஞர்கள் பிரிவினை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கடுமையான அழுத்தம் தரத்தொடங்கினார்கள். தரப்படுத்தல் பற்றிய கட்டுரையொன்றில், 1973ஆம் ஆண்டு சா.ஜே.வே.செல்வநாயகம் சொன்ன விடயமொன்றை, ரீ.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.

'சமஷ்டிக்கான எனது போராட்டத்தில், நான் தோல்வியடைகிறேன். இதற்கு காரணம் பண்டாரநாயக்க, அவரது பாரியார் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், சமஷ்டிக்கான எனது போராட்டத்தில் நான் தோல்வியடைந்தால், அதன் பின் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோர மாட்டார்கள். மாறாக தனிநாட்டைத்தான் கோருவார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறீர்கள்தானே, நான் அஹிம்சையையும், சத்தியாக்கிரகத்தையும், ஹர்த்தாலையும் முன்வைத்தேன், அவர்கள் வன்முறையை முன்வைக்கிறார்கள்'

உங்கள் பிரச்சினைக்கு ஆயுதம் தாங்கிய வன்முறைதான் தீர்வா என்ற கேள்வி, ஈழத் தமிழர்களை நோக்கி பல தளங்களிலும் வீசப்படுவதுண்டு. சர்வநிச்சயமாக ஆயுதம் தாங்கிய வன்முறை தீர்வில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருபோதும் அதனை விரும்பியதும் இல்லை.

சுதந்திர காலத்திலிருந்து இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்த்தோமானால், தமிழ் மக்கள் மீது வன்முறை வெறித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், கலவரங்களில் தமிழர்கள் நசுக்கப்பட்டபோதிலும் கூட, தமிழ் மக்கள் ஆயுதங்களையோ, வன்முறையையோ கையிலெடுக்கவில்லை. தமது மொழியுரிமை மறுக்கப்பட்டு, அதன் விளைவாக தமது வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போது கூட அஹிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் ஹர்த்தாலையும் பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையுமே தங்கள் அரசியல் ஆயுதங்களாக தமிழ் மக்கள் கைக்கொண்டார்கள். 1956லிருந்து ஒன்றரைத் தசாப்தகாலத்துக்கு தமிழ் மக்கள் மிகுந்த பொறுமையுடனும், எதிர்பார்ப்புடனும் நியாயமான தமது அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்தார்கள்.

ஜனாதிபதி வழக்குரைஞர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண 26.04.2014 அன்று ஆற்றிய 'செல்வநாயகம் நினைவுரை'யில் குறிப்பிட்டது போலவும், அவரது சில கட்டுரைகளில் குறிப்பிட்டது போலவும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் சிக்கல் நிலையையும், முரண்பாட்டையுமே 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கியது.

'பண்டா-செல்வா' கிழித்தெறியப்பட்டு, 'டட்லி-செல்வா' உடைக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பில் மொழியுரிமை இல்லாது போய், மதத்தில் பௌத்தம் முதன்மை பெற்று தமிழர் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தில் 'தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனையானது சத்தியசீலன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் கடைசி வாய்ப்பும், நம்பிக்கையும் தட்டிப் பறிக்கப்பட்டதாகவே தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் உணர்ந்தார்கள்.

கல்விச் சமூகமொன்றில் உயர் கல்வி வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படும்போது அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலமே இருண்டதாக, சூனியமானதாக உணர்வது யதார்த்தமானதே. பிரிவினைக்கான கோசத்தையும், ஆயுதமேந்தலின் ஆரம்பத்தையும் இந்தப் பின்புலத்தையும் கருத்திற் கொண்டுதான் நாம் பார்க்க வேண்டும்.


(தமிழ் மிரர் பத்திரிகையில் என்.கே.அஷோக்பரன் எழுதிய "தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?" என்ற நீண்ட தொடரிலிருந்து எடுக்கப்பட்டது)