Nov 13, 2009

ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும்.

ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது.


இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டுந்தான் - யுத்த வெற்றியின் காரணமாக அவருக்கு அந்த தரவுயர்வு வழங்கப்பட்டது ஆனாலும் இருவாரங்களுக்குள்ளாகவே இராணுவத் தளபதிப் பதிவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு படைகளின் தலைமையதிகாரி என்ற உயர் பதவி வழங்கப்பட்டது. ”மக்களுக்கு அது ஓர் உயர்பதவி போல காட்டப்பட்டாலும் அதில் எனக்கு அதிகாரங்கள் இருக்கவில்லை” என சரத் ஃபொன்சேகா தனது ஓய்வ பெறுகைக் கடிதத்தில் காரணப்படுத்தியிருக்கின்றார் மேலும் தன்னைத் தேசத்துரோகி போல ஊடகங்களில் மறைமுகமாக பிரச்சாரம் செய்வதாகவும் தனக்கு இது மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் தருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார் - இவையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் அவர் பாதிக்கப்பட்ட காரணங்கள். ஆனால் அடுத்த சில காரணங்கள் இங்கு உற்று நோக்கப்பட வேண்டியவை. அரச படைகளிடையே விசுவாச வேறுபாட்டைத் திணிப்பதாகவும், இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களிலும் பாதுகாப்பிலும் தலையிட விடுவதாகவும், அகதி முகாமிலுள்ள மக்களை விடுதலை செய்ய முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனவும் அரசாங்கத்தின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் - இது தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அவரது அரசியல் பிரவேசத்தை உறுதியாகக் கூறக்கூடிய வகையில் பொதுமக்கள், நாடு சம்பந்தமான குறைகளை அவர் இங்கு சுட்டிக்காட்டியிருப்பதை நோக்கலாம்.

அதிலும் குறிப்பாக அகதிகள் பிரச்சினை, தமிழர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பான கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விடயமாகக் கூட அமையும். தனது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அரசாங்கத்தை விமர்சித்திருப்பதானது இன்றைய அரசாங்கத்தில் அவருக்கு இருக்கும் திருப்தியின்மையையும், தான் மாற்றத்தை விரும்புவதையும் பறை சாற்றுகிறது.


அப்படியானால் சரத் ஃபொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றாரா? இதுவரை அது தொடர்பில் நேரடியான கருத்தினை அவர் தெரிவிக்கவில்லை ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதுடன் அது ஏறத்தாழ 90வீதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இது வரை தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சாதாரணமாக தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடம் முன்பே நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பிரதான கட்சிகள் தங்கள் அபேட்சகர்களை அடையாளப்படுத்துவது வழக்கம். மேலும் இம்முறை ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட மாட்டார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் தாமதம் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து வெற்றி கொள்ளக் கூடிய அல்லது வெற்றியின் விளிம்பையாவது எட்டக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. இதேவேளை ஜே.வி.பி. பகிரங்கமாகவே சரத் ஃபொன்சேகாவை ஆதரித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் சரத் ஃபொன்சகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தக் கோரியமையுமு் குறிப்பிடத்தக்கது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை பதிலளிக்காவிட்டாலும் வெளிநாட்டில் ரணில் விக்ரமசிங்ஹவும், சரத் ஃபொன்சேகாவும் சந்தித்துப் பேசிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியிக் கூட்டணியிலுள்ள கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஜே.வி.பி. கோரிக்கை வைத்த போது அதை தாம் எதிர்ப்பதாக அறிவித்திருந்த போதும், பின்னர் தனது கேள்விகளுக்கு தகுந்த பதிலும், உத்தரவாதமும் சரத் ஃபொன்சேகாவால் தரப்பட்டால் ஆதரிப்போம் எனக் கூறினார். இவற்றைத் தொடர்ந்து சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் நடைபெற்றது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் ஃபொன்சேகா நிற்பார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு வேளை சரத் ஃபொன்சேகா தேர்தலில் நின்றால் கூட என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது என்பது பலரது கேள்வி. ஏனெனில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதியாக இருந்து கொண்டு இரண்டாம் முறை போட்டியிட்டவர்கள் தோற்றதில்லை - மேலும் இன்றைய நிலைமையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமல்ல - போரிட்டது ஃபொன்சேகாவாக இருந்தாலும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் போரை நடத்தி வெற்றியைத் தந்தவர் ஜனாதிபதி தான் என்ற நம்பிக்கை பெரும்பான்மை மக்களிடையே இருக்கிறது மேலும் தற்போது இருக்கும் மகா அமைச்சரவையின் அமைச்சர்களின் ஆதரவும், பலதரப்பட்ட பெரிய சிறிய கட்சிகளின் மற்றும் அழுத்தக் குழுக்களின் ஆதரவும் குறிப்பாக பல பெரிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் அது கட்டாயமாக 51வீதம் வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொடுக்கும் - ஆகவே தற்போதைய ஜனாதிபதியின் அடுத்த வெற்றி என்பது நிச்சயம்.


மேலும் சிறுபான்மையினர் நிலமையிலிருந்து பார்த்தாலும் சரத் ஃபொன்சேகாவிற்கான ஆதரவு தொடர்பில் தமிழர்கள் இருமுறை சிந்திக்க வேண்டிய நிலமையிலேயே இருக்கின்றார்கள். இன்று இவர் தமிழர் நலம் பற்றிப் பேசலாம் ஆனால் ஒரு வேளை ஜனாதிபதியான பின்பு என்ன நடக்கும்? ஏற்கனவே இந்த அனுபவம் தமிழ் மக்களுக்குண்டு. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தலில் போட்டியிட்ட போது தமிழ மக்கள் மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மையினர்களும் அவர் சமாதானம் பெற்றுத் தருவேன் என்று கூறியதை நம்பி வாக்களித்து வெற்றியை வழங்கி கடைசியில் அல்லல்பட்டது ஞாபகம் இருக்கும். அது தான் மீண்டும் நடக்கும் என்பது நிச்சயமல்ல ஏனெனில் சந்திரிக்கா குமாரதுங்கவும், சரத் ஃபொன்சேகாவும் இரு வேறு நபர்கள். ஆனாலும் அந்த பழைய கசப்பான அனுபவம் இன்னும் தமிழர்கள் மனதைவிட்டுப் போவதாக இல்லை.

எது எவ்வாறு நடந்தாலும் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்ந்தால் இவர்கள் எல்லாம் வார்த்தைகளால் வர்ணிக்கும் சுபீட்சம் என்பதை இலங்கைத் தேசம் இனிக் காணவே முடியாது. இப்போது இலங்கைக்குத் தேவை “நல்ல மாற்றம்” அதை யார் வழங்கினாலும் ஆதரிக்கலாம்.

Nov 7, 2009

மாளிகையைச் சிதைத்து மண்வீடு கட்டியவன்!



ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்த
அபூர்வ மாளிகையின் சொந்தக்காரன்!
ஆனால்
நேற்று முளைத்த மண்வீட்டினை
நேர்த்தியான அழகென்று எண்ணி
நேசித்த மாளிகையை மண்வீடு போல
மாற்ற விளைந்தான்...

கோபுரங்கள் சிதைக்கப்பட்டு
ஓட்டுக் கூரையாக ஆக்கப்பட்டது...
முற்றங்கள் சிதைக்கப்பட்டு
வெற்று நிலங்கள் ஆக்கப்பட்டது...
உயர் மாடங்கள் சிதைக்கப்பட்டு
வெறும் மண்வீடாய் மாற்றப்பட்டது...

கலைநயம் மிக்க ஓவியங்கள்
எரிக்கப்பட்டன...
அற்புதச் சிற்பங்களும் எல்லாம்
நொறுக்கப்பட்டன...
உணவிட்ட தோட்டங்களெல்லாம்
கைவிடப்பட்டன...

அந்த அற்புத மாளிகை மண்வீடானது...
வளங்கள் எல்லாம் ஒழிந்து
செழிப்பெல்லாம் மடிந்து
புதுமையென எண்ணி
மூடன் அவன் செய்த செயலால்
அந்த அற்புத மாளிகை கல்வீடானது...

ஆனாலும் அது புரியவில்லை அவனுக்கு...
புதுமையின் படைப்பில் புலங்காகிதம்
அடைவதாக உணர்ந்தான்...
தனது மாளிகையைவிட மண்வீடே
உயர்ந்தது என நினைத்தான்...
இப்போது தான் மண்வீட்டுக்காரனும்
தானும் சமம் என எண்ணிப்
பூரிப்படைந்தான்...

பாவம் அவன் முன்னோர்...
உதிரம் சிந்திக்கட்டிக்காத்த
மாளிகை சிதைந்து போனது...
ஆனால் துயர் விடுத்து
அதைச் சாதைனையாக எண்ணி
சந்தோஷிக்கின்றான் இவன்...

தமிழ் எனும் மாளிகை
நேற்று வந்த மண்வீட்டிற்கு
நிகராய் மாற்றப்படும்
ஈனம் கண்டீரோ?

அழகு சிதைக்கப்பட்டு
கீர்த்தி கெடுக்கப்பட்டு
மண்வீட்டின் பண்பினைப்
புகுத்தும் கொடூரம் கண்டீரோ?

மாளிகையில் வசிப்பது அகௌரவம்
என்றெண்ணி
மண்வீட்டிற்கு மாறும்
அறிவீனம் கண்டீரோ?
தமிழா...
அறிவீனம் கண்டீரோ?



இக்கவிதை இன்று றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் கலைவிழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நயம் 2009 நூலில் இடம்பெற்றது.

Nov 5, 2009

புதிய காளமேளகத்திலிருந்து சில வரிகள்...

நான் முன்பு “புதிய காளமேளம்” எனும் வலைப்பதிவில் எழுதிய வரிகளில் தெரிந்தெடுத்தவற்றை மீண்டும் இங்கு பதிகின்றேன். இப்போது கூட அந்த வலைப்பதிவைத் தொடரலாம் எனும் எண்ணம் இருக்கிறது - ஏனென்றால் நேரடியாகச் சில உண்மைகளைக் கூறக் கடினமென்றாலும் இது போன்ற கவிதைத் தன்மையான வரிகளினூடாகச் சொல்வது சுலபம்!

****************************************************************

மூஞ்சிப்புத்தக மோகம்!

மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்
மூச்சுமுட்டப் பேசவைக்கிறது
மூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்
பேஸ்புக்.....

பொன்னான நேரமெல்லாம்
போகிறதே மண்ணாய்....
மூஞ்சிப் புத்தகத்தின் முகத்தெழிலில்
முகங்குனிந்த பேதைபோல - எம்மவரெல்லாம்
அடிமைப்பட்டு காலங்களி(ழி)க்கிறார்கள்....

இன்னும் இன்னும் கோடிமாக்களும்
வேலைவெட்டியின்றி - மோகத்தின்
பிடிப்பால் மூஞ்சிப்புத்தகத்தின் காலடியில்
தவழ்ந்து திளைக்கின்றனர்.....

தொடர்பு என்பது தேவைதான்...
தொடர்பெனும் இழையால் பின்னப்பட்ட
வலை தானே வாழ்க்கை...?
ஆனால் தொடர்பே வாழ்க்கையானால்???

கேள்விகள் எழுகிறது என்னுள்தான்....
மூஞ்சிப் புத்தகளத்தில் நான் செலவழித்த
நேரத்தை....
பாடப்புத்தகத்தில் செலவழித்திருந்தால்....

ம்..ம்...
காலங்கடந்த ஞானம்......
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்....

************************************************

திரு.போலி!


அரிசிக் கடை முதல் அரசியற்களம் வரை
பஞ்சமேயில்லை போலிகளுக்கு - எம் தேசமிதில்!
புழுப்பிடித்த அரிசியும் புழுத்துப்போன அரசியலும்
அலுத்துப்போய்விட்டது நம்மவருக்கு....

அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் முத்தெடுத்த
அரசியலை தத்தெடுத்த வீணரிவர் வீணாக்கினரே!
செம்மறிக்கூட்டமொன்றுமிப் போலிகளை நம்பி
செம்மையறியாது பின் செல்கின்றனவே!

அன்பிலும் போலி - இவர் பண்பிலும் போலி
யாதொன்றும் உண்மையாய்ச் செய்யாரே!
இவர் பேச்சுமோர்பொருட்டென சில மூடரும்
கைதட்டி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனரே!

************************************************

இவனும் அரசியல்வாதி!


இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

முதலிரண்டு பொத்தான்கள் திறந்த ஷேர்ட்...
நன்றாக அழுத்திய காற்சட்டைகள்...
புத்தம் புதுசாய் ஜொலிக்கும் சப்பாத்துகள்...
14 பவுணில் கழுத்தில் ஒரு சங்கிலி...
அது தெரிவதற்குத் தானோவந்த பொத்தான் திறப்பு?!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

தனியே வந்தால் பந்தா இல்லையென்று....
கூட்டத்துடனேயே வருவானிவன்...
காந்தியுந்தான் வந்தார் கூட்டத்துடன்...
ஆனால் இவனுடன் வருவது
ரெளடிகளும், சண்டியர்களும்....

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

சின்னச் சின்ன விடயங்களிற்குக் கூட
ஆண்மை பொங்கும் இவனுக்கு!
ஏனோ தெரியவில்லை பிறரைப் பழிக்காவிடின்
உறக்கமேயில்லை இவனுக்கு!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

வாயில் எச்சில் ஊறும் எமக்கு....
வாயில் துர்பேச்சு ஊறும் இவனுக்கு...
பதிலுக்கு பதில் பேசுவான் - எவரையும்
எதிர்க்கும் ஆண்மகனென தன் புகழ் பாடுவான்!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

இவனும் சரியில்லை, இவன் மகனும் சரியில்லை...
மக்களிலும் பிழையில்லை - காரணம் அவர்கள்
இவனுக்கு வாக்களிக்கவேயில்லை....
அப்போ இவன் எப்படி அமைச்சரானான்???

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி...

********************************************
இலக்கியம் படைக்கும் மாமேதைகள்!


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....


இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....


அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....


கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....

சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!

********************************************

Nov 3, 2009

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது...

இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் இதுவரை ஏறத்தாழ 50 தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின்னர் தமிழ்த்திரைப்படத்துறை முடங்கிவிட்டது. ஆயினும் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் மிகத் தரமான திரைப்படங்கள் எம்மவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற கதையம்சம் பொருந்திய படங்களும், நான் உங்கள் தோழன் போன்ற எம்.ஜி.ஆர் படங்களை ஒத்த திரைப்படங்களும், கோமாளிகள் - நகைச்சுவைத் திரைப்படமும் என வகை வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன - பல வெற்றியும் பெற்றன.

இலங்கையில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ன என்று பலர் வினவலாம். இன்று தமிழர்களுடைய அடையாளமாகவே தமிழக சினிமா மாறிவிட்டது. எந்த விசேஷமானாலும் சினிமாவும் அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது - நவீன இலக்கிய வடிவமாக சினிமாவைக் கொள்ளமுடியும் - அந்தளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் தமிழரிடையே ஊறிவிட்டது. இன்று தமிழ்ப் பாடல் ஒன்று பாடும் படித் தமிழ்ச் சிறுவனிடமோ, இளைஞனிடமோ கேட்டால் நிச்சயமாக அவன் பாடுவது சினிமாப்பாடலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் இன்று தமிழ் ஊடகங்களின் உயிர்நாடியே சினிமாதான். இப்படியாக தென்னிந்திய சினிமாவே உலகத் தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.

சங்ககாலம் முதல் 18ம், 19ம் நூற்றாண்டு காலம் வரை நாங்கள் இலக்கிய வரலாற்றை உற்றுநோக்கினால் - தென்னிந்தியாவில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையிலும் தனித்துவத்துடன் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. பிற்பட்ட காலங்களில் தமிழக இலக்கியங்கள் அழகியல் ரீதியானவற்றில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது ஈழத் தமிழ் இலக்கியங்கள் வைத்தியம், சோதிடம் போன்ற விஞ்ஞானபூர்வமான இலக்கியப்படைப்பிலும் ஈடுபட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழருக்கென தனித்துவமான இலக்கியப் படைப்புக்களும், பண்புகளும் காணப்பட்டன. காலப்போக்கில் இனப்பிரச்சினையும், புலம்பெயர்வுகளும், இவற்றைவிட இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியும் இலங்கைத் தமிழரது தனித்துவமான இலக்கியப் படைப்புக்களுக்கு சிறுது சிறிதாய் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கின. சினிமா எனும் நவீன இலக்கிய வடிவத்தைக் கைக்கொண்டு இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருந்தாலும் பிற்பாடு அவற்றின் தயாரிப்பு நின்ற பிறகு நாமும் எனது ஊடகங்களும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இன்று அதிலேயே ஊறிவிட்டோம். விளைவு எனது தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடுகள் எம் கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை கண்டும் காணாதது போல இருந்துகொண்டிருக்கின்றோம்.

அப்படி என்னடா பெரிய கலாசார பேதம் என நீங்கள் வினவலாம். நான் நேரிடையாகக் கண்ட ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். எமது இலங்கைத் தமிழர் கலாசாரத்தில் தாய் தந்தையரை, பெரியோர்களை “நீ” என விளிக்கும் பண்பாடு இல்லை மாறாக மரியாதை நிமித்தம் நாம் “நீங்கள்” என்று தான் விளிப்போம் ஆனால் தென்னிந்திய முறையில் “நீ” என்று விளிப்பது அவர்கள் அளவில் தவறல்ல. இதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்று - கலாசார, பண்பாடு பேதங்களில் ஒன்றைச் சரி அல்லது தவறு என கூறமுடியாது ஆனால் எமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் இருக்கிறது - இந்தியத் தமிழோ அவர்களது கலாசாரமோ தவறல்ல ஆனால் எமது கலாசாரத்தை நாமே கெடுக்கக்கூடாது அல்லது கைவிடக்கூடாது ஏனென்றால் அது தான் எமது தனித்துவத்தின் அடையாளம் - நாம் யார் என்பதன் அடையாளம் அதுதான்.

எனக்கேற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்று உண்டு. இத்தாலியில் உலகப் பாடசாலைகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நிகழ்வாக அவரவர் தமது கலாசார நிகழ்வொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலிருந்து நானும் 2 சிங்களத் தம்பிமார்களும் சென்றிருந்தோம் - நாம் மூவரும் ஒரு கலாசார நடனமும், பாடலும் பாடுவதாக இருந்தது. நாட்டியத்தில் அவர்கள் சிங்கள முறை நாட்டியத்தை ஆட நான் காவடியை வைத்துக்கொண்டு கால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தேன் (அட நடனமாடியதாக எடுத்துக் கொண்டால் சரி) அடுத்து பாடல் பாடப் புறப்பட்ட போது தான் எனக்குப் பொறி தட்டியது. தம்பிமார் ஒரு சிங்களப் பாடலும் நான் ஒரு தமிழ்ப் பாடலும் பாடுவதாக இருந்தது. ஆனால் நான் தயாராகிக்கொண்டு போனது “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் - ஆனால் எதிரே இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடசாலை தென்னிந்தியாவின் பிரபல பாடசாலை- வந்திருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். நான் இந்தப்பாடலைப் பாட இது உங்களுடைய பாடல் அல்ல இந்தியாவின் பாடல் என உரிமை கொண்டாடிவிட்டால் அது அவமானமாயிற்றே என்று எண்ணி சுதாகரித்துக்கொண்டு பெரியதம்பிப் புலவரின் கவிதை ஒன்றை கவிதைத் தொனியில் கூறி அதன் ஆங்கில அர்த்தத்தையும் கூறி கைதட்டு வாங்கி விட்டு மேடையிலிருந்து இறங்கினேன் - ஆனால் அந்த சில நிமிடங்கள் என் மனத்தில் ஆறாத வடுவாகப் படிந்துவிட்டது - இலங்கைத் தமிழருக்கென ஏன் தரமான பாடல்களோ, இலக்கியங்களோ இன்றில்லை அல்லது இருந்தும் ஊடகங்களின் அலட்சியப்போக்கால் அவை உயர்வடையவில்லையோ என்ற ஏக்கம் என்னிடம் இன்றுவரை இருக்கிறது.

இலங்கையில் எமக்கென ஒருவேளை தமிழ் சினிமாத் துறை இருந்திருந்தால் அந்த வலிமையான ஊடகம் எமது தனித்துவ அடையாளத்தைக் காக்கவும் எம்முடையது என உரிமையுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்திருக்கும் ஆனால் எமது துரதிர்ஷ்டம் இலங்கையில் தமிழ் சினிமாத்துறை இல்லை என்பது அதனால் இன்றும் எமது ஊடகங்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களிலும், நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலுமே தங்கியிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது....

Nov 2, 2009

சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு சாத்தியமா?


அண்மையில் இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் சில தமக்குள் கூட்டமைப்பு உருவாக்கும் நோக்கில் பிரபல ஹொட்டேல் ஒன்றில் சந்திப்பொன்றை நடத்தியதாக அறியக்கிடைத்தது. ஊடகங்களில் அதிகம் இது பெரியளவில் பேசப்படாவிட்டாலும் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இலங்கையில் இந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணி என்பது சாத்தியமா? என்ற கேள்வி என்னுள் எழுகிறது - இது உங்களில் பலருள்ளும் எழும் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் சிறுபான்மையினரிடையே இருக்கின்ற மிகப்பெரிய அரசியல் பலவீனம் கட்சிப் பிளவுகள் தான். ஆளாளுக்கு சிறுபான்மைக் கட்சிகளை அமைத்துக்கொண்டு போவதால் வாக்குகள் சிதறி சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் அல்லது குறைந்து போகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் சிறுபான்மையினராக இருந்த கொண்டு அதிலும் அதிக கட்சிப் பிளவுகள் ஏற்பட்டால் இம்மக்களின் நிலை என்ன?

அண்மையில் பிரபலத் தமிழ்நாட்டு அரசியல் வாதியொருவர் இலங்கைத் தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. தொண்டமான் ஒருபக்கம், சந்திரசேகரன் ஒருபக்கம், தமிழ்க்கூட்டமைப்பு ஒருபக்கம், டக்ளஸ் தேவானந்தா ஒரு பக்கம், சந்திரகாந்தன் ஒருபக்கம், மனோகணேசன் ஒருபக்கம் என்று இப்படியாகத் தமிழர்களே பிரிந்து நின்றால் எப்படி? எனக் கேட்டிருந்தார். திமுக ஒருபக்கம், அதிமுக ஒருபக்கம், மதிமுக ஒருபக்கம், பாமக ஒருபக்கம், விடுதலைச் சிறுத்தைகள் ஒருபக்கம், காங்கிரஸ் ஒருபக்கம், பாஜக ஒருபக்கம், கம்யுனிஸ்ற் ஒருபக்கம், நெடுமாறன் ஒருபக்கம், விஜயகாந்த் ஒருபக்கம், சரத்குமார் ஒருபக்கம், எனத் தமிழர்கள் பிரிந்து நிற்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு எங்களைக் கேட்க அவருக்குத் தகுதியிருக்கிறதா என்பது கேள்விக்குரியது எனினும் அவர் சொன்ன கருத்தில் பிழையில்லையே? எமக்குள்ளேயே ஒற்றுமையில்லையே.... எத்தனை பயனற்ற கட்சிப்பிளவுகள்?!

சரி இந்தக் கட்சிப் பிளவுகளில் பயன்தான் ஏதும் இருக்கிறதா? பல கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலாவது அந்த கட்சிப் பிளவுகளை நியாயப்படுத்தலாம் ஆனால் அவ்வாறு ஒன்றுமில்லாமல் ஆளாளுக்கு கட்சியை அமைத்துத் தலைவராகும் கலாசாரம் தான் இன்று சிறுபான்மையினரைத் திக்கற்றவர்களாக நிறுத்தியிருக்கிறது. நல்லகாலம் சில காலம் முன்பதாக வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகள் சில இந்தப் பிளவகளின் பிரதிகூலங்களையும் பயனற்ற நிலையையும் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்து அதை வட-கிழக்கில் ஒரு பலமாக சக்தியாக நிறுவினார்கள் (அதன் இன்றைய நிலை???!). இந்தப் பிரிவனைகள் வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகளிடையே மட்டுமல்ல மலையகக் கட்சிகளிடையேயும், முஸ்லிம் கட்சிகளிடையேயும் இருக்கிறது - இது சிறுபான்மையினருக்கும் பலம் அல்ல - பலவீனமே.


உதாரணத்திற்கு மலையகத்தை எடுத்தால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸற்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் வெளிப்படையாகக் கொள்கையில் வேறுபாடு தெரியவில்லை - இருவரும் அரசாங்கக் கொள்கையை ஆதரித்து அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படியிரக்கையிலே அவை ஏன் இரு வேறு கட்சிகளாக இருக்க வேண்டும்?

இதற்கு முஸ்லிம் கட்சிகளும் பல வட-கிழக்குத் தமிழ் கட்சிகளும் விதிவிலக்கல்ல. கொள்கைகளும் நோக்கும் ஒன்றானாலும் வேறு வேறாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இந்நிலையில் இன்று தோன்றியிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற எண்ணம் சிறப்பானது என்ற பூரிப்பிற்கப்பால் இது சாத்தியமா என்ற ஐயமே விஞ்சி நிற்கிறது. இலங்கை வரலாற்றில் இது போன்ற முயற்சியில் இதுவே முதலாவது இல்லை அப்படி இருக்கவும் முடியாது ஆனால் கூட்டமைப்பு என வரும் போது பல கட்சிகளும் விட்டுக் கொடுப்புக்ளையும் தியாகங்களையும் செய்ய வேண்டியிருக்கும். சுயநலங்களைக் கடந்து இதனை இன்றைய சிறுபான்மைக் கட்சிகள் செய்யுமா என்பது அது நடக்கும் வரை நிச்சயமற்றது. மேலும் அவர்கள் வார்த்தைகளால் பூசி மெழுகினாலும் தமிழ்-முஸ்லிம் கசப்புணர்வுகளும் காழ்ப்புணர்வுகளும் இந்தக் கட்சிகளினால் களையப்பட்டு ஒற்றுமையான அணி ஏற்படுத்தப்படுமா என்பதும் ஐயமே.


இவற்றைவிட இந்தக் கூட்டமைப்பு வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக் கட்சியின் கூட்டமைப்பாக மட்டுமே அமையுமானால் அதனால் பெரும் பயன் ஏற்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இன்று தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை வட-கிழக்கில் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மலையகத்தின் இருபெரும் சக்திகளான தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸீம், சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியும், பேரியல் அஷ்ரப்பின் நுவாவும், ஏனைய சில முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றன. இவற்றை விடுத்து வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக்கட்சிகளின் கூட்டமைப்பு என்பது பெரிதாக எதையும் சாதித்து விடாது.



மறுகரையில் இந்த எதிர்க்கட்சியிலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளில் சில பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. அவற்றின் வாக்கு வங்கிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியதாக இருக்கும் வேளையில் சுதந்திரமான சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பாக அவை இயங்கும் சாத்தியம் இல்லை.

இவற்றை விட யதார்த்தத்தில் பார்க்கும் போது தலைமைத்துவப் போட்டிகளும் ஆசனங்களுக்கான போட்டிகளும் பின்னர் அமைச்சர்களாவதற்கான போட்டிகளும், குழறுபடிகளும் தவிர்க்கமுடியாத படி எழும் - இவற்றை இக் கட்சிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பானமையுடன் அணுகுமா? ஒரே பொதுக் கொள்கையில் நிலைத்திருக்குமா? தனித்தீர்மானங்களின்றி கூட்டுத்தீர்மானங்களின் படி இயங்குமா? தேர்தலின் பின்னும் பிரியாது ஒன்றித்தே இயங்குமா? அல்லது தேர்தல்காலக் கூட்டமைப்பாக மட்டுமே இயங்குமா போன்ற பல கேள்விகள் இன்னும் தொக்கு நிற்கிறது.

இவற்றுக்கெல்லாம் சாத்தியமான தீர்வுகளை இந்தத் தலைவர்கள் தூய்மையாக எடுக்கும் வரை இது வெறும் “ஏழையின் கனவாக”த்தான் இருக்கும். உண்மையில் இப்படி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் - சகல சிறுபான்மைக் கட்சிகளும் பேதமின்றி ஒன்றிணைந்தால் நாளை சிறுபான்மையினருக்கு அது சாதகமான நிலையை இத்தேசத்தில் உண்டு பண்ணும். அமரர்.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கோரியது போல 50:50 தீர்வு கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் ஆனால் இவை நடக்குமா? இன்றைய தலைவர்கள் இதைச் சாத்தியமாக்குவார்களா? - மனம் முழுவதும் சந்தேகமான கேள்விகள் மட்டுமே விடைகளாக இருக்கிறது.

நாளை நமதே! - எங்கள் கனவு!

Nov 1, 2009

“யாழ்தேவி” திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவர்!


“யாழ்தேவி” திரட்டியினர் இவ்வாரத்திற்கான (02-11-2009 முதல் 08-11-2009) நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள். நீண்டகாலத்திற்குப் பின் அண்மையில் தான் ஒரு பதிவினை இடுவதற்கு நேரம் கிடைத்திருந்தது இந்த வேளையில் இந்த கௌரவம் எனக்களிக்கப்பட்டிருப்பதனால் எப்படியாவது இவ்வாரம் முழுவதும் ஆகக் குறைந்தது நாளுக்கொரு பதிவாவது எழுத வேண்டிய தார்மீகக் கடமைப்பாடும் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது - களைப்பிலும் களிப்பு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த நாள் முதல் நான் நானாக இல்லை என்பதை உணர்கின்றேன். சூழல் மாற்றம் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வாரம் இரண்டரை நாட்கள் கொழும்பில் இருக்கும் நாட்களே என்னை கொஞ்சம் குதூகலமாக வைத்திருக்கிறது - மற்றப்படி பேராதனை வாழ்க்கை எனக்கு வெறுப்பையும் கசப்பையுமே ஊட்டிக்கொண்டிருக்கிறது. காரணங்கள் பல. முதலாவது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நான் போகத் தொடங்கிய நாள் முதலே வகுப்புப் பகீஷ்கரிப்புப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது - நான் பகிடிவதைக்கு எதிரான குழாமில் இருந்தாலும் பகிடிவதைக் குழாமிலுள்ளோர் வகுப்புக்கைளப் பகிஷ்கரிக்கும் போது நாம் ஒருவர் இருவர் வகுப்புக்குச் செல்வதில் பயனில்லை ஆக வாரமொருமுறையாவது இந்த வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் இடம்பெறுவதால் மனம் அந்தச் சூழலில் சுமுகமடைய மறுக்கிறது.

மேலும் பகிடிவதைக் குழாம் - பகிடிவதைக்கெதிரானோர் குழாம் என பிரிவினைகள் உள்ளதால் எனது பிரிவில் உள்ள மற்ற மாணவர்களோடு கூட சகஜமாகப் பழக முடியாத நிலையும் இருக்கிறது. இவற்றோடு காலைவேளையிலே பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும் போது வாசலில் வரவேற்கும் கறுப்புக் கொடிகளும் தோரணங்களும் - எதிர்ப்புப் பதாகைகளும் படிக்கும் மனநிலையைக் குலைத்துவிடுகிறது. அடிப்படையிலே கம்யுனிச-இடதுசாரித்துவ மறுப்பாளனான எனக்கு இந்தச் சூழல் இயல்பான நிலையைத் தரவில்லை.

இவ்வாறாக எனது பல்கலைக்கழக நிலைமை இருக்க, திடீர் வாழ்க்கை முறை மாற்றம் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்போட்டுவிட்டது. கண்டியில் பொதுவாக பின்னேரம் 6-7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடி வீதிகளெல்லாம் வெறுமையாகிவிடும். பொதுவாக 7-8 மணிக்கெல்லாம் எல்லாரும் இராப்போசனம் உண்டு உறங்கிவிடுவார்கள். இரவு 10-11 மணிக்கு இராப்போசனத்தை உண்டு 12-1 மணிக்கு படுத்துப் பழகிய எனக்கு இந்த மாற்றம் கொஞ்சம் அவதியாகத்தான் இருக்கிறது. இவற்றைவிடப் பெரிய மனக்குறை “தனிமை” - தனிமையில் புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் நண்பர் சுற்றத்துடன் வாழ்ந்து பழகிய பின் இம்முறைக்கு பரிச்சயமாக மனம் இழுத்தப்பறித்துக் கொண்டு நிற்கிறது.அடுத்த முக்கிய பிரச்சினை உணவு... இங்கிருக்கும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையை விட எமது பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை ஆயிரம் மடங்கு மேல். சரி பக்கத்திலாவது நல்ல சாப்பாட்டுக் கடைகள் இருக்குமென்றால் இங்கே சாப்பாட்டுக் கடையைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இப்படியாக மனநிலையில் அமைதி குன்றிய காலப்பகுதியில் போராடிக்கொண்டிருக்கின்றேன் - ஆனால் இந்தச் சவால்களும் ஒருவகையில் சுவையாகத் தான் இருக்கிறது.


இக்காலகட்டத்தில் பதிவுகள் எழுத நேரமும் மனமும் என்னைச் சவாலுக்குட்படுத்தினாலும் இந்தக் கௌரவத்தை எனக்குத்தந்த “யாழ்தேவி” திரட்டியினருக்கு நன்றிகளைப் பகிர்ந்து இவ்வாரம் முழுவதும் பதிவெழுதத் துணிகின்றேன்.

இவ்வேளையில் தமிழ்ப் பதிவுலகத்தில் எனக்கு அங்கீகாரம் அளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து வாசகர்களுக்கும், அபிமானிகளுக்கும், நண்பர்களுக்கும் அன்பு நன்றிகள்!