Jun 28, 2009

ஈழத்து இலக்கியங்களின் களஞ்சியம்

noolaham.orgமதுரைத்திட்டம் பற்றிய எனது பதிவில் கஜன் அண்ணா அளித்த பின்னூட்டத்தில் நூலகம் தளம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கொஞ்சம் உலாவிப் பார்த்தேன். அருமையான தளம் அது. நூலகமானது ஈழத்து இலக்கியங்களை கணணிமணப்படுத்தி ஆவணப்படுத்தும் தன்னார்வ முயற்சி. இதுவரை 3400 ஆவணங்களை கணணிமயப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் ஈழ்த்து நூல்கள் மட்டுமன்றி இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை என ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கி ஆவணப்படுத்துகின்றனர்.


யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் அண்மைய காலப் படைப்புக்கள் வரை பட்டியல் நீழ்கிறது. மதுரைத்திட்டத்தை விட அதிக நூல்களை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நூல்களையும் PDF கோப்பாக இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ள முடியும். இப்போது ஈழத்து நூல்களையும் சுவைக்கும் வாய்ப்பும் எம்மவருக்குக் கிட்டியிருக்கிறது. எங்களுடைய பழைய இதழ்களை குறிப்பாக எங்கள் தாய் தந்தையர் வாசித்து மகிழ்ந்த சிரித்திரன் போன்ற இதழ்களை பார்க்கும் வாய்ப்பையும் இது எனக்கு ஏற்படுத்தித் தந்ததில் மெத்த மகிழ்ச்சி. இன்று உப்புச் சப்பில்லாத சினிமாவை மையப்படுத்திய வணிக நோக்கமுடைய தென்னிந்திய இதழ்களுடன் ஒப்பிடுகையில் எம்மவரது படைப்புக்கள் மிக்கத் தரமானவையாக இருந்திருக்கின்றன. இன்னும் ஆயிரம் இதழ்கள் நூலகத்திலுண்டு - நான் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.



நீங்களும் வாசிக்க விரும்பினால், சொடுக்குங்கள் http://www.noolaham.org/

Jun 26, 2009

பயனுள்ள மதுரைத்திட்டம்

project maduraiபுத்தகங்கள் படிப்பது எனது மிக முக்கிய பொழுதுபோக்கு. இரவில் ஏதாவது ஒரு புத்தகமாவாது வாசிக்காவிட்டால் தூக்கம் வராது, இவ்வளவு ஏன் இயற்கைக் கடன் கழிப்பின் போதும் எனது துணை புத்தகம் அல்லது பத்திரிகை தான். 10ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நான் றோயல் கல்லூரி விவாத அணியில் இடம்பெற்றிருந்தேன். அணிப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலக்கியங்களைப் படித்தல் கட்டாயமானதாக இருந்தது. நாலைந்து தடவை படிக்காது “எஸ்கேப்” ஆக முயற்சி செய்திருந்தேன், ஆனால் அவர்கள் விடவில்லை. படிக்க வேண்டிய இலக்கிய நூல்களின் பட்டியல் என்னிடம் தரப்பட்டது. அகநானூறு, புறநானூறு முதல் கம்பராமாயணம், பாரதி பாடல்கள் என நீண்டது பட்டியல். சாதாரணமாக நான் நூலகங்களில் புத்தகங்கள் எடுத்துப் படிப்பதில்லை, எந்தப் புத்தகமானாலும் வாங்கிப் படிப்பது தான் வழக்கம். இதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களைச் சரியாகத் திருப்பித் தர மறந்து விடுவேன் - எதற்கு வீண் சிக்கல் என நான் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால் இந்தப் பெரிய பட்டியலை வாங்கிப் படிக்கும் நிலையில் நானில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பாடசாலை நூலகத்திலும், கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திலுமாக ஒருவாறு தேடிப்பிடித்து தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டேன் இதெல்லாம் நடந்தது 2004ல்.- இப்படியாகத்தான் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் உருவானது. 2007ல் விவாத அணித்தலைவனாக ஆன பின்பு அப்போது இணைந்த புது முகங்களுக்கும் இதே பயிற்சியை வழங்கிய போது அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினார்கள் - ஆனால் என்ன செய்ய இலகுவான வேறு தீர்வுகள் இருக்கவில்லை.


பின்னர் ஒரு நாள் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மதுரைத் திட்டம் பற்றிப் படிக்கக் கிடைத்தது. மதுரைத்திட்டமென்பது தமிழ் இலக்கியங்களை கணணிமயப்படுத்தும் திட்டமாகும். இதன்படி பலநூறு தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியம் உட்பட கணணிமயப்படுத்தப்பட்டு PDF கோவைகளாக உருவாக்கப்ட்டிருக்கிறது. தன்னார்வத் தொண்டாக இயங்கும் இச்சேவை இலவசமாக இந்நூல்களைப் பதிவிறக்கம் செய்ய வழிசமைத்திருக்கிறது. இத்திட்டம் 1998லிருந்து இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் நான் மிக மிகக் காலங்கடந்து தான் அறிந்து கொண்டேன். நான் தேடித்திரிந்த பல பழந்தமிழ் இலக்கியங்களை கைக்கெட்டிய தூரத்தில் இலவசமாகத் தருகிறது இச்சேவை.


சகல நூல்களும் திஸ்கி, யுனிகோட் முறைகளில் தமிழில் அச்சிடப்பட்டிருக்கிறது. PDF கோப்பாக அமைந்திரக்கும் நூல்களை Adobe PDF Reader மென்பொருளின் மூலம் அல்லது வேறு ஏதாவது PDF Reader மென்பொருளின் மூலம் வாசிக்க முடியும்.


பழந்தமிழ் நூல்கள் மட்டுமல்ல, அமரர்.கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் போன்ற நூல்களும் இங்கு உண்டு. இந்தக் களஞ்சியத்திலிருந்தவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்தது “காளமேகப் புலவர் பாடல்கள்” - அந்த வசைபாடும் கவிஞனின் பாடல் திரட்டை நான் தேடியலையாத புத்தகக்கடைகளில்லை. இன்னும் எத்தனையோ எம் தமிழ்ப் பொக்கிஷங்கள் அங்கே இருக்கின்றன. விரும்புபவர்கள் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.



மதுரைத்திட்டம்
http://pm.tamil.net/
http://projectmadurai.tamil.net/

இவற்றைவிட மிக விரிவான பதிவிறக்கம் செய்யக்கூடிய நூற்பட்டியலுக்கு
http://www.infitt.org/pmadurai/pmworks.html
என்ற முகவரியை நாடவும். இங்கு பொன்னியின் செல்வன் உட்பட மேலும் பல நூற்றொகுதிகள் உண்டு.

Jun 24, 2009

மாற்றம்?

we can change (???) !“எங்களால் மாற்ற முடியும்” எனச்சொல்லிக்கொண்டொருவர் பதவிக்கு வந்த கதை உலகறிந்ததே. அவரது பேச்சும், துணிச்சலும் உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது. உலக வல்லரசின் தலைவராக ஒரு ஈரநெஞ்சமுடையவர் வரவிருக்கிறார் எல்லாக் கொடுமைகளும் மாறப்போகிறது என அந்த வல்லரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளெல்லாம் கனாக்கண்டன....


அவர் வந்தார் - மாற்றம் வந்ததா? கேள்வி மட்டுந்தான் உண்டு எம்மிடம் பதிலில் உறுதியில்லை. வேண்டுமானால் நகைச்சுவைப்பாணியில் “மாற்றம் வந்நது... ஆனால் வரவில்லை” அப்படியென்று அழுது கொண்டிருக்க வேண்டியது தான். இன்னும் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் யுத்தம் சூடுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறது. தீவிரவாதத்தை நீங்கள் அழியுங்கள், ஒழியுங்கள் அது பற்றிக் குறையில்லை ஆனால் அந்தப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்படுவது ஏன்?


அண்மையில் ஆனந்த விகடன் கூறிய புள்ளி விபரப்படி அண்ணளவாக ஒரு தீவிரவாதியைக் கொல்வதற்கு 50 அப்பாவி மக்களும் இறக்கவேண்டியதாவுள்ளது எனப்படுகிறது. என்ன கொடுமை இது? சில வளர்ந்த நாடுகளிலும் தான் தீவிரவாதம், மாஃபியா என் எல்லாம் உண்டு, அங்கேயும் மக்களைக் கொன்று தானா அவர்களை அழிக்கிறீர்கள்? - அதென்ன அவர்களுக்கொரு நியாயாம் - 3ம் உலக நாட்டு மக்களுக்கொரு நியாயாம்? உங்கள் சுய தேவைகளுக்காக இந்த அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.


மாற்றம் - வெறும் சொல்லிலல்ல உண்மையில் நடக்க வேண்டுமாயின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உண்மையான எண்ணம் இருக்கவேண்டும். அது அந்தத் தலைவரிடமிருந்தது. ஆனால் பாருங்கோ அந்தப் பதவி இருக்கை இருக்கிறதே அது தான் எப்பேர்ப்பட்டவரையும் மாற்றிவிடும். இன்னும் காலமிருக்கிறது மனிதனரப் பதவி மாற்றுகிறதா.... இல்லை மனிதர் பதவியின் தன்மையை மாற்றுகிறாரா என உறுதிப்டுத்திக்கொள்ள..

விளையாட்டை ஆட்டும் விளம்பரங்கள்

money from addsசும்மா பொழுதுபோக்கா தொடங்குற விஷயங்களெல்லாம் மிக மிக சீரியஸான விஷயங்களா மாறிவிடுவதை நாம் அடிக்கடி கண்டிருக்கின்றோம். ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சும்மா பொழுதுபோக்கா தொடங்கிய “வதனவேடு” - அதுதான் facebook ஐ தமிழில் சொன்னேன் இப்போது மிக முக்கியமான சமூக வலைப்பின்னலாகிவிட்டது. அதை விடுங்கோ - இங்கு நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல - விளையாட்டைப் பற்றித் தான்.


விளையாட்டாக இருக்க வேண்டிய விளையாட்டு, வியாபாரமாகிவிட்டதால் விளையாட்டு அதன் தன்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது. அதிகமாக யோசிக்கத் தேவையில்லை எங்கள் நாட்டில் மற்றும் இந்தியாவில் மிகப்பிரபலமான கிரிக்கட்டை எடுத்துக் கொள்ளுங்கள் - இன்று போட்டிகளில் விளையாடி உழைப்பதை விட வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதிலேயே அதிகமாக உழைக்கிறார்கள். விளம்பர நிறுவனங்களும் நீயா நானா எனப் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கட் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகின்றன, விளைவு விளையாட்டின் மீதான கவனம் வீரர்களுக்கு குறைவடைய அதிகமாகக் கொட்டும் பண மழை அவர்களது திறமையையும் குழி தோண்டிப் புதைத்துவிடுகிறது.


நான் உலகக்கிண்ண 20 - 20 சுற்றுப் போட்டிகளை ஸ்டார் கிரிக்கட் அலைவரிசையிலேயே கண்டு களித்தேன்(?). அதில் இடையிடையில் வரும் விளம்பரங்களில் 100க்கு 80 விழுக்காடு கிரிப்பட் வீரர்களின் முகங்கள்தான் தெரிந்தது - அதிலும் முக்கியமாக இந்திய கிரிக்கட் வீரர்களின் வதனங்கள். இதில் என்னைக் கடுப்பேற்றிய விடயம் எதுவென்றால் - இந்தியா பரிதாபமாக சுற்றுத்தொடரிலிருந்து வெளியேறிய பின்பு தோனி ரசிகர்களிடம் மன்னிப்புக்கூடக் கேட்டிருந்த பின்பு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தோனியின் விளம்பரம். அதில் தோனி ஒரு குறிப்பிட்ட கைத்தொலைபேசிச் சேவையினைப் பயன்படுத்துவதால் தான் ஆட்ட நாயகன் போல உணர்கிறேன் என்று சொல்வார். ஆட்டமாடி முடியாமல் பரிதாபமாக வெளியேறிய பின்பு, ரசிகர்களிடம் குற்ற உணர்வுடன் மன்னிப்புக்கேட்ட பின்பும் அந்த விளம்பரத்தை பார்க்கும் போது கடுப்பாகுமா இல்லையா?


கைத்தொலைபேசி, குடிபானம், புரதப்பால்மா, சவரக்கத்தி, தலைமுடிக்களி என பல விளம்பரங்களில் “ஈ” என இளித்த படி சிரிக்கும் அந்த முகங்களைக் கண்டாலே ரசிகர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. எனது நண்பனொருவன் எரிச்சலடைந்து சொன்னான் “ஒழுங்கா விளையாட வக்கில்லை, அதுக்கு மட்டும் நல்லா ஈயெண்டு வந்து இளிக்குதுகள்”. ரசிகர்களது கோபமும் நியாயமானது தான். நீங்கள் அதிக முயற்சியெடுத்து பயிற்சிசெய்து வெற்றிகளைக் குவித்த பிறகு இவ்விளம்பரங்களில் நடித்தால் பரவாயில்லை - அதாவது ஒரு பணமீட்டும் பொழுதுபோக்காக விளம்பரங்களைப் பயன்படுத்தினால் பரவாயில்லை ஆனால் இங்கு இந்த விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரங்கள் பிரதான தொழிலாகவும், விளையாட்டு பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது.


எத்தனையோ இளைஞர்கள் விளையாட்டில் சாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டு போராடிக்கொண்டிருக்கும் போது - தேசிய அணிகளில் விளையாட இடங்கிடைத்த வீரர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டாமா? நீங்கள் அணியிலிடம்பிடித்துக்கொண்டும் ஆனால் நியாயமான முயற்சிகள் செய்யாதும் வெறும் பணத்துக்காக நடித்து வந்தால் அணியின் நிலையென்ன? உங்கள் நாட்டின் மதிப்பென்ன?


அது சரி - பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் போது நீங்கள் திறக்கமாட்டீர்களா என்ன?

Jun 20, 2009

இலவச வாழ்க்கை

பண மழை!வாழ்கையில் எல்லாமே இலவசமாகக் கிடைத்தால் எவ்வளவு நலம்? - இப்படி வெட்கமில்லாமல் சொல்லக் கூடிய இனமொன்றும் உலகிலுண்டு. இலங்கைக்கண்மைய தேசமொன்றின் தென் மாநிலமொன்றின் நிலை இதுதான். உலகின் பாரம்பரிய இனக்கூட்டத்தின் தலைநகர் அதுதான், தற்போது அதனாட்சியும் அவ்வினத்தின் சர்வதேசத் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் ஒருவரிடம் தான் இருக்கிறது, இப்படியெல்லாம் இருக்கையிலே அந்த இனம் கேவலப்பட்டுப் போனது ஏன் தெரியுமா? இந்தக் கையேந்திப் பிழைப்பினால் தான்.

தமிழ், தமிழன் என மூச்சுக்கு மூவாயிரந்தரம் சொல்லிக்கொண்டாலும் தமிழனின் வளர்ச்சியில் அந்த அக்கறையைக் காட்டவில்லை. ஒரு இனத்தின், ஏன் ஒரு தனிமனிதனின் வளர்ச்சியே “உழைப்பில்” தான் இருக்கிறது - எந்த இனம் உழைப்பை உதறித்தள்ளுகிறதோ அவ்வினம் அடியோடு அழிந்துவிடும். அதனாலன்றோ எந்தவொரு தொழிலை விடவும் வள்ளுவன் உழுதுண்டு வாழ்வதை முதன்மைப்படுத்துகின்றான். நாம் உழைத்து வாழும் வரைதான் நமக்குப் பலம், பிறர் உழைப்பை நம்பி வாழப் பழகி விட்டோமென்றால் ஒரு கட்டத்தில் பிறர் கருணை கிடைக்காது விட்டால் அழிவு நமக்குத்தான்.

ஒரு ருபாய் அரிசிஆனால் இங்கோ கதை வேறு. ஆட்சியைப் பிடிப்பதற்கான சூத்திரமே “இலவசங்களை” அறிவிப்பதுதான். உழைப்பினால் பெற வேண்டிய சௌகரியங்களை “இலவசமாய்” அய்யன் அள்ளி வழங்க, உணவுக்கலைந்த விலங்குகள்போல மக்களும் வாக்களித்தனர். இப்படியாக இலவசம் மேல் இலவசமாக அள்ளி வழங்கி, மானியம் மேல் மானியமாக வழங்கோ வழங்கென்று வழங்கி மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டனர். இந்தச் சோம்பலினால் தான் என்னவோ அவர்களுக்கு இன உணர்வு கூட அடங்கிவிட்டது.

மானியங்களினாலும், இலவச விநியோகங்களினாலும் அரசாங்கம் மனித உழைப்பைக் குறைத்துவிடுகிறது. பல ஐரோப்பிய முதலாளித்துவ  நாடுகளில் “இலவசங்கள்” எல்லாம் இல்லை மாறாக உழைப்பின் 50 விழுக்காடு வரை வரியாச் செலுத்த வேண்டிய நிலைமையும் உண்டு. இந்நிலைமையினால் அங்கு கடின உழைப்பின் தேவையேற்பட்டு மனிதன் மிகக் கடினமாக உழைக்கின்றான் - விளைவு அந்நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சி அடைகின்றன.

இலவச நிறத் தொலைக்காட்சிஒரு சின்ன உதாரணம். ஒரு தொலைக்காட்சிப்பெட்டி கூட இல்லாத சாதாரண குடிமகனின் வீடு, அங்கு கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருவரும் உழைத்துச் சம்பாதிக்கிறார்கள் - வாழ்க்கையும் சாதாரணமாக போய்ககொணடிருக்கறது. சிறுகச் சிறுகச் சேமித்துச் சேமித்தும், தவணை முறையிலும் சௌகரியங்களைக் கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலைமையில் இந்த வீட்டில் 4 பேர் உழைக்கிறார்கள். இதே நிலைமையில் அரசாங்கம் இலவசமாகச் சௌகரியங்களையும், மிகக் குறைந்த விலையில் பொருட்களையும், மானியங்களையும் வழங்குமாயின் மனைவிக்கும் ஒரு மகனதும் உழைப்புக்கான அத்தியாவசியத் தேவை இல்லாது போய்விடும் ஆக பொருளாதாரத்திற்கு மக்கள் வழங்கத் தயாரான உழைப்பினளவு குறைய பொருளாதார வளர்ச்சியும் குன்றும் - இது ஒரு பொருயாதார நோக்கு.

ஆயினும் “நோகாமல் நுங்கு பருக” கௌரவமானவர்கள் விரும்புவதில்லை - ஆனால் இந்த இனத்துக்கு அது இப்போது எங்கே போயிற்று?


வெற்றியின் பரிசு!

வெற்றி - வாழ்க்கையில் வாழத்துடிக்கின்ற மனிதனின் உயர்ந்த இலட்சியம் வெற்றி. இந்த வெற்றிக்காகவே மனிதன் தினந்தினம் போராடிக்கொண்டிருக்கின்றான். இன்று அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்றுப் போரிலே இலங்கை வெற்றிபெற்றிருக்கிறது. “எங்கள் தேசத்திலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்” என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி முழக்கமிட்டதும், அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து ஓயந்த கொண்டாட்டங்களும் - இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்களும் அந்த வெற்றிக் களிப்பின் வெளிப்பாடுகள். அது ஒவ்வொரு இலங்கைக் குடிமகனதும் வெற்றிப் பூரிப்பு.வெற்றியின் களிப்பில்!


பயங்கரவாதமும், தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும் “இது” பயங்கரவாதமா இல்லையா என விவாதம் நடத்தவும் நான் விரும்பவில்லை - ஏனெனில் வாலி வதம் போல இந்த விவாதமும் காலங்காலமாகத் தொடர்ந்ததன்றி முடிவுற்றபாடில்லை. ஏனெனில் இவை ஒவ்வொரு தனி மனிதனதும் தனிப்பட்ட உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள் சார்ந்தவை. ஆனால் இந்த வெற்றி தந்த பரிசினைப் பற்றி கொஞ்சம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.


எதிர்காலத்தின் கனவுகளுடன்...எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலுங்கூட வெற்றிவாகை சூடிய அணி தங்கள் கொண்டாட்டங்களுக்கு முன்பதாக தோல்லியடைந்த அணியினரை வாழ்த்திப் பாராட்டுவது வழக்கம். அது அவர்கள் உணர்வு ரீதியாகப் புண்படாமலிருக்க உதவி புரியும். சரி எதிரிகளுடன் தான் கைகுலுக்க வேண்டாம் நடுவில் நின்று இரசித்த அப்பாவிகளையும் வெறுப்புடன் நோக்குவது சரியா?


யுத்தத்தின் கொடூரத்தால் ஊரிழந்து, வீடிழந்து, ஒட்டு உறவுகளையெல்லாம் இழந்து, மனதுடைந்து, உடலுழைந்து கிடக்கும் இந்நாட்டின் குடித்தொகுதியொன்று நீங்களெல்லாம் “சுதந்திரத்தை” கொண்டாடும் வேளையிலே “கூடுகளுக்குள்” அடைபட்டு, வதைபட்டுத் துன்பமடைவதென்ன நியாயம்?


சுதந்திரத்துக்கான எதிர்பார்ப்பு...ஒத்துக் கொள்கிறோம் “வைரஸ்” தாக்கியவர்களை நீங்கள் வடிகட்ட நினைப்பது நியாயம், ஆனால் அச்செயலில் அப்பாவிகளும் உழலுருவது என்ன நியாயம்? “இது எங்கள் அனைவரினதும் தேசம்” என நீங்கள் உரக்க உரைத்தால் மட்டும் போதாது அதை உணரச்செய்ய வேண்டும். துன்புறுத்துவதால் அதைச் செய்யமுடியாது மேலும் அது வெறுப்புணர்வையும், கசப்புணர்வையுமே மேலோங்கச் செய்யும்.


வெற்றியின் பரிசு சகலருக்கும் கிடைக்கட்டும் - தினந்தினம் “அந்தக்” கூடுகளில் துன்புறும் எம்மக்களுக்கும் இந்தச் சுதந்திர ஒளி கிடைக்கட்டும் - அதுவே நிஜ வெற்றி! அதை நீங்கள் சாதித்துக் காடடினால் நாளை சரித்திரம் உங்களை “உண்மையாய்ப்” புகழும், இல்லாவிட்டாலும் புகழும் (------).



இலங்கை, சகலரும் சௌபாக்கியத்துடனும், நிம்மதியுடனும் சமாதானமாக வாழும் நாடாகட்டும்!
May Sri Lanka be a peaceful & prosperous nation, May all Sri Lankans live in peace & harmony forever!